அடிமைத்தனத்தில் ஒருவித இன்பம் இருப்பதால்தான் மனிதர்கள் அடிமைப்படுகிறார்கள். பயத்தின் காரணமாக, நிர்ப்பந்தம் காரணமாக அடிமையாகிவிடுவது ஒரு வகை. எவ்வித நிர்ப்பந்தமும் பயமும் இன்றி அடிமையாகிவிடுவது ஒரு வகை. எவ்வித நிர்ப்பந்தமும் பயமும் இன்றி மனிதர்கள் அடிமையாகிவிட முடியுமா? முடியும் என்பதே நம் சூழல் நமக்கு அளிக்கும் பதில்.
மனிதர்கள் ஏதேனும் ஒன்றிற்கு அடிமையாகிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அந்த அடிமைத்தனத்திற்கு பிரியம் என்றோ ஆர்வம் என்றோ சேவை என்றோ தியாகம் என்றோ ஏதேனும் ஒரு பெயரிட்டுக் கொள்ளலாம். அடிமைத்தனம் என்றாலே தவறானது மட்டுமே என்று எண்ணிவிட வேண்டாம். இரண்டாவது வகையை நான் நல்ல பொருளில்தான் பயன்படுத்துகிறேன்.
யாரிடமிருந்து எந்தப் பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறதோ அந்தப் பணியில் அவருக்கு ஆர்வமும் ஈர்ப்பும் ஏற்பட்டுவிடுகிறது. நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமைபோன்று அவர் அதனை நிறைவேற்றிவிடுகிறார். அதனை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற எண்ணத்தை அவர் எங்கிருந்து பெறுகிறார்?
சிலருக்கு சமூக விவகாரங்களில் அதீத ஆர்வம் ஏற்பட்டுவிடுகிறது. சிலருக்கு கல்விப் பணியில் அதீத ஆர்வம் ஏற்பட்டுவிடுகிறது. சிலருக்கு சமூக சேவைகளில் அதீத ஆர்வம் ஏற்பட்டுவிடுகிறது. இப்படி கூறிக் கொண்டே போகலாம். ஒரு துறையில் நீங்கள் நிபுணராக வேண்டும் என்று விரும்பினால் ஒரு வகையான பித்து உங்களிடம் காணப்பட வேண்டும். அதன் காரணமாக மற்ற விவகாரங்களில் உங்களால் போதிய அளவு கவனம் செலுத்த முடியாமல்கூட ஆகிவிடலாம். சில சமயங்களில் பிற துறைகளில் மூடராகக்கூட நீங்கள் ஆகிவிடலாம்.
உங்கள் வாழ்க்கையில் யாரேனும் உங்களுக்கு அடிமைபோன்று சேவகம் செய்திருக்கலாம். நீங்களும் யாருக்காவது அடிமைபோன்று சேவகம் செய்திருக்கலாம். இதுவெல்லாம் எப்படி நிகழ்கிறது என்பது புதிரானது.
மனிதர்கள் பல சமயங்களில் தங்களையும் மீறி செயல்படுகிறார்கள். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஏன் அப்படியெல்லாம் செயல்பட்டோம் என்று யோசிக்கவும் செய்கிறார்கள். எல்லா அடிமைத்தனங்களுக்கும் நமக்குத் தீங்கு தரக்கூடியவை அல்ல. சில நமக்கும் மற்றவர்களுக்கும் பெரும் பயன்தரக்கூடியவையாகவும் அமையலாம்.
No comments:
Post a Comment