#சதுர_அலைகள் (Square Waves)
கடலில் இயற்கையாக நடக்கும் சுவாரஸ்யமான அதிசயங்களில் ஒன்று சதுர வடிவிலான அலைகள்.
கடலில் சதுரமான வடிவங்களை பார்க்க நேர்ந்தால், நீங்கள் செல்லும் படகு , ஏன் கப்பலாக இருந்தால் கூட கவிழ்ந்து விடும் அபாயமான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, உடனடியாக அந்த நீர்ப்பரப்பை விட்டு வெளியேறி சென்று விட வேண்டும் என்று இந்த துறையில் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
உண்மையில் கடலில் பல வகையான அலைகள் உள்ளன. கடற்கரையில் இருந்து பார்க்கும் நாம் கீழேயுள்ள இந்த வகையான அலைகள் கரைக்கு வருவதையே பெரும்பாலும் பார்த்து பழகிவிட்டோம். இயற்கையின் விசித்திர நிகழ்வான இந்த சதுர அலைகள் அல்லது குறுக்கு கடல் அலைகள் என்றும் அழைக்கப்படும் இந்த அலைகள் மிகவும் ஆபத்தானது.
கடலில் ஒரு திசையில் காற்று வீசும் போது அதே நேரத்தில் எதிர் பக்கத்திலிருந்தும் காற்று வேகமாக வீசினால் காற்றோடு காற்று மோதும்; அதனால் அலைகள் ஒரு கோணத்தில் இயங்கி ஒரு சதுர வடிவத்தை கடலில் உருவாக்குகிறது. இது போல தொடர்ந்து நடப்பதால் ஏராளமான சதுரங்கள் கடற்பரப்பில் காணப்படும். இந்த அலை பார்வைக்கு மேற்பரப்பில் முற்றிலும் பாதிப்பில்லாததாக தோன்றுகிறது, ஆனால், சதுர அலைகள் தோன்றும் கடல் நீருக்கடியில் மிகவும் உக்கிரமான கொடிய நீரோட்டங்கள் உருவாகின்றன.
கோட்பாட்டளவில், சதுர அலைகள் மிகப்பெரிய கப்பல்களை கூட கவிழ்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. கப்பலுக்கு எதிராக வரும் அலைகளை நேருக்கு நேர் தாக்கத் தக்க விதமாக தான் கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன, ஆனால் அதே அலைகள் கப்பலை பல கோணங்களில் மோதி அடித்தால், கப்பல் இயல்பாக மிதக்க முடியாது. சதுர அலைகள் ஏற்படும் போது இது தான் நடக்கும்.
சதுர அலை என்ற இந்த அழகான அதேசமயம் ஆபத்தான இயற்கை நிகழ்வு பிரான்சின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள அலே டி ஆர் ( L ile De Re ) தீவில் அடிக்கடி நிகழ்கிறது. சதுர அலைகள் மிகவும் ஆபத்தான ரிப்டைட்கள் என்ற கடல் கொந்தளிப்பை உருவாக்கும், எனவே இந்த இயற்கை நிகழ்வைக் காணும்போது நீங்கள் ஒரு சுவாரஸ்யத்தில் நீரில் இறங்கி நீந்த சென்று விடக்கூடாது.
அதிர்ஷ்டவசமாக, சதுர அலைகள் அரிதாகவே நிகழ்கின்றன, ஆனால் அவை என்ன என்பதை தெரிந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது.
No comments:
Post a Comment