![]() |
பாலம் அமைக்கப்பட்ட பின்னர் ஊர் வாசி ஒருவரினால் எடுக்கப்பட்ட புகைப்படம் |
Fb page - https://www.facebook.com/Mutur-Diary-101641154913325/
சின்ன மட்டக்களப்பு,
வரலாற்று தொடர் - 01
இன்று தாஹா நகர் என்ற ஊரின் பழைய பெயர்தான் சின்ன மட்டக்களப்பு. இங்கு மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த ஒரு சில குடும்பங்கள் வந்து குடியேறியதால் இதற்கு சின்ன மட்டக்களப்பு என பெயர் வந்ததாக பலர் கூறுகின்றனர்.
ஆரம்ப காலங்களில் எல்லா ஊர்களுக்கும் அவ்வூரின் ஏதாவது ஒரு காரணப் பெயரை மையமாக வைத்து பெயர்கள் சூட்டப்பட்டு வந்தது.
இந்த சின்ன மட்டக்களப்பிற்கும் அன்றைய பூனகலத்தீவு (புர்க்கானியா) என்ற கிராமத்திற்கு இடையில் இருந்த பாலம்தான் சின்ன மட்டக்களப்பு பாலம்.
இவ்விரு கிராமத்திற்கும் இடையில் ஒரு இணைப்பு பாலமாக ஆரம்பத்தில் ஒரு சிறிய ஒற்றைவழி பாலம் இருந்தது. இப்பாலம் 1957 ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு வெள்ளப் பெருக்கில் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் பூனகலத்தீவு மக்கள் குடிநீர் பெறுவதில் கஷ்டங்களை அனுபவித்தனர். அதன் பின்னர் 1958 - 1959 காலப்பகுதியில் அன்றைய கிராம சபை தவிசாளராய் இருந்த செய்யது காதர் மரைக்கார் (செய்லாக்காசிம் மரைக்கார்) என்பவரால் 9500/- தொடக்கம் 10000/- ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தாவூத் - சுலைமான் (சுலைமான் அப்பா) என்பவரினால் கொந்துராத்து எடுக்கப்பட்டு பாலம் புணர்நிர்மானம் செய்யப்பட்டது.
![]() |
பாலம் அமைக்க கொந்தராத்து எடுத்த அக்காலத்தில் காணப்பட்ட போடியார்களில் ஒருவர் |
பாலம் அமைக்கும் பணியில் அக்காலத்தில் பணியாட்கள் எவ்வித இயந்திரங்களையோ அல்லது மிருகங்களையோ பயன்படுத்தவில்லை. அவர்களின் உடல் வலிமையால் கட்டப்பட்டதே அப்பாலம். அன்று ஆற்றின் ஆழம் பத்து அல்லது பன்னிரண்டு அடி இருந்ததாக அறியக் கிடைத்தது. ஆற்றில் இருந்து சுமார் 75 மீட்டர் தூரத்தில் பாலயப்பா என்ற பெயருடைய ஒரு இஸ்லாமியரின் அடக்கஸ்தளம் இருக்கிறது. இது எப்போது அடக்கப்பட்டது இவரின் வரலாறு பற்றிய எந்தவொரு குறிப்புகளும் அறியக் கிடைக்கவில்லை. (தகவல் கிடைத்தால் தனிப் பதிவாக எழுதுவோம்).
![]() |
அடகஸ்த்தளம் அமைந்துள்ள இடத்தில் இன்றும் காணப்படும் அடையாளச்சின்னம் |
கொல்லனாற்று வீதி
இன்றைய மூதூர் மார்க்கட் வீதிதான் அன்று கொல்லனார் ஆற்று வீதி என்று நம் முன்னோர்களால் அழைக்கப்பட்டது. மார்க்கட் பள்ளிவாயல் அமைந்த இடத்திற்கு அருகில் ஆங்கிலேயர் காலத்தில் குதிரைகளுக்கு லாடம் அடிக்கும் ஒரு கொல்லன் பட்டறை இருந்தது. இது மார்க்கட் ஆற்றங்கரையை அண்மித்து இருந்ததால் இந்த ஆற்றுக்கு கொல்லன் ஆறு என்ற பெயர் வந்தது. இதுவே இவ்வீதிக்கும் கொல்லனார் ஆற்று வீதி என்ற பெயர் ஆனது.

கொல்லனார் ஆற்றை அண்மித்த ஊர்தான் தாஹா நகர் என்று அழைக்கப்படும் ஊர். இதில் பெரும்பகுதியான காணிகள் மூதூர் சேர்ச்சுக்கு சொந்தமாக இருந்தது. அதனால் இப்பகுதியை கோயில் காணி என்றுதான் அன்று அழைத்தனர். மூதூரின் முதலாவது விளையாட்டு மைதானம் கோயில் காணியில்தான் இருந்தது. அதன் பிற்பாடுதான் மூதூர் பொது விளையாட்டு மைதானம் உருவானது. (1960 காலப்பகுதியில்).
மைதானத்தை அன்றிய பகுதியான இன்று பிரதேச செயலக கட்டிடம் உள்ள இடத்தில் "பப்ளிக் சர்விஸ் கிளப்" என்றொரு கிளப் இருந்தது. இங்கு உள்ளக விளையாட்டுக்களான கரம், டேபில் டெனிஸ் என சில விளையாட்டுக்களும், வெளிக்கள விளையாட்டுக்களான வெலிபோல், பாஸ்கட் போல் என சில விளையாட்டுக்களும் இருந்தன, காலப்போக்கில் இங்கு மதுபானங்களும் விற்பனையாகின.
கிளப்பிறகு அருகாமையில் ஆரம்ப கால பஸ் டிப்போ இருந்தது. அத்துடன் பசளை ஸ்டொர் ஒன்றும் இருந்தது. (மற்றுமொரு பசளை கந்தோர் கல்விக் கந்தோர் இருக்கும் இடத்தில் இருந்தது) அத்துடன் இன்று சமூர்த்தி அலுவலகம் இருக்கும் இடத்தில் காட்டுக் கந்தோர் ( Forest department) இருந்தது. கோயில் காணிகள் எழுதப்படாத விதிமுறை அடிப்படையில் கிருஸ்தவ குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் போது அக்காணிகளை விற்க முடியாது, அவ்வாறு விற்பதானால் அதை வேறு ஒரு கிருஸ்தவருக்குத்தான் விற்க முடியும் என நிபத்தனை வார்த்தைகள் மூலம் முன்வைக்கப்பட்டது.

இது குறுகிய கால வரலாறுதான் என்றாலும் இதற்கு முன்னரும் ஒரு வரலாறு இருந்திருக்கலாம். அதற்கான ஆதாரம் தேட நாம் அந்த அடக்கஸ்தளம் யாருடையது என்பதை தேட வேண்டும்.
அத்துடன் ஆங்கிலேயர்கள் காலத்தில் காணி அதிகாரங்கள் அவர்களிடமே இருந்ததால் யாருடைய காணிகளையும் யாருக்கும் வழங்கி இருக்கலாம்.
நாம் தேடிக் கொண்டே இருப்போம்..... முடியுமானவரை.
தகவல்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
புகைப்படங்கள் உதவி,
சகோதரர் பசீர் (ஓய்வு பெற்ற இ.போ.ச. DS)
சகோதரர் முபாரக் (ஓய்வு பெற்ற நூலகர்)
நன்றி,
#Team_Mutur_Diary
No comments:
Post a Comment