
அம்ஹர் மௌலவி அவர்களின் சமகால இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்தான தொலைக்காட்சி உரையாடல் நேர்மறை விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க ஒவ்வொரு இஸ்லாமியனும் தான் என்னசெய்யவேண்டும் என்ற அடிப்படை எண்ணக்கருவை முதன்முதலில் பொதுவெளியில் நடைமுறை ரீதியான வழிகாட்டலை முன்வைத்துள்ளார் என்று எனக்கு தோன்றுகின்றது.
முட்டைகளிற்கும் இருந்து வெளிவராமலே நாம் உலகின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இயக்கரீதியாக பிரச்சினைகளையும் எமது கருத்து வேறுபாடுகளையும் குறித்து ஒருநிலைப்புள்ளியில் தேங்கிய இன்றைய சமூகத்தின் அறிவுசார் சந்ததிக்கு மேற்படி நிகழ்ச்சியில் மிகப்பெரும் படிப்பினை உள்ளதாக தெளிவாகின்றது.
இஸ்லாமிய சிந்தனையை இஸ்லாமிய சமூகத்திற்குள் மட்டும் தர்கித்து தெளிவுபெறும் எமது மரபுநிலை மாற்றங்கள் குறித்தும் அது எங்கே, எப்படி, எவ்வாறு யாருக்கு மத்தியில் முன்வைக்கவேண்டும் என்பது பற்றியும் நாம் இன்று புரிந்துகொண்டு இருப்போம்.
"நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்" (அல்-குர்ஆன் 42:48)
Written by- Affan Abdul Haleem
ஆற்றொழுக்கான சிங்களம், நிறைய தகவல்களை அறிந்து வைத்திருந்தமை, உணர்ச்சி வசப்படாமை என்பவற்றுடன் இத்தகைய ஒரு நிகழ்ச்சியை நேரடியாக எதிர்கொள்ளும் தைரியம் என்பவற்றுக்காக அம்ஹர் மௌலவி பாராட்டப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. மட்டுமல்ல, இதுகால வரையில் சிங்கள மீடியாக்களில் முஸ்லிம் சமூகத்தின் கூட்டு உளவியலை பிரதிபலித்தவர்களோடு ஒப்பிடுகையில் பலரையும் விட ஒப்பீட்டளவில் அவர் சிறப்பாக செயற்பட்டதையும் கூறித்தான் ஆக வேண்டும். அல்லாஹுத் தஆலா அவரது அறிவிலும் ஆயுளிலும் பரக்கத் செய்ய வேண்டும் என்று உளப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
ஒரு நிகழ்வு நடைபெறும் போது அதனை உணர்வுபூர்வமாக அணுகும் ஒரு சாராரும் அறிவுபூர்வமாக அணுகும் ஒரு சாராரும் உருவாவது தவிர்க்க முடியாத ஒன்று. இவ்விரண்டு அணுகுமுறைகளும் தேவையானவை என்பதில் சந்தேகமில்லை. உணர்வுபூர்வமான அணுகலானது பெரும்பாலும் அதன் சாதகங்களை மாத்திரம், அல்லது பாதகங்களை மாத்திரம் பார்த்து குறித்த நிகழ்வு தொடர்பிலான தீவிர நிலைப்பாடொன்றுக்கு வரும் வகையிலேயே காணப்படும். சாதகங்களை வைத்து கொண்டாடித் தீர்ப்பது அல்லது பாதகங்களை முன்னிறுத்தி முழுமையாக ஒதுக்கித் தள்ளுவது ஆகிய இரண்டும் தற்காலிக மகிழ்ச்சியையும் தற்காலிக எரிச்சலையும் தவிர சமூகத்துக்கு வேறு எதனையும் பெரிதாக தரப்போவதில்லை.
இதற்கு மாற்றமாக அறிவுபூர்வமாக (விமர்சனபூர்வமாக) ஒன்றை அணுகுவதானது, குறித்த விஷயம் தொடர்பில் எதிர்காலத்தை இன்னும் செம்மைப்படுத்திக் கொள்வதற்கான வாயில்களைத் திறந்து விடுகிறது. கொண்டாடித் தீர்ப்பதில் உள்ள மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் மிகக் குறைந்த ஆயுளைக் கொண்டவை. மாற்றமாக, அறிவுபூர்வமாக அணுகி குறித்த நிகழ்வை கவனமாக பகுப்பாய்வு செய்து அதில் சறுக்கிய இடங்களைக் கண்டறியும் போது எதிர்காலத்தை இன்னும் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதற்கான சாத்தியப்பாடு அதிகரிக்கின்றது. மருந்தின் கசப்பைப் போன்றதுதான் விமர்சனத்தின் வலியும். குடிக்கும் போது கசப்பும் அதன் பின்னர் நிவாரணமும் இருப்பதைப் போல, விமர்சிக்கும் போது வலியும் அதிலிருந்து கற்றுக்கொள்ளும் போது தீர்வும் இருப்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. அதனால்தான் பல அறிஞர்களும் சமூகத்தின் பொதுப்புத்தியை ‘நோயாளி’ என்று வர்ணித்திருக்கிறார்கள் போலும்!
எந்த விஷயத்திலும் நடைமுறை யதார்த்தம் (Practical Reality) கோட்பாட்டு யதார்த்தம் (Conceptual Reality) என்று இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்றின் நடைமுறை யதார்த்தம் எல்லோரது பார்வையிலும் படும். ஒருவரது பார்வை எந்தளவு அதிகமாக நடைமுறை யதார்த்தங்கள் மீது படுகிறதோ அந்தளவுக்கு அவரது தகவலறிவு அதிகமாக இருக்கும். மறுபக்கத்தில் இந்த நடைமுறை யதார்த்தங்களின் பின்னால் தொழிற்படுகின்ற கோட்பாட்டு யதார்த்தங்களில் ஒருவனது பார்வை பட வேண்டுமாயின் அவனது அறிவுத் தேடலும், பகுப்பாய்வுத் திறனும் இன்னுமின்னும் விசாலிக்க வேண்டும். அவ்வாறு கோட்பாட்டு யதார்த்தங்கள் மீது ஒருவரது பார்வை அதிகமாக விழுகின்ற போது அவரது அறிவானது தகவல்களை ஞாபகத்தில் வைத்திருத்தல் என்ற கட்டத்திலிருந்து... புரிந்துகொள்ளல், பிரயோகித்தல், பகுப்பாய்வு செய்தல், மதிப்பிடுதல், புதிய அறிவைப் பிரசவித்தல் என்ற கட்டங்களை நோக்கி நகரும்.
ஒரு சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள் இதில் எந்தக் கட்டத்தில் இருக்கின்றனரோ, அந்தக் கட்டத்தைத்தான் அந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் பிரதிபலிப்பார்கள் என்பதும், அந்தக் கட்டத்தின் சட்டகத்துக்குள் நின்றுதான் சமூகம் அது பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளும் என்பதும் இயல்பாகும்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் அதன் அண்மைக்கால அனுபவங்கள் அதனை நடைமுறை யதார்த்தங்களுடன் அதிகமாகவே பிணைத்திருக்கின்றன. எனவே சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்பவர் யாராக இருப்பினும் அவர் இயல்பாகவே நடைமுறை யதார்த்தங்களில் நின்று பிரச்சினைகளை அணுகுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. பொதுப் புத்தியை பிரதிபலிப்பதானது பொதுப் புத்தியை கேள்விக்குட்படுத்துவதை விட இலகுவானதும் பாதுகாப்பானதுமாகும். அம்ஹர் மௌலவியல்ல - அரசியல்வாதிகளாகட்டும், சமூக செயற்பாட்டாளர்களாகட்டும், இஸ்லாமிய இயக்கங்களாகட்டும் - யார் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்தாலும் வித்தியாசமான அளவுகளில் வித்தியாசமான வார்த்தைகளில் பொதுப்புத்தியை பிரதிபலிப்பதை அனைவரும் இயல்பாக நடைமுறைப்படுத்துவர். இதனைத்தான் ‘ஜனரஞ்சகம்’ (Populism) என்று அழைக்கிறோம்.
இன்றைய உலக ஒழுங்கை நிர்வகிக்கும் கோட்பாட்டு யதார்த்தங்களில் நின்று நடைமுறை யதார்த்தங்களை புரிந்துகொள்ள முயற்சிக்கும் ஒருவர் இயல்பாகவே சமூகத்தின் பொதுப் புத்தியை கேள்விக்குட்படுத்துவார். மட்டுமல்ல சமூகமும் அவரை தனது கூட்டு உளவியலுக்கு எதிரானவராக புரிந்துகொள்ளும். ஆனால் பொதுப் புத்தியை தொடர்ந்தும் கேள்விக்குட்படுத்தியவர்களால் தான் மனித வரலாறு தொடர்ந்தும் மாற்றத்துக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் உட்பட்டு வந்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இலங்கைச் சூழலில் தொழிற்படும் கோட்பாட்டு யதார்த்தங்களான ‘பேரினவாதம்’, ‘வெளித்தள்ளும் தேசியவாதம்’, ‘பெரும்பான்மைவாதம்’, என்பனவும் சர்வதேச தளத்தில் தொழிற்படும் கோட்பாட்டு யதார்த்தங்களில் ஒன்றான இஸ்லாமோஃபோபியாவும் ஒன்றிணைந்ததால் பிறந்த நடைமுறை யதார்த்தங்களையே எம்மைச் சூழவும் நாம் காண்கிறோம். இந்த நடைமுறை யதார்த்தங்களில் முஸ்லிம் சமூகமும் இரண்டறக் கலந்தே இருக்கிறது. மைய நீரோட்ட மீடியாக்கள் இந்த நடைமுறை யதார்த்தங்களில் முஸ்லிம் சமூகத்தை தனியே பிரித்தெடுத்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நுண்ணரசியலை கவனமாக செய்வதை தொடர்ந்தும் அவதானிக்க முடியும்.
இந்த நுண்ணரசியலின் வெளிப்பாடுகள் சிலவற்றை இப்படி அடையாளப்படுத்தலாம்.
1. மேற்கின் சிக்கல்களுக்கு கிறிஸ்தவத்தையோ, பௌத்தர்களின் சிக்கல்களுக்கு பௌத்தத்தையோ குற்றம் காணாமலிருக்கின்ற அதே வேளை முஸ்லிம்களின் சிக்கல்களுக்கு இஸ்லாத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தல்.
2. அரசியல் தளத்தினதும் சமூகத் தளத்தினதும் பிரச்சினைகளின் பொதுத்தன்மையிலிருந்து வேறுபடுத்தி முஸ்லிம்களை troublemakerகளாக அடையாளப்படுத்துதல்.
3. ‘இரண்டாந்தரப் பிரஜை’ என்ற நிலையில் வைத்து பெரும்பான்மைக்கு வகை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களாக முஸ்லிம்களை அடையாளப்படுத்துதல்.
4. நாடு என்ற புரிதலிலிருந்து தேசம் என்ற புரிதலுக்குள் சென்று தமக்கு மாத்திரம் சொந்தமான தேசம் என்பதை பறைசாற்றும் ‘பௌத்த தேசம்’ என்ற பிரயோகத்துக்குள் நின்று கேள்விகளைத் தொடுத்தல்.
5. பெரும்பான்மையின் தயவை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் அவ்வப்போது பொது வெளியில் தமது ‘கற்பை’ நிரூபிக்கும் கட்டாயத்துக்குள் முஸ்லிம் சமூகத்தைத் தள்ளுதல்.
இவை ஒரு சில உதாரணங்கள் மாத்திரமே!
இந்த கோட்பாட்டு யதார்த்தங்களையும் நுண்ணரசியலையும் புரிந்து கொள்ளாது அளிக்கப்படும் பதில்கள் மிகப் பெரும்பாலும் பேரினவாதத்தின் நோக்கங்களை நிறைவு செய்வதாகவும், அவற்றுக்கு சேவகம் செய்வதாகவுமே அமைந்து விடுகின்றன. அதாவது கோட்பாட்டு யதார்த்தங்களின் மீது நின்று நடைமுறை யதார்த்தங்கள் மீது தொடுக்கப்படும் வினாக்களுக்கு கோட்பாட்டு யதார்த்தங்களுக்கு சென்று பதிலளிக்க முடியாத போது பேரினவாதம் இலகுவாக தனது நோக்கத்தை அடைந்து கொள்கிறது.
தோல்வி மனப்பான்மை (Defeated Mentality), பாதிக்கப்பட்ட மனப்பான்மை (Victim Mentality), மன்னிப்புக் கேட்கும் தோரணை (Apologetic Approach), தற்காப்பு அணுகுமுறை (Defensive Approach) ஆகியன யாரும் வலிந்து எடுத்துக் கொள்ளும் அம்சங்களல்ல. மாற்றமாக ஒன்றின் கோட்பாட்டு யதார்த்தங்கள் பற்றிய அறியாமையினதும், புரிதலின்மையினதும் நேரடி பக்கவிளைவுகளே இவையாகும். எதிர்கொள்ளத் திராணியற்றுப் போகும் போதுதான் ஒருவன் தற்காப்பைப் பற்றி யோசிக்கிறான். கேள்விகள் எந்த மூலத்திலிருந்து பிறக்கின்றன என்பதை துல்லியமாக மட்டிட முடியுமான ஒருவன் அந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் அழுத்தத்திலிருந்து மீண்டு, கேள்வியின் சட்டபூர்வத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் எதிர்ப்புத் திறனை பெற்றுக் கொள்கிறான்.
அம்ஹர் மௌலவி இந் நிகழ்ச்சியை எதிர்கொண்டதில் உள்ள அவரது Positive Side என்னவென்றால், அவர் நூற்றுக்கு நூறு வீதம் தற்காப்பு பிரதேசத்துக்குள் நுழையவில்லை என்பதுதான். குறிப்பிட்ட சில கேள்விகளை அவர் எதிர்கொண்ட விதமானது ஏனைய கேள்விகளையும் அதே வகையில் எதிர்கொள்வதற்கான திறமை அவரிடம் இருப்பதைப் பறைசாற்றுகிறது. ஆனால் அவர
கேள்விகளை எதிர்கொள்ளுதல் என்பதும் கேள்விகளுக்குப் பதிலளித்தல் என்பதும் வித்தியாசமான இரண்டு அம்சங்கள். பதிலளிக்கும் அழுத்தத்துக்குள் சிக்கிக் கொள்கையில் எதிர்கொள்கின்ற திராணி அற்றுப் போகிறது. கேள்விக்குப் பதிலளிக்கும் போது பேரினவாதம் திருப்தியடைகிறது, கேள்விகள் அநாயசமாக எதிர்கொள்ளப்படும் போது பேரினவாதம் தளம்பலடைகிறது. பேரினவாதத்தை திருப்திப்படுத்துவதில் எமது இருப்பு தங்கியிருக்கிறதா? அல்லது பேரினவாதத்தை தளம்பலடையச் செய்வதில் எமது இருப்பு தங்கியிருக்கிறதா? இக்கேள்விக்கான விடைதான் எமது அறிவுத் தேடலிலும் அணுகுமுறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது.
பெண்களின் ஆடை, முஸ்லிம்களின் கலாச்சாரம், வில்பத்து விவகாரம், சட்டங்களுக்கு மதிப்பளிக்காமை, பலதார மணம் தொடர்பிலான சட்டப் பாகுபாடு, சிலையுடைப்பு விவகாரம், போன்ற பல்வேறு அம்சங்களை தொடர்புபடுத்தி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ‘பதிலளிக்கப்பட்டது’. ஆனால் அந்தக் கேள்விகளின் கோட்பாட்டு யதார்த்தங்கள் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. அதே நேரம் அநாவசியமாக குற்றவியல் தண்டனைகள் பற்றி பிரஸ்தாபிக்கின்ற ஒரு நிலையும் ஏற்படுகிறது.
இஸ்லாமியக் கோட்பாடுகளை தீர்வாக முன்வைப்பதற்கும் அல்குர்ஆன் கூறும் குற்றவியல் தண்டனைகளை தீர்வாக முன்வைப்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வதில் முஸ்லிம் பொதுப் புத்தி தொடர்ந்தும் தடுமாறி வருவதை அவதானிக்க முடியுமாக உள்ளது. குற்றவியல் தண்டனைகளின் தொகுப்புதான் மொத்த இஸ்லாமும் என்ற காட்சிப்படுத்தலை தன்னையறியாமலே ஆமோதிக்கும் வகையிலான ஒரு முன்வைப்புதான் குறித்த நிகழ்வில் இடம்பெற்றது.
தண்டனைகளால் குற்றங்கள் இல்லாது போய் மாற்றம் வருவதில்லை, சீர்திருத்த நடவடிக்கைகளால்தான் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட சுமுகமான சூழ்நிலை மீண்டும் பாதிக்கப்படாதிருப்பதற்கான Firewall ஆகத் தான் இஸ்லாம் தண்டனைகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. பஞ்சம் நிலவிய ஆண்டில் உமர் (ரழி) அவர்கள் களவுக்கான தண்டனையை தற்காலிகமாக ஒத்திவைத்தமைக்கான காரணம் இதுதான். இன்றைய முஸ்லிம் பொதுப் புத்தியில் நின்று பார்த்தால் அந்த வருடத்தில்தான் களவுக்கான தண்டனை இன்னும் வீரியமாக அமுல்படுத்தப் பட்டிருக்க வேண்டும். முஸ்லிம் பொதுப்புத்தியின் சறுக்கலிலிருந்து உமரைப் பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
இன்று முஸ்லிம் சமூகத்துக்குத் தேவை ஸாகிர் நாயக் தனமாக கேள்விகளுக்கு ‘பதிலளிப்பவர்கள்’ அல்ல, மாற்றமாக இன்றைய உலகின் கோட்பாட்டு யதார்த்தங்களில் நின்று நடைமுறை யதார்த்தங்களைக் கையாள்கின்ற சமூகவியல் மற்றும் மானுடவியல் அறிஞர்களே. இஸ்லாமியக் கலைகளை குறிப்பிட்ட பாடவிதான சட்டகங்களுக்குள் நின்று கற்பதால் மாத்திரம் அந்த இடைவெளியை நிரப்ப முடியாது. இஸ்லாம் பற்றிய புரிதலும் சரி, உலகம் பற்றிய புரிதலும் சரி, அவை இன்னும் அதிகமதிகம் விசாலிக்க வேண்டியதன் தேவையை வெகுவாக உணர்கிறோம். அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் இந்தப் பின்னணியில் நின்று அணுகப்படும் போதுதான் அவை தீர்வாகப் பார்க்கப்பட முடியும். மாற்றமாக கேள்விகளின் பிறப்பிடமான கோட்பாடுகள் பற்றிய புரிதலின்றி அல்குர்ஆனைப் பயன்படுத்துவதானது பிரச்சினையின் சிக்கல் தன்மையை இன்னும் அதிகப்படுத்துமேயன்றி குறைக்க மாட்டாது.
மார்க்கத்தைக் கற்பதென்பது உலகத்தையும் சேர்த்துக் கற்பதுதான். உலகத்தின் சவால்களை எதிர்கொள்ளத்தான் மார்க்கம். சவால்களற்ற, பிரச்சினைகளற்ற உலகுக்கு வஹியின் வழிகாட்டல்கள் அவசியப்படாது. அதனால்தான் இஸ்லாம் ‘பூவுலக மார்க்கம்’ என்றும் அல்குர்ஆன் ‘உலக வேதம்’ என்றும் அலி இஸ்ஸத் பெக்கோவிச் கூறுவார். இன்றைய கோட்பாட்டு மற்றும் நடைமுறை யதார்த்தங்களிலிருந்து அல்குர்ஆன் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் அல்குர்ஆனின் துணை கொண்டு அவற்றை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.
இறுதியாக...
கொண்டாடுவதில் ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் கொண்டாடும் மனோநிலையில் இருப்பவர்களால் படிப்பினைகளைப் புரிந்துகொள்ள முடியாது. முஸ்லிம் சமூகம் வெறும் கொண்டாட்ட மனோநிலையிலேயே காலம் தள்ள விடக்கூடாது என்ற நோக்கத்தில் தானோ என்னவோ அல்லாஹுத் தஆலா இரண்டே இரண்டு பெருநாட்களை மாத்திரம் ஏற்படுத்தியிருக்கிறான் போலும்! வாழ்க்கை எனும் சவாலான பயணத்தில் கொண்டாடுதல் என்பது எப்போதாவதென்றிருக்கட்டும். தினந்தினம் கொண்டாடுவதற்காக எதையாவது எடுப்பதானது இயலாமையினதும், தத்தளித்தலினதும் விளைவேயன்றி முன்னேற்றத்தினதும் அடைவுகளினதும் அடையாளமல்ல.
No comments:
Post a Comment