
தொண்ணூறுகளின் முக்கால் பகுதிதான் கடைசியாக இருக்க வேண்டும். ஊரில் அந்த வழக்காறு வாழ்ந்து கொண்டிருந்த போது. மிக நெடுங்காலமாக பாரம்பரியமாக மனித நேயத்தின் உச்சக்கட்டமாக உறவுகளின் கொங்க்ரீட் பொன்டெஜாக இருந்து வந்த அந்த மாசற்ற மரபு இறந்து இரு தசாப்தங்களுக்கு மேலென்றுதான் சொல்லுவேன்.
நவீனங்களென்ற பெயரில் மனித மனதை கூறுபோட்டறுத்த வசதி வாய்ப்புகள் வந்து சேர முன்னர் பணத்தின் மீதான காமசூத்ரா ஓர்கசத்தை சுவைக்க முன்னர், காணி நிலங்கள் மீதான கூட்டுப் பாலியல் வல்லுறவு வெறித்தனம் வெளிப்பட முன்னர் நமது கிண்ணியா சமூகத்தில் ஏகப்பட்ட நல்லதுகள் மனிதநேய வஸ்துகள் இருந்தன.
அதிலொன்று அன்றைய காலத்து பக்கத்து வீட்டவர்களோடு இருந்த மாசற்ற உறவும், பக்கத்து வீட்டாரோடு கொண்டாடிய பந்தமும். அப்போதெல்லாம் பக்கத்து வீட்டார் நல்ல கறி சமைத்தால் உடனடியாக ஒரு கோப்பைக் கறியை கொடுத்து அனுப்புவார்கள். அதில் அன்பும் நேசமும் பக்கத்து வீட்டானோடுடனான பாசமும் கம கமத்துக் கொண்டிருக்கும். அல்லாவிடில் பக்கத்து வீட்டுக்கு நாங்கள் கறி கேட்டுப் போவோம்.
அப்போதெல்லாம் பக்கத்து வீடுகளில் கறி கேட்டுப் போவதொன்றும் இன்டீசென்டாகவோ அல்லது அநாகரீகமானதாகவோ இருந்தது கிடையாது. யாரும் பக்க்த்து வீட்டுக்கு வெட்கமில்லாமல் கறி கேட்டுப் போகின்றோமே என்று சுய கௌரவம் பார்த்தது கிடையாது. தன்மானம் பார்த்து அதனை தவிரத்தது கிடையாது. சில வேளை பக்கத்து வீடுகளுக்குப் போய் ரொம்ப இயல்பாக “தங்கச்சிப் பாப்பாவுக்கு குடுக்க கொழஞ்ச சோறும் கொஞ்சம் மீன் கறியும் வேங்கிட்டு வரச்சொன்னாங்க உம்மா” என்று கேட்போம். உடனடியாக அந்த வீட்டாரும் குழைந்த சோறு ப்ளஸ் கோப்பை நிறைய மீன் கறி என்று தந்தனுப்புவார்கள்.
பக்கத்து வீட்டாரிடம் இப்படிப் போய் கேட்பதற்கு யாரும் வெட்க்கப்பட்டதும் கிடையாது, அதே போல சோற்றையும் கறியையும் கொடுக்க அந்த பக்க்த்து வீட்டு உறவுகள் முகம் சுளித்ததும் கிடையாது. அப்படியொரு இயல்பான வாழ்வியலது. ரொம்ப கேசுவலாக இருந்தது. உரிமையோடு கேட்பார்கள்…..உறவோடு கொடுப்பார்கள்.
இன்று பக்கத்து வீட்டாரிடம் சென்று நாம் ஒரு கோப்பைக் கறி கேட்டால் அவர்கள் நாளை வந்து நம்மிடம் “எறச்சிக் கறி ஆக்கியிருந்தா உம்மா ஒரு கோப்பை கறி வேங்கி வரச் சொன்னாங்க” என்று நமது வீட்டு அடுப்படிக்குள்ளே வந்து போட்டிருக்கின்ற பலகைக்குத்தியில் குந்திக் கொள்ளுவார்கள். யாரும் யாரிடமும் எதுவும் வெட்கமில்லாமல் நாணமில்லாமல் கேட்கலாம். இப்படிக் கெட்பதே அன்றைய வாழ்வியலின் நாகரீகமாகவும், கல்ச்சராகவும் இருந்தது என்றால் அதனை இன்றைய அன்ட்ராய்டு ஜெனரேஷன் நம்பித்தான் ஆக வேண்டும்.
அப்போதெல்லாம் இரண்டு வளவுகளுக்கிடையில் கதியால்கள் மற்றும் முருங்கை மரங்கள் நிற்க பலவீனமான வேலிகளே இருந்தன .அல்லது பொது வேலிகளே இருக்கவில்லை. கல் மதில்கள் என்பதே அப்போது கற்பனைக்கு எட்டாத சமாச்சாரமாக இருந்தது. பொது வேலிகள் போட்டு தமது காணியை சொந்தச்சிறையாக்க யாரும் விரும்பாத காலமது.
ஆனால் நவீனங்களின் வளர்ச்சியும் புதிய உலக ஒழுங்கும் ஊத்தை வாளி அரசியலும் கோப்ரேட் கலாச்சாரமும் நாகரீகம் பற்றி மேற்கத்தைய மாய பிம்பங்களும் கல்ச்சர் பற்றிய தப்பான புரிதல்களும் டீசென்ஸி பற்றிய அநாவசிய கவலைகளும் அடுத்தவன் என்ன நினைப்பானோ என்ற அச்சமும், பொருளாதாரத்தின் மீதான கட்டுக்கடங்கா காம்மும் அடுத்தவனை அடித்து மாமிசம் சப்புகின்ற மனோநிலையும் காசு மட்டுமே உலகமென்ற சடத்துவப் போக்கும் ஒட்டு மொத்தமாக கபளீகரம் செய்தவைகளுல் நான் மேற் சொன்ன பக்க்த்து வீட்டார் உறவாடலும் அடங்கும்.
இன்று பக்கத்து வீட்டுக்குப் போய் கேசுவலாக சோறு கறி கேட்கின்ற நிலையில் நானும் இல்லை அப்படியொரு உறவாடலுக்கு பக்க்த்து வீட்டானும் தயாரில்லை. வெக்கமே இல்லாம பக்கத்து வீட்டுக்குப் போய் கறி வாங்கிட்டு வாரதா……த்தூ…எந்த வேர்லடுல இருக்கீங்க பாஸ்…கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம’ என்று வைத்து செய்து விடுவார்களன்.
எல்லார் காணிகளும் சுருங்கி கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி சிறு துண்டு காணிக்குள்ளே கட்டப்பட்ட வீட்டைச் சுற்றி கல் மதில்கள்…பக்கத்து வீடுகளில் என்ன நடக்கின்றது என்பதில் கூட யாருக்கும் எதுவும் அக்கறை கிடையாது. அது அநாகரிகமும் இன்டீசென்ஸியும் கூட.. இதனைத்தான் இன்றைய நவீன் உலகம் நமக்க கற்றுத் தந்திருக்கின்றது.
அற்புதமான ஒரு காலத்தை கடந்து வந்திருக்கின்றோம். இனி அது திரும்பக் கிடைக்கப் போவதேயில்லை. கறி சோறுதான் நாங்கள் கேட்டுப் போவதில்லை…ஆகக் குறைந்தது பக்கத்து வீட்டாருடன் நாம் எப்படி உறவாடுகின்றோம் என்ற கேள்விக்கு பதிலாக………
எப்படி என்ற கேள்விக்கே இடமில்லை ஏனெனின் நாம்தான் பக்க்த்து வீட்டாருடன் உறவாடுவதேயில்லையே.
No comments:
Post a Comment