#காரப்பான்_பூச்சிகள் தலை இல்லாமல் பத்து நாட்கள் உயிருடன் வாழமுடியும் என்பது உண்மையா?
இதில் சந்தேகமே வேண்டாம். கரப்பான் பூச்சிகளால் தலை இல்லாமல், சில தடைகள் இல்லாதிருப்பின் மாதக்கணக்கில் கூட உயிர் வாழ இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!!!
கரப்பான் பூச்சி வளர்ச்சி நிலைகளைப் பற்றி ஆராயும் மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் உடலியல் நிபுணர் மற்றும் உயிர் வேதியியலாளர் ஜோசப் குங்கல் விளக்குகிறார்.
அவர் கூற வருவதை நாம் மனித உடலுடன் ஒப்புமைப்படுத்தி பார்க்கலாம்.
மனிதர்களில் தலையில் அடிபடுவதால் இரத்த இழப்பு ஏற்படுகிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது. உயிர்வளி மற்றும் ஊட்டச்சத்தை முக்கிய திசுக்களுக்கு கொண்டு செல்வது தடுக்கப்படுகிறது. இதயத்திற்கு செல்லும் இரத்தின் அழுத்தம் குறைவதால் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் சென்றடைவதில்லை. உயிரணுக்களின் எரிபொருளான உயிர்வளி இல்லாமல் செல்கள் இறந்து, உறுப்புகள் செயல்பாட்டை இழந்து இறுதியில் மரணத்தைக் காண்கிறோம்.
மனிதர்கள் தங்கள் வாய் அல்லது மூக்கு வழியாக சுவாசிக்கிறார்கள். மூளை அந்த முக்கியமான செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. எனவே சுவாசமும் நிறுத்தப்படும். மனித உடல் தலை இல்லாமல் சாப்பிட முடியாது. பட்டினியானது விரைவான மரணத்தை உறுதி செய்கிறது.
"கரப்பான் பூச்சிகளுக்கு அதிக இரத்த அழுத்தம் தேவை இல்லை" மனிதர்களைப் போன்ற பெரிய அளவிலான இரத்த நாளங்கள் அல்லது சிறிய நுண்குழாய்கள் கரப்பான்களிடம் இல்லை. நமக்கு தான் அதிக அழுத்தம் தேவை. ஏனெனில் இதயத்திலிருந்து புவி ஈர்ப்புக்கு எதிராக மேல்நோக்கி மூளைக்கு இரத்தத்தை அனுப்ப வேண்டும்.
"கரப்பான்கள் ஒரு திறந்த சுற்றோட்ட அமைப்பைக் கொண்டுள்ளன". அதில் மிகக் குறைந்த அழுத்தம் உள்ளது. அவற்றின் உடலுக்கு அதுவே போதுமானது. நாம் அவற்றின் தலையை வெட்டிய பிறகு, அவற்றின் கழுத்து உறைதல் மூலம் மூடப்படும். "கட்டுப்பாடற்ற இரத்தப்போக்கு இல்லை".
கரப்பான்கள் சுவாசிப்பதற்கு நம்மைப்போன்ற திறன்மிக்க நுரையீரல்களைப் பயன்படுத்துவது இல்லை. அதிலும் குறிப்பாக இந்த சுவாசத்தை மூளை கட்டுப்படுத்துவதில்லை. நம்மைப் போல இரத்த சிவப்பணுக்கள் இல்லாததால் உடல் முழுவதும் உயிர்வளியை சுமந்து செல்ல வேண்டிய அவசியமில்லை.
மாறாக இவற்றின் சுவாசமுறையானது ஏட்டு நுரையீரல் - ஸ்பைரகில்ஸ் (#Spiracles) மூலம் நடைபெறுகிறது. ஏட்டு நுரையீரல் என்பது, ஒரு வெளிப்புற சுவாசத் திறப்பு. இது பூச்சியின் உடலில் உள்ள சுவாசத்திற்கான துளைகள் ஆகும்.
ஸ்பைரகில் குழாய் காற்றை நேரடியாக திசுக்களுக்கு டிரக்கியா (Trachea) எனப்படும் குழாய்களின் மூலம் செலுத்துகின்றன. கரப்பான் பூச்சிகள் பொய்கிலோதெர்ம்ஸ் (Poikilotherms) அல்லது குளிர்ச்சியான இரத்தம் / மாறும் குருதி கொண்டவை (Cold- Blooded). இதன் பொருள் என்னவெனில் மனிதர்களைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவு உணவே அவைகளுக்குப் போதுமானது.
"ஒரு கரப்பான் பூச்சி ஒரு நாள் சாப்பிட்ட உணவை வைத்து ஒரு வாரம் வரை உயிர்வாழும்" என்று ஜோசப் குங்கல் கூறுகிறார்.
சில இரை உயிரிகள் அவற்றை வேட்டையாடாதவரை அவை பூஞ்சை அல்லது பாக்டீரியா அல்லது வைரஸால் பாதிக்கப்படாதவரை இவை இறக்கும் கால அளவு நீட்டிக்கப்படலாம்.
கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையானது. உடல் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன. எனவே அவை நீண்ட நாள் உயிர்வாழ இவை உதவுகின்றன.
டாய்ல்ஸ்டவுனில் உள்ள டெலாவேர் பள்ளத்தாக்கு கல்லூரியில் (Delaware Valley College in Doylestown) பூச்சியியல் வல்லுநர் கிறிஸ்டோபர் டிப்பிங் (Christopher Tipping) அமெரிக்க கரப்பான் பூச்சிகளை (பெரிப்லானெட்டா அமெரிக்கானா) நுண்ணோக்கிகளின் உதவியுடன் அவற்றின் செயற்பாடுகளை கூர்ந்து நோக்கி சில ஆராய்ச்சிக் குறிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அவர்களின் ஆராய்ச்சி விவரமானது, தலைவெட்டப்பட்ட கரப்பான் பூச்சியின் காயத்தை உலர்த்த பல்லினை அடைக்கப்பயன்படுத்தும் மெழுகு கொண்டு அடைத்துள்ளனர். பின்னர் தொடர்ந்து கவனித்ததில் ஒரு குடுவையினுள் பல வாரங்கள் வரை உயிர்வாழ்ந்ததாம்.
"பூச்சிகள் காங்லியா-நரம்பு திசு திரட்டுதல்களின் கொத்துக்களைக் கொண்டுள்ளன. அவை உடலின் ஒவ்வொரு பிரிவிலும் அடிப்படை நரம்பு செயல்பாடுகளைச் செய்யக்கூடியவை. எனவே மூளை இல்லாமல், இவற்றால் உயிர்வாழத் தேவையான சில எளிய வினைகளை மேற்கொள்ள இயலும்" என்று டிப்பிங் கூறுகிறார்.
இதனால் கரப்பான்கள் ஒரே இடத்தில் இருக்கலாம்; நம்முடைய தொடுதல்களையும் அவை உணரலாம்; அசையலாம். "வெட்டப்பட்ட தலையானது, அதிலுள்ள நீராவி வெளியேறும்வரை பல மணி நேரம் ஆன்டெனாக்களை முன்னும் பின்னுமாக அசைக்கும்" என்று குங்கல் கூறுகிறார்.
No comments:
Post a Comment