#ஜெர்மன்_பெர்லின்_சுவர் (Berlin Wall)
இச்சுவரானது கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் பிரிப்பதற்கு 1961 ஆகஸ்ட் 13 கட்டத் தொடங்கப்பட்டு சிறிது சிறிதாக விரிவுபடுத்தபட்டு 168 கிமீ நீளத்துக்கு கட்டப்பட்ட இச்சுவரானது 1989 நவம்பர் 9 ல் தகர்க்கப்பட்டது.
சுவர் கட்டப்பட்டதற்கான காரணம்:
இரண்டாம் உலகப்போரின் இறுதியில் 1945-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போட்ஸ்டாம் (Potsdam) ஒப்பந்தத்தின்படி Oder-Neisse கோட்டிற்கு (படம் கீழே) மேற்கில் இருந்த பகுதிகள் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை நான்கு நேச நாடுகளாலும் (அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சோவியத்) ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்தது. தலைநகரமான பெர்லின் முழுவதும் சோவியத்தின் எல்லைக்குள் இருந்தபோதிலும் ஒப்பந்தத்தின் படி நான்கு நேச நாடுகளுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது.
சில நாட்களிலேயே சோவியத்திற்கும் பிற நேச நாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியிலான பிளவு ஏற்பட்டது. இந்நிலையில் சோவியத்தை ஆண்டுவந்த ஜோசப் ஸ்டாலின் ஜெர்மன் கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மற்ற நேச நாடுகளிகளிடம் இருந்து ஜெர்மானிய பகுதிகளைக் கைப்பற்றி ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் ஜெர்மனியாக உருவாக்கித் தருவதாக வாக்களித்தார். இதே நேரத்தில் நேச நாடுகளும் (சோவியத் தவிர), பெனிலக்ஸ் (BENELUX- Belgium Netherlands Luxembourg) நாடுகளும் சேர்ந்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்துப் பகுதிகளையும் இணைத்து ஒரே மண்டலமாக மாற்ற உறுதி செய்தன (மேற்கு ஜெர்மனி).
இந்நிலையில் சோவியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் வாழ்ந்த மக்கள் சோவியத் யூனியன் தாங்கள் மேல் நடத்தும் அடக்குமுறைகளை விரும்பவில்லை . தங்களுக்கு விடுதலையும், சோவியத் யூனியன் அவர்களுடைய நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் விரும்பினர். ஜெர்மனியின் எல்லைக்கோடுகளை சாதகமாக பய்னபடுத்திக் கொள்ள நினைத்த அவர்கள் கிழக்கு பகுதியை விட்டு மேற்கு பகுதிக்கு சென்று குடியேற ஆரம்பித்தனர். நாளுக்குநாள் இவர்களில் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது (ஆதாரம் : › docsPDF migration from west germany to east germany 1952-54 - CIA - இந்த கோப்பின் 18 ஆம் பக்கத்தில் உள்ள முதல் அட்டவணையைப் பார்க்கவும்).
வெளியேறியவர்கள் பெரும்பாலும் திறமையான வேலையாட்கள், படித்தவர்கள் மற்றும் தொழில் முனைவோராக இருந்ததால் இவர்களின் இழப்பு கிழக்கு ஜெர்மனியின் பொருளாதாரத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்கள் ஆகஆக ஒருநாளுக்கு ஆயிரக்கணக்கில் வெளியேற ஆரம்பித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த சோவியத் தலைவர் நிகிட்டா க்ருசேவ் (Nikita Khruschev) மக்களின் மேற்கு நோக்கிய பயணத்தை தடுக்க திட்டமிட்டார்.தன்னுடைய இராணுவ வீரர்களைக் கொண்டு 1961 ஆகஸ்ட் 12–13ல் 30 மைல் நீளத்திற்கு ஒரு வேலியை அமைத்தார். வழியில் இருந்த அனைத்து வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டு மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டார்கள்.
வேலியின் அமைப்பு:
முதல் நான்கு ஆண்டுகளில் கம்பிவேலியால் அமைக்கப்பட்ட இச்சுவரானது பின்னர் 1965-ல் 15 அடி உயரமுள்ள கான்க்ரீட் சுவராக மேம்படுத்த பட்டது.பின்னர் 1975-ல் Grenzmauer 75 என்ற சுவராக மேம்படுத்தப்பட்டது (இதில் 75 என்பது 1975 என்ற வருடத்தைக் குறிக்கும்) . இடைப்பட்ட நாட்களில் கான்க்ரீட் வேலியின் மேற்பரப்பில் முள்வேலியிடப்பட்டது, காட்சி கோபுரங்கள் (Watching Towers) கட்டப்பட்டு பாதுகாப்பு பணியில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு இயந்திர துப்பாக்கிகளும் வழங்கப்பட்டது.1980-ல் 75 மைல் நீளத்திற்கு மின் வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.
மக்களின் கால்தடத்தைக் கண்டறிய வேலியின் ஓரங்களில் மணல் பரப்பப்பட்டது. இதையும் தாண்டி 5000க்கும் மேற்பட்டவர்கள் தப்பமுயன்றுள்ளனர். இதில் பெரும்பான்மையானவர்கள் தப்பினாலும் 191 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொழுவி :
சுவர் கட்டப்பட்ட ஆரம்ப காலத்தில் எல்லையை கடத்தல் என்பது அசாதாரணம் என்றாலும் சில காலம் கழித்து விதிமுறைகள் தளர்த்தப் பட்டன. வணிகம், முக்கிய விழாக்களுக்கு செலாபவர்கள், கலைஞர்கள் மற்றும் குடும்ப சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தகர்ப்பு:
1989-ல் ஜெர்மனியில் ஏற்பட்ட ஜனநாயக எழுச்சிக்குப் பிறகு பெர்லின் சுவரானது தகர்க்கப்பட ஆரம்பித்தது.Mauerspechte என்ற பெயரில் சுவரை உடைக்கும் பணியில் ஈடுபட்ட ஆட்கள் மக்களால் அழைக்கப்பட்டார்கள் (படம் கீழே) . ஒவ்வொரு முக்கியமான இடத்திலும் சுவர்கள் இடிக்கப்பட்டு சாலைகள் இணைக்கப்பட்டதை மக்கள் கண்டுகளித்தது மட்டுமின்றி அதன் வழியாக கடந்துவந்த உறவினர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு முக்கிய இடமாக சுவர்கள் தகர்க்கப்பட்டு அந்த வருட இறுதிக்குள் சுவரானது முற்றாக இடிக்கப்பட்டது.
பெர்லின் சுவர் தகர்ப்பானது ஜெர்மனியின் இணைவிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 1990 அக்டோபர் 3-ல் கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைக்கப்பட்டது. சமீபத்தில் (நவம்பர் 9 2019) பெர்லின் சுவர் தகர்ப்பின் 30-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
No comments:
Post a Comment