பூச்சி உண்ணும் தாவரங்களை நாம் நோக்கினால் சாதாரண தாவரங்களை போன்று இவையும் ஒளித்தொகுப்பு மேற்கொள்ளும். ஒளித்தொகுப்பின் மூலமாக தனக்குத்தேவையான உணவை தானே தொகுத்துக்கொள்ளும். அவ்வாறாயின் அவை ஏன் பூச்சிகளை பிடிக்க வேண்டும்????
ஏனெனில் அவற்றுக்கு தேவையான ஒரு மாமூலகம் (Macro Element) தேவையை பூர்த்தி செய்யவே அவை பூச்சிகளை சிறை பிடிக்கின்றது.
ஒரு உயிரங்கியை பொறுத்தவரை அவற்றின் நிலவுகைக்கு போசணை மூலகம் தேவை. அதில் மாமூலகம், நுண் மூலகம் என்ற இருவகை உண்டு. மாமூலகம் என்று கூறும் போது காபன்-C, ஐதரசன்-H, ஒக்சிசன்-O, நைதரசன்N, பொஸ்பரஸ்-P, பொட்டாசியம்-K, கல்சியம்-Ca, மக்னீசியம்-Mg, கந்தகம்-S என்பன உள்ளடங்கும்.
குறிப்பாக பூச்சி உண்ணும் தாவரங்கள் சதுப்புநிலம், ஈரநிலங்களை சார்ந்து வாழ்வதனால் அவற்றின் மண்ணில் நைதரசன் பற்றாக்குறை நிலவும். நைதரசன் தாவரத்தின் அடிப்படை தேவையான மூலக வகையாகும். அவற்றின் தேவையை பூர்த்தி செய்துகொள்ளவே பூச்சிகளை சிறைபிடித்து அவற்றின் உடலில் உள்ள புரதத்தை பகுப்பு செய்வதனூடாக தனக்குத் தேவையான நைதரசன் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றது.

குறிப்பாக பூச்சிகளை கவரும் விதமான நறுமணம், நாற்றம், பூ அமைப்பு, நிறம் என்பவற்றை கொண்டு பூச்சிகளை தன் பக்கம் ஈர்த்து அதனை ஒட்டும் தன்மையான, சிறைபடிக்கும் வலையமைப்பு மற்றும் மூடிக்கொள்ளும் அறை போன்றவற்றின் மூலமாக பூச்சிகளை பிடித்து அதன் மேல் சமிபாட்டு நொதியங்களை சுரந்து அவற்றை கொன்று பூச்சி உடலில் இருந்து போசணையை பெற்றுக்கொள்ளும்.
அந்தவகையில் பூச்சி உண்ணும் தாவரங்கள் உலகம் முழுவதும் உள்ளன. இவ்வகைத் தாவரஙக்ள் ஆறு குடும்பங்களையும் 16 பேரினமும் சுமார் 450 வகைச் செடிகளையும், 30 க்கு மேற்பட்ட கலப்பினச் செடிகளையும் கொண்டுள்ளது. அவற்றில் இங்கே அறிமுகத்திற்காக நெப்பந்திசு (Nepenthes), திரோசிரா (Drosera), டயோனியா (Dionaea), யூட்ரிக்குளோரியா (Utricularia) உதாரணமாக கூறுகிறேன்.

பூச்சிகளை உண்ணும் தாவரங்களில் 70 வகை இனங்கள் பிட்சர் பிளான்ட் என்று அழைக்கப்படும் குடுவை வடிவ செடிகலாகவே உள்ளன. பார்ப்பதற்கு ஒரு குடுவையை கட்டி மரத்தில் தொங்கவிட்டதுபோல் தெரியும். இது கவர்ச்சிகரமான வண்ணத்தில் பூச்சிகளை கவர்ந்திழுக்கும். இந்த குடுவை வடிவ செடிகளில் இளம் மொட்டு குடுவைகள் மூடியபடியே இருக்கும். முதிர்ந்த குடுவைகளில் வாய் திறந்திருக்கும். அதன் மேலே ஒரு மூடிபோல் வடிவம் இருக்கும். இந்த மூடி பெரிய புயல் மழை பெய்தால் கூட ஒரு சொட்டு மழைநீரை உள்ளே போகாத வண்ணம் குடுவையை பாதுகாக்கும்.

இந்த குடுவையினுள் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு பெப்சின் என்ற திரவம் நிறைந்திருக்கும். குடுவையின் வாய்ப்பகுதியில் ஏராளமான தேன் சுரப்பிகள் வேறு இருக்கும். இந்த குடுவையின் அசத்தலான நிறம், வாசனை மற்றும் தேன் இவைகள் போதாதா பூச்சிகளை கவர்ந்திழுக்க, இப்படி கவரப்பட்ட பூச்சிகள், தேன் சுரப்பிகள் இருக்கும் இடத்திற்கு செல்லும். அது சறுக்கு மரம்போல் வழுவழுப்பாக இருப்பதால் பூச்சி வழுக்கிக்கொண்டு உள்ளேபோய் விழும். அந்த பூச்சி தப்பிக்க முயற்சி செய்து மேலே வந்தாலும் குடுவையின் உள்ளே வளர்ந்திருக்கும் முடிகள் போன்ற அமைப்பு அதை மேலே வரவிடாமல் தடுத்து விடுகிறது. பூச்சி பெப்சின் திரவத்தில் விழுந்த உடன் அந்த திரவம் பூச்சியை செரிமானம் செய்யத் தொடங்கிவிடும். பூச்சி முழுமையாக கரைந்து செரிமானம் ஆகிவிடுகிறது. இந்த அபூர்வமான செடியை பார்க்க வேண்டும் என்றால் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருக்கும் தாவரவியல் பூங்காவில் பார்க்கலாம்.

இதில் மற்றொரு வகை செடிகள் உண்டு. அதன் பெயர் திரோசிரோ (Drosera). இந்தவகை செடி இந்தியாவிலும் ஏன் தமிழ்நாட்டிலும் கூட இருக்கிறது. இதன் இலைகள் பயங்கரமான கவர்ச்சியாக இருக்கும். இந்த இலையின் பக்கவாட்டில் ஏராளமான உணர்வு கொம்புகள் இருக்கும். ஒவ்வொரு உணர்வு கொம்பின் முனையிலும் தேன்துளி போல் மூடியிருக்கும். இதனை தேன் என்று நினைத்து பூச்சிகள் வருகின்றன. அந்தப் பூச்சிகள் வந்து அமர்ந்ததும் இலையில் இருக்கும் பசையில் பூச்சியின் கால்கள் ஒட்டிக்கொள்ளும்.
பூச்சி தப்பிக்க முயற்சி செய்யும். அதற்குள் உணர்வு கொம்புகளுக்கு தகவல் கிடைக்க எல்லா உணர்வுக் கொம்புகளும் பூச்சியின் மீது படர்ந்து இருக்கத்தொடங்கும். பூச்சு மூச்சு விடமுடியாமல் திணறும். அதற்குள் உணர்வுக்கொம்பின் நுனியில் தேன்துளிபோல் இருக்கும் அமைப்பு புரதப்பொருளை ஜீரணிக்கக்கூடிய என்சைம்களை சுரக்கத்தொடங்கும். அது பூச்சியின் உடலிலுள்ள புரதத்தை ஈர்த்துக்கொள்ளும். பூச்சியின் உடல் முழுமையாக செரிக்கப்படும்வரை உணர்வுக் கொம்புகள் மூடியே இருக்கும். செரிமானம் முடிந்த பின் உணர்வுக் கொம்புகள் நீண்டு பழைய நிலைக்கு வரும்.

பூச்சியின் இறகு போன்ற செரிக்கப்படாத பகுதிகள் கீழே விழுவதற்காக இலையில் சுரக்கும் பசைபோன்ற திரவம் நின்றுவிடும். பூச்சி கீழே விழுந்ததும் மீண்டும் இலையின் மீது பிசுபிசுப்பான ஓட்டும் திரவம் சுரக்கத்தொடங்கும். அடுத்த பூச்சிக்காக காத்துக்கிடக்கும். இந்த இலையின் மீது பூச்சிக்குப்பதிலாக சிறிய கல்லோ வேறு பொருளோ விழுந்தால் இலை எந்த மாற்றமும் பெறுவதில்லை. வெளிநாடுகளில் இந்த செடியை அழகுக்காக வீட்டில் தொட்டிகளில் வளர்க்கிறார்கள்.

அடுத்துவரும் செடியை வில் பொறி என்று தமிழில் சொல்கிறார்கள். இந்த செடிகள் வட அமெரிக்காவில் அதிகமாக காணப்படுகின்றன. ஈரமான நீர்த்தேக்கப் பகுதிகளில் இது வளரும். இதன் இலை வெளிப்புறத்தில் பச்சை நிறமாகவும் உட்புறத்தில் இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும். இந்த இலையின் வான்னத்தில் கவரப்பட்ட பூச்சி இலையின் மீது ஊர்ந்து செல்லும்போது ட்ரிக்கர் என்று சொல்லப்படுகிற உணர்ச்சியுள்ள முடியின் மேல் பட்டால் அந்த நொடியே இலையின் இரண்டு பகுதிகளும் மூடிக்கொள்ளும்.
இது ஒரு வினாடியில் ஐந்தில் ஒருபங்கு நேரத்திலேயே நடந்து முடிந்து விடுகிறது. இலையின் விளிம்பில் இருக்கும் முள் போன்ற பற்கள் ஒன்றோடு ஒன்றாக கவ்வி பூச்சியை இறுக்கிக் கொண்டே போகும். இந்த இருக்கத்திலேயே பல பூச்சிகள் இறந்துவிடும்.

உடனே இலைகளில் செரிமான நீர் சுரக்கத்தொடங்கும். அந்த நீர் பூச்சியை ஜீரணிக்க தொடங்கும். ஒரு பூச்சி செரிமானமாக 5 முதல் 10 நாட்கள் ஆகும். பூச்சி முழுவதும் ஜீரணித்த பின்னே இலை மீண்டும் திறக்கிறது. இப்படியாக ஒரு இலை 3 முறை மட்டுமே பூச்சிகளை பிடிக்கிறது. மூன்றாவது முறை மூடிய இலை திறப்பதே இல்லை. இப்படி உலகில் பல விசித்திரங்கள் இருக்கின்றன.
தேடல் வலைதளங்கள்
https://en.wikipedia.org/wiki/Carnivorous_plant
https://botany.org/Carnivorous_Plants/
https://www.britannica.com/plant/carnivorous-plant
No comments:
Post a Comment