2050ம் ஆண்டு உலக கடற்பரப்பில் மீன்களை விட பிளாஸ்டிக் பொருட்களே அதிகமாக காணப்படும் என்றால் நம்ப முடியுமா..??
ஆம்.. உலகம் அதை நோக்கி தான் நகர்ந்து கொண்டிருப்பதாக சர்வதேச பொளாதார மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (WORLD ECONOMIC FORUM)
எண்ணற்ற கடல் வளங்களை தன்னுள் கொண்டு இயற்கையின் அவதாரமாக திகழும் கடல் தான் உலகின் 71 சதவீத பரப்பளவை நிரப்பியுள்ளது. வெறும் 29 சதவீத நிலப்பரப்பில் வாழும் மனிதர்கள் 71 சதவீத கடற்பரப்பை பிளாஸ்டிக்கை கொண்டு நிரப்பினால் உலகம் என்னவாகும்..?

ஆமைகள், திமிங்கலங்கள் முதல் கடற்பரப்பு மேல் பறக்கும் பறவைகள் வரை பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்ளுவதால் தொண்டைகள் மற்றும் வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக்குகள் சிக்கி உயிரிழக்கின்றன. அண்மையில் ஸ்காட்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்திற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது அதன் வயிற்றில் இருந்து 100 கிலோ எடைக்கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. திமிங்கலத்தின் உயிரிழப்புக்கு வயிற்றுப் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கைகள் உறுதிப்படுத்தின.
உலக வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து வருவது ஒருப்பக்கம் இருந்தாலும் கடலும் கடல் சார்ந்த வளங்களும் பிளாஸ்டிக் எனும் அணுகுண்டுகளால் நாள்தோறும் துளைக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கு அரசும் தொண்டு நிறுவங்களும் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகின்றன. இருப்பினும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி விட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கண்ணுக்குத் தெரியாத பல உயிர்கள் ஆபத்தில் மூழ்குகின்றன.
என்ன தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு முடிந்தளவு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து இயற்கை வளங்களை பாதுகாப்பதே ஆறறிவு மனிதர்களின் தார்மீக பொறுப்பு..!!
No comments:
Post a Comment