ஊரும் உணவும்
சுமார் ஒரு 15 வருடங்கள் முன்னாடியெல்லாம் ஊரில் எங்கு பார்த்தாலும் பனை மரம் ஓங்கி வளர்ந்தது மட்டுமன்றி கூட்டம் கூட்டமாகவும் காணப்படும். ஆனால் தற்போதுள்ள ஊரை சுற்று சுற்றி எங்கு பார்த்தாலும் ஒரு பனையை காண்பது என்பது அதிசயம் போலத்தான் தெரிகிறது. அந்த அளவிற்கு உள்ளூர் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு தொகுதிகளால் நிறைந்து காணப்படுகின்றது.
அந்த நாளையில் பனையில் இருந்து பெறப்படும் உணவுகள் அந்த குறித்த சீசனில் எல்லோர் வீட்டிலும் உணவாக உண்ணப்படும். காரணம் இப்போது காண்பது போல பாஸ்பூட், பெக்கிங் பூட்டோ அவ்வளவாக காணப்படவில்லை. ஆதலால் சூழலில் அல்லது கிராமத்தில் கிடைக்கப்பெறும் உணவு பொருட்களை கொண்டுதான் அன்றைய காலை சாப்பாடு தயாரிக்கப்படும். அதிலும் நேற்றைய பழைய சோறு, கறி என்பனவும் சிலர் வீட்டில் விசேஷமாக பகிரப்படுவது வழமை.

ஆனால் இன்று இவையெல்லாம் ஒரு அருவெறுப்பான கலாச்சார நடைமுறையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இன்றுள்ள தலைமுறைக்கு. இதனை குறை காண முடியாது. இவற்றை ஏற்றுக்கொண்டு வாழப்பழகுவதே தலைமுறை இடைவெளியினை சற்று இல்லாமல் ஒழிக்க வாய்ப்பாகும்.
பனை உணவுகள்
பனையில் இருந்து பெறப்படும் உணவுகள் ஏராளம். அதில் பனம்பழம், நுங்கு, பனம் கிழங்கு, பனம் குருத்து, ஒடியல், முளைத்த வித்தை வெட்டி உள்ளீடு சாப்பிடுதல், பனம் பழத்தின் பாணியில் (சாறு) இல் இருந்து கரைத்த ஜூஸ், பனம் சோறு கரைத்தல் போன்ற உணவுகளையும் பெறமுடியும்.

இவற்றுக்கு மேலாக பனம் பழத்தின் சாற்றில் இருந்து கருப்பெட்டி (சக்கரை), கற்கண்டு, பனாட்டு, பனங்காய் பணியம் என்பனவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் முக்கிய சிலவற்றைப் பற்றி சற்று பார்ப்போம்.


பனம்பழம்

நல்ல சத்துமிக்க இயற்கை உணவு. குறிப்பாக பழம் பழுத்ததும் இயற்கையாகவே மரத்தில் இருந்து விழும். அதனை எடுத்து சாற்றை சாப்பிட முடியும். சிலர் இதனை நெருப்பில் வைத்து அதன் பசை தன்மை வெளியேற்றிய பின்னர் சாப்பிடுவார்கள். இவ்வாறு பெறப்படும் சாற்றை கொண்டுதான் பனங்காய் பணியம், பனாட்டு, கருப்பட்டி, மற்றும் பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றது.
நுங்கு
பனம் பழத்தின் இளம் காய் பருவம். வித்துக்கள் முதிர்ச்சி அடையாத நிலையில் வித்து உள்ளீட்டை தான் நுங்கு என்று கூறுவார்கள். சுவையா சாறு மற்றும் இளம் நிலை வித்து உள்ளீடு (வழுக்கள்) உணவாக எடுக்கப்படும். குறித்த காலங்களில் நுங்கு வெட்டி உண்பதற்காக இளைஞ்சர்கள் கூட்டமாக பயணங்கள் மேற்கொள்வது இன்றளவும் ஊரில் வழக்கமாக இருந்து வருகின்றது.
பனம் கிழங்கு
பழுத்த பனம்பழத்தில் இருந்து பெறப்படும் பனை வித்துக்கள் நாற்று மேடை அமைத்து முளைக்க விடப்படும். இதன்போது முளைக்கும் வித்துக்களின் வேர் பனங்கிழங்காக பெறப்படும். இதனை அவித்து உணவாக உண்பார்கள். இவற்றுக்கு மேலாக பனங்கிழங்கு மிகவும் போசணை மிக்க ஒரு கிழக்கு என்பதற்கு அப்பால் அதற்கென தனித்துவமான சுவையை கொண்டது.
ஒடியல்

பனங்கிழங்கில் இருந்து உற்பத்தி செய்யப்படும் காயவைத்து பதப்படுத்தப்பட்ட உணவே ஒடியல். மிகவும் நீண்ட காலம் பழுதுபடாமல் தன இயல்புநிலையில் காணப்படுவதனால் இதனை அரைத்து மா உற்பத்தி செய்வார்கள். ஒடியல் மிகவும் சுவையான ஒரு உணவுப்பதார்த்தம். உடலிற்கு நல்ல ஆரோக்கியமான கனியுப்புக்களை கொண்டுள்ளது. அத்தோடு சிறு கீறல்களாகவும் கீலங்கலாகவும் நறுக்கி உலரவைத்து பொதிசெய்து நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி கூட தற்காலங்களில் மேற்கொள்கின்றார்கள்.
பனம் சோறு
பனம்பழ சாற்றை பெற்று அதனை சோற்றில் கரைத்து பனம் சோறு என்று சாப்படிவார்கள். மிகவும் சுவையான உணவில் இதுவும் ஒன்றாகும். அதிக நார்சத்து உள்ளடக்கம் கொண்ட உணவு என்பதனால் உடல் ஆரோக்கியத்திற்கு வலுவூட்டும். அத்தோடு கிழக்குமாகான முஸ்லிம்கள் நோன்பு காலங்களில் அதிகாலையில் உண்ணும் உணவாக பனம் சோறு கரைத்து உண்பது ஒரு பாரம்பரிய வழக்காக இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
பனங்காய் பணியம்
பழுத்த பனம்பழத்தை எடுத்து அதனை நெருப்பு வெப்பத்தில் குறிப்பிட்ட நேரம் பேணுதல். இதன் நோக்கம் பனம்பழத்தில் இருக்கின்ற கசர் (கசப்பு தன்மை கொண்ட பால்) வெளியாகுவதற்கு. இவ்வாறு மேற்கொண்ட பின்னர் பழத்தில் இருந்து சாரை வேறுபிரித்து எடுத்தல். அதை வடிகட்டி அதில் காணப்படும் தும்பை பிரித்து தூய சாற்றை எடுத்தல். கோதுமை மா (500g), சீனி (300g), தேங்காய் பால் (ஒரு தேங்காய்), ஈஸ்ட் சிறிதளவு, உப்பு (தேவையான அளவு) இவற்றை ஒன்றாக கலந்து (Beating) கலவையாக்குதல். பெறப்பட்ட கலவையில் பனம்பழத்தின் சாற்றை கலந்து சிறு சிறு உருண்டை பிடிகளை தயாரித்து எண்ணையில் இட்டு பொறித்தல். செஞ்சிவப்பு நிறமாகும் வரை அந்த பண்டங்களை பொறித்து எடுத்து உண்பதற்கு தயாராக்குதல்.
(http://www.mutur-jmi.com/2018/10/palmyra-sweet.html)
தமிழ் இலக்கிய வரலாற்றில் பனம்பழம்
தமிழ் இலக்கியத்தில் ஔவையார் என்பது சிறப்பிடம் பெற்றுள்ள ஒரு பெயர். இவர் பாடியதாகக் கூறும் பல பாடல்களும், இவர் தொடர்பான பல கதைகளும் உள்ளன. இதுவும் அவ்வாறான ஒரு கதை:
புகழ் பெற்ற வாள்ளலான பாரி பறம்பு மலையின் வேந்தன். மூவேந்தர்களான சேர, சோழ பாண்டியர்கள் பாரியுடன் போர் தொடுத்து அவனைக் கொன்று அவன் நாட்டையும் கவர்ந்து கொண்டனர். பாரியின் பெண் மக்கள் இருவரும் அனாதைகளாகித் துயருற்றனர். அவர்களுக்கு மணம் முடித்து வைக்க ஔவையார் முன்வந்து திருக்கோவலூர் மலையமானுக்கு அவர்களைத் திருமணம் செய்ய ஒழுங்கு செய்தார். திருமணத்துக்காக மூவேந்தர்களுக்கும் அழைப்பு அனுப்பினார். திருமணத்துக்கு வந்த மூவேந்தர்கள் பனம்பழம் கேட்டார்கள். அது பனம்பழக் காலமல்ல. கேட்டதைக் கொடுக்காவிட்டால் பிரச்சினை வரக்கூடுமென உணர்ந்த ஔவையார். வெளியே கிடந்த பனை மரத் துண்டம் ஒன்றைப் பார்த்து,
திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்துநின்றார், மணப் பந்தலிலே
சங்கொக்க வெண்குருத்து ஈன்று, பச்சோலை சல சலத்து,
நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே!
என்ற பாடலைப் பாடவே பனந்துண்டம் முளைத்து வளர்ந்து பழம் ஈந்ததாம்.
யாழ்ப்பாணத்து நவாலியூர்ச் சோமசுந்தரப்புலவர் வாழ்ந்த காலத்திலே மேல்நாட்டு மோகம் அதிகரித்து உள்ளூர் உற்பத்திகள் நலிவடைந்து, மரபுவழிப் பழக்க வழக்கங்களும் மதிப்புக் குறைவானவையாகக் கருதப்பட்டன. அக்காலத்தில் பனையின் உற்பத்திகளைப் பிரபலப் படுத்துவதற்காக அவர் பாடிய பின்வரும் பாடலிலே மேற்காட்டிய ஔவையாரின் பாடலை எடுத்துக்காட்டியுள்ளார்.
திங்கட் குடையுடைச் சேரனும், சோழனும்,
பாண்டியனும் ஔவை சொற்படியே
மங்கலமாயுண்ட தெய்வப் பனம்பழம்
மரியாதை அற்றதோ ஞானப் பெண்ணே
ஆனால் இன்றுள்ள தலைமுறைக்கு பல பாரம்பரிய உணவுகள் கிடைக்காமல் போய்விட்டது. இதனை அதிஷ்டமோ அல்லது துரதிஸ்டவசமோ என்று ஒருபோதும் கூறமுடியாது. ஆனாலும் சில கிராமிய புறங்களில் இவ்வாறான உணவுகளை உண்டு அன்றாட வாழ்வை நடத்தும் ஊர்கள் இலங்கை மண்ணில் இருக்கத்தான் செய்கின்றது. என்ன கவலை என்றால் இடைப்பட்ட தலைமுறைகள் இவ்வாறான பல பாரம்பரிய அம்சங்களை அனுபவித்து ருசி கண்டதனால் இன்றளவு இவ்வாறான அனுபவங்களை எண்ணிப்பார்பதோடு கடந்து செல்கின்றார்கள்.
No comments:
Post a Comment