
ஆதி மனிதன் வாழ்வை அசல் வடிவில் காட்சிப்படுத்தும் ஒரு கார்டூன் கதையே Croods திரைப்படம். இத்திரைப்படத்தில் குகைதனில் இருள் சூழ்ந்ததும் பதிங்கி வாழ்ந்த தருணத்தில் ஒரு வினோத மனிதனால் இரவு வானின் அதிசயத்தை உணர வாய்பளிகப்பட்டது. அவ்வாறு தொன்றுதொட்டு வழக்கில் இருந்த வானின் அதிசய அவதானிப்பு அண்மைய நாகரிக வளர்ச்சியினால் LED திரைகளிற்குள்ளே முடங்கிய மனிதன் கொங்ரீட் மொட்டு குகைகளினுள் ஒளிந்துகொள்ள பழகிக்கொண்டான்.
இதிலும் வியப்பு என்னவெனில் வானின் ரசனையை மற்றவர்களுக்கு இப்பதிவில் விபரிக்க அந்த மோடுகள் சுமந்த புதர் இல்லங்கள் தான் தேவைப்படுகின்றது.
---------------------------------
மனம் சஞ்சலப்படும் நொடிகளில் எப்போதும் இயல்பாகவே வானம் பார்த்தல் நிகழ்கிறது. ஆதி மனிதனின் முதல் பொழுதுபோக்கு வானம் பார்த்தலாகவே இருந்திருக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.
வானம் என்பது அமைதியின் புள்ளி. நிசப்தத்தில் ஆர்ப்பரிக்கும் ஓசை. சுற்றிவரும் எத்தகைய இரைச்சலிலும் நீங்கள் ஒரு நொடி அன்னார்ந்து வானத்தைப் பார்க்கும் கணம் உங்கள் உள்ளம் அமைதியடைகிறது. மீண்டும் குனிந்து தரையைப் பார்க்கும்பொழுது உங்களை சுற்றியுள்ள அனைவரும் நல்லவராயும், பிரபஞ்சம் என்பது அமைதியின் இருப்பிடமாகவும் காட்சியளிக்கிறது.
வானத்தின் இயல்பு தனித்துவமானது. அதைப் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் அதை ஒருபோதும் நாம் அடையவே முடியாது என்ற ஏக்கத்தை அது உண்டாக்குகிறது. அந்த ஏக்கம் அனைத்தையும் தாண்டிய ஓர் இலட்சிய வேட்கையை எம்முள்ளே உருவாக்குகிறது. இதுவரை எந்த ஒருவனும் வானத்தைப் பங்குபோட்டதாக நான் அறியவில்லை. நட்சத்திரங்களைப் பங்குபோடும் குழந்தைகள் மனதிலும் கயமை இருந்ததில்லை. இதனால்தான் வானம் எம்மை விட்டு உயந்து நிற்கிறது.
இரவில் வானம் ஓர் அசாத்திய வலிமையைப் பெறுகிறது. அதைப் பார்க்கும் எல்லோர் மனதிலும் அது அதேவித வலிமையைப் பாய்ச்சி விடுகிறது. ஏயெல் காலத்தில் ஹொஸ்டலில் இருந்த காலங்களில் எல்லாம் நண்பர்கள் தவிர்த்து எனக்கிருந்த ஒரே துணை வானம் மட்டும்தான். வானம் என்னுடையது என்ற ஓர் மட்டமான, ஆனால் என்னைப் பொறுத்தவரை ஓர் மகிழ்ச்சிகரமான உணர்வு இப்போதும் என்னிடம் இருக்கிறது.
அந்த அமைதி, அதனூடே உண்டாகும் இரவின் குளுமை, சுற்றியும் ஒழுங்கற்று படர்ந்திருக்கும் நட்சத்திரங்கள், மிதமான நிலவின் ஒளி என்று எல்லாமே என்னைத் தூக்கி ஆராதிக்கும். சில நொடிகளில், அதுவும் மிகச்சில நொடிகளில் பசி என்ற உணர்வை அமைதியின் உணர்வு மென்று விழுங்கும். இப்போதைக்கு, இந்த உலகின் மிக அதிஷ்டக்காரனாக வானம் என்னை மாற்றும்........
தூக்கம் தொலைக்கும் இரவுகளில் ஒருவனுக்கு வானத்தின் துணை அவசியமாகிறது. எஸ் ராவின் ஓர் நேர்காணலில் அவர் ஒருமுறை சொன்னார். அவரது ஓர் நாவலை எழுதுவதற்காக இந்தியா முழுவதும் சுற்றவேண்டியிருந்ததாம். கையில் காசு இருந்தும் அவர் ரயிலில் பயணப்பட விரும்பவில்லை. தேசாந்திரிகள் எப்போதும் அப்படித்தானே. கன்யாகுமாரியில் இருந்து டில்லி வரை ஐந்து நாட்கள் இரவு பகலாக தானியம் ஏற்றிக்கொண்டு செல்லும் ஒரு வண்டியின் மேலே படுத்துக்கொண்டு பயணம் செய்திருக்கிறார்.
இருள் சூழ்ந்த வேளையில், நெடுஞ்சாலை எங்கும் மயான அமைதி..... பாதையின் இரு பக்கமும் மலைத்தொடர்கள்........ மேலே வானம்...... இதுவரை உணராத ஒரு நெருக்கத்தில் நிலவின் அருகாமை..... இந்த உணர்வு எப்படியிருக்கும் என நினைத்துப் பாருங்கள் என்று இறுதியில் சொல்வார். பொறாமையாக இருந்தது. அவர் வாழ்க்கையை வாழ்கிறார்.
சில நேரங்களில் ஊர் முழுதும் கரட் கட்டாகி விடும். அப்போது போனிலும் சார்ச் தீர்ந்துவிடும். அப்போதுதான் இரவுவானை ரசிக்க வெளியில் செல்ல பாழாய்ப்போன அடிமை மனம் தூண்டும். அவ்வப்போது அவ்வாறு நடப்பதில் சற்று அண்ணார்ந்து பார்க்க வைக்கின்றது ஒருவகை அதிஷ்டம்தான்.
இவற்றுக்கு அப்பால் வருடத்தில் ஓர் இரு முறை பெச் சமையல் என்று சொல்லி வெளிக்களம் செல்வோம். அப்போதுதான் நீண்ட நெடு நேரம் வானை கடலோர வெண்மணல் மீது கடல் காற்று வருடிச்செல்ல தொந்தரவு இன்றி அழகான வானை ரசிக்க பாக்கியம் கிடைக்கும்.
திருமணம் என்றதும் நினைவில் வரும் மணமகளின் மேக்கப் குலையாத பொலிவான முகம் போல இரவு வானம் என்றதுமே நிலவு எம் நினைவில் வந்துவிடுகிறது. நிலவற்ற இரவை எவராலும் கொண்டாடித் தீர்க்க முடியாது. நிலவற்ற இரவைப் பார்க்கும் ஒரு யோகியின் மனத்திலும் வானம் நிர்வாணமாகவே தெரியும். உம்மாவோ, வாப்பாவோ நீங்கள் யாரைத்தான் உலகில் அதிகமாக நேசித்தபோதிலும் நிலவில் எப்போதுமே அவர்களில் எவரது முகத்தையும் உங்களால் கண்டுகொள்ளவே முடியாது.
அது உங்கள் காதலியின் முகத்தையோ, அல்லது கனவில் தினமும் நீங்கள் காணும் அந்த தேவதையின் முகத்தையோ, அல்லது தெருவோர ஜனத்திரளில் ஒரு கடைக்கண் பார்வையில் உங்களை கலங்கடித்துச் சென்ற அந்த முகத்தையோ தவிர வேறு எதையுமே பிரதிபலிப்பதில்லை. நிலவின் தன்மை இப்படிப்பட்டது. இரவு வானம் பார்த்தலில் எப்போதுமே இது நிகழ்கிறது.
உன்னுடைய நிலவில் எவள் தெறிகிறாள் என்று என்னிடம் கேட்காதீர்கள். இன்று அமாவாசை.....
No comments:
Post a Comment