
சரி விரிவாக பாப்போம் வாருங்கள்....
---------------------
பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் கண்டுகொண்ட ஒரு முக்கியமான தோற்றநிலையே கூட்டுப்புழு என்ற வாழ்கைவட்டப் பருவம். எந்தவொரு அங்கிக்கும் தான் குறித்த சூழலிற்கு வாழ்வதற்கு தன்னை தயார்படுத்தும் ஒரு கால எல்லை அவகாசம் ஒன்று தேவைப்பாடும். மேற்படி நிலை மூலமாக பல்வேறு சூழலியல் விருத்தி மற்றும் இசைவாக்கங்களை குறித்த அங்கி பெறுவதோடு தனது நிலைதிருப்பையும் சூழலியல் ஆட்சி நிலையையும் பெறுகின்றது.அந்தவகையில் கூட்டுப்புழு நிலையும் ஒன்றாகும்.
கூட்டுப்புழு என்றால் என்ன?
ஒரு முட்டையின் கரு முழு வளர்ச்சி பெற்று நேரடித்தோற்றம் கொண்ட பூச்சியாக முட்டையிலிருந்து வெளிவராமல், இடைநிலை உருவமாக இளம் உயிரி(Larva)யாக புறஉலகிற்கு வந்து, முதிர்ந்த பூச்சியினைப் போல் அல்லாமல் முற்றிலும் வேறுபட்ட உணவை உட்கொண்டு, வாழுமிடத்தையும் வேறாகக்கொண்டு, அதன் பின்னர் கூட்டுப்புழு (Pupa)நிலையை மேற்கொள்ளும்.
இந்த நிலையில்தான் இனப்பெருக்கத்திற்கான உறுப்புகளும் வளர்ச்சி பெறும். இளம் உயிரியாக இருக்கும்பொழுது பூச்சியின் பல்வேறு உறுப்புகள் உருவாகாமலும் இருக்கலாம், அல்லது சிறிய அளவில் உள்ளுக்குள்ளாகவே உருவாகி இருக்கவும் கூடலாம்.
கூட்டுப்புழு நிலையின் போது தன்னைச் சூழ ஒரு கவசத்தை தோற்றுவித்து அதனுள் உறங்குநிலையில் காலம் களிக்கும். இவற்றுக்கு தேவையான போசணையை இவை குடம்பியாக இருக்கும் பொழுது அதிகம் உணவை உட்கொண்டு மேலதிக சக்தியாக சேமித்து வைத்து இருக்கும். பின்னர் கூட்டுப்புழு நிலையில் அங்கங்கள் இழக்கப்பட்டும் மேலதிக அங்கங்கள் உருவாக்கப்பட்டும் முழுவுடலி அங்கி வெளிப்படும்.

கூட்டுப்புழு நிலை ஏன்?
உலகம் பூச்சிகளால் (Insect) எங்கும் நிறைந்திருக்கையில் அவைகளின் அடுத்தடுத்த தலைமுறைகள் உருவாக்கப்படுகையில் முதிர்ந்த பூச்சிகளுக்கும் அவைகளின் நேரடி உருக்கொண்ட குட்டிகளுக்கும் இடையேயே உணவுத் தேவைக்கான போட்டி அமைந்து விடுகின்றது. விளைவு, குட்டிகளுக்குப் போதுமான உணவு மற்றும் சூழல் கிடைக்கப் பெறாமல் அவைகள் அழிந்துபட்டுப் போய் இனப்பெருக்க வளர்ச்சி தடைப்படும்.
கூட்டுப்புழு நிலையில் அங்கி உணவு எதனையும் உட்கொள்ளாது. எனவே உணவிற்கான போட்டி மேலும் இழிவாகும்.
சூழலியல் முடுக்கு (Ecological Niche) என்று சொல்வார்கள். அதாவது, அதற்கான உணவு, இருப்பிடம், எதிரிகள் அணுகாத அல்லது எளிதில் அணுக முடியாத பாதுகாப்பான சூழல். அப்படிப்பட்ட சூழல் அமைந்தால்தான் அவைகளால் பல்கிப் பெருக முடியும்.

பட்டாம்பூச்சியை எடுத்துக் கொண்டால், கம்பளிப்பூச்சி இனப்பெருக்க இச்சை இல்லாமல் இலைகளைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கையில், பட்டாம்பூச்சியோ மலருக்கு மலர் தாவி மதுரம் குடித்து இணைதேடிக்கொண்டிருக்கும். ஒரே இடத்தில் இருந்தாலும், இங்கே தன்னினத்திற்குள்ளாகவே உணவுப் போட்டி இருக்காது.
தேடல் வலைதளங்கள்
https://en.wikipedia.org/wiki/Pupa
https://www.merriam-webster.com/dictionary/pupa
https://www.sciencedaily.com/terms/pupa.htm
https://www.enchantedlearning.com/subjects/butterfly/lifecycle/Pupa.shtml
https://www.thebutterflysite.com/life-cycle.shtml
No comments:
Post a Comment