இலங்கை விடுதலையடைய முன்னர் புழக்கத்தில் இருந்த 10 சத நாணயத்தாள். இலங்கை ரூபாய் ஒன்று, 100 சதம் எனும் அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. புழக்கத்துக்கு நாணயங்களை விடும்போது அவை, ரூபாய் 10க்கு கூடிய பெறுமானம் கொண்டவையாயின் தாள் நாணயங்களாகவும், ரூபாய் 10க்கு குறைந்த பெறுமானம் கொண்டவையாயின் உலோக நாணயங்களாகவும், ரூபாய் 10 பெறுமானம் கொண்டவையாயின், இரு விதமாகவும் தயாரித்து பாவனைக்காக விடப்படுகின்றன.
இலங்கை ரூபாய் (Sri Lankan Rupee) இலங்கையின் உத்தியோகபூர்வ நாணய அலகு ஆகும். இலங்கை மத்திய வங்கி அனேக நாடுகளிலுள்ளதை போன்றே நாணயங்களை வெளியிடும் ஏகபோக உரிமையை கொண்டது. இலங்கை ரூபாய் பொதுவாக ரூ எனறே குறிக்கப்படுவதுடன், இதன் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனக் குறியீடு (ஐ.எசு.ஓ 4217) LKR ஆகும்.
பணத்தின் உள்ளடக்கம்
உலோக நாணயங்களின் தலைப்பாகத்தில் நாட்டின் பெயர், அது வெளியிடப்பட்ட ஆண்டு, நாணயத்தின் பெறுமதி என்பனவும், பூப்பாகத்தில் இலங்கையின் தேசியச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.
தாள் நாணயங்களின் மேற்படி விபரங்களுக்கு மேலதிகமாக இயற்கை அழகு, பண்பாடு, வரலாறு போன்றவற்றைக் குறிக்கும் சித்திரங்கள் இரு பாகத்திலும் காணப்படுவதுடன், பூப்பாகத்தில் மத்திய வங்கியின் பெயர், கொடுப்பனவு விபரம், நிதி அமைச்சர், மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோரின் கையொப்பங்களும் காணப்படுகின்றன.
இவற்றில் எண் குறியீடுகள் தவிர்ந்த ஏனையவை இலங்கையின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் ஆகியவற்றிலும், ஆங்கில மொழியிலும் இடம் பெற்றுள்ளன. புதிதாக வெளியிடப்படும் நாணயங்களில் கண்பார்வையற்றோரின் நன்மை கருதி பிரேல் முறையிலும் பெறுமானம் பொறிக்கப்பட்டுள்ளது.
நாணயங்கள்
இலங்கையில் உலோக நாணயங்கள் தற்போழுது 1, 2, 5, 10, 25, 50 ஆகிய பெறுமானம் கொண்ட சதங்களாகவும் 1, 2, 5, 10 ஆகிய பெறுமானம் கொண்ட ரூபாய்களாகவும் வார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இலங்கையின் 50வது விடுதலை நாளை நினைவு கூறும் வகையில் 1998-ம் ஆண்டில் 1000 ரூபாய் பெறுமானம் கொண்ட வெள்ளி நாணயங்களும், 5000 ரூபாய் பெறுமானம் கொண்ட தங்க நாணயங்களும் வெளியிடப்பட்டன.
தற்காலத்தில் 1 சதம், 2 சதம், 5 சதம், 10 சதம், 25 சதம் ஆகியன மிக மிக அரிதாகவே புழக்கத்தில் உள்ளன.
நாணய வடிவங்கள்
இலங்கையில் தற்போது புழக்கத்திலுள்ள உலோக நாணயங்களில் 2 சதம், 10 சதம் ஆகியவை அலை போன்ற விளிம்புடன் கூடிய வட்ட வடிவானவை. 5 சதம் வளைந்த விளிம்புடைய சதுர வடிவானது. மற்றைய சதங்களனைத்தும் வட்ட வடிவானவை. 1 ரூபாய், 2 ரூபாய், 10 ரூபாய் ஆகியவை வட்ட வடிவானவை. 5 ரூபாயும் வட்ட வடிவானபோதும், சில சமயங்களில் மட்டும் ஐங்கோண வடிவமுடையது.
வார்க்கும் உலோகங்கள்
இலங்கை உலோக நாணயங்கள் தங்கம், வெள்ளி, நிக்கல், செம்பு, நிக்கல்-செம்பு, பித்தளை, நிக்கல்-பித்தளை, அலுமினியம், வெண்கலம், அலுமினிய-வெண்கலம் ஆகிய பல்வேறு உலோகங்களில் வார்க்கப்பட்டன. முன்னர் கால், அரை மற்றும் ஒரு சதம் போன்ற பெறுமதி குறைவான நாணயங்கள் செப்பு உலோகத்தில் வார்க்கப்பட்டன. 10 மற்றும் 20 சத பெறுமானம் கொணட நாணயங்கள் 1920களின் இறுதிவரையிலும், 50 சத நாணயங்கள் 1942 வரையும் வெள்ளியில் வார்க்கப்பட்டன. ஆனால் தற்பொழுது 5 ரூபாய், 10 ரூபாய் தவிர்ந்த அனைத்து நாணயங்களும் பெறுமதி குறைந்த அலுமினிய உலோகத்திலேயே வார்க்கப்படுகின்றன. 5 ரூபாய் செம்பிலும், 10 ரூபாய் செம்பு-வெண்கலத்திலும் வார்க்கப்படுகின்றன.

இலங்கையில் தற்போது புழக்கத்திலுள்ள தாள் நாணயங்கள் 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000 ஆகிய பெறுமானங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன. இலங்கையில் வெளியிடப்படும் அனைத்து தாள் நாணயங்களும் (200 ரூபாய் தவிர்ந்த) விசேடமாக பண்படுத்தப்பட்டு இரும்பு நூல் கோர்த்த காதிதத்திலேயே அச்சிடப்பட்டுகின்றன. 200 ரூபாய் நாணயம் மட்டும் விசேட பிளாஸ்டிக் தாளில் அச்சிடப்பட்டுகின்றது. இந்த பிளாஸ்டிக் நாணயம் பல பாதுகாப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கை தாள் நாணயங்கள் பல வர்ணங்களிலும், தலைப்பாகம் அகலவாக்கிலும் அச்சிடப்படுவது தனித்துவமான விடயங்களாகும்.


































நாணயத்தாள்களின் பண்புகள்
இலங்கையில் பெப்ரவரி 4ம் திகதி வெளிவரவுள்ள 5000, 1000, 500, 100, 50, 20 ரூபாய் நாணயத்தாள் தொடர்கள் அபிவிருத்தி, சுபீட்சம் மற்றும் இலங்கையின் நடனக் கலைஞர்கள் என்ற தொனிப்பொருளையும் இலங்கையில் காணப்படக்கூடிய பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் போன்றவற்றையும் முக்கியப் பண்புகளாகக் கொண்டுள்ளது.
நீர்வரி அடையாளம்
ஒவ்வொரு நாணயத்தாளினதும் நீர்வரி அடையாளமாக வெவ்வேறுபட்ட உள்ளூர் பறவைகளின் தோற்றம் காணப்படுவதுடன், இதே பறவையே தாளிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பெறுமதி தெளிவான நீர்வரி அடையாளமாக இலக்கங்களில் நிலைக்குத்தாகக் காணப்படுகின்றது.
மேலதிகமான சிறிய எழுத்துரை
மிக நெருக்கமாகப் பார்க்கும்போது இலங்கை மத்திய வங்கி மற்றும் பெறுமதி என்பவற்றை பார்க்கக்கூடியதாயிருக்கும்.
பாதுகாப்பு நூல்
பாதுகாப்பு நூல்கள் நாணயத்தாள் ஒவ்வொன்றிற்குமிடையில் வேறுபடுகின்றதுடன், இ. ம. வங்கி என்ற எழுத்துக்களும் பெறுமதியும் அதில் காணப்படுகின்றன. உதாரணம்: ரூ. 20, ரூ. 100.
சிவப்பிலிருந்து பச்சைக்கு மாற்றமடைகின்ற விதத்தில் யன்னல் வடிவில் காணப்படும் ஸ்டார் குறோமின் அகலம் ரூ. 5,000, ரூ. 1,000 மற்றும் ரூ. 500 நாணயத்தாள்களில் முறையே 3. மி.மீ, 2.5 மி.மீ, 2 மி.மீ ஆகக் காணப்படுகின்றது. ரூ.100, ரூ.50 மற்றும் ரூ. 20 தாள்களிலுள்ள நூலானது நாணயத்தாள்களில் பதிக்கப்பட்டிருக்கிறது.
மூலைக் கல்
மூலைக்கல் நீர்வரி அடையாளமானது நாணயத்தாளின் ஒவ்வொரு மூலைகளிலுமுள்ள மூலை விட்டச் சட்டங்களின் வடிவில் காணப்படுகிறது.
வெளிச்சத்தினூடாகப் பார்த்தல்
தாளினை வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கும்போது தாளின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் உள்ள பெறுமதி இலக்கங்கள் ஒன்றுடன் ஒன்று கச்சிதமக பொருந்துவதைக் காணமுடியும்.
மேலதிகமான சிறிய எழுத்துரை
மிக நெருக்கமாகப் பார்க்கும்போது இலங்கை மத்திய வங்கி மற்றும் பெறுமதி என்பவற்றை பார்க்கக்கூடியதாயிருக்கும்.
பார்வையற்றவர்களும் அறியக்கூடிய பண்பு
பார்வை பாதிக்கப்பட்டவர்களும் நாணயத்தாளின் பெறுமதியினைத் தெரிந்துகொள்ள உதவும் விதத்தில் நாணயத்தாளின் இடது பக்கத்தில் காணப்படும் நாணயத்தாளின் பெறுமதிக்கேற்ப அதிகரித்துச் செல்லும் விதத்தில் நெருக்கமான முறையில் புள்ளிகள் நிலைக்குத்தாக அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. (ரூ.20 நாணயத் தாளுக்கு ஒரு புள்ளி என்ற அடிப்படையில்)
மேற்கிளம்பிய அச்சிடல் பரப்பு
தாளின் குறுக்குப் பக்கமாக விரல்களை ஓட்டுவதன் மூலம் மேற்கிளம்பிய அச்சிடல் பகுதியொன்றை உணரமுடியும். (உதாரணம்: மத்திய வங்கியின் பெயர், தொட்டறியக்கூடிய நாடா வடிவிலான ஒரு பகுதி, மத்தியிலுள்ள பிம்பம் போன்றன.)

































தேடல் வலைத்தளங்கள்
https://www.cbsl.gov.lk/ta/பணத்தாள்கள்/நாணயத்தாள்களும்-குத்திகளும்/இலங்கை
https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_rupee
https://en.wikipedia.org/wiki/Banknotes_of_the_Sri_Lankan_rupee
https://en.wikipedia.org/wiki/Economy_of_Sri_Lanka
No comments:
Post a Comment