எல் காஸ்ட்டிலோ பிரமிட் என்பது மெக்சிக்கோவின் மாநிலமான யுகட்டானிலுள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெசோஅமெரிக்க படிக்கட்டுப் பிரமிட் ஆகும். எல் காஸ்ட்டிலோ என்பது "கோட்டை" என்னும் பொருள் தரும் ஸ்பானிய மொழிச் சொல்லாகும்.
கி.பி 987 ல், தொல்ட்டெக் அரசனான குவெட்சால்கோட்டில் (Quetzalcoatl) என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். 1221 ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எரிந்த கட்டிடங்களின் எச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் (Mayapan) என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது.
9 ஆம் நூற்றாண்டளவில், மாயன் நாகரீக மக்களால் கட்டப்பட்ட இது குகுல்கன் (குவெட்சால்கோட்டில் (Quetzalcoatl) என்பதற்கான மாயன் மொழிச் சொல்) கடவுளுக்கான கோயிலாகப் பயன்பட்டது.
இது சதுரவடிவத் தளங்களைக் கொண்ட ஒரு படிக்கட்டுப் பிரமிட் ஆகும். இதன் நான்கு பக்கங்களிலும், மேலேறிச் செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன. உச்சியில் கோயில் அமைந்துள்ளது. காலத்துக்குக் காலம், பழைய பிரமிட்டுகளைப் பெருப்பித்து அவற்றைப் பெரிய பிரமிட்டுகளாக உருவாக்குவது மெசோஅமெரிக்க நகரங்களில் வழக்கமாக இருந்தது. இதுவும் அத்தகைய ஒரு பிரமிட்டுக்கான எடுத்துக்காட்டு ஆகும். இப்போதைய பிரமிட்டின் அடிப்பகுதியின் வடக்குப் பக்கத்தில் உள்ள கதவொன்றின் வழியாக உள்ளே சென்று பழைய பிரமிட்டில் அமைந்துள்ள படிமீது ஏற முடியும். உள்ளே அமைந்துள்ள பழைய பிரமிட்டின் உச்சியிலுள்ள அறையொன்றில் குகுல்சான் மன்னனின் அரியணை அமைந்துள்ளது. இதன் வடிவம் சந்திர கால அட்டவணையான புதிய பிரமிட்டை உள்ளடக்கிய சூரிய கால அட்டவணையாக பழைய பிரமிட் உள்ளதாக கூறப்படுகிறது.
பிரமிடின் வெளிப்பகுதி தொகு
நான்கு பக்கதிலும் படிக்கட்டுகளை உடைய இக்கட்டிடத்தின் ஒவ்வொரு படிக்கட்டும் 91 படிகளை கொண்டதாக அமைந்துள்ளது. மேல்தளத்தையும் ஒரு படியாகக் கணக்கிட்டால் மொத்தம் 365 படிகள். ஒவ்வொரு படியும் ஹாப் என்னும் மாயன் நாகரீக கால அட்டவணையின் ஒரு நாளை குறிக்கிறது. இந்த கட்டிடத்தின் உயரம் மேல்தளம் வரை 24 மீட்டர், கூடுதலாக மேலுள்ள கோயில் ஒரு 6 மீட்டர். சதுரமான கீழ்த்தளம் குறுக்கில் 55.3 மீட்டராக உள்ளது.
பிரமிட்டின் வெளிமுனையிலுள்ள பெரிய படிகள் ஒன்பதும் சூரியக் குடும்பத்தின் ஒன்பது கோள்களை குறிப்பதாகக் கருதப்படுகிறது.
ஸ்பெயினின் யுகாட்டன் ஆக்கிரமிப்புக் காலமான 1530-களில் ஆக்கிரமிப்பு அரசர் இளைய ஃப்ரான்சிஸ்கோ-டி-மான்டியோ இந்த கட்டிடத்தின் மேல் பீரங்கி பொருத்தி கோட்டையாக பயன்படுத்தினார்.
இன்று 'எல் காஸ்ட்டிலோ' மிகப்புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மெக்சிகோவின் சுற்றுலாத்தலங்களில் ஒன்று.
No comments:
Post a Comment