
முதலில் இஸ்லாத்தின் சட்ட மூலாதரங்களை எவ்வாறு வகைப்படுத்துவது என்ற தெளிவு பலருக்கிடையில் கருத்துமுரண்பாடு உண்டாகிட காரணமாகியது.
குற்றவியல் சட்டத்தில் மூலம் அல்-குர்ஆன் அதன் பின்னர் அடுத்த படித்தரத்தில் நோக்கப்படவேண்டியது ஹதீஸ்கள். அல்குர்ஆன் வசனத்தின் விளக்கமே ஹதீஸ்கள். அவ்வாறாயின் ஹதீஸ்கள் எப்போதுமே அல்குர்ஆன் வசனத்துடன் நேரடியாக முரண்படாது என்பது பொதுவிதி.
சரி விடயத்திற்கு வருவோம்....
#அல்குர்ஆன் - "நபியே! நீர் கூறுவீராக இந்தச் சத்தியம் உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ளது ஆகவே, விரும்புபவர் அதை ஏற்கட்டும், விரும்புபவர் அதனை நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்" (அல்-குர்ஆன் 18:29)
மேற்படி வசனம் தெளிவாக தனிமனித சுதந்திரத்தை தெளிவாக விளக்குகின்றது. ஆனால் மதம் மாறுபவர்களுக்கு கொலை தண்டனை என்று ஹதீஸ் ஆதாரமாக கீழ் மேற்கோள் காட்டும் வசனத்தை எடுகோள் கொள்கின்றனர்.

#அல்குர்ஆன் - "எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் அந்த குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா (மன்னிப்புக்கோரல்) ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்" (அல்-குர்ஆன் 3:90)
#அல்குர்ஆன் - "எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு நேர் வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை" (அல்-குர்ஆன் 4:137)
மேற்படி வசனங்களின் படி......
* நம்பிக்கைக் கொள்கிறார்
* பிறகு மறுக்கிறார்
* மீண்டும் நம்பிக்கைக் கொள்கிறார்
* அதையும் மறுத்து வெளியேறுகிறார்
* பின்னர் இறை நிராகரிப்பில் நிலைத்து நின்று மரணிக்கிறார்
என்று இறைவன் சுட்டிக்காட்டுவதிலிருந்து மனிதர்களுக்கு எத்துனை சுதந்திரமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகின்றது. "கொல்லப்பட வேண்டும்" என்ற புரிதலை இந்த வசனமும் அடியோடு மறுக்கின்றது.
நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பவர்கள் பற்றிய எச்சரிக்கையில், இஸ்லாத்தை ஏற்ற பின் நீங்கள் நிராகரித்து விலகினால் அதன் பிறகு பவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தால் பிரயோஜனமில்லை என்ற அறிவுரையே இறைவன் முன் வைக்கிறானே தவிர அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறவில்லை.
ஒருவர் இஸ்லாத்தை ஏற்கிறார் பின்னர் மதம் மாறி விடுகிறார். இப்போது அவர் கொல்லப்பட வேண்டும் என்பது சட்டம் என்றால், அடுத்து அவர் ஈமான் கொள்வதற்கும், அதன் பிறகு அதை மறுப்பதற்கும் என்றும் இப்படி எதற்கும் வழியில்லாமல் போய் விடும் அல்லவா?
இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது மட்டும் ஒருவன் கொல்லப்படுவதற்கான விதியல்ல. மாறாக வெளியேறிய அவன் முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக செயல்பட்டு, குழப்பங்களை விளைவித்து, ஒருநாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கும் போது, அப்போது பிடிப்பட்டாலே இந்த தண்டனை அவன் மீது விதிக்கப்படும்.
குழப்பத்திற்க்கான தண்டனை கொலை

நாட்டின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்பது அரசியல் நிர்ணயம். அதற்கு எதிராக குழப்பம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் இருக்கும் நியதி. இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது மட்டுமில்லாமல் அங்கு குழப்பம் விளைவிக்க முயல்பவர்கள் குறித்தே மேற்கண்ட கட்டளைகள் வந்துள்ளன.
மதம் மாறியவர்கள் அதற்காக கொல்லப்பட வேண்டும் என்பது சட்டமாக இருந்தால் நாடு கடத்தப்பட வேண்டும் என்று நபி (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள். நாடு கடத்தப்படுதல் என்பதே பொதுவாக ஒரு நாட்டில் குழப்பம் விளைவிக்கும் முக்கியஸ்தர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையாகும். "நாடுகடத்தப்பட வேண்டும்" என்று நபி(ஸல்) குறிப்பிட்டதிலிருந்து கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் மதம் மாறியதற்காக அல்ல மாறாக மதம் மாறி உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கே என்பது தெளிவாகின்றது.
"இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வகையான நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் பிரிந்து தெளிவாகிவிட்டது" (அல்-குர்ஆன் 2:256)
No comments:
Post a Comment