
தவறவிடப்பட்ட வரலாற்றுக் குறிப்பிலிருந்து
=========== A.J.M.Nilaam ===========
கிரா சந்தேசய (கிளிவிடுதூது) எனும் சிங்களக் காவியம் கி.பி.140 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகும். இது பேருவளை நகரைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது. "பல வகைக் கொடிகளாலும் பலவாறாக அலங்கரிக்கப்பட்ட வீடுகளோடு அழகு நகைகளால் நிரம்பிய கடைகளும் அதிகமாக இருக்கும் பேருவளைக்குள் கடல் வழியாக மனநிறைவோடு நீ நுழைவாயாக! அங்கு சுங்கத்தோடுகள் அணிந்த சோனகப் பெண்கள் வாழ்கின்றனர்" எனக் காணப்படுகிறது.
இதன் மூலம் இக்காவியத்தை எழுதிய ஆசிரியர் தூது போகும் கிளியிடம் அது போக வேண்டிய திசையைக் குறிப்பிட்டு வழியில் பேருவளைக்கும் போகுமாறு கூறியிருக்கிறார் அல்லவா? இவருக்கு பேருவளையில் வாழ்ந்த சோனகப்பெண்களும் அவர்கள் அணிந்திருந்த தோடுகளும் கவர்ந்திருக்கின்றன. அதனால் தான் அவர் கிளியிடம் பேருவளைக்குப் போகுமாறு கூறி தூதுவிட்டிருக்கிறார்.
நபி (ஸல்) பிறந்து இற்றைக்கு ஏறத்தாழ 1400 ஆண்டுகள்தானே ஆகிறது. அப்படியானால் 1850 ஆண்டுகளுக்கு முன் சோனகர் என்று யாரை இவர் குறிப்பிட்டிருக்கிறார். அரபிகளையே இவர் சோனகர் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்படியானால் நபி (ஸல்) பிறப்பதற்கு முன்பே பேருவளையில் அரபிகள் வாழ்ந்திருப்பது தெளிவாகிறது. அப்படியானால் இத்தகைய அரபிகள் யார் என நீங்கள் வினவலாம்.
அக்காலத்தில் யமனிய அரபிகளே சிறந்த கடலோடி வணிகர்களாக இருந்தார்கள். தோணி, படகு, வள்ளம், நாவாய், பாய்க்கப்பல் ஆகியவற்றைச் செலுத்துவதிலும் வர்த்தகம் புரிவதிலும் ஆளுமை படைத்திருந்த இவர்கள் இலங்கைத் தீவை நோக்கி வந்ததில் வியப்பில்லை. ஆக சிங்களத்தில் யோனக, யொவுன், யொன்னு என்றும் தமிழில் சோனகர் என்றும் கூறப்படுவது அந்த அரபிகளையே ஆகும். ஆக யமன் எனும் அரபிச் சொல்லே இவ்வாறெல்லாம் திரிபாகியிருக்கிறது. இவர்கள் பினிஷீயர் என அழைக்கப்பட்டனர்.
ஆக, இலங்கையில் அரபிகளாக மட்டுமே வாழ்ந்த இவர்களுக்கு நபி (ஸல்) பிறந்த பிறகு தான் இஸ்லாம் கிடைத்தது. இஸ்லாத்தை அறிந்து வர இவர்கள் ஒரு குழுவை அனுப்பிவைத்த போது அந்த குழுவுக்கு கலீபா உமர் (ரழி) அவர்களையே காணக்கிடைத்தது. அதன்படி இலங்கையில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்த உமர் (ரழி) தனது தோழர் வஹப் இப்னு அபீஹப்ஸா (ரழி) அவர்களை அனுப்பியதாக அறிஞர் சித்தி லெப்பை குறிப்பிட்டிருக்கிறார். அதன் பிறகு கலீபா ஹாரூன் ரஷீதின் ஆட்சிக் காலத்தில் காலித் இப்னு பகாயா எனும் பெரியார் இலங்கைக்கு அனுப்பப்பட்டு இஸ்லாம் நாடு முழுக்க எத்திவைக்கப்பட்டதாக அறிஞர் ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ் குறிப்பிடுகிறார்.
மேலும் அவர் இது பற்றி விரிவாகக் கூறுகையில், இந்த காலித் இப்னு பகாயாவே கொழும்பில் ஒரு பள்ளிவாசலைக் கட்டியதாகவும் அவர் இறந்ததும் அப்பள்ளிவாசலில் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்ட தாகவும் அவரது மண்ணறை மீது நடப்பட்டிருந்த நடுகல் ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்திலேயே கொழும்பு திஸாவையால் அகற்றப்படும் வரை 800 ஆண்டுகள் இருந்ததாகவும் கூறுகிறார்.
இக்கால கட்டத்தில்தான் சின்னாசிய கோனியாவைச் சேர்ந்த சுல்தான் ஆப்தீனின் மகனான இளவரசர் ஷேக்ஜமால்தீன் கி.பி 800 ஆம் ஆண்டு பேருவளையில் குடியேறி மருத்துவத் தொழிலில் ஈடுபட்டார். சிங்கள சிற்றரசன் மூன்றாம் காப்புலவின் மருத்துவக் கல்லூரியில் இவர் பணியாற்றினார். அவரோடு சிலரும் வந்திருந்தார்கள். 15ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 1906 ஆம் ஆண்டு டைம்ஸ் ஒப் சிலோன் எனும் பத்திரிகை கொழும்பைச் சேர்ந்த எம்.ஏ.சி.முஹம்மத் என்பவர் பேருவளையில் கண்டுபிடித்ததைப் பிரசுரித்திருந்தது. அவர் பேருவளையிலிருந்த ஒரு மண்ணறையின் நடுகல்லில் ஹிஜ்ரி 331 எனப் பொறிக்கப்பட்டிருந்ததை கண்டாராம். ஆக ஷேக் ஜமால்தீன் (ரஹ்) வாழ்ந்த காலத்தைப் பார்த்தால் அந்த மண்ணறை அவருடையதே என்பது தெளிவாகிறது. 1016 ஆம் ஆண்டு பேருவளையை ஆட்சிபுரிந்த சிற்றரசன் ராஜவீர புஹ்மன் பெரிய முதலிமரிக்காருக்கு ஒரு செப்புப்பட்டயத்தை வழங்கியிருந்தான். பேருவளையில் கப்பல்களை நங்கூரமிட்டதற்காகவும் அவற்றை ஏனைய நாடுகளுக்கு பேருவளையை முன்னேற்றிச் செழிப்பாக்கி அபிவிருத்தி செய்ய அனுப்பியதற்காகவும் அரசன் மகிழ்வுற்றிருக்கிறான்.
எனவே, இவற்றுக்குப் பகரமாக இவரது மகன்மார், பேரர்கள், கொள்ளுப்பேரர்கள் ஆகியோர் உயிர் வாழும் வரை அரசுக்காகப் பல்லக்கைத்தூக்கும் ராஜ காரியத்தைச் செய்வதோ பணத்துக்கு வரி செலுத்துவதோ தேவையில்லை. இவரது பெயரும் புகழும் எப்போதும் போற்றப்பட வேண்டும். இவர்கள் தமது மதக்கடமைகளைச் செய்ய விண்ணப்பித்தே பள்ளிவாசல்களைக் கட்டவுள்ளனர்.
அப்பள்ளிவாசல்கள் காக்கப்படுவதோடு அவற்றைக் கட்டுவதற்காக அவர்களால் விண்ணப்பிக்கப்படும் எந்த நிலமும் கொடுக்கப்பட வேண்டும். இவர் பேருவளை முழுதும் கப்பல் வணிகம் செய்ய அனுமதிக்கப்படுகிறார் என அதில் காணப்படுகிறது. சரித்திர சான்றுகளின்படி பெரிய முதலிமரிக்காருக்கு ராஜவீர புஹ்மன் வழங்கியது செப்போலைப் பத்திரமாகும். அவர் இத்தனை சிறப்புகளையும் பெற்றிருந்தார். தச்சர், நெசவாளர், கொத்தனார்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இலங்கைக்கு வந்தனர். இவருக்கும் இவரது சந்ததிக்கும் குற்ற விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. விரும்பிய இடத்தில் பள்ளிவாசல்களைக் கட்டிக்கொள்ளலாம் என அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. அவரை எல்லோரும் கௌரவிக்க வேண்டும் என அரச உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
1288 ஆம் ஆண்டு முதல் 1290 ஆம் ஆண்டு வரை குருணாகலையை ஆட்சி புரிந்த மூன்றாம் புவனேகபாகுவின் தாயார் பேருவளையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணாவார். இந்த புவனேகபாகுவின் பெயர் வஸ்துஹிமிராஜ கலேபண்டார என்பதாகும். இயற்பெயர் குராஷான் செய்யித் இஸ்மாயில். பேருவளையில் வஸ்துஹிமிபுர எனும் ஓர் இடம் இன்றும் இருக்கிறது. 'குருணாகல் விஸ்தரய' எனும் நூல் இந்த சரித்திரத்தைக் குறிப்பிடுகிறது. மகாவம்சம் விபரிக்கையில் இம்மன்னன் அறம் செய்வதன் மூலம் நன்மை பெற முயன்ற ஒரு ஆட்சியாளன். முஸ்லிமாயினும் தினமும் 1000 பிக்குகளுக்கு தானம் வழங்குவதைக் கடமையாகக் கொண்டிருந்தான். என்றெல்லாம் சிறப்பித்துக் கூறுகிறது.
குறுகியகால இரு வருடத்தில் அவர் சூழ்ச்சியால் மலை உச்சியிலிருந்து வீழ்த்தப்பட்டுக் கொல்லப்பட்டார். இவரது பாட்டனார் முதலாம் புவனேகபாகு. தந்தை இரண்டாம் புவனேகபாகு. இப்போதும் கூட வஸ்துஹிமிராஜபுர எனும் கிராமம் பேருவளையில் இருக்கவே செய்கிறது. குருணாகலையில் அடக்கஸ்தலம் இருக்கிறது. சிங்கள மக்கள் கலே பண்டார தெய்யோ எனக் கூறி வழிபடுகிறார்கள். கச்சேரி வீதியில் காணப்படும் இதற்குப்போய் வழக்காளிகளும் சத்தியம் செய்கிறார்கள்.
1410 ஆம் ஆண்டு கொழும்பு முகத்துவாரத்திலிருந்த முஸ்லிம்களுக்கு ஒரு கதீப் தேவைப்பட்டதால் அவர்கள் பேருவளைக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி அங்கிருந்த காதியாரிடம் தமது தேவையைக் கூறினார்கள். உடனே ஓர் அரபுத்தலைவர் தெரிவாகிப் பல்லக்கில் முகத்துவாரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு பள்ளிவாசல் கதீபாகக் கடமையாற்றினார். அவரது சந்ததியினரும் அதே பள்ளிவாசலில் கதீபுகளாகவே இருந்தனர். 1505 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயரின் அட்டூழியத்தின் காரணமாகவே கொழும்பு முஸ்லிம்கள் மாயாதுன்னையின் ஆட்சிக்கு உட்பட்ட பக்கத்து நகரங்களுக்குப் போய் குடியேறினர். மல்வானை திஹாரி, கஹட்டோவிட்ட, உடுகொடை, பூகொடை, ஒகொடபொலை ஆகிய நகரங்களில் குடியேறினர்.
இக்காலகட்டத்தில் போர்த்துக்கேயர் முஸ்லிம்களைக் கிறிஸ்தவராக மாற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும் இஸ்லாமிய ஆன்மீக ஞானிகளின் கடும் முயற்சியால் அது கைகூடவில்லை. பணத்தையும் பதவியையும் கல்வியையும் காட்டியே அவர்கள் அம்முயற்சியில் ஈடுபட்டனர். மற்ற மதத்தினர் மாறியபோதும் முஸ்லிம்கள் மாறவில்லை. இஸ்லாமிய ஆன்மீக ஞானிகளின் ஆளுமையே இதற்குக் காரணமாகும். தமது தனித்துவத்துக்காகப் போராடிய முஸ்லிம்கள் கொழும்பிலும் காலியிலும் மாத்தறையிலும் வெலிகாமத்திலும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
எனினும் ஒல்லாந்தர் பேருவளை முஸ்லிம்களால் அழைக்கப்பட்டு ஒப்பந்தம் செய்துகொண்ட பின் தமது ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஜாவா தீவின் முஸ்லிம் வீரர்களை அழைத்து வந்து இலங்கை முஸ்லிம்களைக் காப்பாற்றினர். ஒல்லாந்தர் முஸ்லிம்களை மதமாற்றம் செய்யவில்லை. மத உரிமைகளை முழுமையாகவே வழங்கினர். முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் சமூகத் தலைமைகளை நியமித்திருந்தனர்.
போர்த்துக்கேயரின் காலத்தில் முடங்கியிருந்த இஸ்லாமிய அறிவை விருத்தி செய்வதற்காக மக்தப் எனும் திண்ணைப் பள்ளிக்கூடங்களும் உருவாக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் கட்டப்பட்டன. எனினும் அரசியல் விடயங்களில் ஈடுபடக்கூடாது. ஆன்மீகத்தோடு மட்டுமே இருக்க வேண்டும் எனும் நிபந்தனையோடுதான் இத்தகைய அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன. 1806 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களோடு ஒப்பந்தம் செய்த ஆங்கில ஆட்சியாளரும் கூட இத்தகைய நிபந்தனையையே முன்வைத்திருந்தனர்.
அராபிய, பாரசீக, தமிழக, மலையாள தஸவ்வுப் கருத்துகளும், சடங்கு சம்பிரதாயங்களும் நாட்டுக்குள் ஊடுருவின. இந்நிலையில் முஸ்லிம்களின் ஆன்மீகத்தைக் கட்டுக்குள் வைக்கும் தேவை ஏற்பட்டது. இஸ்லாம் துறவறமல்ல என்பதையும் நிரூபிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில்தான்( புஹாாி தக்கியாவின் இஸ்தாபகர்களாகிய ஷெய்குமுபாரக் மௌலானாவும் ஷெய்குமுஸ்தபா நாயகமும் இலங்கைக்கு வந்து பேருவளையைத் தளமாகக் கொண்டு காதிரிய்யதுல் நபவிய்யா எனும் தரீக்காவை ஸ்தாபித்தார்கள். அது இப்போது 18 நகரங்களில் இருக்கிறது. அத்தோடு காதிரியா, ஷாதுலியா போன்ற தரீக்காக்களும் தஃவத் அமைப்புகளும் வந்தன.
No comments:
Post a Comment