உண்மை என்னவெனில் நீங்கள் காணும் நிறங்கள் என்பது உண்மையில் அவற்றின் சொந்த நிறங்களே அல்ல என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா?
உதாரணமாக நாம் பார்க்கும் இலையின் நிறம் பச்சை நிறம் பச்சை அல்ல என்பதுபோல...
அவ்வாறாயின் நிறங்கள் எல்லோர் பார்வைக்கும் ஒன்று போலத்தானே உள்ளது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்... இப்பதிவில் நிறங்கள் பற்றி சற்று விளக்கமாகவே காண்போம்...
நிறங்கள் பொருட்கள் மூன்று காரணிகளால் வண்ணம் பெறுகின்றன.
1. ஒளியை உறிஞ்சுவதால்
2. ஒளி மூலத்தின் தன்மை
3. நம் கண்களின் உணர்திறன்

"வண்ணம் என்பதே ஒளியின் பல்வேறு அலை நீளங்களை நம் கண் உணரும் நிகழ்வே" ஆகும்.
மனிதக் கண்களால் உணர முடிந்த அலை நீள எல்லை 400 ~ 700 நானோ மீட்டர் வரையிலாகும். இவ் அலைநீள வீச்சினுள் சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீளம், கருநீலம், ஊதா என்பன உள்ளடக்கும்.
பொருளுக்கு நிறம் எப்படி வருகிறது?
ஒவ்வொரு பொருளினுள்ளும் உள்ள அணுக்களில் அதிரும் எலக்ட்ரான்களின் அதிர்வைப் பொறுத்து அதன் மீது விழும் ஒளியை உறிஞ்சும் வகை மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பொருளின் மீது படும் ஒளியில் சிவப்பு நிறம் உறிஞ்சப்படுமானால் அப்பொருள், சிவப்பின் நிறை நிறமான நீலமாய்த் தெரியும். அவ்வாறே, மற்ற நிறங்களும்! நீல வண்ண பொருளின் மீது சிவப்பு நிற ஒளியை செலுத்தினால் அப்பொருள் சிவப்பு நிறத்தை உறிஞ்சிவிடுமாதலால் கருமையாய் தெரியும்.
எளிமையாக சொல்வதானால் ஒரு பொருளின் நிறம் ஒன்று புலப்படுகின்றது என்றால் அப்பொருளில் ஏனைய எல்லா நிறங்களும் உறுஞ்சப்பட்டு குறித்த ஒரு நிறம் மட்டும் மீண்டும் வெளிவிடுகின்ற அல்லது தெறிக்கின்ற ஒளிக் கதிர்கள் கண்ணுக்குள் சென்று அங்குள்ள விழித் திரையில் விழுகின்றன. இத்திரை கட்புலன் உணர்வுக்குரிய நரம்பு முனைகளைக் கொண்டுள்ளது.

அணு பொருளின் நிறத்தை பாதிக்குமா?
நிச்சயமாக பாதிக்கும். அணுவின் அருகில் மற்றொரு அணுவோ, மூலக்கூறோ இருப்பின் அவற்றிலுள்ள எலக்ட்ரான்களின் அதிர்வு மாறுபடுவதால் அவை ஒளியை உறிஞ்சும் வகையும் மாறுபடும்.
மேலும், நமது கண்ணில் கூம்பு வடிவ மற்றும் கோல்வடிவ ஒளியுணர்வி அலகுகள் உள்ளன. கூம்பு வடிவ அலகுகள், அலைநீளத்தை உணரும் திறனை பொறுத்து சிறிய, நடுத்தர, பெரிய என வகைப்படுத்தப்படுகிறது (ஒளிப்பார்வை). கோல் வடிவ உணர்வலகுகள் கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தை மட்டுமே உணரக்கூடியவை (இருட்பார்வை). இதில் ஏதேனும் பாதிக்கப்பட்டால் அந்த நிறத்தை காணும் திறன் நமக்கு பாதிக்கப்படும்.

மேலதிக தகவலுக்கு...
மனிதனின் உணர்வுகள் மற்றும் நடத்தைகளில் நிறம் எவ்வாறு சம்மந்தப்படுகிறது என்பதைப் பற்றி கற்கும் கற்கைக்கு “நிற உளவியல்” (Color psychology) எனப்படும். ஆனால், இதற்கும் நிற குறியீட்டியலிற்கும் (Color Symbolism) எவ்வித தொடர்புமில்லை என்பதே உண்மை.
நிறக் குறியீட்டியலில் சிவப்பு நிறம் என்பது அபாயத்தை குறித்துக் காட்டும் குறியீடாகவே இனங் காணப்படுகிறது. இதனால் நிறங்களில் சிவப்பிற்கு அவ்வளவு ஆதிக்கம். ஆனால், நிற உளவியலில் ஆபத்தைக் குறிக்கும் நிறங்களாக முற்றிலும் வித்தியாசமாக மஞ்சளும் கருப்புமே காணப்படுகின்றன.
இதுதான் நிற உளவியலும், நிற குறியீட்டியலும் முற்றிலும் வேறுபடுவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். இது ஏனைய நிறங்கள் தொடர்பிலும் வித்தியாசப்படுவது உண்மையானதே!
“உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்?”
என்ற கேள்விக்கு நீங்கள் எப்போதாவது முகங் கொடுத்திருப்பீர்கள். அதற்கு உங்களை அறியாமலேயே அழகிய நிறம் ஒன்றை பதிலாகவும் சொல்லியிருப்பீர்கள். நிறங்கள் அதன் அமைவினால் எம்மையறியாமலேயே எமது மனத்தைத் தொட்டுக் கொள்கின்றன.
ஆக, எம் உணர்வுகளை, உண்மைகளை, சம்பவங்களை, தகவல்களை, பாதித்தவைகளை என விரியும் அனைத்தையும் மெய்நிகர் உலகில் (Virtual World) அடுக்கிச் சொல்ல துணையாக நிற்கும். நிறம் என்பது என்றுமே எமது வாழ்வில் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விடயம் என்றால் யாரால்தான் மறுக்க முடியும். அன்றாடம் எத்தனை வகையான நிறங்களை சந்திக்கிறோம். அது தொடர்பில் சிந்தியுங்கள்.
No comments:
Post a Comment