அசற்றோபக்டர் (Acetobacter)
கறுப்பு_யூரியா என அழைக்கப்படும்,
நுண்ணுயிர்
சமகால இலங்கையின் விவசாய மேன்மைத்திட்டத்தில் அசேதன இராசயனமற்ற விவசாய செய்கையை ஊக்குவிக்கும் நோக்குடனும், உயிரியல் தேக்கமடையும் நஞ்சு அற்ற உணவுகளை பொதுமக்கள் உண்ணவேண்டும் என்ற நோக்கத்துடனும் பரிந்துரை செய்யப்படும் நவீன விவசாய முறைமையே #அசற்றோபக்டர்_Acetobacter உயிரியல் உரங்கள்.
பொதுவாக உயிர் உரங்கள் நைட்ரஜனை வேர்முடிச்சில் பொருத்துதல், பொஸ்பரஸ் சத்தைக் கரைத்தல் (Solubilizing), ஆகிய இயற்கை முறைகள் மூலம் தாவரத்துக்கு சத்துக்களைச் சேர்க்கும், மற்றும் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் பதார்த்தங்களை உருவாக்கி அதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டும்.
இரசாயன உரங்களின் பயன்பாட்டை, முறையான இடுபொருட்களுடன் கொடுக்கப்படும் இவை போன்ற உயிர்உரங்கள் கணிசமாக குறைக்குமென்பது உறுதி.
உயிர் உரங்களில் ஒன்றான அசற்றோபக்டர் தன்னிச்சையாகவே வாழ்ந்து வளிமண்டல நைதரசனை பதிக்கிறது. இது உயிர் உரமாக "பயறுவகை அல்லாத பயிர்களுக்கு" முக்கியமாக கரும்பு, நெல், சோளம் காய்கறி மற்றும் பல பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
அசற்றோபக்டர் நுண்ணுயிர்கள் வேர் மண்டலத்தில் அதிகளவில் இருக்கும்.
இந்த நுண்ணுயிரி உற்பத்தி செய்யக் கூடிய ஒருவித பசையானது போசணை மூலகங்கள் நீரில் கழுவிச்செல்வதை தடுக்க உதவுகிறது.
சில தசாப்தங்கள் முன் பிரேசில் நாட்டில் கரும்புச் செய்கையில் ஒரு ஹெக்டேயரில் 1/3 அதிகமாக விளைச்சல் எடுத்துள்ளார்கள். சாதாரணமாக 60 தொன் விளைச்சல் கிடைத்து வந்த நிலங்களில் 80 தொன் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் `அசற்றோபக்டர்’ (Acetobacter) என்ற நுண்ணுயிரியிலிருந்து கிடைக்கும் உயிர் உரம்தான் என்ற செய்தி, பிரேசில் நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்தபின்னரே இவற்றை பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்பட்டது.
பொதுவாக உயிர் உரங்களில் உள்ள நுண்ணுயிர்கள், பயிர்களின் வேர்களில்தான் வாழும். ஆனால், கறுப்பு யூரியா எனப்படும் அசற்றோபக்டர் கரும்புத் தாவரத்தின் உள்ளே சுக்குரோஸ் சத்திலும், அமிலத் தன்மையிலும் உயிர் வாழும் தன்மை கொண்டது. கரும்புக்குள்ளே இருந்துகொண்டு காற்றில் உள்ள நைதரசனை எடுத்துப் பயிருக்குக் கொடுக்கும்.
இந்தியாவின் தமிழகத்தில், இவ்வாய்வு, ஆய்வுக்கூடத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் கரும்பு வயல்களுக்கும் சென்று ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. கரும்பு பயிரிட்ட வயலில் ஏக்கருக்கு எட்டு கிலோ கறுப்பு யூரியா கொடுத்து, இரசாயன யூரியாவை முற்றிலும் நிறுத்தினர். இருந்தும் விளைச்சல் 20% அளவுக்கு அதிகரித்தது. சோதனை வெற்றி பெற்றதால் தமிழகம் முழுக்க `கறுப்பு யூரியா’ பரவியது. இதன் பிறகும் வயல்வெளிச் சோதனைகள் தொடர்ந்தன. இதன் மூலம் இந்தியாவெங்கும் இதன் பயன்பாடு உணரப்பட்டது.
இதைக் கேள்விப்பட்டுப் பிரேசில் நாட்டிலிருந்து டாக்டர் டெபனர் என்ற பெண்மணி தமிழகம் வந்தார். இவர்தான், இந்த நுண்ணுயிரியை முதன்முதலில் கண்டறிந்தவர். கரும்பு செய்கையில் தமிழகம் எடுக்கும் விளைச்சல், இயற்கை உரப் பயன்பாடு ஆகியவற்றைப் பாராட்டிவிட்டுச் சென்றார். இந்தச் செய்தியை அறிந்த தென்கொரியா அரசு, `கறுப்பு யூரியா’ தொழில்நுட்பத்தைக் கற்பித்துத் தரும்படி இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தை கேட்டுக்கொண்டது. அதன்படி தமிழக உயிரியல் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஆர்.முத்துக்குமாரசாமி என்பவர், ஓர் ஆண்டுக் காலம் கொரியாவில் தங்கியிருந்து தொழில்நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தார்.
கறுப்பு யூரியா என அழைக்கப்படும் அசற்றோபக்டரை கரும்புக்கு மட்டுமல்லாமல், நெல், கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, மலர்கள், சிறுதானியங்கள் என அனைத்துப் பயிர்களுக்கும் சேதன உரத்துடன் பயன்படுத்தலாம். இதனால், இரசாயன உரச்செலவு மிச்சமாகும். கறுப்பு யூரியாவைப் பயன்படுத்தும்போது, அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் உள்ளிட்ட உயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.
இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பரிந்துரைப்படி ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு 6 கிலோ கறுப்பு யூரியாவை மூன்று முறை, தலா 2 கிலோ என்ற விகிதத்தில் பிரித்து பயன்படுத்தலாம். நெற்பயிரில் கதிர் வரத்தொடங்கிவிட்டால், கறுப்பு யூரியாவைப் பயன்படுத்தக் கூடாது. காரணம், நைதரசன் அதிகரித்தால் விளைச்சல் பாதிக்கப்படும்.
இலங்கையில் உள்ள கரும்புத் தோட்ட பெருநிறுவனம் ஒன்றில் 2016 - 17 ஆம் ஆண்டுகளில் இவை பரீட்சார்த்தமாக பயன்படுத்தப்பட்டு இரசாயன உரப்பாவனை குறைக்கப்பட்டது.
இதேபோன்று 90 ஆண்டுகளுக்கு முன்னரே வர்த்தக சந்தைக்கு வந்துவிட்ட ரைசோபியம் (Rhizobium) பாக்டீரியாவை பயன்படுத்திய #ரைசோபிய_உயிரியல்_உரம் இதுவரைக்கும் இலங்கையில் விவசாயிகளிடையே பரவலாக அறியப்படாமல் இருப்பது, இயற்கை விவசாயத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், துரதிஷ்டவசமாக நாம் எவ்வளவு தூரம் பின்தங்கியுள்ளோம் என்பதை நன்கு வெளிக்காட்டுகிறது. எனவே அரசாங்கம் இவற்றை விரைவில் உள்ளூர் சந்தைகளுக்கு அங்கீகரிப்பதானது இயற்கை விவசாயத்தின் இன்னொரு மைல்கல்லாக அமையும்.
No comments:
Post a Comment