
பகுத்தறிவு போன்றே இயற்கை விஞ்ஞானம், பெளதீகவியல் போன்ற அறிவுத் துறைகளும் அன்று இன்றைய காலம் போல பாரிய வளர்ச்சியை அன்று எய்தியிருக்கவில்லை. இதன் காரணமாக தாம் பரிசீலிக்கும் விடயங்களை விஞ்ஞான ரீதியாக துல்லியமாக பண்டைய இஸ்லாமிய அறிஞர்களினால் கணிக்க முடியவில்லை. இதன் காரணமாகவும் அறிவுக்கு பொருந்தாத விடயங்கள் பழைய அறிவு முதுசங்களில் இடம் பெற ஆரம்பித்தன.
பண்டைய இஸ்லாமிய அறிஞர்கள் முர்ஜிஆ, ஷிஆ, கவாரிஜ், ஜஹ்மிய்யா, கத்ரிய்யா போன்ற பல்வேறுபட்ட முரண்பட்ட சிந்தனைப் போக்கினருடன் மோதினார்கள். ஒன்றுக்கொன்று மாறுபட்ட சிந்தனைப் போக்கு கொண்ட குழுவினர் இவர்கள். இதன் காரணமாக பழைய அறிவு முதுசங்களில் இவர்களுடனான கருத்தியல் போர் பெரியதொரு பரப்பை கைப்பற்றிக் கொண்டது. இதன் காரணமாக அறிஞர்கள் தமது ஆய்வுப் பொருளின் மையச் செய்தியை விட்டும் மிகவும் சேய்மைப்பட்டுப் போய் தேவையற்ற பல்வேறு விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.
மேற்குறிப்பிட்ட சிந்தனைப் போக்கினரில் ஷிஆ, கவாரிஜ் போன்றவர்கள் பல்வேறுபட்ட ஸஹீஹான ஹதீஸ்களையும் மறுத்தார்கள். இதன் காரணமாக ஹதீஸ்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு பழைய இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஏற்பட்டது. போற்றத் தக்க இப் பணியை அவர்கள் செய்தாலும் சில பொழுது இவர்கள் இந்த விவகாரத்தில் அதீதமாக நுழைந்தார்கள். அறிவிப்பாளர் வரிசையை பல நூறு முறை சலித்துப் பார்த்து ஹதீஸ் ஒன்றின் ஏற்பு, நிராகரிப்பை தீர்மானித்தவர்கள் மத்ன் எனப்படும் ஹதீஸ் உள்ளடக்கத்தை திறன்பட பரிசீலிக்க தவறி விட்டார்கள். இதன் காரணமாக அல் குர்ஆனுக்கும், நன்கறியப்பட்ட வரலாற்றுக்கும், தீர்க்கமான விஞ்ஞான மெய்மைகளுக்கும் முரணான அறிவுப்புகள் ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பிடிக்கத் துவங்கின.
மத்ஹப் வாதிகள், சூஃபிகள், ஸலபிகள் போன்றவர்களின் சிந்தனைச் சிக்கல்களின் மூலவேரும் மேற்குறித்த அறிவு முதுசங்களில் உள்ள அறிவியல் நெருக்கடி தான் என்பதை எம்மால் தீவிர பரிசீலனையின் பொழுது கண்டு கொள்ள முடிகிறது.
கற்றதையும் பெற்றதையும் வைத்துத்தான் இவற்றை எல்லாம் பேசுகிறேன். ஷெய்க் அக்ரம் ஸமத் உஸ்தாத் மன்சூரை பார்த்து இப்னு தைமிய்யா, நவவி, கராஃபி, ஷாதிபி போன்றோரை கற்குமாறு கோரியது அதிகப் பிரசங்கித் தனம். தவிர பல தவறான எண்ணங்களை பொது மன்றத்தில் ஏற்படுத்தக் கூடியது அது. பாரம்பரியம் - நவீனம் இரண்டுக்கும் இடையே சமநிலைத் தன்மையை ஒருவர் பேண வேண்டுமெனில் அவர் இரண்டையும் (அதாவது பாரம்பரிய சிந்தனை, நவீன சிந்தனை) கற்றிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment