உண்மையில் நல்ல வினா இது. கேட்டமைக்கு முதன்மை நன்றி.
உங்களுக்கு அடிப்படை அறிவியல் தொடர்பில் தெளிவு இருப்பதனால் விளக்குவது இலகுவாக இருக்குமென்று எண்ணுகிறேன்.
நீங்கள் கூறுவது சரிதான். அதாவது நூறாயிரம் ஒளியாண்டு தூரத்தில் இருந்து ஒரு பொருள் பூமியை வந்தடைய நூறாயிரம் ஒளியாண்டு காலம் தேவைதான்.
ஆனால் இங்கே ஒளி (Electromagnetic Waves - மின்காந்த கதிர்/ Photon - போட்டோன்) பயணிக்கின்றது என்ற எண்ணக்கருவை நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
கண்ணை உயர்த்தி வானைப் பாருங்கள். பல ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள நட்சத்திரங்கள், Galaxy எல்லாம் தெரியும். 3.5 பில்லியன் ஒளியாண்டு தூரங்களிலெல்லாம் நட்சத்திரங்களையும், கெலக்ஸிகளையும் உங்களால் பார்க்க முடியும். நான் வழக்கமாகச் சொல்வதுபோல, அவற்றின் ஒளி நம் கண்ணை வந்தடையப் பல ஒளியாண்டுகள் எடுக்கும்.
உதாரணமாக, ஒரு இலட்சம் ஒளியாண்டு தூரத்தில், ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதைப் பார்க்கிறீர்கள் என்றால், அதனுடைய ஒளி உங்களை வந்தடைய ஒரு இலட்சம் ஆண்டுகள் எடுக்கின்றன என்று அர்த்தம். அதாவது, நீங்கள் பார்ப்பது, ஒரு இலட்சம் ஆண்டுக்கு முன்னால் உள்ள நட்சத்திரத்தைத்தான். இதுவரை ஓக்கே. இதுவெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான்.
ஒரு இலட்சம் ஒளியாண்டு தூரத்திலிருக்கும் நட்சத்திரத்தில் தோன்றி, ஒருஇலட்சம் ஆண்டுகள் பயணம் செய்து வரும் போட்டோன்களில் ஒருசில, உங்கள் விழித்திரையைத் தொட்டதும் அவை தங்கள் பயணத்தை முடித்துக் கொள்கின்றன. அத்தனை போட்டோன்களும், உங்கள் கண்ணை வந்தடைய வேண்டும் என்பதற்காகவே உருவானவை. இது எவ்வளவு அதிசயம் பாருங்கள். (அல்ஹம்துலில்லாஹ்)
உங்கள் கண்களின் விழித்திரையால் உள்வாங்கப்படுவதற்கென்றே, அந்த நட்சத்திரம் சில போட்டோன்களைத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கிறது. அவை உங்களுக்குச் சொந்தமானவை.
இதுபோல வானில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் உங்களுக்கென்று சொந்தமாகப் போட்டோன்களை உருவாக்கி அனுப்பி வைக்கின்றன. ஆச்சரியமாக இல்ல? ஆனால், நான் சொல்ல வந்தது இதுவல்ல.
ஒரு இலட்சம் ஒளியாண்டு தூரத்திலிருந்து வரும் போட்டோன், உங்களை வந்தடைய ஒரு இலட்சம் ஆண்டுகள் எடுக்கும் என்பது உண்மைதான். அது உங்கள் சார்புப் பார்வையில், ஒளி வேகத்தில் அந்தப் போட்டோன் நகர்ந்து உங்களை அடைய அவ்வளவு காலம் எடுக்கும்தான். ஆனால், அந்த போட்டோனின் சார்பாக நடப்பது என்னவென்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அது தெரிந்தால் அதிர்ந்து போய்விடுவீர்கள்.
ஐன்ஸ்டைனின் கோட்பாட்டின்படி, ஒரு பொருளின் வேகம் அதிகரிக்க அரிகரிக்க, அந்தப் பொருளிற்கான காலம் சுருங்கிக் கொண்டே போகும். அந்த வேகம் ஒளியின் வேகத்தை அடைந்ததும் காலம் பூச்சியமாகும். அதாவது காலம் நிலையாக உறைந்தது போல (freeze) ஆகிவிடும். அதனால், எப்போது ஒரு போட்டோன் ஒளிவேகத்தில் பயணிக்க ஆரம்பிக்கிறதோ, அந்தக் கணத்தில் அதற்குக் காலம் இருப்பதில்லை. அதனால், அந்தப் போட்டோனைப் பொறுத்தவரை, அது எந்தக் கணத்தில் தன் பயணத்தை ஆரம்பிக்கிறதோ, அப்போதே போகவேண்டிய இடத்துக்கும் சென்றுவிடுகிறது.
என்ன புரிகிறதா?
ஒரு இலட்சம் ஒளியாண்டு தூரத்திலிருந்து, ஒரு போட்டோன் உங்களை வந்தடைய, ஒரு இலட்சம் ஆண்டுகள் தேவை. அது உங்கள் பார்வையில். ஆனால், போட்டோனின் பார்வையில் காலம் உறைந்துவிடுவதால் அந்தக் கணமே அதன் பயணம் முடிந்துவிடுகிறது. ஒரு இலட்சம் ஒளியாண்டுகள் தூரம் மட்டுமில்லை. 13 பில்லியன் ஆண்டுக்கு முன்னர் நடந்த பெருவெடிப்பின் பயனாக உருவான போட்டோன்கள்கூட, கண்மூடித் திறப்பதற்குள் உங்களிடம் வந்துவிட்டதாகவே நினைக்கும்.
"வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் ஒவ்வொரு காரியமும் அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த நாளின் அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்" (அல்-குர்ஆன் : 32:5, 22:47)
"வானவர்களும் ரூஹும் அவனிடம் அந்நாளில் ஏறிச் செல்கின்றனர். அந்நாளின் அளவு ஐம்பதாயிரம் ஆண்டுகளாகும்" (அல்-குர்ஆன் 70:4)
No comments:
Post a Comment