
உள்ளிருந்து உடைக்கப்பட்டால் அங்கு மற்றொரு வாழ்வு தொடங்குகிறது.(முஸ்தபா காஷிமி)
ஒரு சமூகத்தை ஏனைய சமூகங்கள் விமர்சிக்க முன்,அடித்து நொறுக்க முன் அச்சமூகத்தின் உள்ளிருந்தே சுயவிமர்சனங்களும்,அடித்து நொறுக்குதல்களும் ஏற்பட்டால் அச்சமூகம் பாதுகாப்படையும்.
நவீனத்துவ இஸ்லாமிய சிந்தனை என்பது 21 ஆம் நூற்றாண்டின் பின்னர் விரிவாக்கம் பெற்று வருவதாக பலர் கருதலாம். ஆனாலும் இவை வெறும் மாயை தோற்றநிலையைத்தான் முன்னிலை படுத்துகிறது.
அதாவது நவீன இஸ்லாமிய சிந்தனை சமகாலத்தின் நிகழ்வே இல்லை என்பது எனது கருத்து. காரணம் நாம் இன்னும் ஆய்வு ரீதியான தலைமுறை சந்ததியை கொண்டமையவில்லை. இருந்தும் கருத்தியல் ரீதியான சந்ததியின் தேக்கத்தில் தான் நீந்திக்கொண்டு இருக்கிறோம். அவற்றுக்கிடையே ஜமாஅத் முறைபாடுகள் வேறு...
மரபு வழி, நவீனத்துவ வழிமுறை என்பது தலைமுறை சார்ந்தும் கால வோட்டம் சார்ந்தும் நிலைகொள்ளும் ஒரு கானல் நீர் எனலாம். அல்குர்ஆனிய சிந்தனையில் நாம் இதுவரை மரபு வழியான ஆய்வைத்தான் முன்வைத்து வந்துள்ளோம்.
ஆனாலும் நீங்கள் மேற்கூறிய நவீனத்துவ அறிஞர்கள் எவருமே ஆய்வு ரீதியா சிந்தனை எழுச்சியை விதைக்கவில்லை. மாறாக மரபில் இருந்து எவ்வாறு விடிபடவேண்டும் என்ற சிந்தனையை எமக்கு தந்துள்ளார். அதைக்கொண்டுதான் இதுவரை எமது கருத்தியல் வெளிப்பாடுகளை வெளியீடு செய்து வந்துள்ளோம்.
என்னை பொறுத்தவரையில் நவீன இஸ்லாமிய சிந்தனை என்ற வார்த்தை பிரயோகம் சமகால சூழலில் பொருத்தாப்பாடில்லை. காரணம் நாம் இன்னும் அதற்குள் நுழையவே ஆரம்பிக்கவில்லை. மாறாக ஆங்காங்கே எத்தனித்துக்கொண்டு இருக்கிறோம்.
நவீன இஸ்லாமிய சிந்தனை அணியினர் பல்வேறுபட்ட சமூக, அரசியல் காரணிகளால் மத்திய கிழக்கு நாடுகளில் குடியேறியமை தான் சவூதியிலும் இதர குவைத், கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் பல்கலைக்கழகம் போன்ற நவீனத்துவ கட்டமைப்புகள் முறையாக உருவாக காரணமாக அமைந்திருந்தது.
நவீன இஸ்லாமிய சிந்தனையின் முக்கியமான தோற்ற மூல நாடுகளாக எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளை கூறலாம் (சிரியா என்றால் கூடவே அது லெபனான், ஜோர்தான், பாலஸ்தீனம் போன்ற பண்டைய 'ஷாம்' பகுதிகளையும் குறிக்கும்).
உதாரணமாக ஷெய்க் யூசுஃப் அல் கர்ளாவி ஒரு எகிப்தியர் ; முஸ்தபா ஸிபாஈ ஒரு சிரியர் ; ஷெய்க் மஹ்மூத் முஹம்மத் அல் ஸவ்வாஃப் ஒரு ஈராக்கியர்.
நவீன இஸ்லாமிய சிந்தனையினரில் அல் அஸ்ஹர், ஸைதூனா, அல் கரவிய்யீன் போன்ற பழம் பெரும் பல்கலைக்கழகங்களில் ஷரீஆ பட்டம் பெற்றவர்களும் இருந்தனர் ; மேற்கு நாடுகளில் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களும் காணப்பட்டனர் (ஷெய்க் தர்ராஸ் போன்றவர்கள் இரண்டு வகையான பல்கலைக்கழகங்களிலும் பட்டம் பெற்றவர்கள். மேற்கினதும் கிழக்கினதும் நுட்பமான இணைப்பு).
சவூதி அரேபியா இந்த நவீன இஸ்லாமிய சிந்தனை அணியினரை பயன்படுத்தியே தனது நாட்டினுள் நவீனத்துவ கட்டமைப்பை உருவாக்கியது. மன்னர் ஷுஃத், மன்னர் பைஸல் போன்றவர்கள் நவீனத்துவ சீர்திருத்த நோக்கு கொண்டவர்களாக இருந்தார்கள் (அதாவது சவூதி அரேபியா உள்ளூர் அளவில் வஹ்ஹாபிஸமாகவும், International Appearance இல் ஒரு நவீன நாடாகவும் இவர்கள் காலத்தில் காணப்பட்டது).
ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி, முஹம்மத் குத்ப், முஸ்தபா அஹ்மத் ஸர்கா, ஸெய்யித் ஸாபிக், மன்னாஉல் கத்தான் போன்ற அறிஞர்கள் சவூதி பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர்கள். மதீனா பல்கலைக்கழகத்திற்கான திட்டவரைபை மன்னர் பைஸல் மெளலானா மெளதூதியிடம் தான் வழங்கி இருந்தார்.
பிற்பாடு சவூதியில் உருவாக்கப்பட்ட ராபிததுல் ஆலமுல் இஸ்லாமி நவீன இஸ்லாமிய சிந்தனைக்கும், ஸலபி சிந்தனைக்கும் இடையிலான இணைப்புப் பாலமாக திகழ்ந்தது.
ஆனால் இதனால் ஒரு நுட்பமான எதிர்மறை பாதிப்பு நவீன இஸ்லாமிய சிந்தனைக்கு ஏற்பட்டது. குறிப்பாக இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தினுள் இந்த மத்திய கிழக்கிற்கான குடியகல்வு ஒரு சிந்தனை ரீதியான பின்னடைவை ஏற்படுத்தியது.
மன்னர் பைஸல் தனது நவீனத்துவ திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் இஹ்வானுல் முஸ்லிமூன் புத்திஜீவிகளை சவூதிக்குள் உள்வாங்கி நாடோடி சமூக இலட்சியங்களை கொண்ட வஹ்ஹாபிஸ அணியினரை விளிம்புக்குத் தள்ளினார் என்றாலும் அன்றைய உலக சூழலில் இஹ்வான்களின் சாத்தியமான ஒரே தெரிவு மற்றும் புகலிடம் சவூதி அரேபியாகவே இருந்தது.
ஹஸன் அல் பன்னா, ஸெய்யித் குத்ப் போன்றவர்களின் படுகொலை மற்றும் பேரளவில் இஹ்வானிய தலைமைகளை சிறையிடப்படல் போன்ற நிகழ்வுகளின் பின்னணியிலேயே இஹ்வான்கள் தமது சொந்த நாடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. அப்படி வெளியேற நேர்ந்த இஹ்வான்களினால் அன்றைய உலக சூழலில் மேற்கு நாடுகளில் பாரியளவுக்கு குடியேற முடியவில்லை (ஹஸன் அல் பன்னாவின் மருமகனான டாக்டர் ஸஈத் ரமழான் போன்ற ஒரிருவர்களால் மட்டுமே தங்களது தொடர்புகளை பயன்படுத்தி மேற்கு நாடுகளில் குடியேற முடியுமாக இருந்தது).
ஏனைய வட ஆப்பிரிக்க நாடுகளும், ஈராக்கும், சிரியாவும் இஹ்வான் விரோத அரசுகளாகவே அன்று (இன்றும் தான்) காணப்பட்டது. எனவே இஹ்வான்கள் தவிர்க்க முடியாத ஒரே தெரிவாக மத்திய கிழக்கு நாடுகளில் குடியேறினார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் மன்னராட்சிகள் தான் நிலவி வருகிறது. புகலிடம் தேடி அங்கே புகுந்த இஹ்வான்கள் தவிர்க்க முடியாது மன்னராட்சியை அனுசரித்து போக வேண்டி வந்தது.
அதாவது கோட்பாட்டு அளவில் மன்னராட்சியை ஏற்றுக் கொண்டு அதனை துதிபாடும் (ஸலபிகளை போல) வேலையை இஹ்வான்கள் எதிர்க்கவில்லை என்றாலும் நடைமுறை ரீதியாக மன்னராட்சியை இந்த மத்திய கிழக்கு Diaspora இஹ்வான் எதிர்க்கவும் இல்லை. அவர்கள் சூழல் அப்படியான வாழ்வா, சாவா நிர்ப்பந்த நிலையாக இருந்தது.
அதாவது மத்திய கிழக்கு இஹ்வான்கள் கோட்பாட்டு அளவில் Status Quoyist கள் அல்லர். ஆனால் நடைமுறையில் Status Quoyist கள். இதன் காரணமாக மத்திய கிழக்கு முதல் தலைமுறையினரை அடுத்து வந்த இஹ்வான் பரம்பரை ஸலபி சிந்தனை தாக்கத்துடன் தான் உருவானது. வளர்ந்தது. நிலைபெற்றது. இதன் காரணமாக மத்திய கிழக்கு இஹ்வானிய சிந்தனையில் ஒரு இறுக்கமான தன்மையும், Status Quo தன்மையும் உருப் பெற்றது. இந்த தாக்கம் இலங்கையிலும் உள்ள நவீன இஸ்லாமிய சிந்தனை அணியினரை பாதித்தது.
இலங்கையில் இருந்து இஹ்வான்களை தொடர்பு கொண்டவர்கள் மத்திய கிழக்கின் ஸலபி சிந்தனை பாதிப்பு கொண்ட இரண்டாம், மூன்றாம் தலைமுறை இஹ்வான்களையே தொடர்பு கொண்டார்கள். எகிப்திய, சிரிய, ஈராக்கிய இஹ்வான்களை தொடர்பு கொள்ள அன்றைய சமூக சூழல்களினால் பெருமளவுக்கு முடியவில்லை (குத்து மதிப்பாக இதனை 1970 களுக்கு பிறகு எனலாம். அதற்கு முந்தைய ஜமாஅதே இஸ்லாமி ஒரு அரசியல் இஸ்லாம் + அரை ஸலபிசத்தின் விநோநமான கலவை)
இலங்கையின் அப்போதைய நவீன இஸ்லாமிய சிந்தனை அணி என்பது ஜமாஅதே இஸ்லாமி மற்றும் உஸ்தாத் மன்சூரின் பின்பற்றாளர்கள் இருவரையும் தான் குறிக்கும்.
மத்திய கிழக்கில் இருந்து தான் இலங்கைக்கு 'நவீன' இஸ்லாமிய சிந்தனையும் வந்தது. நிதியுதவிகளும் வந்தது (சிந்தனை பாதிப்பை நான் எதிர்மறையாக நோக்கினாலும் நிதியுதவியை நான் அப்படி நோக்கவில்லை. அதற்கு பால காரணங்கள் உண்டு. இந்த பதிவுக்கு அவை அநாவசியம்). இதன் காரணமாக இலங்கையின் நவீன இஸ்லாமிய சிந்தனை என்பதே அதன் ஆரம்ப கட்டத்திலேயே ஸலபி சிந்தனை தாக்கத்துடன் தான் உருவாகி வந்தது.
எகிப்திய இஹ்வான்களின் நவீனத்துவ பார்வை, விரிந்த பார்வை, சமநிலை தன்மை எல்லாம் இவ்வகையில் தான் இலங்கை நவீன இஸ்லாமிய சிந்தனை அணியினருக்கு மத்தியில் தவறிப் போனது. இதன் நீட்சியான இலங்கையின் மரபு வாத இஸ்லாமிய சிந்தனையுடன் இங்குள்ள நவீன இஸ்லாமிய சிந்தனைக்கு ஒரு உரையாடலையும் ஆரம்பிக்க முடியவில்லை. பிற்போக்குத்தனமான முல்லா கருத்தியல் தரப்புகளை எதிர்த்து களமாடவும் முடியவில்லை. (தமிழக ஜமாஅதே இஸ்லாமியின் நிலையும் ஏறத்தாழ இப்படியானதே. ஆனால் கேரளா ஜமாஅதே இஸ்லாமி ஆரம்ப காலத்திலேயே எகிப்திய இஹ்வான்களுடன் தொடர்பு கொண்டு தன்னை வளப்படுத்திக் கொண்டது. கேரள ஜமாஅதே இஸ்லாமியின் முற்போக்கான கூறுகளின் பின்னணி இது தான்).
இலங்கையின் நவீன இஸ்லாமிய சிந்தனை அணிக்குள் உள்ள இந்த ஸலபித்துவ, அரை ஸலபித்துவ, நவீனத்துவ கூறுகளின் முரணியக்கத்தினை ஜாமிஆ நளீமிய்யா பிற்பாடுகளில் ஓரளவுக்கு சமரசப்படுத்தியது. 1990 களுக்கு பிறகே இது நிகழ்ந்தது. ஆனால் இதிலும் ஏற்றம், இறக்கம், வளர்ச்சி, தேய்வு அனைத்தும் உண்டு. இஹ்வானிய சிந்தனை பரம்பல் குறித்த உஸ்தாத் ஜமால் அல் பன்னாவின் பார்வைகளின் அடியானதே இந்த ஆக்கம். இன்றைய நிலையில் இலங்கையில் நவீன இஸ்லாமிய சிந்தனையின் விமர்சன சிந்தனைக்கான கூறான 'புதிய அலை' நவீன இஸ்லாமிய சிந்தனை முகாம்களில் கலந்திருக்கும் அதன் மூலப் படிவ சிந்தனைக்கு முரணான கூறுகளை களைய ஒரு உரையாடலை ஆரம்பிக்க வேண்டும்.
இந்த முரணியக்க உரையாடல் மூலமாகவே இலங்கையின் முஸ்லிம் கலாசார எதிர்காலம் வளமாக முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்...!
No comments:
Post a Comment