ஆனால் அழகு விடயத்தில் இதற்கு எதிர்மாறாக இருப்பது ஏன்?
கலப்பிரிவு மூலம் இனவிருத்தியான காலம் போய் ஆண் பெண் சேர்க்கை மூலம் தான் இனிமேல் இனம்பெருகும் என்று இயற்கையானது தீர்மானித்தமை தலைவிதியை மாற்றும் ஒரு தீர்மானம் ஆகும். இனவகைகள் விதம் விதமாகப் பல்கிப்பெருக அது தான் ஒரே வழி. ஆனால் அந்தக் கருத்தை உயிர்களுக்குள் எப்படித் திணிப்பது என்பது இன்னொரு கடினமான விடயம்: எப்படி ஆண்களையும் பெண்களையும் ஒருவரை ஒருவர் விரும்ப வைப்பதென்பது ஒன்று,. உருவாகும் கருவுக்கு உணவு கொடுப்பது எப்படி புறக்கணிக்கப்படாமல் இருப்பது என்பது இன்னொன்று, கருவையும் குஞ்சையும் சுற்றிப் பெண்ணின் வாழ்வையும் பெண்ணின் வாழ்வைச் சுற்றி ஆணின் வாழ்வையும் ஒழுங்கு படுத்துவது தான் SEXUAL DIMORPHISM என்னும் “இருபால் உருவகிப்பின்” அடிப்படைச் சித்தாந்தம். இங்கே சிலவிடயங்களில் உயிரினங்களுக்குத் தெளிவு இருக்காவிட்டாலும் இயற்கைக்கு நல்ல தெளிவு இருந்தது. அவையாவன:
👉 அடுத்த தலைமுறை உருவாக வேண்டும். அதற்காக என்ன விலையும் கொடுக்கப்படலாம்; எந்த உயிரும் பலி கொடுக்கப்படலாம்
👉 ஒரு தரத்துப்பிறப்பு ஒரு தொகையான உயிரினங்களைக் கொண்டிருக்குமாக இருந்தால் அதன் பின்பு விந்து கொடுத்து முடித்துவிட்ட ஆணால் பிரயோஜனமும் முடிந்துவிட்டது. தேவைப்பட்டால் அதன் ஆயுளை அங்கேயே முடிக்கலாம்.
👉 குஞ்சுகள் பொரித்துச் சுதந்திரமாகத் தம்வகை பேணும் நிலை வந்தால் அதன் பின் பெண்ணுடைய தேவையும் கிடையாது. இன்னொரு கருக்கட்டலுக்குப் பயன்படாத பெண்ணயும் முடிக்கலாம்.
👉 விந்து வினியோகிக்கும் ஆணுக்குத் தரமான உணவு வேண்டும்.
👉 கருக்கட்டிய முட்டையை வயிற்றில் வைத்து அல்லது கூட்டில் வைத்து அடை காக்கும் பெண்ணுக்கும் அதே மாதிரியான சிறப்புணவு வேண்டும். அதற்காகவே பெண்ணானது ஆணை விடப் பெரிதாக இருக்க நேர்ந்தால் அதனாற் பரவாயில்லை.

👉 அதிகமாகக் குட்டிகளை ஈன்றுவிட்ட பெண்ணானது குட்டிகளுக்குப் பால் கொடுக்க வேண்டுமானால் முதலிற் தன்னைச் சுதாரித்துக்கொள்ள வேண்டும்/ அதற்காக இரண்டொரு குட்டிகளைச் சாப்பிட நேர்ந்தால் அதனாற் பரவாயில்லை
👉 இனப்பெருக்கத்துக்காகப் பாலியற்சேர்க்கை நடைபெற்றேயாக வேண்டும். அதற்காகவே ஆண்களில் பெண்ணுக்கும் பெண்களில் ஆணுக்கும் கவர்ச்சியான அமசங்கள் உருவாக்கப்படுகின்றன..
👉 எல்ல இனங்களிலுமல்லவெனினும் சில இனங்களில் ஆணானது பெண்ணை வற்புறுத்தித் தான் வன்புணரவேண்டி இருக்கிறது. இது எமக்கு அருவருப்பாக இருந்தாலும் சிலவகை பட்ஜர் நீர்நாய் இனங்களில் இது சகஜம்.. இது SURE-FIRE FORMULA FOR A FAILURE என்று எண்ணினீர்களோ அது தப்பு. அவ்வகை நீர்நாய்களும் போதிய அளவிற் காணப்படுகின்றன.
👉 பெரும் பண்டா (GIANT PANDA) வில் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி இனச்சேர்க்கையில் அதிகம் ஆவல் இல்லை அவை நண்பர்களாகவே விளையாடி விட்டுப்போய் விடுகின்றன. எனவே இங்கே மனிதத் தலையீடு இல்லையேல் இனம் அழியும் நிலை வரலாம். இயற்கை இங்கே தன்னைத் தானே தலையிற் குட்டிக்கொண்டது.இந்த விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள நீங்கள் எண்ணியிருக்க வில்லை என்பது தெரிகிறது. ஆனால் சில சமயங்களில் இயற்கையின் நோக்கம் என்ன. அதற்கு என்ன வேண்டும் என்று தெரியாவிட்டால் எமது உரையாடல் முன்னேறாது. சில சமயங்களில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான விடைகள் ஒரு நுண்கணிதத் தீர்வுபோல் மேற்கண்ட விதிகளின் அடிப்படையிலேயே தரப்பட வேண்டியிருக்கின்றன
ஆண்கள் பலசாலிகள் போலத் தோன்றினாலும் கூட உடற்றொழிலியல் ரீதியாக எங்கே பலம் தேவைப்படுகிறதோ அங்கேயெல்லாம் பெண்கள் தான் பலசாலியாக இருக்கிறார்கள். என்று காட்டியிருக்கிறேன் அது தற்செயலாக நிகழ்ந்த தப்பல்ல.
இந்த அழகு விடயத்தில் கூட ஒரு அழகியைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி என்னிடம் நீங்கள் சொன்னால் உங்கள் உள்மனம் உங்களுக்குச் சொல்கிற அதே கட்டளையைத் தான் எனது உள்மனமும் எனக்குத் தரும். ஆனால் அதனை அறிவியல் ரீதியாக விளக்கமுடியுமா என்றால் அது தான் முடியாது. அந்த INTERNAL WIRING ஒன்று தான் அங்கே இருக்கிற ஒரே ஒரு அறிவியற் காரணம். பெண்கள் ஆண்களை விட அழகானவர்களுமல்லர், ஆண்கள் பெண்களை விட அழகானவர்களுமல்லர். நாம் அங்கே நடாத்துவது அழகு ராணி / அழகு ராஜாப் போட்டியுமல்ல. நாம் இருசாராரும் அழகை விவரிப்பதற்குக் கூட ஒரே பதப்பயன்பாடுகளை மேற்கொள்ளாதபோது அது எப்படி ஒரு சாரார் மறுசாராரை விட அழகாக இருக்க முடியும். இரு பெண்கள் தம்முள்ளே ஆண்களைப் பற்றி விவரிக்குமிடத்து HANDSOME, HUNK, BROAD SHOULDERS, WELL-BUILT BODY, SMART-LOOKING, இன்னும் எத்தனையோ பதங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒன்று கூட எமக்கு ஒரு பெண்ணை விவரிக்க உதவாது. ஏன் அப்படி? உண்மையில் ஆணின் மனத்திலும் பெண்ணின் மனத்திலும் அழகை விவரிக்கும் எண்ணங்கள் இனப்பெருக்கத்துக்கு இந்த ஆளுடைய மரபணு உதவுமா இல்லையா என்ற கேள்வியின் அடிப்படையில் தான் இருக்கிறது. நோஞ்சான் ஆண் இனப்பெருக்கத்தில் உதவமாட்டான் - எப்போது என்றால் அவனிடம் கையில் Ph-D என்று எழுதிய தாள்கள் இல்லாதபோது தான். ஏனென்றால் மனிதவாழ்வின் தப்பிப்பிழைத்தலில் மூளை விருத்திக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்பதனைப் பெண் தன்னையறியாமலே உணர்கிறாள். தசைப்பிடிப்பான பெண் வேண்டாம் ஆனால் மெல்லிய இடை அகன்ற இடுப்பு, பெரிய மார்பகம், அமைதியான முகம் உள்ள பெண் வேண்டுமென்று வாயாற் சொல்லாமற் சொல்கிற ஆணும் தன்னுடைய வருங்காலச் சந்ததி பற்றித்தான் பேசுகிறான்.
எனவே இங்கே நாம் இரண்டு விடயங்களைத் தீர்த்தாயிற்று. தனக்கும் தனது வருங்காலச் சந்ததிக்கும் உடல் நலத்திற் தன் பங்கென்ன என்பதனைத் தீர்மானிக்கும் ENDURANCE, STAMINA ஆகியவற்றில் அந்தப் பெண் அனுகூலமான அம்சங்களைக் கொண்டிருக்கிறாள். இனப்பெருக்கத்துக்குத் தான் விரும்பக்கூடிய ஆணைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றலை தன்னுடைய உருவப்பாடு மூலம் பெற்றிருக்கிறாள். இதே கதை தான் ஆணுக்கும். இந்த ஒன்றுக் கொன்று மாறுபாடான ஆனால் எதிர்ப் பாலார் விரும்பக் கூடிய அம்சங்களைக் கொண்டிருப்பதனையே நாம் “இருபால் உருவகிப்பு” (Sexual Dimorphism) என்கிறோம். ஆகவே ஆண் விலங்கையும் பெண்விலங்கையும் இயற்கை உருவாக்கியபோது அதற்கு “நீ படித்துப் பட்டம் வாங்கு” “ நீ நன்றாகச் சமைக்கப்பழகு” என்று இரு பாலாருக்கும் இரு வேறு தொழில் கொடுக்கும் எண்ணங்கள் அதற்கு இருக்கவில்லை. இனப்பெருக்கம் மட்டும் தான் ஒரே ஒரு நோக்கம். அதனை ஒவ்வொரு விலங்கிலும் உருவாக்க வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தியது. இதிலே சமுதாய அமைப்பு (விலங்குகளுக்கும் தான்). டெஸ்டெஸ்டொறோனின் பங்கு என்பனவும் புறக்கணிக்கப்பட முடியாதவை.
புழுக்களைப் பாருங்கள் பெண்புழுக்கள் தான் பெரியவை. ஏனெனில் அவை தான் முட்டைகளைத் தாங்க வேண்டும்/ இரு பாலினப் புழுக்களையும் ஒரே அளவில் படைத்தால் தேவையற்ற விதத்த்தில் உணவுக்கான போட்டி ஏற்படும். பற்றாக்குறைகளைச் சமாளிக்கவும் இயற்கை வகுத்த ஒரு வழி வேண்டும். நுளம்பைப்பாருங்கள். ஆண் நுளம்பு இரத்தம் குடிக்க முடியாது. பெண் நுளம்புக்குப் பழச்சாறு குடித்து நேரம் விரயம் பண்ண முடியாது. ஏன் இரண்டுமே இரத்தம் குடித்தாலென்ன என்ற கேள்வி இங்கே எழலாம் இரத்தம் குடிக்குமிடம் எதிரியின் பாசறை. அங்கே இரத்தம் குடித்து ஆண் நுளம்பு இறக்க நேரந்துவிட்டால் இனிப் பெண் நுளம்பு ஒவ்வொரு நீர்க்கண்டமாக, ஒவ்வொரு மரமாக இன்னொரு ஆண் நுளம்பு தேடி அலைய முடியாது. ஒரே ஒரு பெண் நுளம்பு தப்பினாலும் இனம் விருத்தியாகும் ஆனல் இனவிருத்திக்குத் தேவையான மனித இரத்தமோ விலங்கின் இரத்தமோ இல்லாமல் இனப்பெருக்கம் இல்லை. ஆகவே பெண் நுளம்பு அந்த RISK ஐ மேற்கொள்ளத்தான் வேண்டும். இயற்கையானது ஆண் நுளம்பு இரத்தம் குடிக்கப் புறப்பட்டால் இனத்துக்கு நேரக்கூடிய இரண்டு கேடுகளைச் சாமர்த்தியமாக ஒரே அடியில் தீர்த்துவிட்டிருக்கிறது, இப்படிப் பாதுகாக்கப்பட்ட ஆண்நுளம்பு ஒரே ஒரு தடவை மட்டும் பெண் நுளம்புடன் இணைந்தாலும் அதன் பின் அந்த நோஞ்சான் பயல் செத்தார்..அப்படியானால் அந்த ஆண் நுளம்பை இயற்கை உருவாக்கியதே அந்த விந்தணுத் தானத்துக்காக மட்டும் தானா? நிச்சயமாக அப்படித்தான் என்பது தான் பதில்..அதனை விடவும் பரிதாபமான கேஸ் ஆண் சிலந்திக்கு உரியது.

பென்னாம் பெரிய பெண் சிலந்தி, ஒன்று ஒரு நுண்ணிய ஆண் சிலந்தியை எதிர்பார்த்து. வலை பின்னித் தயாராக வைத்திருக்கிறது. அதிலே ஆண் சிலந்தி “தாம் தித்தோம்” என்று நடனமாடிப் பெண் சிலந்தியை மனம் கவர்ந்து அதன் மீது ஏறி ஒரே ஒரு தடவை புணர்ந்ததும் சரி; அவ்வளவு தான்! பெண் சிலந்தி அப்படியே ஆண்சிலந்தியை அமுக்கிப்பிடித்துக் கொன்று தின்றுவிடுகிறது. ஏன் கொலை செய்ய வேண்டும்? தப்பிப்போக விட்டால் தான் என்ன? பெண் சிலந்தி இனித்தான் முட்டையிட வேண்டும். அதற்கு அதிக புரதம் வேண்டும். சும்மா கிடைக்கிற புரதத்தை வீசி ஏறிய இயற்கைக்கு மனமில்லை. அப்படியானால் ஆண் சிலந்தி உருவான ஒரே ஒரு காரணம் விந்து வினியொகம் தானா என்று கேட்டால் பதில் “ஆமாம், அப்படித் தான்” என்று தான் வருகிறது.
இனி இரை தேட வேட்டையாடும் பறவைகளப் பாருங்கள். அங்கே பெண்பறவையானது ஆண்பறவையை விடக் கணிசமான அளவு பெரியது. ஏனெனில் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க நேர்ந்தால் அது தானும் உண்ண வேண்டும், குஞ்சுகளுக்கும் இரை கொடுக்க வேண்டும் ஆகவே பெண் பறவை பெரிதாகத் தான் இருக்கவேண்டும் ஆண்பறவையும் பெண்பறவையும் இனிதே கூடுகட்டிக் குஞ்சு பொரித்து குஞ்சுக்கு உணவு தேடுகின்ற காகம் போன்ற பறவைகளில் இந்த “இருபால் உருவகிப்பு” இல்லை, அங்கே அதற்குத் தேவையில்லை.
இந்த விடயங்கலைக் கவனிக்கும்போது ஒரு விடயம் தெளிவு. உயிரினங்களில் ஆண் தான் சீனியர், பெண் ஜூனியர் தான் என்று இயற்கை ஒருபோதும் தீர்மானிக்கவில்லை. தேவையையும் இடத்தையும் பொறுத்து தனது முடிவுகளை அடிக்கடி மாற்றி மாற்றியமைத்துக் கொண்டது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நுளம்பும் சிலந்தியும் உருவான காலத்திலேயே நிலைமை அப்படித்தான். கழுதைப்புலிக் குடும்பத்துக்குப் பெண் தலைமை வகிப்பது தான் பொருத்தமானது; அது தான் தகுதியானது தப்பிப்பிழைத்து வாழ வழி வகுக்கும் என்று எண்ணியபோது அங்கே பெண்ணுக்கு தெஸ்தெஸ்ரொசோனைக் கொஞ்சம் கூட்டிக் கொடுத்தது.

எல்லா இனங்களிலும் பெண் பலமுள்ளவளாக இருந்தாகப் பரிணாம வரலாறு காட்டவில்லை. முலையூட்டிகள் என்று வரும்போது ஆண்கள் தான் பொதுவாகப் பலசாலிகளாக இருக்கின்றன. குழுக்களாக வாழ்வது என்று தீர்மானிக்கப்படும் போதும் அங்கே ஆண்களுக்குத் தான் முதலிடம். என்றாலும் இதற்குள்ளேயும் கூட இயற்கை ஒரு இரகசியம் புதைத்து வைத்திருக்கிறது.
முலையூட்டிகளிடையே இனங்களுக்கிடையிலான யுத்தங்களும் சாதி(Clan)களுக்கிடையிலான யுத்தங்களும் அடிக்கடி வருவதுண்டு, இதிலெல்லாம் பெண்களுக்குப் பங்கு கொடுத்தால் ஒரு இனமே அழிந்துபோகும். ஆகவே பெண் வயிற்றில் இருக்கும் கருவைக் காப்பாற்ற ஆணும் பெண்ணும் சேர்ந்து தான் முயல்கின்றன. பெண் ஒழிந்து கொள்கிறது. ஆண் தன்னுயிர் போகும் வரை நின்று போராடுகிறது.

ஆனாலும் பெண்ணின் அபிமானத்தைத் தேடிக்கொள்ளவென்று இயற்கையானது ஆண்களுக்கு நிறையவே நகைநட்டுக்கள் போட்டுத்தான் விட்டிருக்கிறது. பறவைகளின் பலவித வண்ணங்கள், பாடவென்று பலவிதமான குரல்கள், பாதுகாப்புக்கான கொம்புகள், தந்தங்கள், முழிக்கண்கள், புரையேறக் கொட்டும் பலம், எப்போதுமே சண்டைக்கு ரெடி எனும் மனோபாவம் இவை எல்லாம் இருந்தாற்தான் ஆண் விலங்குக்குப் பெண் கிடைக்கும். சில சமயம் பெண்ணுக்கு உணவு கூடத் தேடிக்கொடுக்க வேண்டும். இது தான் “உனக்குச் சமைக்கத் தெரியுமா” என்கிற கடைசிக்கேள்வி இது உண்மையான “ஆண் பார்க்கும் படலம்” தான்!. பெண் விலங்குக்கோ ஒன்றுமே நிரூபிக்கத் தேவையில்லை! பிள்ளைபெற்றால் சரி.
குரங்குகள்.
மனிதக்குரங்குகள் என்று இவை வரும் போதும் இருபால் உருவகிப்பு (Sexual Dimorphism) முக்கிய பங்கு வகிக்கிரது என்றாலும் மனிதர்களிற் பின்நாட்களில் இந்த மாறுபாடு நன்றாகக் குறைந்து விட்டது. இன்றும் கூடப் பெண்கள் தாம் மணக்கவிருக்கும் ஆண் தங்களை விடப் பெரிய உருப்படியாக இருக்க வேண்டுமென்று தான் எண்ணூகிறார்கள். அதற்கு நான் தரக்கூடிய ஒரே காரணம் அவர்கள் பெரிய உருப்படி என்பதை உடல்நலம் வாய்ந்த மரபணு என்பதுடன் இணைத்துப் பார்க்கிறார்கள் என்று தான் எண்ண வேண்டி இருக்கிறது. ஆனாலும் கடந்த 40,000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது இதற்குக் காரணம் உடலியற் பரிணாமங்களை விடவும் சமுதாய அணைப்புப் பரிணாமம் என்று இன்னொன்று படிப்படியாகக் கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது கடந்த 10,000 ஆண்டுகளில் இது நன்கு பரிணமித்து கடந்த நூற்றாண்டளவில் உறுதிப்படுத்தப்பட்டும் விட்டது.
40,000 ஆண்டுகளுக்கு முன் இயற்கை செய்த பரிசோதனையொன்றை உற்று நோக்குவோம். அந்த நாட்களில் நேயண்டர்தால், ஹொமொ சப்பியன் என்று இரண்டு இனங்கள் இருந்திருக்கின்றன, வேறும் இருந்திருக்கலாம். எமது ஒப்பீட்டுக்கு இவை இரண்டும் போதும். அந்த நாட்களில் இவ்விரு இனங்களும் ஐரொப்பியக் காடுகளில் வேட்டையாடிச் சீவித்தபோது அங்கே சுயாதீனம், வேலைப்பங்கீடு, இணைந்து வாழ்தல் போன்ற தத்துவங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. நேயண்டர்தல் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் இருந்த சமுதாய ஒப்பந்தம் வேறு, ஹோமோ சப்பியன்களின் உறவு வேறு. நேயண்டெர்தல் பெண் ஆணில் அதிகம் தங்கி இருக்கவில்லை. சுதந்திரமாகவே வேட்டையாடினாள். அந்த வாழ்வு உணவூட்டம் என்ற வகையில் நிறைவானதாக இருந்தது. ஆனால் வேட்டையாடும் வாழ்வில் ஆண் எதிர்கொண்ட அதே ஆபத்துக்களை அவளும் எதிர் நோக்கினாள். முன்னர் வேறெந்தச் சந்தர்ப்பத்திலும் இயற்கையானது RISK TAKING FACULTY ஐப் பெண்களிடம் கொடுக்கவில்லை. சந்ததியைப் பேணுவது மட்டும் தான் பெண்ணுயிரின் வேலை. இப்போது இங்கே நிலைமை தலைகீழாக மாறியபோது கர்ப்பிணி நிலை, கையிற் குழந்தை போன்ற நிலைப்பாடுகளுக்கு எவ்வளவு சலுகைகள் கிடைத்தன என்பது தெளிவில்லை. ஆனால் மாண்டு போன ஒவ்வொரு நேயண்டர்தாலின் கர்ப்பப்பையும் இனத்துக்கு என்று ஏற்பட்ட இழப்பாகவே இருந்திருக்கிறது. நேயண்டர்தால் இனத்தின் அழிவுக்கு அந்தப் பெண்னின் சுதந்திரமாக வேட்டையாடும் பழக்கமும் ஒரு காரணம். ஒரளவுக்கு இவர்களை விட வலிமையும் திறமையும் குறைந்திருந்த ஹோமோ சப்பியன்கள் சமுதாய ஏற்பாடுகளில் இவர்களை வெகுவாகவே விஞ்சியிருந்தார்கள். கூட்டமாக வேட்டியாடுவதும் பெண்ணானவள் அந்தக் கூட்டத்துக்குள்ளேயே ஒரு அங்கத்தினராக இருந்ததும் மனித இனத்துக்குப் பெரும் நன்மை தந்தது.

ஒருத்தி கர்ப்பிணியாகவோ குழந்தையுடனோ இருந்தால் அவள் வேட்டைக்குப் போக வேண்டி இருக்கவில்லை. ஆனாலும் அவளைக் கவனிக்க ஒன்றல்ல, பல ஹோமோ சப்பியன்கள் சுற்றிலும் இருந்தார்கள் என்பதும் உண்மை தான். இந்த LUXURY நேண்டர்தல் பெண்ணுக்கு இருக்கவில்லை. நேயண்டர்தால் பெண் தோற்ற அதே விளையாட்டில் ஹோமோ சப்பியன் பெண் வெற்றி பெற்றாள். இதனாற் தான் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவுக்குள் நுழைந்தபோது விரல்விட்டு எண்ணக்கூடியடாக இருந்த ஒரு கூட்டம் பல்கிப்பெருகி மற்ற இனத்தின் அழிவுக்கும் வழி தேடியது. 12,000 ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் விவசாயத்தில் இறங்கி வீடுகள்/மனைகளிற் சீவிப்பது என்ற நிலைக்கு வந்தபோது அந்த முடிவுக்குப் பின்னால் இருந்தவள் இந்தப் பெண் தான். அன்றி வேட்டையை முற்றுமுழுதாக அனுபவித்து ஆனந்தித்த அவளுடைய ஆண் சோடி(கள்) அல்ல!. உண்ட பின் குகைக்குள்ளும் வெளியிலும் வீசிய எச்சங்கள் மீண்டும் காய்கறி தரும் மரங்களாஹ வளரும். நீர்நிலைகளை அண்மி வீசினால் சாகுபடி இன்னும் நிச்சயம் என்று கண்டுபிடிக்கவென்றால் வேட்டையில் அலைந்த ஆணுக்கு அதற்கான நேரம் இருக்கவில்லை. பொழுது கொஞ்சம் மிஞ்சியிருந்த பெண்ணுக்கு அது தாராளமாக இருந்தது. சமூக வாழ்வின் முதல் போனஸ் புள்ளி இது தான்! வேட்டையில் காட்டில் நேரத்தைச் செலவிட விரும்பிய ஆணுக்கு வீட்டிலும் இடைக்கிடை மாறுபட்ட சுவையில் உணவு கிடைக்கும் என்று காட்டினாள். ஒவ்வொரு குகையாக ஓடித்திரியாமல் ஒரே ஒரு கொட்டிலை/குடிலை உரிமையாக்கிக் கொள்ள விரும்பியவளும் அவள் தான். (கொள்ளைப்படுத்தல்)
இந்த 40,000 – 12,000 ஆண்டுக் காலத்துக்குள் எப்போதோ இயறகையும் அவளுக்கு கொஞ்சம் உதவியிருக்கிறது. இந்த ஏனைய முலையூட்டிகளைப் பாருங்கள் அவற்றுக்கு MENSTRUATION PERIOD இன் உள்ளே தான் ESTRUS CYCLE என்று இருந்தது ஒரு மாதத்தில் அது இருந்த ஒன்று-இரண்டு நாட்களுக்குத் தான் ஒரு ஆணை விரும்ப முடியும். இது தான் கருத்தரிப்புக் காலம். இந்த நாட்கள் மனிதக்குரங்குகளிற் கூடத் திருந்திக் கொண்டே வந்துள்ளது. கெரில்லாவில் 3- 4 நாட்களாக இருந்த இந்த சினைவிருப்புக் காலம் சிம்பன்ஸியில் 10-14 நாட்களாகத் திருந்தியிருக்கிறது.
ஆனால் மனிதப்பெண்ணில் விவசாயம் கொண்டுவந்த உணவுத்திருத்தம் காரணமாக இது முற்றாக மாறிவிட்டது. முதன் முதலாக மாதவிடாய்க்காலம் ஆன 3-4 நாட்களைத் தவிர மற்றெல்லாக் காலத்திலும் ஒரு ஆணை விரும்ப முடியுமென்றும் தன்னை விரும்பும் ஒரு ஆணுடன் இணைய முடியும் என்றுமாயிற்று, இப்போது இனக்கலப்பின் நோக்கம் இனவிருத்தி என்பதற்கப்பால் மனித உணர்ச்சிகளுக்கு விருந்து என்றுமாயிற்று. இதன் சமூதாயத் தாக்கம் எவ்வளவு என்று யோசித்துப் பாருங்கள்!. பெண் வந்தாள் என்ன வராவிட்டால் என்ன என்று காடுகளிற் கிடந்த மனிதன் இப்போது வீட்டைச் சுற்றிவர ஆரம்பித்தான். குடும்ப வாழ்க்கைப் பிணைப்பு இன்னும் இறுகிற்று இது தான் நாகரீகத்தின் முதற்படியும் பெண்களின் ஆளுமையின் முதற்படியுமாகும்.
கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் சமஉரிமை, சமசந்தர்ப்பம் குழந்தைகளை வளர்ப்பதிற் சமபொறுப்பு அதிலே சமூகத்துக்கும் ஒரு பொறுப்பு என்று மாறியமை வெறும் சட்டவாக்கம் என்று எண்ணினீர்களானால் அது தப்பு, நிஜ வாழ்வு பிரதிபலித்த மாற்றம் ஒன்றையே சட்டம் உறுதிப்படுத்தியது.
ஆனாலும் இந்த வளர்ச்சியிலே சில எதிர்பாராத சிக்கல்களும் உருவாகியிருக்கின்றன. ஊட்டத்திறன் காரணமாக உருவான பரிணாம வளர்ச்சி இப்போது பிறக்கும் குழந்தைகளிற் பளிச்சென்று தெரிகிறது அவர்களுடைய தலை கருப்பைக்குள்ளேயே நன்கு வளர்ந்து விடுகிறது. அந்தப் பிரசவக் கால்வாய் மட்டும் அதனை இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் தொழில்நுட்பம் விருத்தியான கதை மட்டும் இந்தப் பிரசவக் கால்வாய்க்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. அதனால் சீசரியன் பிறப்புக்கள் எப்போதாவது ஒன்று என்ற நிலை மாறி இப்போது இயற்கைப்பிரசவம் எப்போதாவது ஒன்று என்று மாறிக்கொண்டு வருகிறது. இது நன்மையா தீமையா என்றும் இப்போதைக்கு எம்மாற் சொல்ல முடியாதிருக்கிறது
இன்னும் ஒரு சிக்கல் இருக்கிறது செயற்கையான கருத்தரிப்பு ஆண்களுக்கான தேவையைக் குறைத்து விட்டது. அதன் காரணமாகவே பெண்களிடையே தன்னின சேர்க்கையும் அதிகரித்துக் கொண்டு வருகிறது இதனை நீங்கள் வெகு சாதாரணமான நடைமுறைச் செயற்பாடுகள் தான். NO BIG DEAL என்றெண்ணலாம். நான் இவற்றைப் பரிணாமச் செயற்பாடுகள் என்று தான் எண்ணுகிறேன். எந்தக் காரிணிகள் மனித சமுதாயத்தின் அடிப்படை அலகு குடும்பம் என்று தீர்மானித்தனவோ அதே காரிணீகள் இப்போது மனித சமுதாயத்தின் அடிப்படை அலகு தனி மனிதன் என்று நிறுவ முயல்கின்றன.

No comments:
Post a Comment