இவ்வாறான பண்பாட்டியல் கலாசாரம் மூலமாக் பல மானிடவியல் இடைதொடர்புடமை மட்டுமன்றி ஊரில் காணப்படும் சில தனித்துவ பழக்க வழக்கங்கள் தொடர்ந்தும் எம்மண்ணை விட்டு அழிந்தொஒயாமல் பாதுகாக்கவும் வாய்பளிக்கப்படுகின்றது.
சில காலங்கள் முன்னர் காணப்பட்ட மண்வாசனை கலாசார அம்சங்களில் கீழ்வரும் சிலவற்றை குறிப்பிட்டுக்கூற முடியும்.
👉 #இராத்திரி_சமையல் - குறிப்பாக இந்நடைமுறை இன்றும் மூதூர் மண்ணில் தனித்துவமாக காணப்பட்ட போதும் அன்று காணப்பட்டது போன்று பௌர்ணமி நிலவை அடிப்படையாக்கொண்டு மான், முயல், காட்டெருமை என்ற வெடி வேட்டைக் கலசாரம் இன்று முற்றாகவே அழிந்து விட்டது. ஆனாலும் இன்று குடும்பங்கள் பல சேர்ந்து மாதத்தில் ஒரு முறையாவது கடற்கரை மற்றும் குடும்ப உறவினர் வீடுகளிற்கு செல்லும் கலாசாரம் வரவேற்புக்குரியதே...
👉 #புஹாரி_கந்தூரி, மௌலூது ஓதுதல் - மூதூர் மார்க்ஸ், பெரியபள்ளி, அரபுக் கல்லூரி வளாகத்தை அண்டிய பகுதியில் நேர்சை, தான தர்மம் மற்றும் பெரும் படையல் கிடுகு சாப்பாடு (நார்ஸா சோறு) என்று பல வகை காணிக்கைகள் மற்றும் நேர்ச்சைகள் நிறைவேறும் விழாதான் புஹாரி கந்தூரி. அக்காலங்களில் இது பெரும் ஒரு ஊர் விழாவாக கொண்டாடப்பட்ட ஒரு கலசாரம். இக்காலங்களில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் மூதூர் மண்ணை தரிசிக்க வருவது வழமை. இதனால் ஊரில் இருந்து பலர் வெளியூர்களில் திருமணம், நட்புறவு என்று மூதூர் உறவுகள் பரந்துவாழ வித்திட்ட அழிவுற்ற ஒரு பண்பாட்டு கலசாரம் இதுவாகும்.
👉 #கத்தம்_பாத்திஹா_ஓதுதல் - குறிப்பாக மரண வீட்டில் 3, 7, 14, 40 என்று பல்வேறு நாட்களில் தங்களின் வசதிக்கு தக்கவாறு உற்றார் உறவினர்கள் மற்றும் ஏழைகளை அழைத்து உணவு மற்றும் விருந்துபசாரம் செய்வது வழக்கு. குறிப்பாக ரொட்டி அதனுடன் தொவை (மா,சீனி கலந்த ஒருவகை களிவகை) அளிப்பார்கள். பா.... அதன் சுவை சொல்லவே வேண்டாம்... அனுபவித்தவர்களுக்கு இப்போதும் எச்சில் ஊரும்... அத்தோடு பாலும் பழமும், பால்சோறு, பணம் பழத்தில் அல்லது கூளா பழத்தில் கரைத்த பழைய சோறு என்ற உணவுகள் பரிமாறப்படும்.
👉 #பெருநாள்_காசு - பெருநாள் காலங்களில் உறவினர்களின் வீட்டுக்கு பெருநாள் சாப்பாடு கொண்டு அன்பளிப்பு செய்வதோடு பெருநாள் காசு பெற்றுக்கொள்ளும் நடைமுறை இன்றும் பெரும் வரவேற்புடன் இருந்து வருகின்றது. ஆனாலும் முன்னர் இருந்த போன்று தற்போது ஒப்பீட்டு அளவில் குறைவுதான். இன்று சகன் சாப்பாடு, கடை சாப்பாடு என்று வாங்கி உண்டுவிட்டு மல்லாக்கா Facebook செல்பிக்கு லைக் போட்டுக்கொண்டு இருப்பது போல அன்றில்லை.... பழைய டெக் எங்காயவது எடுத்துவந்து (3 நாட்களுக்கு முன்னரே ஒடர் பண்ணிடனும்) விஜயகாந்த், சத்தியராஜ், முரளி, சரத்குமார், அர்ஜூன் படங்கள் பார்ப்போம்...
👉 #பாரம்பரிய_விளையாட்டுக்கள் - கோலாட்டம், கம்படி, கபடி, கிட்டியடித்தல், நீச்சல் போட்டி, மாட்டுவண்டி ஓட்டம், சைக்கிள் ஓட்டம், மற்றும் கெட்குரூஸ், டாம், பாம்பு மட்டை, சூது விளையாட்டு என்று பல விளையாட்டுக்கள். ஆனால் இன்று ????
👉 #திருமணம், #மரண_வீடு, #சுன்னத்து_கல்யாணம் - இவ்வாறான குடும்ப விசேட தினங்களில் குறித்த குடும்பத்தின் வீட்டில் தான் முந்திய பிந்திய வாரம் முழுவது படுக்கையும் பாயும். உண்பது தொடக்கம் கழிப்பது வரை அந்த வீட்டு வளவிற்குள் தான். மாமி-மருமகன், மச்சான்-மச்சி, வாப்புச்சி, வாவும்மா (வாப்பு), அப்பா, கண்ணா என்று நெருங்கிய சொந்தங்களின் உறவாடல் அலாதி... அடிக்கும் சரி அன்புக்கும் பச்சமில்லை அன்றைய காலங்களில்...
👉 #குடும்பக்_குளியல் - வாரத்தில் ஒருநாள் குறிப்பாக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தினத்திற்கு கடல், முனை, ஆறு, வாய்கால் என்று குளிக்க செல்வது, அங்கே தண்ணீர் பந்து விளையாடுவது, கடலோரம் காலால் தோண்டி பன்னல் மட்டி (சிறு சிப்பி வகை) எடுத்து அவற்றை வீடுகொண்டுவது அவித்து உண்ணுதல். தூண்டில் மீன்பிடித்து சாப்பிடிதல்...
👉 #பருவகால_பழங்கள் - வசந்த காலங்களில் குறிப்பாக வரல்வலைய காடுகளில் மட்டும் காணப்படும் தாவரசாகியங்களில் காய்க்கும் பழங்களான ஈச்சை, பாலை, வீரை, சூறை, கிளா, விளாத்தி, நாவல், சொண்டாம் பழம், போன்ற பழங்களை பறிப்பதற்காக படைபடையாக இளைஞர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை குடும்பம் கூட்டமாக செல்வது வழக்கு.
👉 #பட்டம்_விடுதல் - கச்சான் காற்று (வடமேல் பருவக்காற்று) எழும்ப ஆரம்பித்தால் போதும் கரைச்சைகளில் பீங்ஞ்ஞான் கம்பு (பட்டம் தயாரிக்க விசேடமாக பயன்படும் வலையக்கொடிய உறுதியான பாரமற்ற தடி) வெட்டி எடுத்து டிஷு தாள் அல்லது மாட்டுத்தாள் பேப்பர் (சீமெந்து பை தாள்) வாங்கி பசை வாங்க பணம் இல்லாமல் கோதுமை மாவை கரைத்து பசை ஆக்கி பட்டம் ஒட்டுதல். உமிரி கரைச்சை தொடக்கம் மூதூர் வெளி வரை அந்தக்காலங்கலங்களில் பட்டம் கட்டுவதும் அது அறுந்து போவதும் மீண்டும் பட்டம் கட்ட நைநூல் ஜைனுதீன் அப்பாட கடையில் நிப்பதும் ஒருவகை பொழுதுபோக்கு தான். இதைவிட யார் பெரிய பட்டமும் சரியாக "மொச்சி", வால் கட்டுகிறார் என்பதில் தான் கெத்து... மயில் பட்டம், ஆளா பட்டம், பாம்பு பட்டம், மீன் பட்டம், என்று பல்வகை பெயர்...
👉 #கள்ள_மாங்காய்_இளநீர் - அக்காலங்களில் கிராமிய சேனைபயிர் செய்கை குறிப்பாக ஆளிஞ்சேனை, ஜபல் நகர், சாபிநகர் பகுதியில் மேற்கொள்ளப்படும். அறுவடை காலங்களில் களவாக மாங்காய், இளநீர், முந்திரிகை பறிக்க செல்வதும் அங்கே பிடிபடுவதும் ஒருவகை இன்பம்தான்.
👉 #வீதியோரத்து_கிரிக்கட் - மாலை பொழுது, வார இறுதி நாட்களில் ஒவ்வொரு வீதி, ஓடை ஒழுங்கை முழுவதும் தவக்க போல் (இறப்பர் பந்து) , தென்னை மட்டை பெட் கதிரை அல்லது செங்கல் கல் கொண்டு கிரிக்கட் விளையாடுவது. முக்கிய நிபந்தனை நேருக்கு மட்டுமே அடிக்க முடியும். எல்லா அயல் வீடுகளும் OUT. அத்தோடு யார் முதலாவது என்று பூச்சி பிடிக்கும் பழக்கம் இருந்தது.
👉 #சிப்பி_சிரட்டை_கடை_விளையாட்டு - வயது 5 க்கு உட்பட்ட சிறுவர்கள் இலை, கல், சில வித்தியாசமான பொருட்களை பயன்படுத்தி குடும்ப உறவுகள் குடும்ப உறவுகள் என்று தங்களுக்குள் ஒரு உறவுமுறையை உண்டாக்கி மணிக்கணக்கில் விளையாடுவார்கள். சில பொழுதுகள் மண்சட்டு குட்டாஞ்ச்சோறு சமைத்தும் கூட உண்பார்கள். இவ்விளையாட்டில் அப்பா அம்மா விளையாட்டு என்று இன்னொரு வகையும் உண்டு. அந்தகாலத்திலே அப்பா அம்மா விளையாட்டு விளையாடி தலைமுறை நாங்கள்தான். அதுமட்டுமல்ல முத்தம் கொடுத்தல் குழந்தை உருவாகும் என்ற அபூர்வ நம்பிக்கை கொண்ட முட்டாள் கூட்டமும் நாங்கள் என்று கூறலாம். ஆனால் இன்று... வேணாம்....
👉 #போட்டோ_அல்பம் - பொதுவாக கல்யாண வீட்டில் மாத்திரமே புகைப்படம் எடுக்க போட்டோகிராபர் வருவார். கெமராவில் போட்டோ எடுப்பதென்றால் அடிபிடி... அந்த அளவு அது அரிதான விடயம். அதனை கழுவி (பிரின்ட்) எடுத்து அல்பம் என்று புத்தகமாக பாதுகாப்பு செய்யும் கலசாரம்...
👉 #கூட்டுக்குடும்ப_வாழ்வுமுறை - பொதுவாக எல்லா வீடுகளும் இரத்த உறவுகளை அயல்வீடுகளாக கொண்ட கூட்டுக்குடும்ப வாழ்வுமுறை ஆதிக்கம் உயர்வாக இருந்தது. இதனால் அனுபவம் வாய்ந்த முதியவர்கள் ஆலோசனை மற்றும் உதவி ஒத்தாசை செய்யும் வழக்காறு இருந்து வந்தது.
👉 #அயல்வீட்டு_கறிக்கோப்பை - ஒவ்வொரு நாளும் பக்கத்து வீட்டில் இருந்து ஏதோவொரு கறி சிறிய கறிக்கோப்பை ஒன்றில் பரிமாறிக்கொள்ளும் கலாசாரம் இருந்து வந்தது. ஆனால் இம்முறை மிக அண்மைகாலங்களில் அரிதாகி வருகின்றது.
👉 #செல்லப்பிராணி வளர்ப்பு - கிளி, மைனா, பூனை, நாய் என்று ஒருசில பிராணிகளை செல்லப்பிராணியாக வளர்க்கும் நடைமுறை இருந்தது. அதற்கு பெயர் வைப்பதும், தங்களின் நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதும் ஒரு மகிழ்ச்சியும் பெருமையும்...
👉 #மருதோண்டி - பெருநாட்களுக்கு முதல் நாள் அதிகாலையில் சிறுவர்கள் எல்லோரும் சேர்ந்து சேனை இடங்களுக்குச்சென்று மருதோண்டி இலை பறித்து வந்து பின்னேரத்தில் அரைத்து கைகளில் தேன் மெழுகினை உருக்கி புள்ளிவைத்து மருதோண்டியை கைநிறைப்பூசி நித்திரையில் சிதையாமால் இருக்க சேலையால் சுற்றி வைத்து அதிகாலையில் கண்விழித்தவுடன் கையில் மருதோண்டிச்சிவப்பைக்கண்டவுடன் ஏற்படுகின்ற மகிழ்சிக்கு நிகரேது? மருதோண்டி சிவந்தகையால் இறைச்சிக்கறியும் புட்டும் பிசைந்து உண்பதில் உள்ள ஆனந்தம். சிவந்த கைகாளால் எண்ணெய் வழியும் தொதல் உண்ணும்போதுள்ள சுவை. இவற்யெல்லாம் மறக்க முடியுமா?
👉 #இனிப்பு_பண்டம் - இழுத்தடிச்சான், தும்பு முட்டாஸ், பால் டொபி, நைஸ், குளுகோஸ், பொறி, எள்ளுருண்டை, பொம்ம பிஸ்கட், ஜெலி, சீனித்தலை பிஸ்கட், ஒரேஞ் முட்டாஸ், குச்சி ஐஸ் பழம், சீனிக்கட்டி, கச்சான்கொட்டை தட்டு என்று ஒருசில இனிப்பு உணவுகள் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என்ற மலிவான இனிப்பு உணவுகளாக இருந்தது.
காட்டுக்கட்டில், மாட்டு வண்டி, அம்மை வீடு, பெண் பூப்படைதல் பாற்சோறு, கன்னி விளைச்சல் நேர்ச்சை, தாயத்து அணிதல், பள்ளிக்கு நேர்ந்து விடுதல் என்று இன்னும் பல் சுவாரசியமான விடையங்கள் உள்ளான. குறிப்பாக இவற்றில் பல எம்மூதூர் மண்ணுக்கான கலாசாரமாக இருந்தவை, இன்னும் சில இருக்கின்றவை. தொடர்ந்தும் இவ்வாறான பண்பாட்டு மண்வாசனை அம்சங்களை அக்கக்குறைந்தது பாடசாலை மாணவர் மன்றம், கலைவிழா மற்றும் சில முக்கிய நிகழ்வுகளில் வெளிக்காட்டவேண்டிய கடப்பாடு எம் சமூகத்தை சாரும்....
தவறவிட்ட சில இருந்தால் பின்னூட்டலில் நினைவூட்ட வேண்டுமென்று தயவாக கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment