வ. அ. என அறியப்படும் வ. அ. இராசரத்தினம் புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை எழுத்தாளர். நாவல் எழுத்தாளர். ஈழத்தின் மூத்த எழுத்தாளர்.
1940கள் முதல் எழுதி வரும் இராசரத்தினம் பலநூறு கதைகள் படைத்திருக்கிறார். அவருடைய முதல் கதைத் தொகுதியின் மகுடக்கதையான ‘தோணி’யே மிகுந்த கவனிப்பையும் பரவலான வரவேற்பையும் பெற்றது. அநேக தொகுப்புகளில் அது இடம்பெற்றிருக்கிறது.
அவருடைய ஆரம்பக் கதைகளுள் ஒன்றான ‘
தோணி‘யிலேயே அவரது எழுத்தாற்றலும், வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமும் யதார்த்த நோக்கும், முற்போக்குச் சிந்தனையும் மனித நேயமும், நம்பிக்கை மனோபாவமும் புலனாயின.
கடலில் சென்று மீன் பிடித்து வாழ்க்கை நடத்தும் மீனவன் நித்திய வறுமையிலேயே வாழ வேண்டியிருக்கிறது. காரணம், தோணி அவனுக்கு சொந்தமில்லை. இளைய மீனவன் ஒருவன், சொந்தத் தோணிக்காக ஆசைப்படுகிறான். சொந்தமாகத் தோணி வந்த பிறகே கல்யாணம் செய்து கொள்வது என்று உறுதிபூணுகிறான். அவன் ஆசை நிறைவேறுவதாயில்லை. ‘உலகில் உழைப்பவனுக்கு எதுவும் சொந்தமில்லை’ என்பதை உணர்கிற அவன், தான் காதலித்த பெண் சுகமாக வாழட்டும் என்ற உயர்ந்த நோக்குடன் சொந்தத் தோணி உடைய ஒருவனுக்கு அவளை மணம் முடித்து வைக்கிறான்.

‘இன்னமும் தோணி எனக்குக் கனவுப் பொருளாகத்தான் இருக்கின்றது. அதனாலென்ன? உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பம்தான். எப்போதாவது ஒரு நாளைக்குக் காலம் மாறத்தான் போகிறது. அன்றைக்கு எனக்கு மட்டுமல்ல. என் நண்பர்கள் எல்லோருக்குமே சொந்தத் தோணி இருக்கும். எங்கள் தோணிகள் சப்த சமுத்திரங்களிலும் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்கும். அந்த மீன்களை சந்தையில் பகிரங்கமாக விற்போம். விற்ற பணத்திற்குச் சந்தையில் அரிசி வாங்குவோம். அரிசி வாங்கும் பணம் என்னைப் போன்ற உழைப்பாளியான ஒருவனுக்கு நேரடியாகக் கிடைக்கும். அப்போது உழவனுக்கு நிலமும் சொந்தமாக இருக்கும் அல்லவா?’ இதுவே அந்த மீனவனின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.
கலை அழகுடன் யதார்த்த வாழ்வை சித்திரிக்கும் நல்ல கதை ‘தோணி’. இப்படிப்பட்ட வாழ்க்கைச் சித்திரங்கள் பலவற்றை நயமான கதைகளாக உருவாக்கியிருக்கிறார் இராசரத்தினம்.
இராசரத்தினம் ஆசியராகப் பணிபுரிந்து அனுபவங்கள் பெற்றவர். அதனால் பலவித இயல்புகளும் நோக்கும் போக்கும் உடைய ஆசிரியர்களை கதை மாந்தராக்க் கொண்டு பெரும்பாலான கதைகளை எழுதியிருக்கிறார். ஆசிரியர்களது பிரச்சினைகள், வாழ்க்கைச் சிக்கல்கள், குழப்பங்கள், நம்பிக்கைகள், நிலைமைகள் முதலிய பல விஷயங்களை இக்கதைகள் விவரிக்கின்றன.
வேதக் கோயில் மணி, வருடப்பிறப்பு, வருடப் பிறப்பை ஒட்டிக் கொண்டாடப்படுகிற சில நிகழ்ச்சிகள் முதலியன சில கதைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் ‘
கோயில் மணி ஓசை‘ ‘
நத்தார் ஓலம்‘ ஆகியவை விசேஷமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை.
தனது மனைவி இறந்ததும் அவர் அனுபவித்த உணர்வுகளையும், அவரது மனநிலையையும் உணர்ச்சிகரமான சொற்சித்திரமாக இராசரத்தினம் எழுதியிருக்கிறார். அதுதான் ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது.’ சுய சோக அனுபவங்களை உருக்கமாக எடுத்துக் கூறும் இக்கதை வாசகரின் உள்ளத்தைத் தொடும் விதத்தில் அமைந்துள்ளது.
பிறப்பு – 5-6-1925 மூதூர், திருக்கோணமலை.
தாய் – அந்தோனியா
தந்தை – வஸ்தியாம்பிள்ளை
கல்வி – தாமரைவில் றோமன் கத்தோலிக்க பாடசாலை.
மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை.
ஆசிரியர் பயிற்சி – மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை.
பணி – ஆசிரியர்
எழுதத் தொடங்கியது – 1946
திருமணம் – 1952 துணைவி – மேரி லில்லி திரேசா
புனைபெயர்கள் – ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர்.
படைப்புகள் பற்றிய சுருக்க தொகுப்பு
இதுதவிர கொட்டியாரச் சிறுகதைகள், ஐந்திணைக் கதைகள், இலக்கிய நினைவுகள் முதலான பல நூல்களை எழுதியுள்ளார். நூற்றுக்கணக்கான சிறுகதைகளைப் படைத்த இவர் 2000 ஆம் ஆண்டு காலமானார்.
சிறுகதைகள்:
* இதயதாகம்
* தோணி – சிறுகதைத் தொகுப்பு
* ஒரு காவியம் நிறைவு பெறுகிறது – 50 சிறுகதைகளின் தொகுப்பு
நாவல்கள்:
* கொழுகொம்பு - 1956
* கிரௌஞ்சப் பறவைகள் - 1975
* ஒரு வெண்மணல் கிராமம் காத்திருக்கிறது – 1993
* துறைக்காரன் - 1959
* மண்ணிற் சமைத்த மனிதர்கள் - 1996
மொழிபெயர்ப்புக் கவிதை:
* பூவரசம் பூ - உருதுமெழிப் புரட்சிக் கவிஞன் அல்லாமா இக்பால் அவர்களின் கவிதைகள்
கட்டுரைகள்:
* மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு
* இலக்கிய நினைவுகள்
விருதுகள்:
* தோணி நாவல் - இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது – 1962
* கலாபூஷண விருது - இலங்கை அரசு
* மூதூர் மக்களும் எழுத்தாளர்களும் ஒன்றிணைந்து பவளவிழா எழுத்தி பொற்கிழியும் வழங்கி கௌரவித்தனர் - 2000
No comments:
Post a Comment