
Written by - Abdul Mjeed
நவகாலனிய சித்தாந்தம் இன மேலாண்மை வாதத்தில் இருந்து கலாசாரங்களின் மோதலை நோக்கி
மஹாவம்சத்தை முன்னிறுத்தி அனாகரிக தர்மபால “ஆரிய சிங்கள பெளத்தர்கள்” எனும் இன மேலாண்மை வாதத்தை இலங்கையில் முன்வைத்தார். இதன் மூலம் சிங்களவர்கள் ஆரிய இனம் என்பதாக ஒரு புதிய இன அடையாளம் முன் வைக்கப்பட்டு இனவாத-தேசியவாதம் (Ethno nationalism) இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் படி ஆரிய சிங்கள இனமே உயர்ந்த இனம் என்றும் அவர்களே இந்த மண்ணிற்கு உண்மையான உரித்துடையவர்கள் என்றும் வாதிட்ட அனாகரிக தர்மபால மற்றையவர்கள் (Other) இந்த நாட்டில் வந்தேறு குடிகள் என்றார். இந்த வகையில் முஸ்லிம்களை இன ரீதியாக வந்தேறிகள் எனும் கருத்தில் இழிவுபடுத்தி "ஹம்பயே" எனும் சொல்லை கொண்டு அழைத்தார். அத்துடன் பெளத்த மதமே உயர்ந்த மதம் என்று குறிப்பிட்ட தர்மபால இஸ்லாமிய மற்றும் கிறிஸ்த்துவ மதங்கள் இயல்பில் ஏகதிபத்திய தன்மை உடையவை (Imperial religions) என்று கூறினார்.

மேற்குலகில் கல்வி பயின்ற தர்மபாலாவின் இந்த இன மேலாண்மை கருத்துக்கள் அமெரிக்க அடிமை வியாபாரியான ' தோமஸ் ஜபர்ஸன் (Thomas Jefferson), ஜேர்மனிய நாஸிக்கள் மற்றும் பிற மேற்கத்தைய இனவாதிகள் முன்வைத்த விஞ்ஞான இனவியல்/ உயிரியல் இனவாதம் (Scientific race / biological race) என நம்பப்பட்ட இன யதார்த்தவாத (Race realism) சிந்தனையை அடியொட்டி இருந்தது. உண்மையில் இனவாத சிந்தனையை (Racism) ஆசிய ஆபிரிக்க சூழலில் அறிமுகம் செய்த பெருமை மேற்கத்தைய ஐரோப்பியர்களையே சாரும்.
மனித இனம் ஒன்றுக்கு மேற்பட்ட பல மூலங்களை கொண்டது எனவும் அதன் படி மனித இனம் பல இனங்களாக இயற்கையில் படைக்கப்பட்டுள்ளது என்கிறது “இன யதார்த்தவாத” (Race realism) கோட்பாடு. இதை ஒரு அறிவியல் உண்மை என குறிப்பிடும் போலி விஞ்ஞான (Pseudo-science) கோட்பாடாகிய விஞ்ஞான இனவியல் (Scientific racism) கோட்பாட்டை உண்மை என நம்பிய நாஸிக்கள் ஆரிய இனம் எனும் ஒரு இனம் உண்மையில் இருப்பதாகவும் அதுவே மிக உயர்ந்த இனம் என்று நம்பினார்கள். ஜேர்மனியின் கடந்த பொற்கால (Golden age) பொருளாதார, இராணுவ மேலாதிக்கத்தை மீண்டும் தோற்றுவிப்பதற்கு ஆரிய இரத்த தூய்மையை பாதுகாப்பது தம்மீது சுமத்தப்பட்ட கடமை என வரித்துக் கொண்ட (Self-imposed duty) நாஸிக்கள் ஏனைய (தாழ்ந்த) இனங்களில் கலப்பில் இருந்தும் ஐரோப்பா காப்பாற்றப்பட வேண்டும் என கருதினர்.

உண்மையில் உயிரியல் விஞ்ஞான அடிப்படையில் மனித இனத்தின் மூலம் ஒன்றே எனக் குறிப்பிடும் அந்தோனி அப்பிய்யா (K. Anthony Appiah) “மனித இனம்” (Human race) என்பது ஒன்றே அன்றி “மனித இனங்கள்” என்பது கிடையாது என்கின்றார். அத்துடன் “இன யதார்த்தவாத கோட்பாடு” (Race Realism) வளர்ச்சி பெற்றதில் மையமாக இருந்தது சமூக அரசியல் வரலாற்று காரணிகளால் கட்டமைக்கப்பட்ட இனவாத சிந்தனை (Racism) தான் என்கின்றார். இது மற்றைய இனங்களை நசுக்கவல்ல இன மேலாண்மை சிந்தனையில் தங்கி உள்ளது.

பாலி மொழியில் ஆரிய என்பது உன்னதம், தகுதி, கெளரவம் என்ற கருத்தில் பயன்படுத்தப்படுவதாகவும், அக்கருத்தை தரும் பெயருரிச் சொல்லாக பொளத்த நூல்களில் ஆரிய எனும் பதம் பயன்பட்டுள்ளதையும் உதாரணமாக “சத்துராரியா சக்கா” என்பது நான்கு உன்னதமான உண்மைகளைக் குறிக்கும் என்று Modernizing Composition: Sinhala Song, Poetry, and Politics in Twentieth-Century Sri Lanka என்ற நூலில் Garrett Field குறிப்பிடுகின்றார்.
மருபக்கத்தில் ஆரியர்கள் என்போர் ஐரோப்பிய ஆசிய சூழலில் வெள்ளைச் சருமத்தை உடையவர்களை குறித்து நிற்கின்றது. உதாரணமக நாஸிக்கள் முன்வைத்த ஆரியர்கள் நீல நிற கண்களையும் இளம் பொன் நிறமான (Blond) தலை முடியையும் உடையவர்கள். ஆனால் இலங்கைச் சூழலில் பெரும்பான்மை சிங்களவர்கள் தென் இந்திய திராவிடர்கள் என அறியப்படும் மக்களை ஒத்தவர்கள்.


தற்போது உள்ளது போன்ற சிங்களவர்கள் எனும் ஒரு பொதுவான அடையாளம் முன்னர் காணப்படவில்லை. இந்த அடையாளம் பல பரிமாணங்களை கடந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் ஆளும் வர்க்கத்தினர்களை பின்னர் அவர்களுடன் இணைத்து அவர்களை சார்ந்தவர்களை குறிக்கவும் சிங்களவர்கள் எனும் அடையாளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே சிங்களம் பேசுவதால் மட்டும் ஒருவர் சிங்கள அடையாளத்தை பெற முடியவில்லை. மாறாக சாதி, அதிகாரம் என்பனவே ஒருவரை சிங்களவரா? இல்லையா? என்பதை தீர்மானித்தது என்ற பேரா. குனவர்த்தனவின் வாதம் இங்கு கவனிக்கத்தக்கது.
பல்வேறு மனித இனங்கள் (Human races) எனும் இனவாத (Racism) கற்பித்ததை அறிவியல் பூர்வமாக நிறுவுவதில் உள்ள சிக்கல் இனவாத தேசியவாதிகள், மதவாதிகள், அரசியல்வாதிகள் என நீளும் தீவிர வலதுசாரி பிரிவினைவாதிகளை கலாசாரங்களுக்கு இடையான மோதல் எனும் திரு. ஹன்டிங்டனின் புதிய சிந்தாந்த தளத்தை நோக்கி நகர்த்தியது. “..fundamental source of conflict in this new world will not be primarily ideological or primarily economic. The great divisions among humankind and the dominating source of conflict will be cultural. Nation states will remain the most powerful actors in world affairs, but the principal conflicts of global politics will occur between nations and groups of different civilizations. The clash of civilizations will dominate global politics. The fault lines between civilizations will be the battle lines of the future” என குறிப்பிடும் ஹன்டிங்டன் கலாசார அடையாளம் தான் மனித இன முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் முக்கிய அடிப்படை காரணி என தனது நாகரீகங்களுக்கு இடையான மோதல் எனும் கருத்தை முன்வைத்தார். கலாசாரங்களுக்கு இடையான இந்த தொடர் மோதலில் தனது மேலாண்மையை நிலை நிறுத்துவதில் தோல்வியடையும் நாகரீகம் (சமூகம்) முடிவுக்கு வருவதுடன் மற்றைய (எதிர்) கலாசாரத்தை அது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வாதிட்டார்.
இடையறாது மோதிக்கொள்ளும் கலாசாரங்கள் பற்றிய ஹன்டிங்டனின் சிந்தனையானது முன்னாள் காலனியவாதிகள், இனவாதிகள், கீழைத்தேயவாதிகள் என்போரின் அறிதல் முறையின் (Epistemology) அடிப்படையில் அமைந்த பனிப்போருக்கு பிந்திய உலகை ஒழுங்குபடுத்துவது பற்றிய ஒரு சித்தாந்தமாகும்.
அடிப்படையில் அமெரிக்காவின் உலக ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்துவதை மைய நோக்காக கொண்ட ஹன்டிங்டனின் சிந்தனையின் படி அமெரிக்க தேசத்தின் அடையாளம் (National identidy) என்பது ஆங்கிலோ-புரெடஸ்ட்டாண்ட் கலாசாரத்தில் இருந்து வருவதாகும் எனவும் இந்த கலாசார அடையாள மேலாதிக்கத்தை உலக ஒழுங்கில் நிலைப்படுத்துவதில் தான் அமெரிக்காவினது வல்லரசு தனம் தங்கி உள்ளது எனவும் ஹன்டிங்டன் வாதிடுகிறார்.
உண்மையில் ஹன்டிங்டன் குறிப்பிடும் ஆங்கிலோ-புரெடஸ்ட்டாண்ட் கலாசாரம் என்பது அடிப்படையில் அமெரிக்காவை அதனது பூர்வீக குடிகளிடம் இருந்து ஆக்கிரமித்து கொண்ட ஐரோப்பிய காகோசிய வெள்ளை இனவெறி காலனியவாதிகளின் கலாசார அடையாளமாகும். இந்த இனவாதிகள் கறுப்பின மக்களை, அமெரிக்க பூர்வீக குடிகளை உயிரியல் அடிப்படையில் தாழ்ந்த இன மக்கள் எனக்கருதி அம்மக்களை சுரண்டி, அடிமைகளாக நடாத்தினார்கள் என்பது இங்கு கவனிக்க தக்கது.
தனது இந்த நிகழ்ச்சித் திட்டத்தை கொண்டு செல்வதில் இரண்டு விதமான அணுகு முறைகளை அவர் முன் வைக்கிறார். முதலாவதில் உள்நாட்டில் அமெரிக்காவின் அடையாளத்தை சுமந்து நிற்பதாக அவர் கருதும் ஆங்கிலோ-புரெடஸ்ட்டாண்ட் கலாசாரத்தை உட்செரிமாணம் செய்து (Assimilation) தம்மை முற்றாக கலாசார சரணாகதிக்கு உட்படுத்த மறுக்கும் மற்றைய கலாசாரங்கள் அமெரிக்காவின் அரசியல் இருப்பிற்கும், தேசிய அடையாளத்திற்கும் அச்சுறுத்தல் என வாதிடும் ஹன்டிங்டன் அமெரிக்க வாழ்நிலையில் தமது தனித்துவ அடையாளங்களை பேணி பன்முக கலாசார அடையாளங்களுடன் வாழ முற்படும் மக்களுக்கு இரண்டு தெரிவுகளை முவைக்கின்றார். ஒன்றில் ஆங்கிலோ-புரெடஸ்ட்டாண்ட் கலாசாரத்தை உட்செரிமாணம் செய்து (Assimilation) முற்றாக சரணாகதியடைதல் அல்லது வெளியேறி செல்லல் (Exit). இதனை முன் வைத்தே திரு. டிரம்ப் மற்றும் வலசாரி இனவாதிகள் ஹிஸ்பானிக் மக்களுக்கு எதிரான குடிவரவு கொள்கையை அமெரிக்காவில் முன் எடுக்கின்றார்கள்.
இரண்டாவது, சர்வதேச அளவில் பனிப்போருக்கு பிந்திய உலக ஒழுங்கை கட்டமைப்பதில் ஐரோப்பியமைய (Eurocentric) கலாசார மேலாதிக்கத்தினை நிலைப்படுத்துவதும் எதிர் கலாசாரங்களுடனான மோதலும். இதை மேற்கு எதிர் மற்றமைகள் (West vs Rest) என மேற்கும் ஏனைய கலாசாரங்களும் முரண்பட்டு தமக்குள் சண்டையிட்டு கொள்ளும் கலாசார மோதல் நிறைந்த உலக ஒழுங்காக முன் வைத்தார்.
நாகரீகங்களின் மோதுகை பற்றிய தொன்மமாக்கலில் (Mythopoeia) காண்பூஸிய மற்றும் இஸ்லாமிய கலாசாரங்களை மேற்கினது முக்கிய எதிர் மோதும் கலாசாரங்களாக கட்டமைக்கும் ஹன்டிங்டன், பிரதான மூன்றும் நாகரிக அணிகள் தவிர்ந்த மற்றைய காலசாரங்களை மேற்கு மற்றும் சினோ-இஸ்லாமிய அணிகளுக்கு இடையில் ஊசலாடும் நாகரீகங்கள் (Swing civilizations) எனவும் இவை ஏதேனும் ஒரு பிராதன மோதும் அணியுடன் இணை யும் எனவும் குறிப்பிடுகின்றார். இதன் படி புதிய ஒழுக்க ஒழுங்கில் மோதல் என்பது தேசிய அரசுகளுக்கோ, தனித்தனி கலாசார வடிவங்களுக்கு (Swing civilizations/cultural-form) இடையானதோ அன்றி மோதிக்கொள்ளும் பிரதான மூன்று கலாசார அணிகளுக்கு (Cultural-force) இடையிலானதாகவே அமையும் என்கிறார்.
ஹன்டிங்டனின் காலாசாரங்களின் மோதல் பற்றிய கதையாடல் தான் நவ காலனியத்திற்கான இயங்கு தளத்தை வழங்கும் அடிப்படை காலனிய சித்தாந்தமாகும் (Neo-colonial ideology). இந்த செயன்முறையில் காண்பூசியஸ் (Confucius) மற்றும் இஸ்லாமிய (பிரதானமாக ஈரான் மற்றும் பாகிஸ்தான்) உலகிற்குமிடையான சாத்தியமான இணைவு (Sino-Islamic nexus) பற்றிய அச்சத்தை கட்டமைப்பதன் மூலம் பனிப் போருக்கு பிந்திய உலக ஒழுங்கில் தேசங்களின் உறவு என்பது என்பது வெறும் முதலாம் மண்டல மேற்கத்திய நாடுகளுக்கும் இரண்டம், மூன்றாம் மண்டல சுரண்டப்படும் நாடுகளுக்கும் இடையான முரண்பாடு என்பதில் இருந்து இஸ்லாம், காண்பூசியஸ் மற்றும் மேற்கு என்பவற்றை பிரதி நிதித்துவபடுத்தும் மூன்று பிரதான நாகரீக அணிகளுக்கு (Civilizational force) இடையான கலாசார மோதல் எனும் தளத்தை நோக்கி நகர்த்துகிறார். இதன் மூலம் மேற்கத்திய ஐரோப்பிய மைய நவகாலனிய அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை மையப்படுத்திய மோதலை மறைக்கும் நாகரீகங்களுக்கு இடையான மோதல் (Clash of civilizations) எனும் புதிய காலனிய சித்தாந்த அறிதல் முறைமை (Epistemic neocolonial ideology) புலமைத்துவ மட்டத்தில் ஹன்டிங்டன் தோற்றுவித்தார்.
ஹன்டிங்டனின் கலாசார மோதுகை பற்றிய இந்த தொன்மமாக்கலானது அடிப்படையில் கற்பனையான கலாசார எதிரிகளையும் (Imaginary cultural foes), அந்த கற்பனை எதிரிகள் மீதான தொடர் பயத்தை (Phobophobia) உருவாக்குவது என்பவற்றை அடிப்படையாக கொண்ட ஒரு உளவியல் பயக்கட்டமைப்பு (Phobia construct). இது ஒருவகை உளவியல் யுத்தம். போபியா என்பது அடிப்படையில் குறித்த ஒரு விடயம் மீது பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட வகையில் ஏற்படும் அதீத பயமாகும். இது ஒரு வகை உள நோய். நவ காலனிய சித்தாந்தமானது (Neo-colonial ideology) இந்த பயக்கட்டமைப்பாக்கம் மூலம் ஏகாதிபத்திய காலனிய ஆதிக்கத்திற்கான நியாயத்தையும், பொருளாதார, இராணுவ மற்றும் ஆயுத ரீதியான விஸ்தரிப்புகளுக்கான காரணங்களையும் உருவாக்குகின்றது. ஒரு வகையில் நாகரீகங்களுக்கு இடையான மோதல் எனும் இந்த பயக் கட்டமைப்பு மூலம் நவ காலனிய சித்தாந்தமானது முன்னைய காலனிய யுகத்தில் பிரித்தாளும் தந்திரோபாயமாக பயன்படுத்தப்பட்ட உயிரியல் இனவாதம் (Biological racism) எனும் இன மேலாண்மை எனும் காலனிய சித்தாந்தத்த ஆர்வலர்களை காலாசாரங்களுக்கு இடையான மோதுகை எனும் ஒரு புதிய சித்தாந்த தளத்தை நோக்கி அணி திரட்டுகின்றது.

சாத்தியமான சீனோ-இஸ்லாமிய இணைவு (Possible Sino-Islamic Nexus) பற்றிய ஹன்டிங்டனின் எதிர்வு கூறலானது ஏதோ பெரும் தீர்க்கதரிசனம் என்பதற்கில்லை. கடந்த நூற்றாரண்டில் ஜேர்மன், இத்தாலி, ரஷ்யா என அனைத்து சக்திகளும் இஸ்லாத்தை சக்திமிக்க ஒரு துணை கருவியாக (force multiplier) பயன்படுத்தி இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளதை போன்று ஐரோப்பிய மைய நவகாலனிய சக்திகளின் முக்கிய பங்காளர்களாக இன்று அரபு முஸ்லீம் நாடுகளின் எதேச்சதிகார அரசுகள் உள்ளதை காணலாம். எனவே சீன மற்றும் இஸ்லாமிய நாடுகளின் இணைவு அடிப்படையில் பொருளாதார, அரசியல், பாதுகாப்பு சார்ந்த கட்டாய தந்திரோபாயமே அன்றி மேற்கத்தைய நாகரீகத்திற்கும் அதனது கலாசார அடையாளங்களுக்கும் எதிரான, அல்லது அவற்றை இல்லாமல் செய்வதற்கான காண்பூஸிய-இஸ்லாமிய (முஸ்லீம் அல்லது அரபு) கலாசாரகளின் யுத்தமோ இணைவோ அல்ல.
உண்மையில் மேற்கத்திய காலனிய ஆதிக்க செயன்முறையில் இஸ்லாம் பற்றிய பயத்தை கட்டமைப்பது என்பது ஒரு நீண்ட வரலாற்றை கொண்டதாகும். ஷாம் லேவான்ட் மற்றும் வட ஆப்பிரிக்க பகுதிகளில் மேற்கத்தைய காலனிய உலகை இஸ்லாம் முதன் முதலில் எதிர் கொண்டது தொடக்கம் மேற்கத்தைய புலமை மட்டத்தில் இஸ்லாத்தை ஒரு நாகரிகமற்ற, அரக்ககுணம் கொண்ட பாபாரியன் (Barbarian) என சித்தரிக்கும் கதைகள் உருவாகின. அடிப்படையில் இது நாகரீகம் பற்றிய மேற்கத்தைய அறிதல் முறையில் இருந்து வரும் பிரச்சினையாகும். வெள்ளை இன மேலாண்மை சிந்தனையை மீது அமைந்த ஐரோப்பியமைய அறிதல் முறையின் படி உலக வரலாறு (World history), நாகரீகம் என்றாலே அது மேற்கத்தைய (கிரேக்க, ரோம மற்றும் கிருத்துவ) வரலாறும் நாகரீகமும் தான். அவை தவிர்ந்த மற்றமைகள் எல்லாமே அநாகரீகமான பிற்போக்கு பாபாரியன் தான்.
ஐரோப்பிய மைய இனவாத அறிதல் முறையில் அமைந்த இந்த கலாசார மோதுகை எனும் காலனிய சித்தாந்தத்தில் இருந்து எழும் இஸ்லாமோபோபியா (Islamophobia) ஒரு கலாசார எதிரியாக உலக அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் எதிரான அடிப்படை ஏக மூலோபாய அச்சுறுத்தலாக (the singular global strategical threat) இஸ்லாத்தை கட்டமைத்து முஸ்லீம், அரபு, இஸ்லாமிய கலாசார அடையாளங்கள், ஆடை, உணவு, மொழி, கடைசியாக பேரித்தம் மரம் என்பவற்றை இலக்கு வைத்து கலாசார யுத்தம் செய்கின்றது.
இந்த வகையில் இஸ்லாம், அரபு, முஸ்லிம், மற்றும் மத்திய கிழக்கு சார் வாழ்வியல் கலாசார அடையாளங்கள் என்பவற்றை உலக ஒழுங்கிற்கும், உலக அமைதி, சமாதானத்திற்கும் எதிரான பிற்போக்குவாத பயங்கரவாதமாக பரப்புரை செய்யும் இஸ்லாமோபோபியா, தீவிர வாதத்தை அழித்து உலக சமாதானத்தை, அமைதியை ஏற்படுத்தும் கலாசார யுத்தத்தில் உளசலாடும் கலாசார வடிவங்களை (Swing clultural form) தம்முடன் இணைந்து கொள்ள அரை கூவல் விடுக்கின்றது. இந்த வகையில் புதிய உலக ஒழுங்கை உருவாகும் நோக்கில் இஸ்லாமோபோபியா வலதுசாரி தேசியவாதிகள், இனவாதிகள், மதவாதிகள், புதிய நாஸ்திகவாதிகள், சியோனிச முகவர்கள், போர் விரும்பிகள் என்பவர்களை இணைக்கும் பாலமாக தொழிற்படுகின்றது. இந்த கலாசார அணிதிரட்டலில் மேற்குடன் இணைந்து கொள்ளாதவர்கள் மற்றமையாக்கப்படுகின்றார்கள் (otherizing).
இஸ்லாம் மற்றும் மேற்கு என்பதெல்லாம் சிக்கலான வகையில் குழம்பி உள்ள ஒரு யதார்த்தத்தின் மீதான எங்களின் மயக்கத்தை மேலும் அதிகப்படுத்தும் உக்திகள் தான் எனக்கூறும் எட்வார்ட் சைத், மொத்ததில் கலாசார அடையானங்கள் மீதான அச்சத்தின் மீது கட்டமைக்கப்படும் நாகரீகங்களுக்கு இடையான மோதல் எனும் இந்த தொன்மமாக்கலை அறியாமையின் மோதல் (The clash of ignorance) என்கிறார்.
No comments:
Post a Comment