Post Top Ad
Your Ad Spot
Sunday, November 15, 2020
இயக்க வெறியா இஸ்லாமிய சகோதரத்துவமா?
அண்மையில் இறைவனடி எய்திய மர்ஹூம் முபாரக் மௌலவி தொடர்பில் அவர் பற்றியறிந்த அனைவருமே ஒரு முக்கிய விடயத்தை குறிப்பிட்டிருந்தனர். அது தான் அவர் அனைவருடனும், எல்லா இயக்கங்களையும் சார்ந்த இஸ்லாமிய அறிஞர்களுடனும் வைத்திருந்த உறவும் இயக்க பாகுபாடின்றி எல்லோருடனும் பழகிய விதமும் என்ற விடயம். அவர் இலங்கை வாழ் முஸ்லிம் அறிஞர்களுக்கு காட்டி விட்டுச் சென்றுள்ளது ஒரு சாதாரண முன்மாதிரி அல்ல. அது எம் மார்க்க அறிஞர்கள் அதிகமானோரிடம் காணக்கிடைக்காத ஒரு சிலரிடம் மட்டும் அரிதாக காணக் கிடைக்கின்ற முஸ்லிம் சமூகத்தின் அடிநாதமாக இருக்க வேண்டிய ஒரு அடிப்படைப் பண்பு என்பதை யாரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய இலங்கையின் பல்வேறு இயக்கங்களையும் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்களுக்கிடையே, இயக்க வாதிகளிடையே நிலவும் உறவு தொடர்பில் அவதானிக்கும் போது அப்பட்டமாக வெளிய தெரிவது என்ன என்பதை நான் சொல்லிப் புரியவேண்டியதில்லை.
உண்மையில் அவர்களுக்கிடையே நிலவும் பாரிய விரிசலையும், மோதல்களையும், வெறுப்பையும் குரோதத்தையும் நோக்கும் போது இது என்ன சமூகம் என எண்ணத் தோன்றுகின்றது.
கருத்து வேற்றுமைகள் என்பது இஸ்லாம் தாராளமாக ஏற்றுக் கொண்ட விடயமே. எனினும் நமது சமய தலைவர்கள் இயக்க வாதிகள் இக்கருத்து வேற்றுமைகளுக்குள் ஒற்றுமை காண்பதற்கு பதிலாக வெறுப்பையும், காழ்ப்புணர்ச்சியையும் கக்கும் விதம் மிக கீழ்த்தரமாக இருக்கிறது. இவர்களுக்கு இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற ஒரு விடயம் இருப்பதாகவே தெரிவதில்லை. அல்லது தமது இயக்க வெறிக்கு முன்னால்
இஸ்லாமிய சகோதரத்துவமும் ஒரு கேடா என்ற தோரணையில் இருக்கிறது இவர்களது நடைமுறை.
ஒரு இயக்க வாதி அடுத்த இயக்க வாதியை கண்டால் சலாம் சொல்லாமை, கதைக்காமல் தவிர்த்தல், அவர் இல்லாத இடத்தில் கேலி செய்தல், ஏளனம் செய்தல், சாடுதல், இழிவு படுத்தல், அவர் குறைகளை பகிரங்கமாக சொல்லித் திரிதல், மானத்தை சீர் குலைத்தல், அற்பமாக கருதுதல், அவர்களது விவகாரங்கள் எதிலும் பங்கு கொள்ளாமை, அவர்களை புறக்கணித்தல், மொத்தத்தில் நிரந்தர எதிரிகளாகவே அவர்களைக் கருதுதல் என அனைத்து மோசமான வழிமுறைகளையும் பின்பற்றி எதிர்ப்பதைப் பார்க்கும் போது இவர்கள் நபிமார்களின் வாரிசுகளா அல்லது சைத்தானின், தாகூத்துகளின் ஏஜண்டுக்களா என்ற சந்தேகம் எழுகின்றது. மொத்தத்தில் இஸ்லாத்தின் பயங்கர எதிரியை எதிர்ப்பது போல் இவர்களது எதிர்வினையாற்றல் அமைந்திருக்கின்றது .
மாற்றுக் கருத்துடையோருடன் நடந்து கொண்ட ரசூலுல்லாஹ்வின் வழிமுறை என்ன என்பதை கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத இவர்கள் நபியவர்களின் சுன்னாவின் சில கிளையம்சங்களை நடைமுறைப்படுத்துவதில் சக இஸ்லாமிய சகோதரனுடன் போர்ப் பிரகடனம் செய்கின்றனர்.
இயக்க முறைமைகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை இஸ்லாமிய சமூகத்தில் ஆழமாக வேரூண்டிப் போயுள்ள இந்தப் பிரிவினை மற்றும் கீழ் தர எதிர்ப்பு நடைமுறை எங்கேயிருந்து, எப்படி, ஏன் உருவாகின என்பது விடை காணப்பட வேண்டிய விடயமே. எது எவ்வாறு இருப்பினும் சிலர் சொல்வது போல இவ்வியக்கங்களுக்குப் பின்னணியில் உண்மையிலேயே ஏதாவது யூத சதியேதும் அரங்கேறுகின்றதா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் இஸ்லாமிய வரையரைகளுக்குள் கருத்து சுதந்திரம், இயக்க சுதந்திரம், பிரச்சார சுதந்திரம், தமக்கென்று சில வழிமுறைகளைக் கையாண்டு நடைமுறைப்படுத்தும் சுதந்திரம் என அனைத்து வித சுதந்திரங்களையும் இஸ்லாம் தாராளமாக வழங்கியிருக்கின்ற போது தமது கொள்கை, வழிமுறை, சிந்தனைபோக்கு, நிலைப்பாடு ஒன்று மட்டுமே சரியானது என்ற ரீதியில் அடுத்த சிந்தனை வழிமுறைகளை சிர்க்கை எதிர்ப்பதை விட மோசமாக எதிர்ப்பதுதென்பது யார் காட்டிய வழிமுறை?
இப்படி இஸ்லாம் எங்கே கற்றுத்தருகின்றது?
மாற்று சமயங்களை, மதங்களை சகிப்புத்தன்மையோடு நோக்க வேண்டும் என்று பகிரங்க பயான் நடாத்தும் பல்லாயிரம் மௌலவிகள் தனது சமயத்தினுள்ளே இருக்கும் அகீதாவோடு முரண்படாத ஒரு சிந்தனைப்போக்கை எவ்வளவு தூரம் சகிப்புத் தன்மையுடன் பார்க்கின்றனர் என்பது விசனத்துக்குரியது.
ஒரு பெளத்த பிக்குவின் அல்லது ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் கழுத்தில் நட்போடு கைகளைப் போட்டு கொண்டு போக முடிந்த இவர்களில் பலருக்கு தனது மார்க்கத்த்னுள்ளே இருக்கின்ற வேறொரு இயக்க சகோதரனின் முகத்தைப் பார்க்கக் கூடப் பிடிப்பதில்லை.
மாற்று மததவரோடு கூட இவர்கள் எவ்வளவு இங்கிதமாக தாராளமாக பழகுகிறார்கள்! நல்ல உறவை வைத்திருக்கிறார்கள்! ஆனால் வேறொரு இயக்கத்தில் உள்ள தனது இஸ்லாமிய சகோதரனை அபூ ஜஹ்ளை, உத்பாவைப் பார்ப்பது போல் அல்லவா பார்க்கிறார்கள்!
ஒரே அல்லாஹ்வை அவனது இறுதித் தூதரை ஏற்றுக்கொண்ட மத்திம சமூகமா இது? உம்மதே வஸத் என்று சிலாகிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தில் மத்திம போக்கை மருந்துக்கேனும் காண முடியவில்லை. தீவிர வாதம் கடும்போக்கு என்பவற்றுக்கு இதை விடவுமா ஆதாரம் வேண்டும்? 21 ஏப்ரல் தாக்குதலின் பின்னர் எமது முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே எத்தனை காட்டிக் கொடுப்புக்கள்! போட்டுகொடுப்புக்கள்! எப்பாவமும் செய்யாத எத்தனை எத்தனை அப்பாவிகள் இன்னும் தடுப்புக் காவலிலே இருக்கின்றனர்? இன்னும் எத்தனையோ பேர் பெரும் பிரயத்தனங்களின் பின்னர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்? இயக்க வெறியின் உச்ச கட்டத்தை நிரூபிக்க இதனை விடவும் ஆதாரமேது?.
ஒரு பெரும்பான்மை பெளத்த நாட்டில் ஆக சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகத்தின் தீர்க்கப்படாத பாரிய பிரச்சினைகள் எங்கோ இருக்க மார்க்கத்தில் அற்ப விடயங்களுக்கு கருத்து முரண்பட்டு , சண்டை பிடித்து , குரோதமும் வைராக்கியமும் வளர்த்து, முழு சமூகமுமே துண்டுகளாக உடைந்து சின்னாபின்னமாகி மாற்று சமயங்களுக்கு முன்னிலையில் தீண்டத்தகாத மார்க்கமாக ஆக்கி வெட்கி, கூனிக் குறுகித் தலை குனிந்து குற்றவாளியாக நிற்கிறது நபிகளார் விட்டுச்சென்ற புனித மார்க்கம். நல்ல வேளை அல்லாஹ் முஸ்லிம்களை பெரும்பான்மையாக இந்நாட்டில் ஆக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் படைக்கு இங்கே தான் அதிகம் வேலை இருந்திருக்கும்! வரலாற்று நூல்களில் அதிக இரத்தம் சிந்தப்பட்ட பூமியாக நம் நாடு இடம்பிடித்திருக்கும்.
தன்னைப் போலவே அடுத்தவனும் சிந்திக்க வேண்டும், தனது கொள்கையையே அடுத்தவனும் பின்பற்ற வேண்டும், எமது நிலைப்பாடே சரியானது என நினைப்பது தானே உண்மையான அடிப்படைவாதம். இந்த அடிப்படைவாத சிந்தனையில் இருந்து மீண்டு வந்த இஸ்லாமிய இயக்கங்கள் தான் எத்தனை?
இனி வரும் காலங்களில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் உண்மையான இஸ்லாமிய தாஇகள், சமூக நலன் விரும்பிகள் அதிகம் செயலாற்ற வேண்டிய பகுதிதான் இது. பிற சமயங்களுடன் உரையாடல் என்ற விடத்யத்துக்கு முன்பு பல நூறு உரையாடல்கள் இஸ்லாமிய இயக்கங்களுக்கு இடையே தேவைப்படுகிறது. இவை உண்மையான இஸ்லாமிய இயக்கங்களாக இருந்தால் தாமாக இதற்காக முன்வந்து திருத் தூதர் சொன்ன சகோதரத்துவம் மிளிரும் ஒரே உடலாக மாறி இந்நாட்டில் செயலாற்ற முனைய வேண்டும். அல்லது வழமை போல இதனையும் விமர்சித்து சாட்டுப் போக்குகளை சொல்லி நழுவி விடுமானால் ஏலவே சொல்லப்பட்ட யூத கைக் கூலிகள் என்ற குற்றச்சாட்டு உண்மையென நிரூபணமாகிவிடும்.
மற்றையது, உலகில் ஒவ்வொருவரும் வேறு வேறான சிந்தனைப் போக்கும், ரசனையும், விருப்பு வெருப்புக்களையும், தெரிவையும் கொண்டவர்கள் என்பதை நம்மவர்களுக்கு நினைவு படுத்த வேண்டும் . இதனை யாராலும் மாற்றி விட முடியாது என்பதும் அது அல்லாஹ்வின் படைப்பற்றளில் உள்ள விசேட தன்மை என்பதும் அந்த விசேட தன்மைகளின் வெளிப்பாடுதான் ஒவ்வொருவரும் வெவ்வேறான சிந்தனைகளை கொள்கைகளை இயக்கங்களைப் பின்பற்றுவதென்பது என்ற விடயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். மறுமை நாள் வரை நமக்கு ஒத்த, ஒவ்வாத சிந்தனைகள் , அமைப்புகள், இயக்கங்கள் தொடர்ந்தும் இருக்கத்தான் போகின்றன. அவற்றை விமர்சிப்பதும் அவற்றை ஆதரித்தோ புறக்கணித்தோ கருத்தாடல் செய்வதும் ஆகுமானதெனினும் அங்கே ஒரு சீரிய முறை , நாகரீகம், பண்பாடு, என்பன கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதற்கு முதலில் பல்வேறு சிந்தனைகளை சகித்துக்கொள்ளும் பக்குவம் வர வேண்டும். இப்படியான ஒரு நாகரீகம் பண்பாடு இன்னும் எமது முஸ்லிம்களிடம் வந்ததாகத் தெரியவில்லை .அப்படி வரும் நாளில் மட்டுமே இவர்கள் இந்த நாட்டில் எதையாவது சாதிப்பார்கள். அனைவரது இருப்பும் இந்நாட்டில் அல்லாஹ்வின் அருளால் நீளும். இல்லாதவிடத்து இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அழிவு வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் உறுதி.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment