
தமிழ் சினிமா உலகில் சில திரைப்படங்கள் உண்மையில் சமூகத்திற்கு கூறமுனையும் பொருள் ஏராளம். இருந்தும் அவை புதுமுக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களினால் சமர்பிக்கப்படுவது ஒருவகை புதுமைதான்.
எனக்கு தமிழ் சினிமா விமர்சனம் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. ஆனாலும் முகநூல் நண்பர்களின் விமர்சனங்களை copy செய்து Modified செய்து அவர்களின் பெயருடன் பதிவு செய்வேன். அவ்வாறு அண்மைக்காலமாக
Sabarullah Caseemஅவர்களின் தமிழ்சினிமா விமர்சனம் என்னை வெகுவாக கவர்ந்தது இழுக்குகின்றது. அவ்வகையில் இன்று
#பரியேறும்_பெருமாள் - சாதியத்தின் கோர முகம்
============
“தம்பி எம் பொண்ணு ஒம்மேலே இவ்வளவு பைத்தியமா இருக்காளே…அதே மாதிரி அவ மேலே ஒனக்கு எந்த நெனப்பும் வரவேயில்லையா……….”
“தெரியல்ல சேர்……..அத என்னன்னு தெரிஞ்சிக்குறதுக்கள்ளதான் நாயடிச்சிற மாதிரி அடிச்சி ரத்தமும் செதலுமா அப்படியே கிழிச்சிட்டிங்களே. ஆனா ஒங்க பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ சேர்….அவ நெனச்சத நெனச்ச எடத்துல பேச முடியுதுல்ல…..ஆனா என்னப்பாருங்க நான் என்ன நெனச்சாலும் அதச் சொல்லுறதுக்குள்ள செத்து தொங்க வேண்டியதா இருக்கு.
“சாரிப்பா நீ ரொம்ப நல்ல பையன்….நீ ஆசப்பட்ட மாதிரியே வாழக்கைல பெரிய ஆளா வருவே….நல்லாப் படி…..இப்போதைக்கு என்னால இவ்வளவுதான் சொல்ல முடியும்….வேற என்ன சொல்லுறது……பாக்கலாம்…நாளக்கி எது வேணாலும் எப்படி வேணாலும் மாறலாமில்லையா…..யாருக்குத் தெரியும்”
“எனக்குத் தெரியும் சேர்….நீங்க நீங்களா இருக்கற வரைக்கும் நான் நாயாதான் இருக்கனும்னு எதிர்பாக்குற வரைக்கும் இங்க எதுவுமே மாறாது. இப்படியேதான் இருக்கும்”.
என்று பரியேறும் பெருமாள் பீஏபீஎல் படத்தின் ஹீரோ பரியேறும் பெருமாளுக்கும் ஹீரோயின் ஜோதிமகாலட்சுமியின் தந்தைக்கும் நடக்கின்ற கடைசிக்கட்ட உரையாடல் முடிவடைகின்ற இடத்தில் பக்கத்திலிருக்கின்ற டீக்கடையிலிருந்து அப்பாவுக்கும் பரியனுக்கும் மகாலட்சமி தேநீர் கொண்டு வருவார்….அப்போது பச்சைக்காயத்தில் குணடூசி குத்துவது மாதிரி சந்தோஷ் நாராயணின் இசையில் பின்னணயில் ”வா ரயில் விடப்போலாமா….ஒனக்கின்னும் கோவமா…..மன்னிச்சிடு போலாமா….ஏன் எட்டி நின்னு பாக்குற நீ…கை புடிச்சி போவோமே…” என்று பாடல் ஒலிக்கும்.
அத்தோடு பரியன் ஜோதிமகாலட்சமி அவளது தந்தை மூவரும் ஒன்றாக நடந்த செல்லுவதோடு படம் முடிந்து விடகின்றது. படம் முடிந்த பின்னரும் மனசுக்குள்ளே ரீ வைன்டில் மீண்டும் ஓட ஆரம்பித்து விடுகின்றது மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் பீ ஏ பீ எல்.
மனசுக்கு மிக நெருக்கமாக இந்த வருடம் உணர்ந்த படங்களில் பரியேறும் பெருமாளுக்கு முதலிடம் என்பது மிகைப்படுத்தப்பட்ட தொன்றல்ல. இது வரைக்கும் எத்தனையோ சாதி சார் திரைப்படங்களை பார்த்தாச்சு…தேவர் மகன்….அய்யா…….பாரதி கண்ணம்மா…..என்று நீண்டு செல்லுகின்ற பட்டியலில் பரியேறும் பெருமாள் யதார்த்த்த்துக்கு மிக நெருக்கமாகவும் அதீத கற்பனைக்கு ரொம்ப தூரத்திலும் லொஜிக் மீறாதிருப்பதனையும் உணர்ந்து கொண்டென்.
இந்த மாதிரியான யதார்த்த சினிமாவோடு உரையாடல் செய்வதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். தமிழகத்தில் இரத்த வெறி கொண்ட ஸோம்பிகளாக அலைந்து திரிகின்ற சாதிக் கொடுமை எப்படி சாதாரண மனித வாழ்வின் மீதேறி ரத்தமுறிஞ்சி மனிதர்களை வேட்டையாடித் தின்று திர்த்துக் கொண்டிருக்கின்றது என்பதனையும் ஆக்க் குறைந்தது தாம் விரும்பிய வாழ்வை வாழ முடியாமலே காலத்தை காவு கொடுக்கச் செய்கின்ற சாதிக்கொடுமையின் அகோர முகத்தை மிக நுணக்கமான அரசியல் மூலம் மிக ஆழமாக காட்டிச் செல்லுகின்றான் பரியேறும் பெருமாள்.
படத்தின் ஆரம்ப கட்டத்திலேயே ஆசை அசையாய் வளர்த்து காதல் செய்கின்ற கறுப்பி என்கின்ற நாயை உயர் சாதி எனப்படுகின்ற வெறியர்கள் இரக்கமேயில்லாமல் தண்டவாளத்தில் கட்டி வைத்து விட்டுச் செல்லவதும். அதிவேகமாக ரயில் வருகின்ற போது நாயையும் ரயிலையும் பார்த்த நாயைக்காப்பாற்ற முடியாமல் கண் முன்னே நடக்கின்ற அந்த கொடூரமான மரணத்தை பார்க்கின்ற நாயகனின் கதறல் ஒலியும் அதன் பின்னே வருகின்ற கருப்பியே பாடலும் சாதியத்தின் உச்ச பட்ச கொடுமையை ஒரு நெடுந்தொடராக எழுதிச் சென்று விடுகின்றது.
மிகப் பெரிய மனித உரிமை மீறலாகவும், மிகப் பெரிய அடிப்படை உரிமை மீறலாகவும் கோலோச்சிக் கொண்டிருக்கின்ற சாதியம் என்கின்ற மிருகம் தமிழக சூழலில் தாழ்த்தப்பட்டவர்களின் குரல் வளையை எப்படி கடித்துக்குதறிக் கொண்டிருக்கின்றது என்பதனை மாரி செல்வராஜின் ஆர்ப்பாட்டமில்லாது சொல்லுகின்ற திரை மொழி மனசின் ஆணி வேரை குலையறுத்துச் செல்லுகின்றது.
படத்தில் மேல் சாதிக் கிழவனொருவன் தாழத்தப்பட்டவர்களை அவ்வப்போது மிக நுணுக்கமாக யாருக்கும் தெரியாத மாதிரி சாதாரண மரணம் மாதிரியான செட்டப்பில் கொலை செய்து கொண்டிருப்பான்…..இப்படியே மூன்று கொலைகளை நிகழ்த்திவிடுவான். ஒரு கட்டத்தில் கீழ் சாதிப் பையனான பரியனை கொலை செய்கின்ற புனிதச் செயலை உயர்சாதி வகுப்பினர் அந்தக் கிழவனிடம் பொறுப்பு கொடுக்கின்ற போது கிழவன்” இத நம்ம குலசாமிக்காக ஒரு கடமையா செஞ்சிட்டு வாரன்’ என்பான். எனக்கு பகீரென்றது.
சக மனிதனை சாதியின் பெயரால் துடிக்கக் துடிக்கக் கொல்லுவது குலசாமி சேவை என்று அதற்கு கடவுள் சாயம் பூசுகின்ற கண்றாவி பகீரென்கின்றது. ஆனால் அதுதான் யதார்த்தம்…சாதியம் என்பது மதம் சார்ந்த ஒரு புனிதப் பொருளாக இருப்பதனை பரியேறும் பெருமாள் படம் பிடித்துச் செல்லுகின்றது.
சாதியத்தின் பெயரால் கழுத்தில் கால் வைத்து மிதித்து அடக்கி ஒடுக்கப்படப்ட ஒரு சமூகத்தின் எழுச்சி அந்தச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் மட்டுமே தங்கியிருக்கின்றது என்கின்ற அம்பேத்காரின் கருத்தியலை மீள வலியுறுத்தகின்ற அதே வேளை, சாதியின் அடிப்படையில் வரையப்பட்டு மனிதர்களை வளைத்துப் போடப்பட்டிருக்கின்ற மின்சார வட்டத்தினை விட்டு அவரவர் வெளியே வருவது மரண தண்டனையால் தண்டிக்கப்படக் கூடிய குற்ற்மென்பதனையும் பரியன் நமக்கு பாடம் சொல்லுகின்ற போது துயரம் தொண்டையை கசாப்புக் கடையாக்குகின்றது.
பரியனை மகாலட்சுமி தன் வீட்டுக் கல்யாணத்துக்கு அழைத்திருப்பாள். அவனும் பரிசுப்பொதியோடு கல்யாண மண்டபம் சென்றிருப்பான். கல்யாண மண்டபத்துக்கு சென்றவனை தனியே அழைத்துச் சென்று ஒரு சிறு அறைக்குள்ளே போட்டு உயர்சாதி வெறியர்கள் அடித்து துவம்சம் செய்து அவன் மீது ஒன்னுக்கடிக்கின்ற காட்சியின் போதும், அதே போல பரியனிடம் உயர் சாதிப் பெண்ணான ஜோதி மகாலட்சுமியின அப்பா “டேய் என்ட மகளோட சகவாசம் வெச்சுகாகதடா…ஒன்ன மட்டுமல்ல என்ட பொண்ணையும் சேத்த கொன்னுருவாங்கடா” என்று அவளது அப்பா பரியனிடம் தலையிலடித்துக் கொண்டு ஆவேசப்படுகின்ற போதும் சாதியத்தின் கோர முகம் நம்முகத்தின் மீது ச்சுவை பீய்ச்சி அடிக்கின்றது.
தாழ்ந்த சாதி உயர்சாதி என்று எல்லா மனிதர்களுமே ஒரு விஷ வட்டத்துக்குள்ளே வீழ்த்தப்பட்டுக் கிடக்கின்றார்கள் என்பதுதான் யதார்த்தம். அந்த வட்டத்தைத்தாண்டி யாரும் வெளியே வருவது மிகப் பெரும் குற்றம்….உயர்சாதி உட்பட. சாதிப் பிரச்சினை அது ஒரு கூட்டப்பிரச்சினை….ஒவ்வொரு தனி நபர்களின் சொந்தப் பிரிச்சினையும் சமூகப் பிரச்சினையாக நோக்கப்பட்டு வாழ்வதற்கான உரிமை முற்றிலும் பறிக்கப்ப்டுகின்ற பேரவலம்.
அவரவர் வட்டத்துக்குள்ளே அவரவர் வாழ வெண்டுமென்பது எழுதப்படாத கொடூரமான விதி. வேரறுக்கின்ற சாதியப் பிரச்சினைக்கு வழக்கமான மாமூல் சினமா போல எந்விதமான அதிரடித் தீர்வும் தராமல் “இங்கே மனிதர்கள் மாறாத வரை அடுத்தவனை நாயாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் வரை…..இங்கு எதுவுமே மாறி வடாது” என்ற வசனத்தோடு படத்தை முடிக்கின்ற போது வலி மட்டுமே நமக்குள்ளே எஞ்சி நிற்கின்றது.
படத்துக்க மிகப் பெரிய பலம் சந்தோஸ் நாராயணின் இசையும் ஒளிப்பதிவும்.
No comments:
Post a Comment