
Written by - Sabarullah Caseem
சர்வைவல் ஜோனரில் வெளியான அத்தனை ஆங்கிலப்படங்களும் எனக்கு எப்போதுமே மோஸ்ட் ஃபேவரைட் லிஸ்ட்.. யாருமற்ற வெளியில்….அடர் வனத்தில்…. அல்லது கடலில் தனித்து விடப்ப்டுகின்ற தருணத்தில் உயிர் பிழைப்பதற்காக இருக்கின்ற எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு இனி அவ்வளவுதான் மேட்டர் முடிஞ்சு போச்சு என்று உயிர் வாழ்வதற்கான போராட்டம் கிட்டத்தட்ட முற்றுப்புள்ளியை நெருங்குகின்ற நேரம் ஒன்று மட்டும் ஒன்றே ஒன்று மட்டும் துடித்துக் கொண்டிருக்கின்ற இதயத்துக்கு “ஓல் இஸ் வெல்…ஓல் ஈஸ் வெல்’ என்று ரிப்பீட் மோடில் சொல்லிக் கொண்டேயிருக்கும்.
அது நான் எப்படியேனும் பிழைத்துக் கொள்ளுவேன்…அந்த ஆண்டவன் என்னை ஒரு போதும் கை விட மாட்டான் என்று ஹார்ட் பீட்டுக்குள்ளே அழகான ஆர்ட் ஃபில்ம் ஒன்றை ஓட்டிக் கொண்டிருக்கின்ற நம்பிக்கை…தன்னம்பிக்கை…… இனிமேல் அவ்வளவுதான் பிழைக்கவே முடியாது என்ற நிலையிலும் தன்னம்பிக்கை மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்தி எந்த சூழலிலும் உயிர் பிழைத்துக் கொள்ள முடியுமென்கின்ற ஆல் ஈஸ் வெல் மெசேஜை பல ஆங்கிலப்படங்கள் இது வரை எனக்கு தந்திருக்கின்றன.
2000மாம் ஆண்டில் வெளியான ரொபேர்ட் ஸிமெக்கிஸின் “காஸ்ட் எவே (Cast Away), 2007ம் ஆண்டில் வெளியான பிரான்ஸிஸ் லோரன்ஸின் “ஐ ம் லெஜென்ட் (I am legend)- 2010ம் ஆண்டு வெளியான ரொட்ரிகோ கோர்ட்டிஸ் இயக்கிய ஆங்கில ஸ்பானியப் படமான “பேரீட் (buried)” 2013ம் ஆண்டில் வெளியான நைட் ஷியாமலனின் “ஆஃப்டர் ஏர்த்- (After Earth) என்று சர்வைவல் ஜோனரில் பல படங்கள் பிரம்மிப்பை தந்திருக்கின்றன. பிரம்மிப்பை மட்டுமல்ல யாருமே அற்ற ஒரு பிரதேசத்தில் தனித்து விடப்படுகின்ற போது என்னால் பிழைத்துக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை தந்த படங்கள் அவை.
அந்த வரிசையில் இது வரை காலமும் பூமிப்பரப்பிலேயே சர்வைவல் சங்கதி சொல்லிக் கொண்டிருந்த ஃபில்ம் பிரம்மாக்கள் ஒரு படி மேலே போய் பூமியல்லாத இன்னோர் கிரகத்தில் தனியே மாட்டுப்படுகின்ற போது அவ்வாறு மாட்டுப்படுகின்ற மனிதனின் தான் பிழைத்து விடுவேன் என்ற அந்த நம்பிக்கை எப்படி இருக்கும் என்று தனியே ஒரு நாசா விண் வெளி வீரனை மாத்திரம் வைத்து ஆரம்பம் தொடக்கம் கடைசிக் கட்ட கிளைமேக்ஸ் வரை கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் இயக்குனர் ரிட்லி ஸ்கொட் தந்திருக்கின்ற சயன்ஸ் ஃபிக்ஷன் சமாச்சாரம்தான் “மார்ஷன்- (Martian).
இந்தப்படம் 2015ல் வெளியாகி பொக்ஸ் ஒஃபீஸில் அதிரிபுதிரி ஹிட்டடித்தது என்பதனை ஆரம்பத்திலேயே சொல்லி வைக்கின்றேன். 2011ம் ஆண்டு அன்டி வியர் எழுதிய “மார்ஷன்- (Martian) நாவலையே திரைக்கதை செய்து படமாக்கியிருந்தார்கள். செவ்வாய் கிரகத்துக்கு வானாராய்ச்சிக்காக செல்லுகின்ற நாசா டீம் அங்கு திடீரென்று வீசுகின்ற பயங்கரமான புயலில் சிக்குண்டு காணாமற் போய் விடுகின்ற தமது சக பயணி இறந்து விட்டாரென்ற ஊகிப்பில் அங்கிருந்து பூமிக்கு திரும்ப ஆரம்பிக்கின்றார்கள். ஆனால் மரணத்தை தழுவிக் கொண்டதாக அவர்கள் ஊகம் செய்த அந்த விண் வெளி வீரன் உயிரோடிருக்கின்றான்.
இன்னோர் கிரகத்தில் புயலில் தூக்கிவாரப்பட்டு தூர வீசப்பட்ட அந்த விண்வெளிப் பயணியின் அதற்குப்பின்னைய நாட்களும் அவன் தனியே அந்த செவ்வாய்க்கிரகத்தில் எப்படி உயிர் வாழப்போராடுகின்றான், தான் பிழைத்துக் கொள்ளுவேன் என்று எப்படி தனக்குள்ளே நம்பிக்கையை விதைத்துக் கொண்டு நாட்களை பொறுமையோடும் எதிர்பார்ப்போடும் கழிக்கின்றான் என்ற ட்ரக்கில் அதற்கப்புறம் பெற்றோல் ஊற்றப்பட்ட பஞ்சுக்காடாய் பற்ற ஆரம்பிக்கின்றது திரைக்கதை.
யாருமே இல்லாத வெற்றுக்கிரகமொன்றில் தனியே அகப்பட்டுக் கொள்ளுகின்ற ஒரு மனிதனின் உயிர் வாழவ்தற்கான போராட்டத்தினை விவரிக்கின்ற ஒவ்வொரு காட்சியுமே செம திரில்லிங். தனியே ஒரு மனிதனைச் சுற்றி அலுப்பில்லாமல் திரைக்கதையை எப்படி சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லுவது என்பதனை தனது விரல் நுனியில் வைத்திருக்கின்றார் இயக்குனர். ஏலவே காஸ்ட் எவே, பேரீட் போன்ற படங்களில் பார்த்த அதே சுவாரஸ்யம்….அதே திரில்லிங். அடுத்த என்ன நடக்கப் போகின்றதோ என்ற எதிர்பார்ப்பில் கண்களுக்குள்ளே எக்ஸ்ட்ரா எக்சைட்டிங்.

புயலில் எங்கோ ஒரு இடத்தில் தூக்கி விசிறப்பட்ட ஹீரோ தடுமாறி எழும்பும் போதுதான் கவனிக்கின்றான் தனது அடி வயிற்றில் கூரிய கம்பியொன்று குத்தி இரத்தத்தை கொஞ்சம் கொஞ்சம் குடித்துக் கொண்டிருப்பது. மெல்ல எழுந்து அருகே இருக்கின்ற விண்வெளிக் கூடாரத்துக்குள்ளே நுழைந்து பயங்கர சிரமத்துக்கும் இயலாமைக்கும் மத்தியில் விண்வெளி ஆடைகளை கழற்றி விட்டு தானே ஒரு சேர்ஜனாக மாறி எனஸ்தீஷியா எதுவுமில்லாமல் சுய அறுவை சிகிச்சை செய்கின்ற அந்த முதற் காட்சியே ரணகளம்…அந்த சுய செர்ஜரியில் அவன் வெதனையால் துடிக்கின்ற போது நமக்கு வலியில் வியர்த்து விடுகின்றது.
அதற்கப்புறம் தான் வாழ்வதற்குத் தேவையான உருளைக்கிழங்குகளை விவாசயம் செய்ய எடுக்கின்ற முயற்சிகள்…அதற்காக தனது மனிதக் கழிவுகளையே பசளையாக பயன்படுத்துவது….ஹைட்ரஜனை தனியே பிரித்தெடுத்து அந்த விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரை உருவாக்குவது என்று வெற்றுக்கிரகத்தில் தனியே விடப்பட்டாலும் நான் கடைசி வரை எனது வாழ்வுக்காக உசிருக்காக போராடுவேன் என்கின்ற அந்த குணம் காட்சிக்கு காட்சி நம்மை நாசாவின் விண் கல வேகத்தில் இழுத்துச் செல்லுகின்றது.
செவ்வாயில் செத்ததாக நம்பப்படுகின்ற அந்த வீரன் இன்னமும் உசிரோடுதான் இருக்கின்றான் என்ற மேட்டர் நாசாவுக்கு தெரிய வருகின்ற போது அவனைக் காப்பாற்ற நாசா எடுக்கின்ற முயற்சிகள்…….எப்படியாவது அவனைக் காப்பாற்றி விட வேண்டுமென்ற தவிப்புகள் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க தம்மோடு செவ்வாய் வந்த சக தோழன் இன்னமும் உசிரோடுதான் இருக்கின்றான் என்று அவன் காணாமற் போய் இரு மாதங்களுக்குப் பின்னர் அறிய வருகின்ற விண்வெளிப் பயணக் குழு தமது அத்தனை உயிரையும் பயணம் வைத்து அவனை மீட்பதற்காக எடுக்கின்ற அந்தரத்து முயற்சிகள் என படத்தின் அத்தனை காட்சிகளுமே அலுப்ஸ் தராத பட்ட கிளாப்ஸ் ப்ரோ.
செவ்வாயில் தனியே சுற்றித் திரிகின்ற ஹீரோ தனக்குத்தானே பெசிக் கொள்ளுகின்ற காட்சிகளில் அந்த ரணகளத்திலும் அவனுக்குள்ளிருந்து வருகின்ற கொமடி கொண்டாட்டங்கள் நம்மை சூழ்நிலை மறந்து சிரிக்க வைக்கின்றன. நாளுக்கு நாள் அவன் தனது உயிர் பிழைப்புக்காக செய்கின்ற இமாலய முயற்சிகளும் அதற்கான உழைப்புகளும் மலைக்க வைக்கின்றன. நம்பிக்கை கடைசி வரை நீளுகின்ற நம்பிக்கை எப்படியும் தான் மீடகப்படுவேன் என்கின்ற அந்த கொங்க்ரீட் தனமான நம்பிக்கை.
மார்ஷன் ஹீரோவும் கிட்டத்தட்ட காஸ்ட் எவேதான். சுமார் ஐந்நூறுக்கு மேற்பட்ட நாள்கள் தனியே அந்த கிரகத்தில் வாழ்ந்த கொண்டிருக்கின்றான். ஒரு கட்டத்தில் அவனுக்குள்ளிருக்கின்ற நம்பிக்கை சற்று தளர்ந்து அவன் இறப்பதற்கு முன்னர் உலகத்தாருக்கு மெசேஜ் சொல்லுகின்றான்…தனது கடைசி ஆசைகள் பற்றி சிரித்துக் கொண்டே சற்று அயர்ச்சியோடு கதை சொல்லுகின்றான். அந்தக்காட்சகளில் மனசு வலித்து அவனுக்காக “இறைவனே அவனை எப்படியாவது காப்பாற்று” என்று பிரார்த்தனை செய்கின்றது.

படம் ஒரு சயன்ஸ் ஃபிக்ஷன் என்றாலும்…..விஞ்ஞான வியப்பு ஏற்படுவதனை விட தனியே வெற்றுக் கிரகத்தில் விடப்பட்ட சக மனிதனின் உயிர் வாழவ்தற்கான போராட்டம்……அந்தப்போராட்டத்தில் அவனுக்குள்ளே எஞ்சியிருக்கின்ற நம்பிக்கை…….அவனை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்ற பிரார்த்தனை………. தம்மோடு வந்தவனை தனியே விடவே முடியாது என்ற முடிவில் நாசாவின் விதிகளை மீறி தம்மை அர்ப்பணித்து தமது சக தோழைனை காப்பாற்ற அசாத்தியமான முயற்சிகளை சாத்தியமாக்கி அவனை மீட்டு விடுகின்ற அந்த விண்வெளி டீமின் மனிதாபிமானம் ப்ளஸ் தோழமை மட்டுமே மனசு பூராவும் மிஞ்சிக்கிடக்கின்றது.
No comments:
Post a Comment