கடந்த 30 வருட பயங்கரவாதம் எமது நாட்டு வரலாற்றிலும், நாட்டில் உள்ள குடிமக்களின் மனங்களிலும் மாறாத பல வடுக்களை திணித்துவிட்டு சென்றிருந்தை நாம் யாவரும் அறிந்துள்ளோம். ஆனாலும் 2009 இற்கு பிந்திய காலப்பகுதி இந்நாட்டு மக்களின் வாழ்வியலில் மற்றுமொரு புதிய பிறவியாக மாறியிருந்தது.
அதாவது பயங்கரவாத அச்ச சூழ்நிலைகளால் முடங்கிப்போயிருந்த இந்நாட்டின் பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம், சுதந்திரம் மற்றும் சுற்றுலா என அனைத்து துறைகளிலும் 2009 இற்கு பிந்திய காலமானது, இந்நாட்டின் வரலாற்றிலே புதுயுகம் ஒன்றை தோற்றுவித்திருந்தது. அன்றிருந்தே நாம் இந்நாட்டில் பூரண சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்தோம் . ஆனாலும் அந்த சுதந்திர காற்றானது, சமகாலத்தில் மீண்டும் நச்சுக் காற்றாக மாறக்கூடிய முழு சாத்தியப்பாடுகளும் தென்படுவதுடன், நச்சுக் காற்றாக மாற்றும் முஸ்தீபுகளும் நாடு தழுவிய ரீதியில் ஆங்காங்கே நிகழ்த்தப்பட்டு வருவதும் பெரும் துயரளிக்கின்றது.
அதிலும் குறிப்பாக அனைத்துமே முஸ்லிம் எதிர்ப்பு விரோதங்களாக வனையப்பட்டு, முஸ்லிம்கள் மீது வன்மங்களை விதைப்பதன் ஊடாகவே அந்த அமைதியின்மையை ஏற்படுத்தி இந்நாட்டின் இயல்பு நிலையை சீர்குலைக்கும் கைங்கரியத்தை செய்து வருகின்றார்கள் சில குழுக்களும், இனவாத விஷமிகளும். இவற்றையெல்லாம் ஆரம்பம் தொட்டு விளக்க வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கின்றேன். ஆனாலும் இப்பதிவில் இனிவரும் காலங்களில் எவ்வாறு எமது சமூகத்தை சிந்தனை ரீதியாக பலப்படுத்தலாம் என்பது பற்றி சிறிது ஆராய்கின்றேன்.


ஊடகம் எனும் தலைப்பை இங்கு நான் முதலில் எடுத்துக்கொண்டமைக்கான காரணத்தையும் தெளிவு படுத்த வேண்டும். அதாவது ஒரு சமூகத்தின் மீதான அடிமட்ட இருப்பு வரை ஒரு ஊடகத்தின் அணுகுமுறை எவ்வாறு செல்வாக்கு செலுத்தும் என்பதை கடந்த காலங்கள் எமக்கு ஆழமாக கற்பித்து சென்றிருந்தன . அதாவது கடந்த சில வாரங்களில் இந்த நாட்டில் முஸ்லிம் பயங்கரவாதம் ,இயக்கங்களின் அடிப்படைவாதம் , சில கும்பல்களின் இனவாதம் என்றெல்லாம் பல வார்த்தை பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும் மிக முக்கியமானதொரு பயங்கரவாதமும் மறைவில் கொடி கட்டிப்பறந்தது. அதுதான் ஊடகப் பயங்கரவாதம் எனும் பதமாகும்.
இந்த ஊடகப் பயங்கரவாதம் ஏனைய அனைத்து பயங்கரவாதங்களை காட்டிலும் அபாயமானதாகும். இதனை உலக அரசியல் வரலாற்று பின்னணிகளுடன் லாவகமாக ஒப்பிட்டு ஆய்ந்தறிய முடிகிறது. அமெரிக்காவின் ஊடகப் பயங்கரவாத பிரயோகத்தின் விளைவை முடுக்கிவிடப்பட்ட ஈராக்-ஈரானிய யுத்தம் வாயிலாக அச்சொட்டாக எடுத்து விளக்கலாம். அதாவது ஈரான் மீதான தனது கடும் போக்கினை ஈராக்கை கொண்டு திணிக்க முற்பட்ட அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஊடகங்களை கையாண்ட விதமானது ராஜதந்திரத்தின் உச்ச நிலையில் வைத்து நோக்க முடிகிறது.
செய்தித் தணிக்கைகள், செய்தித் திரிபுகள், செய்தி புனைதல்கள், தரவுச் சோடனைகள், போன்ற இன்னோரன்ன காரணிகளை கொண்டு பிராந்தியத்திலும், உலகளவிலும் ஈரானை பலவீனப் படுத்த முயன்றது அமெரிக்கா. இவ்வாறனதொரு நிகழ்வையே சமகால இலங்கையில் உள்ள பல சுதந்திர ஊடகங்கள் ஊடக தர்மத்தையும் மீறி செயற்பட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறான ஊடகப் பயங்கரவாதத்தை கைக்கொண்டு செயற்பட்ட பல இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் முதன்மை ஊடகங்களில் ஒன்றான மகாராஜா குழுமமும் பெரும் பங்கை ஆற்றியதுடன் சமூக மட்டத்தில் பாரிய விமர்சனத்திற்கும் உள்ளடக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் மகாராஜா ஊடக வலையமைப்பு நேரடியாக இனவாதப் போக்கில் செய்திகளை வெளியிட்டாலும் இன்னும் பல ஊடகங்கள் உண்மைகளை கூட வெளிக்கொணர கூட முற்படவில்லை என்பதே பெரிதும் கவலையளித்தது.
இவ்வாறாக ஊடகங்களின் பக்கச்சார்பான நடத்தைகள் ஏனைய சகோதர சமூக மட்டங்களில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சார்ந்து பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்தியதுடன், பல பாதக விளைவுகளையும் ஏற்படுத்தி இருந்தது. எனவே தான் ஒரு நிகழ்வு அல்லது அசம்பாவிதம் நடந்த பிற்பாடு அது சமூக மட்டங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களில் இந்த ஊடகங்களின் பங்களிப்பு முழுமையாக செல்வாக்கு செலுத்துவதை அவதானிக்க முடிகிறது.
எனவே தான் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் ஊடகங்கள் தொடர்பாக தங்களின் பார்வையை செலுத்த வேண்டிய கடப்பாடுள்ளது . இதனை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் முஸ்லிம்களுக்கென தனியொரு ஊடகத்தின் தேவைப்பாடானது சமூக நலன்களை சார்ந்து இன்றியமையாத ஒரு காரணியாக மாறியுள்ளது. ஆகையால் குறித்த யதார்த்தங்களை மையப்படுத்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் உள்ள தனவந்தர்களும், துறைசார் அனுபவசாலிகளும் எமது சமூகத்திற்கான தனித்துவமானதும், சுயாதீனமானதுமான ஊடகம் ஒன்றின் தேவை குறித்து தமது விஷேட கவனத்தை செலுத்த வேண்டும்.

அடுத்து எமை கடந்து சென்ற கசப்பான வன்முறைச் சம்பவங்களின் பின்னால் உள்ள அரசியல் அரங்கேற்றங்கள், அவற்றை முறியடிப்புச் செய்யும் வல்லமையுள்ள எமது சமூக மட்டத்திலான அரசியல் கலாசாரத்தின் சமகால பலம், பலவீனம் என்பன பற்றி ஆராய்கின்றேன்.
அதாவது நடந்து முடிந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பிற்பாடு அடுத்தடுத்து தொடர்ச்சியாக இடம்பெற்ற பாதுகாப்பு கெடுபிடிகள், அவசர கால சட்டமூலம், உடனடியாக நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள் மற்றும் வர்த்தமானி அறிவித்தல்கள் என்பவற்றுடன் இணைந்து திட்டமிட்டு நடாத்தப்பட்ட கலவரங்கள் என பலதரப்பட்ட சமூக இடர் காரணிகளின் போது எமது அரசியல்வாதிகள் செயற்பட்ட விதம் அவர்களின் அரசியல் அதிகார பிரயோகம் என்பவற்றை நோக்குமிடத்து, அவை மிகவும் அடிமட்ட செயற்பாடுகளாக அமைந்ததை பார்க்க முடிந்தது.
மேலும் ஒரே சமூகத்தின் மீது திட்டமிடப்பட்டு வீசப்பட்ட கோடாரிக் காம்புகளை அச் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வெவ்வேறு கட்சிகளை உடைய அரசியல் வாதிகள் எதிர்கொண்ட விதமானது ஒற்றுமையே இல்லாத ஒரு சமூகத்தின் செயற்பாடுகளை அச்சொட்டாக எடுத்தியம்பியது என்றே கூறலாம்.

உதாரணமாக ஆளுனர் ஹிஸ்புள்ளாவின் மீது எல்லையற்ற வீண் பலிகளும், அபாண்டங்களும் சுமத்தப்பட்ட போது அதனை எதிர்த்து பாராளுமன்றத்தில் ஹகீமோ அல்லது ரிசாதோ குரல் கொடுக்கவில்லை. அதேபோல் ரிஷாத் மீது எல்லையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும் மற்றய அரசியல் வாதிகள் அதனை சிறிதும் மறுதளிக்கவில்லை. இதனை முஸ்லிம் சமூகத்தின் சமகால கேவலமான அரசியல் கலாசாரத்திற்கு ஓர் சிறந்த உதாரணமாக கொள்ள முடியும்.
அதே போல் கலவரங்கள் உச்ச நிலையை அடைந்த பொழுது வீராப்பு பேசுகின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் கர்ச்சித்த போதிலும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் அத்தனையும் தொய்வின்றி நிகழ்த்தப்பட்டே தீர்ந்தது. அதனூடாக தங்களால் எதுவுமே செய்ய முடியாது என்ற செய்தியை அந்த நிகழ்வுகளின் போது அழகுற வெளிப்படுத்தியிருந்தார்கள் எமது தலைவர்கள். இதற்கான காரணம் சமகாலத்தில் முஸ்லிம் சமூகம் இழந்துவிட்ட பேரம்பேசும் சக்தியேயாகும்.
பாராளுமன்றத்தில் இருக்கும் 15 இற்குற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் பலம் கூட, 20 பேரளவில் இருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு இல்லை என்பதே கவலையளிக்கின்றது. அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந் நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் அளவிற்கு தங்களை மிகைப்படுத்தி கூறிக்கொண்டு திரிந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் இன்று சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியின் போது மெளனிகளாக இருந்ததன் உட்கருத்தை அவர்களின் கையாளாகாத அரசிலின் உள்ளடக்கம் என்றே உவமிக்க முடிகிறது.
மேலும் நாம் இட்ட எலும்புத் துண்டுகளுக்கு நாவை தொங்கவிடும் நாய்கள் எம்மை விட்டு ஒருபோதும் அகன்று செல்லாது எனும் கருத்தில் பேரினவாத அரசு பரீட்சயமடைந்து விட்டது என்றே கூற வேண்டும். இவர்கள் என்னதான் பேசினாலும் ஆட்சி யாருக்கு சாதகமாய் மாறப்போகிறதோ அவர்களின் பக்கம் இந்த வாலாட்டி நாய்கள் இருக்கும் என்பதை சிங்கள அரசு புரிந்து கொண்டதன் விளைவே இவர்களின் கோரிக்கைகளை புறக்கணித்து தங்களின் மனம் போன போக்கில் ஆட்சியும் நடாத்தி வருகின்றது.
அடுத்து பேருவளையில் ஆரம்பித்த அவர்களின் பார்வையிடுதல் , நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம் என்று ஆற்றுப்படுத்தல், மற்றும் இதற்கான நஷ்டஈடுகள் பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி வழங்குதல் போன்ற பூச்சாண்டிகள் இன்று குருநாகல், மினுவாங்கொட வரையிலும் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்தே வருகின்றது.
ஆக மொத்தத்தில் ஒருமைப்பட்ட அரசியல் கலாசாரம் ஒன்றின் தேவைப்பாடு முஸ்லிம் சமூக மட்டங்களில் ஓங்கியிருக்கின்ற போதிலும் அதற்காக இந்த சமூகம் ஒற்றுமைப்படும் நிலையில் தற்காலத்தில் இருக்கின்றதா என்ற கேள்வியும் எழுகிறது. ஆனாலும் அதற்கான சாத்தியப்பாடுகள் சமகாலத்தில் குறைந்த நிகழ்தகவிலே காணப்படுகின்றன. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

நடந்து முடிந்த சம்பவங்களையும் அவற்றுக்கான காரண காரியங்களையும் ஆய்கின்ற போது பல சாத்தியப்பாடான காரணங்களை அடையாளப்படுத்த முடிகிற போதிலும் சில காரணிகள் முன்னுரிமை பெறுகின்றன. அஅவ்வாறான மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று தான் ஏனைய மதத்தவர்களின் உள்ளங்களில் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் பொதிந்துள்ள தவறான புரிதல்களும் எண்ணங்களுமாகும். இவற்றின் தாக்கமே இன்று கிழக்கில் தமிழர்களில் சிலரும், மேற்கில் உள்ள பல சிங்களவர்களில் சிலரும் முஸ்லிம்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது.
இதனை வேறு விதமாக விளக்குவதாயின் அன்மையில் அத தெரன தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அம்ஹர் மெளலவி அவர்கள் பங்குபற்றி வழங்கிய செவ்வியின் போது அவர் முஸ்லிம்கள் தொடர்பாக முன்வைத்த ஆக்கபூர்வமான கருத்துக்கள் பல மாற்று மத சகோதரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஆகவே அவ்வாறு அவருடைய கருத்துக்களை நன்கு புரிந்து கொண்ட நபர்களின் உள்ளங்கள் உண்மைகளை ஏற்றுக்கொண்டது மாத்திரமன்றி அவர்களின் உள்ளங்களில் இருந்த கசடுகளையும் நீக்க காரணமாக அமைந்தது. இதனை நாம் சமூக வலைத்தளங்கள் ஊடாக தெளிவாக அறிந்து கொண்டோம்.
ஆனாலும் இன்றய காலகட்டத்தில் எமது நாட்டில் சரீஆ என்றால் அது பயங்கரவாதத்தின் மறுபெயர் என்று பொருள் கோடும் தமிழ் பேசும் மக்களும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியான கிழக்கு மாகாணத்தில் அதிகமாக இருப்பதை அன்மைய ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பாக எழுந்த எதிர்ப்பலைகள் சுட்டிக்காட்டி இருந்தது.
ஆகவே இங்கு எமது மார்க்கம் சார்ந்து எமது கொள்கைகளையும், சட்டங்களையும் மாற்றுமத சமூகங்கள் மத்தில் கொண்டுசெல்லும் பணியில் நாம் அடிமட்ட நிலையில் இருக்கின்றோம் என்பது கசப்பானதோர் உண்மையாகும். இதனுடன் ஒப்பிட்டு விவாதிக்க முற்படும் பட்சத்தில் எமது மார்க்கத்தை பூர்ணமாக கற்று அவற்றை வகைப்படுத்தி, நெறிப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டுசெல்லவென தங்களை முழுநேரம் அர்ப்பணித்த உலமாக்களை சாடவே முற்படுகிறது எனது மனம்.
அதாவது இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையானது நாட்டில் பல பாகங்களிலும் தமக்கான பிரதிநிதிகளை நியமித்திருக்கின்ற அதே நேரம் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்கின்ற போது வெறும் பூச்சியங்களே விடையாக கிடைக்கின்றது. அவ்வாறு மந்த நிலையில் வீடுகளில் அடங்கி கிடப்பவர்கள் நாட்டில் ஒரு இனமுறுகல் ஏற்படும் போது விகாரைகளில் கொடி கட்டுவதும், பூந்தட்டு ஏந்துவதும், தனசல் கொடுப்பதும் மற்றும் பள்ளிகளில் இன நல்லிணக்கம் எனும் பெயரில் வெசாக் கூடு கட்டிவதும் எந்தவகையில் நியாயமாகும்? அதனை கோழைத்தனத்தின் உச்சம் என்றே பொருள் கொள்ள முடியும்.
ஆகவே பல்லின சகமத சமூகங்கள் மத்தியில் எமது மார்க்கத்தை பற்றிய தெளிவை ஏற்படுத்த உலமாக்கள் களத்தில் இறங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. சமகாலத்தில் பல அம்ஹர் மெளலவிகளை இச் சமூகம் வேண்டிநிற்கின்றது. ஜிஹாதிற்கும், ஷரீஆவிற்கும்,மத்ரசாக்களுக்கும் அவர்கள் வழங்குகின்ற பெயர்களை எமது காதுகளால் கேற்க முடியாமல் உள்ளது ஆனாலும் அவற்றை தெளிவு படுத்த வேண்டிய பணி முழுவதும் உங்கள் தலைகளிலே சாட்டப்பட்டுள்ளது.
சமூகத்திற்காக தங்களை அர்ப்பணித்தவரகாளான நீங்கள் அமைதியான காலங்களிலும் எமது மார்கத்தின் அடையாளங்களை அன்னிய மதத்தவரகள் மத்தில் விதைக்க பாடுபடவேண்டும். இதுவே இந்நாட்டில் நீங்கள் புரியும் அதியுன்னத ஜிஹாத்தாகும். இதற்காக கலப்பு சமூகங்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள மிம்பர் மேடைகள் திட்டமிட்டு தங்கள் பணியை ஆற்ற முன்வர வேண்டும். சகோதர மொழியில் தேர்ச்சிபெற்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள மொழியில் குத்துபாக்கள் நிகழத்தப்படல் வேண்டும்.

குருநாகல் தொட்டு மினுவாங்கொட ஈராக இடம்பெற்ற குண்டர்களின் காட்டேறித்தடமான வன்செயல்கள்களின் போது, கைகட்டி பார்த்து கொண்டிருந்த எமது சமூகம் பேரழிவுகளின் பின்னால் நடந்து கொண்ட விதம் இன்னும் இன்னும் கவலையளிப்பதாகவே உள்ளது அதாவது கோழைத்தனத்தின் வெளிப்பாட்டால் நல்லிணக்கம் எனும் பெயரில் எவ்வளவு தாழ்ந்த போக முடியுமோ அந்தளவிற்கு தாழ்ந்து போனார்கள். அதற்கு அவர்கள் வைத்த பெயர் எமது எஞ்சிய உடமைகளையும் , எமது சொத்துகளையும் மற்றும் உயிர்களையும் காக்கவே நாங்கள் நாடுகின்றோம் என்றும் கூறியிருந்தார்கள்.
அந்த செயல்களின் மூலம் நபி(ஸல்) அவர்களின் வார்த்தையை முழவதுமாக உண்மைப்படுத்தியும் இருந்தார்கள். அதாவது முஸ்லிம்கள் ஒருகாலத்தில் அதிகமாக இருப்பார்கள் ஆனாலும் உலகத்தின் மீதான ஆசை அவர்களை எதிரிகளை எதிர்த்து போராடுவதை விட்டும் கோழைகளாக மாற்றி விடும். நிச்சயமாக அவர்கள் பொறுமை காத்ததிலும் நியாயங்கள் இல்லாமல் இல்லை என்றபோதிலும் அவர்களின் பிற்பட்ட செயல்கள் தங்களை காக்க உயிர் பிச்சை கேட்பது போலும் அமைந்ததானது பெரிதும் வருத்தமளிக்கிறது.
இவ்வாறே இன்னும் பல காரணிகளை அடையாளப்படுத்த முடியும் அதாவது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு போன்றவற்றின் தீர்க்கதரிசனமின்றிய மந்தமான போக்குகள், எழுந்தவமாக உருவாகின்ற சில்லறை மார்க்க அமைப்புகள் தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அசட்டை போக்குகள், முஸ்லிம் அரசியலை விட்டும் தூரமான மார்க்க அறிஞர்கள், மத்ரசாக்கள் தொடர்பான வெளிப்படை தன்மை கொண்ட கொள்கை வகுப்புகள், இஸ்லாமிய கல்வியியல் பற்றிய தன்னிச்சையான தீர்மானங்கள், மார்க்க அமைப்புகளை வரையறை செய்யாத உலமாக்கள் சபை என பட்டியலிட முடியுமாயினும் கட்டுரையின் நீளம் கருதி மற்றுமோர் கட்டுரையில் விளக்கலாம் என நினைக்கின்றேன்.
No comments:
Post a Comment