Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, May 4, 2019

மூதூரில் மெல்லிசை "மூதூர் ரூபி இசைக்குழு" - மைந்தன் ஜெயராஜ் ஏ.எஸ்.ஏ.பாய்வா

ஆக்கம் மூதூர் ஜெயராஜ் (அ.ச.பாய்வா)
அன்றைய காலங்களில் மூதூர் மண்ணில் மக்கள் இனம், மதம் பிரதேசம் மறந்தே வாழ்த்து வந்துள்ளார்கள் என்பதனை அக்கால மக்களின் வரலாற்று சான்றுகள் எமக்கு ஆதரமளிக்குகின்றது. அந்தவகையில் கலைஞர்கள் குறித்தான எம்மவர்களின் அடையாளத்தை இன்றுள்ள தலைமுறைக்கு நினைவூட்டவேண்டிய தேவைப்பாடு எம்மை சாரும். மூதூர் மண் ஈன்றெடுத்த ஒரு பல்துறை கலை விற்பன்னரை இன்றைய எமது பதிவில் நோக்குவோம்.
கீழ்வரும் பதிவின் முதல் பகுதி முகநூல் நகைச்சுவை சிகரம் என்றழைக்கப்படும் அப்துல் ஜப்பார் ஸாகிர் (சா.நா) அவர்களினால் குறித்த நபர் பற்றி எழுத்தப்பட்ட பதிவு என்பதை கருத்தில்கொள்க....

மூதூரின் சகலகலாவல்லவன்
(மைந்தன் ஜெயராஜ். ஏ.எஸ்.ஏ.பாய்வா )
மூதூரின் சகலகலாவல்லவன் என்பதாகு அப்பால் ஒருபடி மேலாக இலங்கையின் சகலகலா வல்லவன் என்ற எண்ணமும் என்னுள் எழுகிறது. அதற்கான காரணம் இவர் ஓர் பல்துறை விற்பன்னர். சிலர் இரண்டு மூன்று துறைகளில் சிறந்து விளங்கலாம். ஆனால் இவரின் ஆற்றல் பல்துறை சார்ந்ததாக மிளிர்கின்றது. மூதூர் முகைதீனும் நானும் அண்மையில் உரையாடிக் கொண்டிருந்த போது அவரும் இதே கருத்தை என்னிடம் கூறினார்.அவரின் கருத்து எனது கண்ணோட்டத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைகிறது.

விடயத்துக்கு வருவோம்......
மூதூர் ஜெயராஜ் பிறந்தது 1948. தற்போது வயது 71. 1976 இல் 28 வது வயதில் மூதூரிலிருந்து மட்டக்களப்புக்கு சென்று வாழ்ந்து வருகிறார். அதனால் மூதூரில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இவரின் ஆற்றல் பற்றி அறியக் கூடிய வாய்ப்புள்ளது. புதியவர்களும் அறிய வேண்டும் என்ற ஆவல்தான் இவ்வெளியீட்டுக்கான காரணம்.

இசைத்துறை.
பாடகர். கவிஞர். இசையமைப்பாளர்.அனைத்து கருவிகளுக்குமான வாத்தியக் கலைஞர். 1970 களில் மூதூர் றூபி இசைக் குழுவின்
இசையமைப்பாளர். 1972 இல் மூதூர் மத்திய கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியின்போது அனைத்து பாடல்களுக்குமான இசையமைப்பு மூதூர் ஜெயராஜ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. அக்காலங்களில் மூதூரில் நடைபெறும் அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் இவரே இசையமைப்பாளர்.
திருமலை பரமேஸ் கோணேஸ் கலைவாணி இசைக்குழுவில் சேர்ந்து நூற்றுக் கணக்கான இசை நிகழ்ச்சிகள்.இதில் எம்.எஸ்.பெர்ணான்டோ ஏ.ஈ.மனோகரன் போன்ற பிரபல பாடகர்கள் பங்கு பற்றுவது. 1970 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்கு இவரும் ஏ.ஜே.ஜெமீல் அவர்களும் சென்று ஆளுக்கொரு பாடல் பாடினார்கள். இந்த இரண்டு பாடல்களும் மூதூர் ஜெயராஜ் இயற்றி இசையமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயராஜ் அவர்கள் பாடிய பாடலின் சில வரிகள் ஞாபகம்.....
நெஞ்சில் நாணமின்றி
கண்ணில் தூக்கமின்றி அந்த
றயிலும் ஓடுகிறது.
பனி வாடைக் காற்று மழை நீரிலாடி
தினம் பயணம் செய்கின்து.
குடிபோதையிலே சிலர் ஏறு(கி)றார்
குறுகி ஒரு மூலையில் சாய்கிறார்
மடி மீதினிலே கை போடுறார்
மறைந்தோடிய பர்சை தேடுறார்....
ஜெயராஜ் அவர்கள் இயற்றி இசையமைத்து ஏ.ஜே.ஜெமீல் அவர்கள் பாடிய பாடல்......
முத்துப் போன்ற பெண்ணே -- உன்னை
முத்தமிட ஆசை
நித்திரையில் நானும் --அதை
நித்தம் நித்தம் கொடுப்பேன்.

மட்டுநகரில் இன்னும் இசை நிகழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார். மட்டுநகரில் இசை பயின்றவர்களில்  எண்பது வீதமானோர் இவரிடமே என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் பாடினார். கவிச்சமர் வானொலி நிகழ்ச்சியில் கலந்து கலக்குகின்றார். தற்போது மட்டுநகரில் கலாச்சார அமைச்சின் கீழ் இசை ஆசிரியராகவும்
தேசிய ரீதியில் இசை ஆலோசகராகவும் மூதூர் ஜெயராஜ் பணியாற்றுகிறார் என்பது பெருமைக்குரிய விடயம்.

கலைத்துறை
எழுத்தாளர் நாடகாசிரியர் கவிஞர் பாடலாசிரியர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கவிதைகள் நாடகங்கள் மெல்லிசை பாடல்கள் எழுதியுள்ளார். விஷேட தொழிலாளர் வேளை எனும் வானொலி இசை நிகழ்ச்சி செய்துள்ளார். 'ஆத்ம விசாரம்' எனும் சிறுகதை தொகுதிக்காக 2008 ஆம் ஆண்டு தேசிய சாகித்திய மண்டல விருது பெற்றுள்ளார். கவிதைகளுக்காக 12 தேசிய விருது பெற்றுள்ளார். இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறார்.
விளையாட்டு
இவர் மூதூர் அன்ரனிஸ் ஸ்கூலில் கல்விகற்று பின்னர் திருமலை சென் ஜோசப் கல்லூரிக்கு சென்றார். புட்போல் வொலிபோல் கிறிக்கட் பெட் மிங்ரன் ரேTபிள் ரென்னிஸ் போன்ற விளையாட்டுக்களில் சிறந்து
விளங்கினார். பதினேழு வயதுக்குட்பட்ட பாடசாலை உதைபந்தாட்ட தேசிய அணியில் விளையாட தெரிவாகினார். அந்நேரம் அவர் Father க்கு படித்துக் கொண்டிருந்ததால் மேலிடம் அவரை கொழும்பு செல்ல அனுமதிக்கவில்லை.
பின்னாளில் மூதூர் அன்ரனீஸ் கழகத்துக்கு புட்போல் விளையாடி பின்னர்
ஜாயா கழகத்திற்காக விளையாடினார். ஜெயராஜ் அவர்களின் ஸ்ரைலான விளையாட்டை ரசிக்கவென ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது.அதில் நானும் ஒருவன். பின்னர் மட்டுநகரில் பிரசித்தி பெற்ற சிங்ஙிங் பிஷ் கழகத்திற்காக விளையாடினார்.
மூதூர் ஜெயராஜ் மிகச்சிறந்த நகைச்சுவையாளர்.அவருடன் உரையாடும்போது சிரித்துக் கொண்டே இருக்கலாம்.மூதூருக்கே உரிய நக்கல் நையாண்டி கூடவே தெறிக்கும். 1975 ஆம் ஆண்டு சம்பூரில் நடைபெற்ற நான்குபேர் கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்காக நாங்களும் ஒரு அணியாக பங்குபற்றினோம்.
ஜெயராஜ் நசீர் தாரீக் நான். அந்த அணிக்காக ஜெயராஜ் பெயர்
ஒன்று வைத்தார். அணியின் பெயர் ppc. அந்த அணியின் தமிழ் கருத்தை அவர் சொன்னபோது மெச் விளையாடும் போதும் சிரிப்புத் தாங்க முடியாமல் அந்த மெச்சை தோற்றோம். இங்கு அதன் கருத்தை கூற முடியாது.
தொடர்பு கொள்பவர்களிடம் சொல்கிறேன்.
அடுத்த ஆற்றல்..
ஆங்கில மொழி வளம். சென்ஜோசப் கல்லூரியில் பயின்றதனால்
ஆங்கிலம் சரளமாக பேச எழுதக் கூடியவராக உள்ளார். அவரின் சில ஆக்கங்களில் அது புரியும். கவிஞர்களுக்கே உரிய திமிர் இவரிடம்
நிறைய உண்டு என்பதனையும் கூறிக் கொள்கிறேன்.
சித்திரம் வரையக் கூடியவர்.
மூதூர் இம்பீரியல் தியேட்டரில் சில படங்களுக்கு பெனர் வரைந்து
கொடுத்துள்ளார். ஆலையடிச் சந்தி கடைகளுக்கு பெயர் பலகை வரைந்து கொடுத்துள்ளார். இத்தனை ஆ.ற்றல் கொண்ட ஒருவரை என்னென்பது. மூதூர் மகன் என்பதில் நாம் பெருமை கொள்வோம். மூதூர் இவரால் பெருமையடைகிறது. இலங்கையின்சகலகலாவல்லவன் மூதூர்  ஜெயராஜ் அவர்களை வாழும்போதே வாழ்த்துவோம்.

நன்றி  - சா நா.
------------------------------------------------------------------------------------
இனி மூதூர் ஜெயராஜ் அவர்களின் மூதூர் மெல்லிசைக்குழு ரூபி பற்றிய வரலாற்று பார்வையை பார்ப்போம். இது அவரின் அனுபவப்பதிவாக முகநூளில் பதிவேற்றப்பட்டமை குறிப்பிடத்தகது.

மூதூரில் மெல்லிசை மூதூர் 'ரூபி'இசைக்குழு
தொடர் - ௦1 
A.F.சவியர். இவரைத் தவிர்த்துவிட்டு திருகோணமலையின் இசைப் பாரம்பரியத்தைப் பேசமுடியாது.தற்போது பிரதேச செயலகம் அமைந்துள்ள இடத்தில் அந்நாளில் அரச விடுதியொன்றிருந்தது.அங்குதான் சேவியர்அண்ணனின் குடும்பம் வசித்து வந்தது. இவரொரு பல்துறை நிபுணன். இசை, விளையாட்டு, வைத்தியம், தற்காப்புக்கலை, (குறிப்பாக வன்மக்கலை) ஓவியம், மின்னியல் என்று அவர் கற்காத கலைகளில்லை.

Fr.சந்தனம், Fr.நோபேர்ட் ஆகியோரிடம் முறைப்படி மேற்கத்திய இசையையும், நூல்கள் மூலம் சாஸ்த்திரிய சங்கீதத்தையும் கற்வர். Mouth Organ வாத்தியத்தில் சிறந்த, ஈழத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரில் இவரும் ஒருவர். ஒரே நேரத்தில் மௌத்ஓகன் வாத்தியத்தை வாசித்துக்கொண்டே, டோலக் அல்லது றபான் வாத்தியத்தையும் இசைக்கக் கூடிய திறமைசாலி. எனது சிறுவயதில் எனக்கொரு inspiration ஆகவும் இருந்தவர். எனது தந்தையாரிடம் நான் பிறக்குமுன்னி இருந்தே பெறுமதியான ஹார்மோனியம் ஒன்றிருந்தது.ஏனோ எனக்கதில் நாட்டம் செல்லவில்லை.

எனது பன்னிரண்டாவது வயதில் (1960) நான் திரு/புனித சூசையப்பர் கல்லூரிக்குச்சென்றபோதுதான் முதன்முறையாகப்பியானோவைப் பார்த்தேன்.அதனை எங்கள் ஆங்கில ஆசிரியை திருமதி Lands-burger இனிமையாக வாசிப்பார்.அந்த ஒலிஎன்னை ஈர்க்க, அவரிடம் முறைப்படி வாசிக்கக் கற்கத்தொடங்கினேன். இருகைகளாலும்வாசிக்கவேண்டிய ஆங்கில இசைக்குறிப்புக்களைப் பார்தவாறு, காலால் pedalஐ இயக்கி
கொண்டு வாசிக்கவேண்டும், பியானோவைப்பார்க்கக்கூடாது. இசைக் குறிப்புகளிலிருந்து கண்களைச் சிறிது அசைத்தாலும்போதும். அம்பேல்தான்.இது கிட்டத்தட்ட ஒரு தியானம்போன்றதுதான்.அவரிடம் மூன்றாவது grade வரை கற்றேன்.அவர் ஓய்வுபெற்றுச் சென்ற பின் அவரிடம் கற்கும் வாய்ப்பும் எனக்கு இல்லாமற்போனது. அதே தேரத்தில் Fr.ஹேபயரிடம் கிளாரினட், Trumpet வாத்தியங்களையும் கற்றேன்.

ஒருவரையொருவர் அறியாமலேயே, எனக்கும் சேவியர் அண்ணனுக்கும் எப்படி இந்த இசை விடயம் பொருந்தியிருந்தது என்பதை உணர்த்தத்தான் இதனைக் குறிப்பிட்டேன்.

மூதூரில் மெல்லிசை மூதூர் 'ரூபி'இசைக்குழு
தொடர் - ௦2
1963களில் திருகோணமலையில் திரு.பத்மனாதன் Trinco Music Club தொடங்குகிறார். இலங்கை வானொலி நகர சபை மண்டபத்தில் நிகழ்த்திய கலைநிகழ் வுக்கு இசை வழங்க,அது வானொலியில் ஒலிபரப்பாக அவர் பிரலமாகிறார். அதனைத் தொடர்ந்து திரு.N.இம்மானுவல் கோணேஸ்வராவை ஆரம்பிக்கிறார். அதுவே பின்னர் கலைவாணி,Rainbows,
என்று விரிந்து கொண்டு செல்ல, மூதூரில் பொலிஸ் நிலையத்தில் சிற்றூழியராகக் கடமை புரிந்த திரு.வயிரமுத்து அவர்கள் ஒரு குடும்பக் குழுவாக உருவாகிறார். அவர் ஹார்மோனியம், மகள் பாட, மகன் கோகுலன் டொல்க்கி இசைக்க, ஆலயங்களில் பக்திப் பாடல்கள் மணத்தன.

சேனையூரில் திரு.செல்வநாயகம் அவர்க ளின் தலைமையில், திரு.வீரசிங்கம், அம்பிகா, சந்தானலெட்சுமியென மிகப் பலமான குரல்வளங்களோடு ஒரு குழுஆலையத் திரு விழிக்களில் கலக்க, திரு.அம்பிகைபானின் தலைமையில் சம்பூரில் தியகராஜா, மணி ராஜா போன்றவர்கள் இணைந்த ஒரு குழுவும்,அண்ணாவியார் தம்பையா தலைமையில் ஒரு குழுவும் இயங்கத்தொடங்கின. மூதூரில் இவர்களுக்கு முன்னோடியாயிருந்ததுதான் ரூபி மெல்லிசைக் குழு.

இதற்குமப்பால் திரு.தம்பிப்பிள்ளை (சூரன்) அவர்களின் தலைமையில் சின்னவன், கண்டசாலாவின் குரலையொத்த குரலில் பாடவல்ல ஜனாப்.கான், டொலக் வாத்தியத்தைத் திறமையாகக் கையாளவல்ல ஜனாப். காதர், 'ஜப்பான் மென்டலின்' வாத்தியத்தில் திரு.வேலு என ஒரு 'பஜா'குழுவும் இயங்கியது.நான்கு சுவர்களுக்குள் மாத்திரம் தங்கள் இசையை மட்டுப்படுத்திக் கொண்டார்கள் இவர்கள்.(வெளியே சொல்ல முடியாத காரணமுமிருந்தது அதற்கு) மூதூரில் 'தபேலா'வாத்தியத்தைக் கையாண்ட ஒருவரென்றால், அது சூரன் (தம்பிப்பிள்ளை) மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் Drums வாத்தியத்தை அறிமுகம் செய்தது திரு.கங்காதரனின் தலைமையில் இயங்கிய Neero இசைக்குழு தான். வாத்தியத்தை இசைத்தவர் நண்பர் நித்தி என்கிற நித்தியானந்தன். ஆனால் நித்திக்குப் பின்னர் வந்த முகுந்தன், நித்தியைப் பின்தள்ளி,மிகச்சிறந்த drum வாத்தியக் காரராக மிளிர்ந்தார்.


மூதூரில் மெல்லிசை மூதூர் 'ரூபி'இசைக்குழு
தொடர் - ௦3
இடையில் நான் சொல்ல மறந்த விடயமொன்று. திருகோணமலையில் மேலும் மூன்று இமயங்களிருந்தன.ஒன்று Samson அடுத்தது மொறிஸும் அவரது தந்தையாரும். Samson என்பவர் ஒரு one man army.

திருகோணமலையிலிருந்த ஒரேயொரு saxophonist. பியானோ எக்கோடியனும் இசைப்பார். திருமண நிகழ்வுகளில் தனியாளாக இசை வழங்குவார். எல்லாமே ஆங்கில இசைதான். Dockyard வீதியில் வசித்தவர். அதேபோல பறங்கியர்களின் திருமணங்களில் திரு. மொறிஸும் அவரது தந்தையும்
இசைவழங்கினார்கள். கிற்றார் வாத்தியத்தில் மொறிஸ், வயலினில் அவரது தந்தை என்கிற combination எத்தனையோ வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்வதுதான். வாத்தியத்தை அலறவிடாமல் இனிமையாக வாசிக்கும் கலையை அவர்களிடம்தான் கற்கவேண்டும்.அணுவணுவாக அதனை
அனுபவித்தவன் நான். பின்னாளில் அவரெனது நண்பரானார்.

குழந்தைமனம். நானொருதடவை கேட்டதற்கிணங்க, கங்கைப் பெருநாளொன்றில் எங்களோடு சேர்ந்து இசைத்தார். பலநாட்களாக அவரைப்பற்றி விசாரித்து, பன்குளத்தில் பாரிசவாத்தத்தால் பாதிக்கப்பட்டுப், படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார் என்றறிந்து சென்றவருடம் அவரைப் பார்க்கச் சென்றேன். என்னைக் கண்டதும் இனங்கண்டு அருகிலென்னை அழைத்து, அவரது விரல்களைத்தான் எனக்குக் காட்டினா்.கிற்றா வாத்தியத்தில் மாயவித்தை கள் காட்டிய அந்த விரல்கள் ஸ்மரணையற்றுக் கிடந்தன.பேச முடியாத அவர் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. நீண்டநேரம் அவரோடு இருந்துவிட்டு வந்தேன்.

அந்த எனது இன்னுமொரு மானசீகக் குருவை மீண்டும் சென்று பார்க்கும் திராணி எனக்கில்லை. இப்போது நான் விரும்புவது ஒன்றைத்தான். திடீரென்று இறந்துவிடவேண்டும்.

மூதூரில் மெல்லிசை மூதூர் 'ரூபி'இசைக்குழு
தொடர் - ௦4
(குறிப்புகள் எதுவும் இல்லாமல், நினைவை மீட்டியபடி பதிவுசெய்வதால், அவ்வப்போது மறந்துபோன சில சம்பவங்களையும் இடைச் செருகலாக்க நேரிடும். அவ்வாறானதொரு நிகழ்வுதான் பகுதி மூன்றில் இடம்பெற்றது. மீண்டும் மூதூர் திரும்புவோம்)

நீண்டதொரு இடைவெளியின் பின்னர் ஊர் மீண்ட எனக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது.எனது வீட்டை அண்மித்த ஒருசில நண்பர்களையும்,சில உறவினர் களையும் தவிர வேறெவரையும் தெரியாது. ஆனால் காற்பந்து மூலமாக நான் அறியப் பட்டிருந்தேன்.
மூதூரைக் கிராமமென்றும் சொல்லமுடியாத பட்டினமென்றும் சொல்ல முடியாத கோமுட்டி கண்ட ஊர்.திருகோணமலையுடன் தொடர்புகொள்ள வேண்டுமானால் ஏழுகடல் தாண்ட வேண்டும். பொழுது போக்கச் சிறு நூலகமும் 'இம்பீரியல்' படமாளிகையுமிருந்தன. நான் கற்று அனுபவித்த அந்த இசை தொடர இனி வாய்ப்பில்லை என்கிற முடிவோடு காற்பந்தாட்டத்தில் கவனத்தைச் செலுத்த முடிவுசெய்தேன்.
மின்சாரவசதிகளற்ற நாட்களவை. மூதூரில் இயங்கிய மிகப்பெரிய உணவகமென்றால், வைத்திய சாலைக்கு முன்னால்,காத்தான் குடியைச்சேர்ந்த M.I.M.இபுறாஹீம் என்பவருக்குச் சொந்தமான 'நியூ ஸ்ரார் ஹோட்டல்' தான். கொத்துரொட்டி அதில் பிரசித்தம்.

ஜஸ்ரினும் நானும் ஓர்நாள்மாலை இந்த உணவகம் பக்கமாக நடந்து கொண்டிருந்தோம்.இன்று அந்தோனியார் பாலர் பாடசாலை அமைந்துள்ள பகுதியில் அன்று ஏழு அரச விடுதிகளிருந்தன.விடுதிகளுக்கு
நேரெதிரே 'பிரிவுக் காரியாதிகாரி' அலுவலகம். 'சிமினி' விளக்குகள் மினுமினுத்துக் கொண்டிருந்த அந்த மாலை வேளையில், அந்த விடுதியொன்றிலுருந்து எக்கோடியன் சத்தம் கேட்டது. மூதூரிலாவது எக்கொடியன் ஒலிப்பதாவது.
சேவியரண்ணன் மௌத்ஓகன் இசைக்கறார் என்றான் ஜஸ்ரின். ஆனால் கல்லூரி bandல் எக்கோடியன் இசைத்த எனக்குத்தெரியாதா அதன் சத்தம். ஜஸரினுக்கும் இசையென்றால் உயிர். ஓரளவு பாடுவான்.எதற்கும் சென்று பார்ப்போமென்றான்.முதலில் நான் பின்னடித்தேன்.அங்கு சென்றால், சேவியரண்ணனின் விடுதிக்கு முன்னால் ஒரு பத்துப் பதினைந்து பேர் தரையில் அமர்ந்திருக்கிறார்கள். வாத்தியத்தைப்பற்றி எதுவும் தெரியா விட்டாலும்,டொல்க்கியின் இரண்டு பக்கங்களிலும் தட்டி 'லீயோன்' அண்ணன் தாளமிசைக்க, சேவியரண்ணன் எக்கோடியனில் தடவ (எக்கோடியன் அப்போது அவருக்குப் புதிது) யேசுதாசன் அண்ணன் கலங்கரை விளக்கத்தில் காற்று வாங்கிக் கொண்டிருந்தார்.

அங்கே இருந்த அனைத்துமே புத்தம்புது வாத்தியங்கள். அவற்றில் ஒரு வாத்தியம் என்னை ஈர்த்தது.அறுபதுகளில் வெளிவந்த பாடல்களில் தாளவாத்தியமாய் அதிகம் ஒலித்த bongo drum (பொங்கோஸ்) தான் அது. (புதிய பறவை திரைப்படத்தில் வரும் 'பார்த்த ஞாபகம் இல்லையோ' பாடலின் ஆரம்பத்தில் துரித லயத்தில் ஒலிக்குமே ஒரு தாளவாத்தியம்.அதுதானது) கைகள் துருதுருத்தன.அந்த நேத்தில் நானொரு பார்வையாளன் மட்டுமே.

மூதூரில் மெல்லிசை மூதூர் 'ரூபி'இசைக்குழு
தொடர் - ௦5
அங்கு நின்ற சேவியர்அண்ணனுக்கும், காணி உத்தியோகத்தரான லீயொன் அண்ணனுக்கும் எங்களைத் தெரியும். எனதுதந்தையார் தலைமை ஆசிரியராகவும், ஜஸ்ரினின் தந்தையார் அங்கு பிரபலமான ஆங்கில ஆசிரியராகவும் கடமை புரிந்ததும் அதற்கான இன்னொரு காரணம்.

சேவியர் அண்ணனின் முகம் அந்தப் பெற்றோமெக்ஸ் ஒளியிலும் இறுக்கமாயிருந்தது. ஆகவே அவரை நெருங்க முடியாது. சாடையான 'சுப்பா'வில், இடைக்கிடை 'சாதுரியம் பேசாதடீ....என் சலங்கைக்குப் பதில் சொல்லடீ...' என்று பாடிக்கொண்டிருந்த லீயோன் அண்ணனைத் தேர்ந்தெடுத்து அவரருகில் நின்று கொண்டோம். எப்போதும் ஆங்கிலத்தில் உரையாடுமவர் come..come.. take a seat என்றார்.

சிறிது துணிவு வந்தது. 'ஜஸ்ரின் நல்லாப் பாடுவான்'என்று அவரது காதுக்குள் சொன்னேன். 'தம்பி சேவியர்,ஜஸ்ரின் நல்லாப் பாடுமாம், why don't you try' என்றார்.
'ஜெயராஜ்நல்லா பொங்கோஸ் விளையாடுவார்' என்று ஜஸ்ரின் என்னையும் சேர்த்திழுத்துக் கொண்டு போனான்.புத்தம்புதிய, பால்போல் வெள்ளை நிறமான போங்கோஸ் எனக்குத்தரப்பட்டது. தட்டிப் பார்த்தேன் அதிர்ந்தது. அன்பேவா திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல்யமான 'புதியவானம் புதிய பூமி' பாடலை அவன் முதன் முதலில் original வாத்தியத்தோடு பாடினான். ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும், நான்கைந்து பாடல்களின் பின் வாத்தியம் என்வசமானது.இப்படியே 'பல்லவன் பல்லவி பாடட்டுமே', 'ராஜாவின் பார்வை', 'என்ன உறவோ என்ன பிரிவோ', 'சிலையெடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு' என, பொங்கோஸ் வாத்தியம் பெரு மளவில் உபயோகிக்கப் பட்ட பாடல்களை அவன்பாட, உச்சஸ் தாயியில் ஒலிக்கும் பாடல்களைத் தேர்ந்தெடுத்து யேசுதாசன் பாடினார்.சேவியரண்ணன் தனது மகுடி வாத்தியமான மௌத்ஓகனில் மாயாஜாலம் புரிந்தார்.

அண்டை அயலவர்களாலும், முதலாவது திரைப்படக் காட்சி முடிந்து வந்தவர்களாலும் அந்த இடம் நிரம்பிவழிய, இரவு பதினொரு மணிவரை அங்கு இசை நீடித்தது. அதனைத் தொடர்ந்து பகலிலும் இது நீடிக்க, தொப்புளுக்கு மேல் நீளக்காற்சட்டையணிந்த பல் சற்று மிதந்த ஒருவர் 'டொலக்' வாத்தியத்துடன் ஒருநாள் அங்கு வந்தார்.

மூதூரில் மெல்லிசை மூதூர் 'ரூபி'இசைக்குழு
தொடர் - ௦6
பார்ப்தற்குக் கோமாளி போலிருந்த அந்த மனிதர்,'யாராவது சிங்களம் பேச முடியுமா?' என்று கேட்டார். சேவியரண்ணனைக் காட்டினோம். தான் நிமல் என்றும்,ஐம்பத்தெட்டாம் கொலனியில் சிங்கள ஆசிரியராய்க் கடமை பார்ப்பதாகவும், தமிழ்ப் பாடல்களிலும், டோலக் வாத்தியத்திலும் தனக்குள்ள ஈடுபாட்டைச்சொல்லி இசைக் குழுவோடு சேர்ந்து இசைக்க தனக்குள்ள விருப்பத்தையும் சொன்னார். அந்த டோலக் வாத்தியத்தை சுதிசுத்தமாக வாசித்த எவரையும் நான் கண்டதில்லை. 'நானொரு குழந்தை நீயொரு குழந்தை' என்கிற பாடலில் ஒலிப்பதெல்லாம் 'பொங்கோஸ்' வாத்தியம்தான்.ஆனால் 'பவளக்கொடியேவா, சிந்தாமணியே வா' என்கிற
பகுதியில் மட்டும் 'கோல்' என்கிற வாத்தியம் ஒலிக்கும்.(கோல் வாத்தியம் கிட்டத்தட்ட டோலக் போன்றதுதான். ஆனால் அதன் வலப் பக்கம் டோலக்கினுடையதை விடச் சிறிதாயிருக்கும்.மண்ணால் செய்யப்பட்ட கோல் வாத்தியமுமுண்டு)

அந்தப் பாடலுக்கு அவர் எவ்வாறு வாசிக்கப் போகிறார் என்பதை அறிய ஜேசுதாசன் அவர்களைப் பாடவைத்தோம். 'பவளக்கொடியேவா....'என்கிற அந்தக் கட்டத்தில் அந்தமனிதர் வாசித்தார் ஒரு வாசிப்பு.அசந்து போனோம். அசல் வாசிப்புக் கும் அதற்கும் வித்தியாசமே இருக்கவில்லை.
அதன் பிறகு சேவியர் அண்ணனுக்குத் தெம்பு வந்துவிட்டது. யேசுதாசன், ஜெகராஜ சிங்கம்,ஜஸ்ரின் பாட்டு, நான் பொங்கோஸ், நிமல் மாஸ்டர் டொலக், சேவியரண்ணன் ஏனைய வாத்தியங்கள். உருவானது ரூபி.

67ம் ஆண்டு ஒரு ஜூலை மாதமென்று நினைக்கிறேன், புனித அந்தோனியார் பாடசாலையின் கலை விழா ஒன்றின் இறுதி நிகழ்வாக எங்கள் ரூபி, மெல்லிசை நிகழ்ச்சி யொன்றை வழங்க வேண்டுமென்று கேட்டார்கள். சம்மதித்தோம். இரவு பகலாகப் பயிற்சி.பாடல்களில் வரும் interludes, preludes இசைத்தட்டில் உள்ளபடி அமையவேண்டுமென்பதில் சேவியர் அண்ணன் மிகுந்த கவனமெடுத்தார். கிட்டத்தட்ட ஒரு மணித்தியால நிகழ்வுக்குரிய அத்தனை பாடல்களின் இடையிசைகளையும் இசைப்தற்கு சேவியரண்ணன் சிரமப்பட்டார்.

'காற்று வாங்கப் போனேன்' பாடலின் இடையிசையாக ஒலிக்கும் எக்கோடியன் ஒலி சரியாக வரவில்லை. பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டுப் பயிற்சி செய்வதற்கான வசதிகளும் அன்றில்லை.வானொலியில் கேட்பதோடு சரி. அதன்பிறகு என்னால் மௌனம் காக்க முடியவில்லை.

மூதூரில் மெல்லிசை மூதூர் 'ரூபி'இசைக்குழு
தொடர் - ௦7
அப்போது மிகப் பிரபலமாயிருந்த பாடல்தான் 'கலங்கரை விளக்கம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'காற்று வாங்கப் போனேன்.....'பாடல். இப்பாடலின் இரண்டாவது interludeஐ விட பியானோ எக்கோடியனில் வரும் முதலாவது interludeதான் பிரமாதம். இசைத்தட்டில் அந்த இசைத் துணுக்குக்குச் சொந்தக்காரர் மங்களமூர்த்தி என்பவர். பிரச்சனை இதுதான். ஆறு bar (24 அட்சர எண்ணிக்கை) வரை இடம் பெறும் இந்தஇசைத் துணுக்கில், நான்காவது barல் மிகத்துரிதமாக வாசிக்கப்படும் இறுதி இரண்டு அட்சரங்களும், ஆறாவது barல் அதே வேகத்தில் வாசிக்கப்படும் மூன்று chords களும் தான் சேவியர் அண்ணனுக்கிருந்த சிக்கல். அவர் களைத்துப்போன நேரம் பார்த்து அவரது hohner மெலோடிக்காவில் அந்த இசைத்துணுக்கை முழுமையாக வாசித்தேன் அவரால் நம்ப முடியவில்லை.கல்லூரியில் பியனோவில் grade முடித்த விடயத்தையும், எக்கோடியன் இசைத்ததையும் சொன்னேன். தன்னிட மிருந்த எக்கோடியனை என்னிடம் தந்து, இனி நீர்தான் எக்கோடியன் என்றார்.

நான் எக்கோடியனென்றால், போங்கோஸ் வாத்தியத்தை இசைப்பது யார்? பாடல்களை பிரித்தெடுத்தோம். வயலின்,மௌத்ஓகன்  இடம்பெறும் பாடல்களை அவருக்கு விட்டு விட்டு ஏனைய பாடல்களை நான் பொறுப்பு பெடுத்தேன்.பொங்கோஸ் வாத்தியத்தை நிமல் மாஸ்டர் பொறுப்பேற்றார்.
இப்போது பொறுப்பு முழுவதும் என் தலையில் சுமத்தப் பட்டது. கலங்கரை விளக்கம்' திரைப்படத்தில் இடம் பெற்ற 'பொன்னெழில் பூத்தது புது வானில்' super hit பாடலும் இடம்பெற வேண்டுமென்று அண்ணன் ஒற்றைக் காலில் நின்றார். இசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரங்கள், வாகனம் மூலம் அறிவிப்புகளாய் நாளாந்தம் நிகழ்ந்து கொண்டிருந்தன.'பொன்னெழில் பூத்தது....' பாடலை வானொலியில் கேட்பதோடுசரி.எப்போதாவது அது ஒலிக்கும்.ஆனால் இசை நிகழ்ச்சிக்கு அண்மித்த காலங்களில் அதனைக்
கேட்க முடியவில்லை. திருகோணமலை நெல்சன் தியேட்டரில் 'கலங்கரை விளக்கம்'திரையிடப்பட்ட புதிது. மெலோடிக்காவையும், stave note எழுதக்கூடியவாறு வெள்ளைக் கடதாசியைத் தயாரித் து, மூதூரிலிருந்து சிரமப்பட்டு நெல்சன் தியேட்டர் செல்கிறோம்.குறிப்பிட்ட பாடல் எட்டு மணிக்குத்தான் ஒலிக்கும். பாடல்கள் மாத்திரம் வெளியே கேட்கும்படி ஏற்பாடு ஒன்றிருந்தது.
தெரு விளக்குக்குக் கீழே நிற்போம். ஜஸ்ரின் கடதாசியையும்,பென்சிலையும் தயாராக எனக்கு நேரே பிடித்துக் கொள்வான். பாடலில் மிக முக்கியமான இசை வடிவங்களை மெலோடிக்காவில் வாசித்த வேகத்தில் notes ஆக எழுதுதுவேன். (western notation எழுதவாசிக்கக் கற்றதன் அருமை அன்றுதான்
புரிந்தது) ஆறு நிமிடங்களில் பாடல் முடிந்து விடும்.மீண்டும் அந்தப் பாடலைக் கேட்கப் பதினொரு மணிவரை காத்திருக்க வேண்டும்.

தியேட்டருக்கு முன்னால் நீண்டு கிடந்த முற்றவெளியில் அமர்ந்து எழுதியதை வாசித்துப் பார்த்தேன். இன்னும் திருத்த வேண்டியிருந்தது.ஏதோ சாப்பிட்டோம். யோசித்தோம். இரவு பதினொரு மணிக்குப்பிறகு எவர் வீட்டைப் போய்த் தட்டுவது? எனக்கு நிறைய இடங்களிருந்தாலும் நானதை விரும்பவில்லை. பாடலை முதலில் முடிப்போம் என்று, இரண்டாது காட்சியின் போதும் நின்று பாடலை ஓரளவு முடித்தெடுத்தால், அடுத்தென்ன செய்வதென்ற கவலை பிடித்துக்கொண்டது. அடுத்தநாள் காலை 6.30க்குத்தான் லோஞ்ச் புறப்படும். இடையேயுள்ள ஏழு மணித்தியாலங்களைக் கடத்துவ தெப்படி? அப்போது எனக்கு,நகர சபையின் முடிவுறாத கட்டடத்தின் நினைவு வருகிறது.அங்கே செல்கிறோம்.கட்டடம் பிச்சைக் காரர்களால் புழுத்து வழிகிறது. ஒரு தூணுக்கு அருகில் அமர்ந்து கொண்டோம். கட்டடத்தில் வெளிச்சமில்லை. தசைப் பிடுங்கல் தாங்காத சிலர், பிச்சைக்காரிகளைத் தள்ளிக்கொண்டு கடற்கரைப்பக்கமாகப் போனார்கள்.
இரகசியமாக் குடும்பம் நடத்துவதாக எண்ணிப் போர்த்திக்கொண்டு படுத்த இடத்திலே சிலர்மேய்ந்தார்கள். வெள்ளையும் சொள்ளையுமாயிருந்த
எங்களை ஒரு 'கம்பி மஸ்த்தான்' வளைத்துக்
கொண்டிருந்தான்.
ஐந்து மணித்தியாலங்கள் எப்படிக் கடந்த தென்றே தெரியாமல் கடந்தன எங்களுக்கு. நிலந்தெளிய, எதுவுமே நடக்காததுபோல் அனைவரும் எழுந்து தத்தமது வழியாகப்கலைந்துசெல்ல, நாங்களும் பிரிந்தோம் கனத்த இதயத்துடன்.

மூதூரில் மெல்லிசை மூதூர் 'ரூபி'இசைக்குழு
தொடர் - ௦8
நான் கற்ற மேற்கத்திய இசை, அதற்கான தொடர் வாய்ப்புகளின்றி மெல்லிசையை நோக்கித் திசை திரும்பிக் கொண்டிருந்ததை உணர்ந்தாலும், மூதூர் போன்ற பிரதேசங்களிலிருந்து கொண்டு வேறு எதைத்தான் செய்யமுடியும் என்னால் என்கிற நியாயமான கேள்விகளுமிருந்தன.
பின்னாட்களில், நான் கற்றதை யாருக்காவது கொடுக்கலா மென்று பலரிடம் முயற்சி செய்தும் பலனற்றுப் போயிற்று. ஆனால் ஒருவர் மாத்திரம் மேற்கத்திய இசைக் குறிப்புகளை எழுதப் பழகிக் கொண்டார்.

ஒருபாடலை maximum வழங்கவேண்டு மென்கிற வெறி எங்களை இதையெல்லாம் செய்யவைத்தன. அன்றையத் தேதியில் பிரபலமாயிருந்த, பொன்னெழில் பூத்தது, காற்றுவாங்கப் போனேன், ராஜாவின் பார்வையில்,o little flower, புதியவானம் புதிய பூமி, நானொரு குழந்தை நீயொரு குழந்தை, கொடுத்ததெல்லாம் கொடுத்தான், நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால், எங்கே நிம்மதி, அவள் பறந்து போனாளே போன்ற பாடல்களைத் தருவதற்கு ஆயத்தமாயிருந்தோம். அந்த நாளும் வந்தது. அந்தோனியார் பாடசாலையின் பிரதான கட்டடத்திற்குப் பக்கத்தில் மண்டபம் போன்ற அமைப்பிலிருந்த மண்டபத்தில்தான் நிகழ்ச்சி. மண்டபமும், அதன் சூழலும் மக்களால் நிரம்பி வழிந்தன. முதலில் பயம் எங்களைத் தொற்றிக் கொண்டாலும், எங்கள் பால்யவயதுத் தோழிகளைக் கண்டதும் உற்சாகம் பிறந்தது. வேளையும் வந்து, மேடை ஏறினோம். அத்தனை சனத்திரள் நடுவில் முதல் நிகழ்ச்சி. அந்தப் பதினெட்டு வயதில் ஒரு பாரிய நிகழ்ச்சி எனது கைகளில். நான் தானே பிரதம வாத்தியக்காரன். சுமார் 6" விட்டமான grampion ஒலிவாங்கி. அதனைச் சுற்றிநின்று இசைக்க மூன்றே மூன்றுபேர். பாடல்களகப் பாட மூவர். இன்று நினைத்தாலும் ஆச்சரியமாயிருக்கிறது, எப்படியது சாத்தியமானதென்று.

தினகரன் பத்திரிகை நிருபர் கபூர் நானா தனது flash நிழற்படக் கருவியோடு சுழன்று கொண்டிருந்தார். அவரெங்கள் குடும்பநண்பர். என்னை 'ராசன்' என்றுதான் அழைப்பார். என்னையும் நிழற்படம் எடுத்ததாகச் சொன்னாரே தவிர, அப்படியொரு நிழற்படத்தையும் நான் கண்டதில்லை. அந்தக்கூட்டத்துக்குள்,எனது மைத்துனனும், ஏ.எம்.ராஜாவின் குரலில் பாடும் திறன் கொண்டவனுமான 'மனோகரன் பெனாண்டோ'வும் நின்றிருக்கிறார். ( திருகோணமலை நகரசபை மண்டபத்தில், இலங்கை வானொலி ஒலிப்பதிவு  செய்து பின்னர் ஒலிபரப்பிய கலைக் கோலம்' நிகழ்ச்சியில், பத்மனாதன் இசையில் 'மின்னல் போலாகுமிந்த...' என்கிற ஏ.எம்.ராஜாவின் பாடலைப் பாடிப் புகழ் பெற்றவர்)

அவருக்கும் சேவியரண்ணனுக்கும் ஏழாம் பொருத்த மொன்றிருந்தது எனக்குத் தெரியும். ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும், சகலத் தையும் மறந்து,சேவியர்அண்ணனை அவர் கட்டித் தழுவி தனது மகிழ்ச்சியைத் தெரிவி த்தார். இசைக்கு இத்தனை வல்லபமா என்று ஆச்சரியப் பட்டேன்.

மூதூரில் மெல்லிசை மூதூர் 'ரூபி'இசைக்குழு
தொடர் - ௦9
நிர்வாணம் / நிப்பானம்
ஏதேன் தோட்டத்தில் விலக்கப் பட்ட கனியை உண்ட பின்னர் தான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தம் நிர்வாணம்/நிப்பாணம் புரிந்தது.ஆதாமின் கவட்டிடுக்கில் நீட்டிக்கொண்டு நின்ற தசைத் துண்டத்தை ஏவாளும், ஏவாளின் தனபாரத்தை, கவட்டிடுக்கை ஆதாமும் அப்போதுதான் உணர்கிறார்கள். காமமும், காமத்தோடு இணைந்து துன்பமும் உலகின் இரட்டைப் பிளைகளாய்ப் பிறப்பெடுக்கின்றன.

நன்னோக்கு, நற்கவனம் போன்ற எண்மார்க்கப் பாதைதான் நிர்வாணம்.இதைக் கண்டடடைந்தவர்தான் புத்த பகவான். கறுப்பணிந்தாலென்ன,சிவப்பணிந்தாலெ ன்ன,உடைகளுக்குள் ஒளிந்து கிடப்பது என்னவென்பது பரமரகசியம். மெய்யைப் பொய்யால் மேவுவதற்கு ஒப்பானதுதான் உடைகளால் நிர்வாணத்தை மறைக்க முனைவதும். மதவயப்பட்ட கருத்தாடல்கள், நிர்வாணத்தைத் தீண்டத்தகாத ஒன்றாகப் பிரகடனம் செய்கின்றன.
நிர்வாணமே மெய்.
'நிர்வாணம்' ஒரு தீண்டத்தகுந்த சொல்.

மூதூரில் மெல்லிசை மூதூர் 'ரூபி'இசைக்குழு
தொடர் - 10
P.S.மணி என்கிற மணியண்ணனை சேவிய ரண்ணனுக்கு ஏனோ பிடிக்கவில்லை. 'தொண்டைக்குள் பாடுகிறார்' என்றொரு காரணத்தைச் சொன்னாலும், என்னாலதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பாடல்களைக் கேட்டுக் கேட்டுப் பயிற்சி செய்வதற்கான 'கிராமபோன்' பெட்டியையும், இசைத்தட்டுக்களையும் தந்துதவ எங்களுக்கிருந்த ஒரே நபர் அவர்.அவரை இழக்க நான் விரும்பவில்லை.எப்படியோ சமாளித்துக்கொண்டேன்.

மணியண்ணன் விரும்பிப் பாடுவது, 'தொட்டுத் தொட்டுப் பாடவா' என்னும் இருகுரல்பாடல். தொடர்ந்தும் அந்தப் பாடலைத் தனியாகப் பாடியதாலுண்டான சலிப்போ என்னவோ, பேரிளம் பெண்ணொருத்தியை
அழைத்து வந்து அறிமுகம் செய்தார். அந்தப்பெண்ணைக் கண்டதும் பேயைக் கண்டவர் போலானார் சேவியரண்ணன்.
பாடச்சொன்னேன் பாடினார். தாளம் சுருதியெல்லாம் நன்றாயிருந்தன. ஆனாலவர் பாடியவிதம்தான்பொருந்தவில்லை.இதையெல்லாம் மணியண்ணன் கணக்கில் எடுக்காது மிகுந்த 'சுதி'யோடு பாடிக்கொண்டிருந்
தார். அந்தப் பெண்ணை எப்படியும் பாடவைக்கவேண்டுமென்று நான் முயன்று கொண்டிருக்க, அவளைக் 'கட்' செய்துவிடும்படி சேவிய
ரண்ணன் நச்சரித்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண்ணும், வீதியில் என்னைக் காணும் வேளைகளிலெல்லாம் என்னை நிறுத்திவைத்துப் பாடிக்காட்டுவார். இறுதி வரை அப்பெண்ணை என்னால் மேடையேற்ற முடியவில்லை. சரசு என்பதுதான் அப்பெண்ணின் பெயர். கடற்கரைச்சேனையைச் சேர்ந்தவர்.

அந்தப் பெண் இல்லையென்று முடிவான பிறகு மணியண்ணன் ஹிந்திப்பாடல் பாடப்போவதாகச் சொல்லி, அந்தக் காலகட்டத்தில் மிகப் பிரபலமாயிருந்த 'ஆராதனா' திரைப்படப் பாடலான 'மேரே சப்புனம் கீ'
என்கிற பாடலோடு வந்தார்.தப்புத் தப்பாகஹிந்தியில் பாடினார். ஹிந்திதானே என்றுபேசாமல் விட்டுவிட்டோம்.

பள்ளிக்குடியிருப்பு, கொம்பு விளையாட்டிற்கு பேர்போன ஊர்.அதன் இறுதிநாள் திருவிழாவன்று ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஒழுங்கு செய்து, அவர் செலவில் எங்களை அழைத்துச் சென்றார். மேடைக்கு முன்னால் நாங்கள்
கண்டிராத சனத்திரள். மணியண்ணன் sun glass சகிதம் புதியதொரு 'கெற்றப்'பில், பெண்களைக் கண்டதும் கிறுகியடித்துக்கொண்டு நின்றார்.(இரவில் sun glass அணிந்த முதற் பிரகிருதி அவராகத்தானிருக்கும்)

மேடையில் ஒலிவாங்கியைச் சூழ நாங்கள். அவரது பாடலுக்குரிய நேரமும் வந்தது. 'இப்பொழுது பாடவிருப்பது.....உங்கள் அபிமானத்திற்குரிய பீ...எஸ்..ம...ணீ...'என்று அவரே அவரை அறிமுகம் செய்தார்.
முன்னிசையின் பன்னிரண்டு barரையும், எக்கோடியனிலிருந்த gadjetsஐ மாற்றி மாற்றி நான் இசைத்தேன். அடுத்து வரும் மூன்றரை barஐயும் மௌத் ஓகனில் சேவியரண்ணன் இசைக்க,
'ஏ...ஏகெகே...அஅஅஅஆ என்று மிகச்சரியாக ஹம்மிங்கை முடித்து
மணியண்ணன், 'மேரே சப்புனம் கீ' என்று பாடுவதற்குப் பதிலாக, அதே படத்தின் இன்னுமொரு பிரபலமான 'ரூப்புத்தேரா... மஸ்த்தானா..'என்று தொடங்கினாரே பார்க்லாம். எல்லோரும் குழம்பிப் போனார்கள், என்னைத் தவிர.'வெடுக்'கென்று சேவியரண்ணன் கோபத்தில் மேடையை விட்டு இறங்க, அவரைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக கழரத் தொடங்கினார்கள். தாள வாத்தியம் இசைத்துக் கொண்டிருந்த நிமல் மாஸ்டரை நடையை மாற்றித் தொடரச் சொல்லிவிட்டு, 'பாட்டை மாற்றிப் பாடுகிறீர்கள்' என்று மணியண்ணனின் காதில் போட்டுத் தொடர்ந்தும் அதே பாடலின் முதற் சரணத்தை மட்டும்பாடச்சொன்னேன். அந்தப் பாடலிலும் எக்கோடியன் இடம்பெறுவதால் எனக்கும் இசைப்பதில் சிரமம் இருக்கவில்லை. இரண்டுமே minor scale பாடல்கள்.

பாடிக்கொண்டிருந்த பாடலின் முதற் சரணம் முடிந்ததும், மீண்டும் 'மேரே சப்புன' த்திற்கு இசையை மாற்றினேன்.மணியண்ணனும் கறுப்புக் கண்ணாடியோடு புத்தகத்தைப் பார்த்துப் பாடி முடித்தார்.அன்றது ஒரு remix
போல் வித்தியாசமாய் அமைந்தது. சேவியரண்ணனால் நம்பவே முடியவில்லை.
எந்தவிதக் கவலையுமின்றி, அதே கறுப்புக் கண்ணாடியோடு மணியண்ணன் கூட்டத் தின் நடுவே உலாவிக்கொண்டிருந்தார்.

மூதூரில் மெல்லிசை மூதூர் 'ரூபி'இசைக்குழு
தொடர் - 11
பள்ளிக்குடியிருப்பு நிகழ்ச்சியின் பின்னர் மணியண்ணனை நாங்கள் தவிர்த்தோம். அவரும் தனது 'கிராம்போனை'யும் கொண்டு சென்றுவிட்டார்.பயிற்சி செய்வதற்கு சில மமாயிருந்தது. சேவியரண்ணன் திருமணமான பின்னர் பக்கீர்த்தம்பி ஹாஜியாரின் MPT Storesக்கு எதிரிலிருந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்தார். நிழ்ச்சிகளில் lead guitarஐச் சேர்த்துக் கொள்ளத் தீர்மானித்து, ஜஸ்ரின் அந்தப்பயிற்சியில் இறங்கினான்.மெல்ல மெல்ல டொமினிக்கும் 'ரிதம் கிற்றார்' இசைக்கப் பழகினான்.பயிற்சிகளை ஜஸ்ரினின் வீட்டுமுன் விறாந்தையில் செய்தோம். அங்கும் இரவு ஒன்பது மணிவரை சனத்திரள்தான்.

சம்பூரிலிருந்து தியாகராஜாவும்,கட்டைபறிச்சானிலிருந்து சுகுணசேகரமும் எங்களோடு இணைந்தார்கள். இவர்கள் எல்லோருமே TMSன் பாடல்களைத்தான் பாடினார்கள். வித்தியாசமான குரலொன்றைத் தேடிக்கொண்டிருந்தபோது சிக்கியவர்தான் தற்போது வைத்தியக்கலாநிதியாயிருக்கும் A.J.ஜெமீல். K.J.யேசுதாசின் குரல் எங்கள் மண்ணிலும் ஒலிக்கத் தொடங்கியது. 'என்னை விட்டால் யாருமில்லை' என்கிற பாடலோடுதான் அவர் எங்களுக்கு அறிமுகமானார். பயிற்சிகளின் போது பார்வையாளர்களாயிருந்தவர்களில், அவரது சகோதரர்களான 'மூதூரின் நகைச்சுவை மன்னன் சாஹிர்' ,நிவாஸ்,ரெயிலர் ஜப்பார், போன்றவர்கள் மறக்க முடியாதவர்கள்.  P.B. ஸ்ரீநிவாசின்ரசிகராக சாகிரும், A.M.ராஜாவின் ரசிகராக நிவாசும், TMSசின் அதே கணீரென்ற குரலில் பாடவல்லவராக ஜப்பாரும் மிளிர்ந்தனர். ஜபாரை இலங்கை வானொலியில் 'பொட்டு வைத்த முகமோ' பாடலைப் பாடவைத்தோம்.

அவ்வாறே நான் எழுதி இசையமைத்த பாடல் களை Dr.ஜெமீல் வானொலியிலும் மேடையிலும் பாடினார்.கவிஞர் K.K.மதிவதனமும் எங்களுக்காகப் பாடல்கள் சில எழுதினார். 'உத்தரதேவி யாழ்தேவி, ஓடுது எங்கள் சீதேவி' என்பதும் அவரது கவிதைதான். பின்னர் அப்பாடலைப் பிரபலமான ஒருவரும் பாடியிருந்தது ஞாபகம். ஈழத்து மெல்லிசைப் பாடல்களுக்கு அன்றே தாங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தோம்.
ஸ்ரனிஸ்லாஸ் லீயோ, அவரது சகோதரி 'மெக்டலின் லீயோ' ஆகிய இருவரும் எங்கள் நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுத்தவர்களில் சிலர்.மெக்டலின் லீயோதான் எங்கள் நிகழ்ச்சிகளில் பாடிய முதலாவது பெண்குரலுக்கு உரியவர்.ஸ்ரனி இப்போது தமிழ் நாட்டிலும், மெக்டலின் முல்லைத் தீவிலும் வசிப்பதாகக்

கேள்வி. இந்தக் காலகட்டத்தில் எங்களோடு வில்கண்டமாகவும் அதேவேளை சுவாரஸ்யமாகவும் இணைந்து கொண்ட இன்னொரு பேர்வழிதான் 'திலக் கமகே'.

மூதூரில் மெல்லிசை மூதூர் 'ரூபி'இசைக்குழு
தொடர் - 12
நீதி மன்றம் அமைந்திருக்கும் வீதியில் 'அல்பேட் பேக்கரி' என்றொரு வெதுப்பகமிருந்தது.இங்கு றோஸ்பாண் (toasted bread) இங்கு பிரபலம்.அந்தளவு உருசியானதொரு றோஸ்பாணை எங்குமே காணமுடியாது. அத்துடன், நான்கு அங்குல விட்டமானதும் நெஸ்ற்றோமோல்ட் சுவைகலந்ததுமான பிஸ்கட் இதன் இன்னுமொரு விசேடம். எங்களிடம் கையில் காசில்லாத காலமது. அந்த வழியால் செல்ல நேரும் பொழுதெல்லாம் பேக்கரிக்குச் சென்று பிஸ்கட்டின் மணத்தை மட்டும் துகர்ந்து விட்டு வருவோம். பிஸ்கட் ஒன்றின் விலை பத்துச் சதம். (இன்றைய இருபது ரூபாய்)

இந்த வெதுப்பகத்தில்தான் 'திலக் கமகே' பிரதான தீன்பண்டத் தயாரிப்பாளரென்பது எங்களுக்குத் தெரியாது.தென் பகுதியைச்
சேர்ந்த அவரைக் கண்ட ஞாபகமில்லை எங்களுக்கு அங்கு.  பயிற்சி செய்து கொண்டிருந்த ஒரு மாலை வேளை,5' உயரம், சுருள் முடி, தடித்த உதடு, திடகாத்திரமான உடலமைப்போடு வந்தவர் தன்னை அறிமுகம் செய்து, தனக்கு இசை மீதுள்ள ஆர்வத்தைதைத் தெரிவித்துவிட்டு பெரியதொரு பொட்டலத்தையும் தந்தார். விரித்துப் பார்த்தால், அதற்குள் நாங்கள்
ஏங்கியேங்கி வாயூறிய அதே பிஸ்கட். சுமார் ஐம்பது வரையிருக்கும். அவரைப் பாடச்சொ ல்லிவிட்டு,காய்ந்தமாடு கம்பில்விழுந்த கணக்கில் பிஸ்கட்டை மேயத்தொடங்கினோம். அவருக்குச் சுருதியும் வாய்க்கவில்லை, குரலும் அத்தனை தெளிவில்லை. பாடுவதை விட்டுவிட்டு 'பொங்கோஸ்' பழகலாமே என்று சொல்லியும், அவர் விடுவதாயில்லை. பாடுவதில்தான் தனக்கு ஆர்வமென்று ஒற்றைக்காலில் நின்றார்.

மீண்டும் ஒரு மணியமா?
என்று நண்பர்கள் கேட்கத் தொடங்கினார்கள். அட்சய பாத்திரமாச்சே, அதனை இழக்க நான் விரும்பவில்லை.அவருக்குத் தெரிந்த ஒரேயொரு ஹிந்திப் பாடலான, 'கத்திப்பட்டங்' திரைப்படத்தில் இடம்பெறும் 'ஏஷா...... மசுத்தானே' பாடலுக்கான பயிற்சிகளை வழங்கத் தொடங்கினேன். றோஸ்பாணும், பிஸ்கட்டும் வந்து குவிந்த வண்ணமிருந்தன. இதில் எதுவுமே சேவியர் அண்ணனுக்குத் தெரியாது.

கல்லாறு சிங்களப் பாடசாலை விளையாட்டு விழா இறுதியில் எங்கள் இசை நிகழ்ச்சி இடம்பெறவிருந்தது. இறுதிப் பயிற்சி சேவி யரண்ணன் வீட்டில். திலக்கை ஒரு காரணத் தோடுதான் இரவு எட்டு மணியளவில் வரச் சொன்னேன.ஆனாலவன்ஆறு மணிக்கே வந்து விட்டான். சேவியரண்ணனுக்கு அவனையும் ஏனோ பிடிக்கவில்லை. ஆளை அனுப்பிவிடு என்று சொல்லிக்கொண்டிருந் தார்.வேறு வழியில்லாமல், திலக்கிடம் சுமார் ஐநூறு அறுநூறு பிஸ்கட் சாப்பிட்ட கதையைச் சொன்னேன். விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, நீயாச்சு அவனாச்சு என்றார்.

மூதூரில் மெல்லிசை மூதூர் 'ரூபி'இசைக்குழு
தொடர் - 12
மூதூரில் மெல்லிசை -13 - (ரூபி)
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இவ்வாறு, மணியண்ணன்,திலக் கமகே போன்ற, இன்னும் நினைவுக்கு வராத எத்தனையோ சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.இவையெல்லாமே இசை மீது கொண்ட வெறிதான். ஆலங்கேணி போன்ற கிராமங்களுக்குச்
சென்று இசைக் கச்சேரிகளைச் செய்வது பெரும் சவாலானது.மூதூர்,(மகாவலிகங்கை கடலுடன் சங்கம்மாகும்) கங்கை, உப்பாறு போன்ற சிக்கலான துறைகளை, அத்தனை வாத்தியங்களோடும் கடந்து, குன்றுங்குழியுமான குறுகிய தார் வீதியால் சென்றதையெல்லாம் இன்று நினைத்தாலும் புல்லரிக்கிறது (இன்றும் கிண்ணியா வீதியில் சில இடங்களில் அந்தப் பழைய வீதியைக் காணலாம்)

கிண்ணியா என்ற போதுதான், இசை நிகழ்ச்சிகளுள் மறக்கமுடியாத நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது. ஒரு திருமண நிகழ்வுக்கு அழைத்திருந்தார்கள்.நாங்கள் அங்கு நினைத்துச் சென்றதொன்று, ஆனால் நடந்தது ஒன்று.
நாங்களங்கு காலையில் சென்றபோது, மணமகன் குதிரையில் ஊர்வலம் சென்றாகச் சொன்னார்கள்.ஆனாலவர் மாலையில்தான் திரும்பினார்.அவருக்கும் அவரது குதிரைக்கும் இனியில்லையென்ற சோடனை.

இரவானது.
சம்பிரமான சாப்பாடு. உண்ட களைப்பும், தூக்கக்கலக்கமும் எங்களில் சிலருக்கு. இரவு சுமார் பத்துமணியிருக்கும், எங்களை ஆயத்தமாகச் சொன்னார்கள். பின்னர்தான் தெரிந்தது, மணமகனுக்குப் பின்னால் நாங்கள் இசைத்துக்கொண்டே, மணமகள் வீடுவரை செல்ல வேண்டுமென்று.

தலையெழுத்து. மணமகன் சகலவித ஆடை அணிகலன்,சோடனைகளோடு 'அத்தர்' கமகமக்க வந்ததோடு மட்டுமல்ல, அந்த அமாவாசை இரவிலும் sun glass அணிந்திருந்தார். இரண்டு 'பெற்றுமெக்ஸ்'விளக்குகள் முன் செல்ல, வயல் வரப்புகளூடாக ஊர்வலம். மணமகன் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்ததால், வரப்புகளில் அவர் இடறிவிழாதிருக்க அவரை இரு பக்கங்களிலும் இருவர் தாங்கிக் கொண்டார்கள்.

எங்களுக்கு அது புதினமாயிருந்தது. ஆனால் நிமால் மாஸ்டருக்கோ, அது எங்களை அவமதிப்பதாயிருந்தது.  "ஹுத்திக்க புத்தாலா..விஹுலுவத கறன்னே அப்பித் எக்க..." என்றொரு சத்தம் போட்டார்.அந்த ஒரு சத்தத்தோடு எல்லாமே குழம்பிப்போயின.'சீனடிசிலம்படி' எனச்சிலர் எம்மோடு சட்டைக்கு வந்தார்கள். நாங்கள் திரும்பி விட்டோம்.

இவ்வாறான எத்தனையோ அனுபவங்கள். லீயோ மாஸ்டரின் முன் குந்திலிருந்து இரவு வேளைகளில் நாங்கள் இசைக்க, அதைக் கேட்டு ரசிப்பதற்கென்றே கூடும் ஒரு ரசிகர் கூட்டம்.இப்போது அந்தப் பகுதி களையிழந்து கிடக்கிறது. இலங்கை வானொலியில், 'தொழிலாளர்
வேளை'என்ற நிகழ்ச்சியில் எக்கோடியனில் வாத்திய இசையாக நானிசைத்த ' பளிங்கினாலொரு மாளிகை' என்ற திரைப்பாடல், நீண்ட நாட்களாக வானொலியில் இடை இசையாக ஒலித்துக்கொண்டிருந்தது.

எழுபத்தைந்தில் திடீரெனத் திருமணமாகி நானும் மட்டக்களப்பு நோக்கி இடம் பெயர, மூதூர் ரூபி இசைக் கழகமும் தன் மூச்சை நிறுத்திக்கொண்டது.
எனது ஐம்பது வருடத்துக்கு மேற்பட்ட அனுபவங்களை, அடுத்துவரும் தலைமுறைக்கு நினைவாக விட்டுச் செல்கிறேன். மூதூரிலிருந்து இனியுமொரு இசைக் கழகம் உருவாகுமென்பது சந்தேகமே.வேண்டுமெனில், 'ரூபி'என்றொரு இசைக் கழகம் எங்கள் ஊரிலும் இருந்தது என்று பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.அவ்வளவே. நன்றி. (முற்றும)

பிற்குறிப்பு:
1.இன்று பெரிதாகப் பேசப்படும் remix எனப்படும் இசை வடிவத்தை மேடையில் அன்றே அறிமுகம் செய்திருக்கிறோம்.
2.இன்று பரவலாகக் கேட்கக் கூடிய தனி வாத்திய இசையை அன்றே நாங்கள்
பரீட்சித்திருக்கிறோம்.
3. Electronic guitar இல்லாத அந்தக் காலகட்டத்தில், acoustic guitarல் பழைய தொலைபேசியின் receiverஐ இணைத்து electric guitar இசைத்திருக்கறோம்.
4. பைலா சக்கரவர்த்தி M.S.பெனாண்டோ கேட்டு வாங்கிப் பாடி, இசைத்தட்டு வடிவில் கொண்டுவருமளவுக்கு எங்களிடம் composing திறனிருந்தது.
5. வானொலியில் 'ஈழத்துப் பாடல்கள்' என்கிற வடிவம் வருவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னரே, மேடைகளில் எங்கள் பாடல்களை இடம்பெறச் செய்தோம்.

மூதூர் என்கிற சின்னஞ்சிறிய ஊர், இத்தனை சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கின்றதென்றால் அதனை உங்களால் நம்ப முடியாதுதான். அன்றந்தச் சாதனைகளை நிகழ்த்தியவர்களின் தலைமுறைகள், இன்றும் அந்த இசைப்பயணத்தில் தொடர்வது தான் அதற்கான சாட்சி.

Fr.ரஜீவன் (சேவியர் அண்ணனின் மகன்) சித்தார்த்தன் (எனது மகன்) ஜொனி ( ஜஸ்ரினின் மகன்) பிரகாஷ் (டொமினிக்கின் மகன்) இன்றும் இவர்கள் இசைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடுத்த தலைமுறையும் அதனைத் தொடருமென்பதற்கான அறிகுறிகளையும் காண்கிறேன்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages