Fazeen Sameem
மாதவிடாய்... இன்னும் இதை நேரடியாக பேசத் தயங்கும்.. ஏன் பேசவே கூடாத பேசவே முடியாத சில தலைப்புகளில் முக்கியமான தலைப்பாக கருதும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.மாதவிடாய் நாளில் இருக்கும் ஒரு பெண்ணிடம், என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க என்று ஒரு ஆண் கேட்டால், இன்னும் உடம்பு சரியில்லை அல்லது தலை வலிக்கிறது என்கிற மறைமுக விளையாட்டையே நாம் ஆண்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் ஆண் ஆசிரியரிடமோ அல்லது ஆண் சக ஊழியர்களிடமோ ‘எனக்கு இன்னைக்கு Periods’- என்று தயங்காமல் சொல்லும் வெளிப்படைத்தன்மை பெண்களுக்கு வந்துவிட்டதாகத் தோன்றவில்லை.
அதைவிடக் கொடுமை, பள்ளிகளிலோ அல்லது அலுவலகங்களிலோ மாதவிடாய் நாள் தொடங்கிவிட்டால் அங்கிருக்கும் ஆண்கள் கண்களில் படாமல் அந்த நாப்கினை எப்படி டாய்லட்டிற்கு எடுத்துச் செல்வது என்று யோசித்தே சோர்ந்து போன அனுபவம் நம்மில் பலருக்கும் உண்டு. அதை ஒரு கவர் அல்லது பேப்பரில் மடித்து, ஆடைக்குள் எங்காவது சொருகிக்கொண்டு, இயல்பாக நடந்து டாய்லட்டிற்கு செல்வதற்குள் பாதி உயிர் போய்விடுகிறது. இதில் யாரவது அதை கவனித்துவிட்டார்களா என்கிற சிறுபிள்ளைத்தனமான பயம் வேறு. ஏன் மாதவிடாய் குறித்த இத்தனை நடைமுறை சிக்கல்கள்?
இதற்கு ஒரு முக்கிய காரணம்
நம் ஆண்களுக்கு இன்னும் மாதவிடாய் குறித்த புரிதல் குறைவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. இது பெண்களின் அந்தரங்கமான விசயம்; எனவே இதிலிருந்து சற்றே விலகியிருத்தல் சாலச் சிறந்தது என்றே ஆண்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு காய்ச்சல் வந்தாலோ அல்லது சளிப்பிடித்தாலோ அது அவர்களின் அந்தரங்கம் என்று நாம் விலகுவதில்லை. அதுபோலதான் மாதவிடாயும் என்கிற இயல்பான சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டியக் கட்டாயத்தில் ஆண்கள் இருக்கிறார்கள். அதுவே பெண்களுக்கு இதுப் பற்றிய வெளிப்படைத்தன்மையோடு இருப்பதிலும், உதவி கேட்பதிலும், இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை ஓரளவேனும் குறைக்கும்.
அதேபோல் பெண்களும், மாதவிடாயைக் குறித்த உரையாடல்களை இந்த சமூகத்தில் சகஜமாக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்படும் பொழுதுதான் இந்த நடைமுறைச் சிக்கல்கள் அகலும். இன்னும் நம் சமூகத்தில் அம்மாக்கள் தன் மகன்களிடம் இதுகுறித்து பேசுவதைத் தவிர்ப்பது என்பது மிகப்பெரிய அபத்தமாக இருக்கிறது. ஏனென்றால், ஆண்களின் இதுபோன்ற அடிப்படைக் கற்பிதங்கள் அவர்களின் அம்மாவிடமிருந்தும், வீட்டிலிருந்துமே தொடங்குகின்றன என்பது எனது கருத்து.
இந்த சமூகம் எவ்வாறு பார்க்கிறது? மாதவிடாயைப் பற்றி இந்த சமூகம் தெரிந்து வைத்திருக்கிறதா?...அப்படியே தெரிந்துவைத்திருந்தாலும் அது சரியானதாக இருக்கிறதா??...பார்க்கலாம்...
மாதவிடாயைப் பற்றி அறிவியலாக சொல்ல வேண்டுமென்றால் 'பெண்களின் அடிவயிற்றில் கருப்பைக்கு இரண்டு பக்கங்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக சினைப்பைகள்(Ovary) இருக்கும்...சினைப்பையில்தான் பெண்கள் கருத்தரிப்பதற்கான கருமுட்டைகள் வளர்கின்றன...இந்தக் கருமுட்டை கருக்குழாய்(Fallopien tube) வழியாக கருப்பையை அடையும்...கருமுட்டை ஆணின் விந்தணுவோடு இணைந்தால் கரு உருவாகும்...அந்த கருமுட்டை ஆணின் விந்தணுவோடு சேரவில்லையென்றால் அது உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும்...அங்கே இருக்கக்கூடிய பஞ்சு போன்ற மென்மையான திசுப்படலம் கரு உருவாகாதபோது உடைந்து இரத்தமாக வெளியேறும்...இந்த இரத்தப்போக்கு மாதம் ஒருமுறை 3-5 நாட்கள் வரை நடக்கும்...இதுதான் மாதவிடாய்....
படிப்பறிவில்லாத மக்களுக்கு இதனைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாரான பின்பு மாதாமாதம் நடக்கக்கூடிய இரத்தப்போக்குதான் மாதவிடாய்.
மாதவிடாய் நடக்கும் முன்பு இருக்கக்கூடிய நிலை உளவியலாக மிகப்பெரிய சிக்கலைக் கொடுக்கும்...இதனை premenstrual syndrome என்பர்...மாதவிடாய் தோன்றுவதற்குமுன் கவலை,பதற்றம்,ஆர்வமின்மை,அசதி,கோபம்,எரிச்சல்,தூக்கமின்மை,பாதுகாப்பற்றதாக உணர்தல்,தனிமை விரும்புதல்,தான் அழகாக இல்லை என நினைக்கும் பெண்களுக்கும் சமூகத்தால் அங்கீகாரம் கிடைக்காத பெண்களுக்கும் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை,இந்த அனைத்திற்கும் உச்சமாக தற்கொலை எண்ணம் வரை இந்த premenstrual syndrome என்று சொல்லக்கூடிய மாதவிடாய்க்கு முந்தைய நிலையில் பெண்களுக்குத் தோன்றும்...பல நேரங்களில் இந்த எண்ணங்கள் மாதவிடாய் தொடங்கி முடியும்வரை இருக்கும்...சில சமயங்களில் பெண்கள் தேவையில்லாமல் அதிகளவு கோபப்படுவதற்கான காரணம் இதுதான்...
மாதவிடாய் சில பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மாதாமாதம் ஏற்படாமல் 2,3 மாதத்துக்கு ஒருமுறை 6 மாதத்துக்கு ஒருமுறை என ஏற்படும்...இதனை Irregular periods என்பர்...அவ்வாறு ஏற்படும்போது 6 மாதத்திற்கும் சேர்த்து இரத்தப்போக்கு ஒரே சமயத்தில் வெளியேறும்....இந்த இரத்தப்போக்கானது தொடர்ந்து 15,20 நாட்கள் வரை இருக்கும்...இவ்வாறு Irregular periodsஐ சந்திக்கும் பெண்களுக்கு தசைப்பிடிப்பு,மார்பக வலி,மார்பக வீக்கம்,தலைவலி,தோள்மூட்டு வலி,தண்டுவட வலி,மனச்சோர்வு,எரிச்சல,உடல் அசதி,அடிவயிற்றுவலி,வாந்தி,குமட்டல் போன்றவை சொல்ல முடியாத அளவு ஏற்படும்...
இன்று பலரும் பெண்களின் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி இன்றைக்கும் கண்டுகொள்வதே இல்லை.
எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக அணுகக் கற்றுக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தில், மாதவிடாய் தொடர்பான சிலக் கேலிக்கூத்துகளும் நடந்துகொண்டிருக்கின்றன என்பது மறுக்க பட முடியாத உண்மை. இனியேனும் இது பெண்கள் பிரச்சனை என்று ஒதுங்கி நிற்காமல் ஆறுதலாக இருக்க முயற்சிப்பது அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் 2:222. )
No comments:
Post a Comment