
ஆங்கிலத்தில் : கிறிஷ் ஹெட்ஜஸ்
தமிழில் : மிஹாத்
பிப்டி ஷேட்ஸ் ஓப் கிரே எனும் நூல் உடல்களுக்கிடையில் நிகழ்த்தப்படும் கொடுஞ் செயல்களைக் கொண்டாட்டக் கருவாகக் கொண்டது. இந்நூலிலுள்ளவை பின்னர் சினிமாவாகவும் உருவாக்கப்பட்டது. இவை தீவிர ஆபாச சினிமாவினதும் உலகளாவிய முதலாளித்துவத்தின் ஆதரவோடும் அமெரிக்க நோய்மைக் கலாசார அபிலாசைகளை எடுத்துரைக்கிறது. இத்திரைப்படம் பெண்ணை சக மனிதனாக நோக்கும் பழக்கத்தை மறுத்து விடும் கொண்டாட்டங்களை உருவாக்குகிறது. இது வெறுமையான கருணையினாலும் அத்துமீறிய காதலாகவும் உலக மனங்களை வெல்ல முயல்கிறது. இந்த சினிமாக்கள் ஆண்களின் அதீத காமத்தையும் மட்டற்ற பாலியல் வேட்கையையும் வன்மம், துன்புறுத்தல், பலாத்காரம் போன்றவையூடாகத் தீர்த்துக் கொள்வதற்காக பெண்ணுடலை விளையாட்டுப் பண்டமாக்குகிறது.
அதற்காக பெண்ணின் உயிர்ப்பான ஆளுமையை நீக்கம் செய்யும் கருத்தியலை நீலப்படங்கள் உருவாக்குகின்றன. இதன்போது அத்துமீறல்கள் யாவும் ஆண்மையின் காம லீலைகள் என்பதான கண்ணோட்டத்தைப் பெறுகிறது. இச்செயலானது நலிவானவர்களைச் சுரண்டிக் கொன்றுண்ணும் அதிகார வர்க்கத்தின் உலகியல் வன்முறை நியாயங்களை தெய்வச் செயல் போல ஏற்றுக் கொள்வதற்கான பண்பாகத் திரள்கிறது. இன்றைய முதலாளித்துவ நரகத்தை இந்தப் படைப்புகள் இயல்பானதெனவும் சிறப்பானதெனவும் ஆசீர்வதிக்கின்றன. இங்கு சுயம் சிதைந்த பெருமகிழ்வினால் நமது கண்கள் குருடாக்கப்பட்டுள்ளன.
தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள், ராட்சத விளையாட்டு விநோதங்கள், சமூக வலைத்தளங்கள், ஆபாச சினிமா, மயக்கும் ஆடம்பர உற்பத்திப் பொருட்கள், போதைவஸ்துகள், மது இவை யாவும் அவற்றின் மூர்க்கமான ஈர்ப்பின் வழியே எதார்த்தச் சூழலை அப்புறப்படுத்தி விட்டன. நாம் பிரபலமான கேளிக்கைப் புள்ளியாகவும் பெரும் பணக்காரர்களாகவும் இருக்கவே ஏங்குகிறோம். இன்றைய வாழ்க்கையை பரிதாபகரமாகச் சிதைத்து நசுக்குவதினை ஆபாச சினிமாத்துறை ஈர்க்கும் தகுதியாகக் கொண்டுள்ளது. இந்தப் பேரவலமானது கூட்டான மாயைகளின் அடையாளமாக இருப்பதுடன் பொய்யான சூழ்ச்சித் திட்டங்களைத் தாண்டிய கலாசார செயல் முறையாகவும் உள்ளது.
பாலியலை கொடுங் காம இன்பமாக மாற்றிக் கொள்ளவே ஆபாச சினிமாக் கலை முயல்கிறது. நீலப்படங்களில் பெண்கள் சில மாமூலான வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப உச்சாடனம் பண்ண நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
நானொரு யோனி, நானொரு பேடி நாய், நானொரு பரத்தை, நானொரு அசூசி;உனது பெரிய ஆண்குறியால் என்னை ஈனமாகத் தாக்கு என்று தம்மை வன்மமாகப் புணரும் படி அவர்கள் மண்டியிடுகிறார்கள்.
நீலப்படங்கள் இனவெறியின் வகைமைகளை சிதைத்துப் பரிமாறுகிறது. கறுப்பு நிற ஆண்கள் பாலுறவு ரீதியாக வெள்ளைப் பெண்களைப் பின் தொடரும் மிருக ஆற்றல்களைப் பெற்று விடுகிறார்கள், கறுப்புப் பெண்கள் பழைமை மிக்க காம மூலப் பொருளைக் கொண்டவர்கள், லத்தீன் பெண்கள் சூடான இரத்தத்தில் வளர்ந்த காமப் புழுக்கம் கொண்டவர்கள், ஆசியப் பெண்கள் கீழ்ப்படிவுள்ள காம அர்ப்பணிப்புக் கேந்திரங்கள் என்ற வகையிலான பார்வைகள் இவற்றினால் உருவாக்கப்படுகிறது.
ஆபாசப் படங்களில் மனிதக் குறைபாடுகள் எதுவும் இருப்பதில்லை. உருப்பெருக்கப்பட்ட சிலிக்கன் முலைகள், களிம்புகளால் மேன்மைப்படுத்தப்பட்ட உதடுகள், பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைகளால் சிற்பமாக்கப்பட்ட மோக உடல்கள், போதைப்பொருள்களால் தூண்டப்பட்டுக் குறையாத குறி விறைப்புகள், மிகை ஒப்பனை செய்யப்பட்ட மர்மஸ்தான வலயங்கள் என எல்லாமே மிகைத்த ஆபாசத் திரைக் கலை இச்சையாகப் பரிமாறப்படும் போது அதில் பங்கேற்கின்றவர்கள் பிளாஸ்ரிக் துண்டுகளில் காமக் கிரியை புரிவது போல மாறி விடுகிறார்கள். மணம், வியர்வை, மூச்சு, இதயத் துடிப்பு, தொடுகை இவை யாவும் பெண்ணுடலின் மென்மையோடு சேர்த்து அழிக்கப்பட்டு விடுகின்றன.இந்தப் படங்களுக்குள் உலவும் பெண்ணுடல்கள் பண்டங்கள் போல பொதி செய்யப்பட்டவை. அவர்கள் பாலியல் இன்பத் துய்ப்புக்கான கைப்பாவைகளாகவும் ஆண்களை மகிழ்வூட்டும் பதுமைகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். உண்மையான உணர்வுகள் யாவும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விடுகிறது.
நீலப்படங்கள் பாலுறவைப் பற்றியவையல்ல. பாலுறவு என்பது இரண்டு பங்காளி உடல்களுக்கிடையிலான பரஸ்பரச் செயல்பாடு என கருத முடியும். ஆனால் இந்த அம்சங்களை ஆபாச சினிமாக்கள் ஒரு விடயமாகக் கொள்வதில்லை. கை மைதுன உறவு, காதலும் நெருக்கமும் அற்ற தனித்த தற்தூண்டுதல் போன்ற பாலியல் நடவடிக்கைகள் வணிக நோக்கம் கொண்ட முதலாளித்துவ மையங்களினால் ஒரு வழிபாட்டு நடைமுறை போல செறிவூட்டப்படுகிறது. அதனால் முதலாளித்துவ பண்பு விதிகளை பின்பற்றும் ஆபாசத் திரைத்துறையானது மனிதத்துவத்தை சாகடித்து விடுகிறது.
இன்று அபாயத்தின் பிடியில் சிக்கிய சில மக்கள் பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் தமது நெருக்கமான காதல், பாலுறவு போன்றவற்றை ஆபாச சினிமாவின் கற்பிதங்களுக்குள் இடம்மாற்றிக் கொண்டவர்கள். இன்றைய ஆபாசக் கலைத்துறை என அழைக்கப்படும் தொழிற்கூடங்கள் தான்தோன்றித் தன்மையாக ஒரு பண்பாட்டு மொழியால் பேசுவதை நாம் அனுமதித்து விடுகிறோம். உடல் உபாதை மிக்க தொந்தரவுகளையும் மோசமான நிதிச் சுரண்டலையும் சகிக்க முடியாத மக்கள் கூட்டம் கூட ஆபாச சினிமாவை மறு கேள்வி கேட்பதில்லை. அபூகிராய் சித்திரவதை முகாம்களில் இடம்பெறும் கொடுமைகளை எதிர்ப்பவர்கள் அதே வகையான செயல்பாடுகள் நிகழ்த்தப்படும் நீலப்படத் துறையை அனுமதிப்பவர்களாகவும் ஏற்றுக் கொள்பவர்களாகவும் உள்ளனர். அபூகிராய் வதை முகாமில் கைதிகள் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தப்படுவதையும் தொந்தரவுக்குள்ளாவதையும் அனுமதிக்காத நாம் ஆபாசப் படப்பிடிப்புத் தளங்களில் இடம்பெறும் வாதைகளை அனுமதிக்கிறோம்.
"புதிய அலை " பெண்ணியவாதிகள் ஆபாச சினிமாவைக் காப்பாற்றும் முகமாக அது பாலியல் விடுதலைக்கிணையானது, சுயமான தேர்வுச் சாத்தியங்கள் கொண்டது என கருத்துகளை வழிமொழிந்ததன் மூலம் பெரும் துரோகமிழைத்தனர். இந்தப் போலிப் பெண்ணியவாதிகள் பூக்கோ, ஜூடித் பட்லர் போன்றவர்களின் அடித்தளத்தில் நிலைபெற்ற பின்நவீனத்துவ புதிய தாராளவாத சிந்தனைகளின் வளர்ச்சி குன்றிய உற்பத்திகளே. இவர்களைப் பொறுத்த வரை பெண்ணியம் என்பது ஒடுக்கப்பட்ட பெண்களின் விடுதலை வேட்கை பற்றியது அல்ல. அவர்களது பார்வையில் வெற்றி பெறும் பெண் என்பவள் வசதியான அதிகாரம் மிக்க ஆண்களின் சங்கடங்களைத் தீர்த்து தன்னை வளப்படுத்திக் கொள்பவளே. "பிப்டி ஷேட்ஸ் ஓப் கிறே " படம் இதனைத்தான் கூறுகிறது. ஒரு பெண் எழுதிய நூல் தான் இப்படம்.திரைக்கதையும் அவர்தான். பெண் மேலாளரைக் கொண்ட நிறுவனம் ஒன்றுதான் இதனை வாங்கி வெளியிட்டது. பாலியல் வன்முறையையும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையையும் ஆபாச சினிமாவின் மூலம் உலகமயப்படுத்த பெண்களைத் துணைக்களைத்து கூட்டுச் சதி நிகழ்த்தப்பட்டிருப்பதாகவே கருத வேண்டும். புதிய ஆபாச சினிமாக்கள் பெரும் சவக் குழிகள் போலுள்ளன. அங்கு எல்லாமே சாகடிக்கப்படுகின்றன.
அண்மையில் பொஸ்டனில் உள்ள தேனீர் விடுதியொன்றில் கேயில்ஸ் டைன்ஸ் என்ற கடும்போக்கு கருத்துகளில் ஊறிய ஒருவரைச் சந்தித்தேன். வீல்லொக் கல்லூரியில் சமூகவியல் பேராசிரியராகப் பணியாற்றும் அவர் porn land எனும் நூலை எழுதியவர். அதில் இன்றைய ஆபாசக் கலைகள் பாலியலை எவ்வாறு அதன் இயல்புணர்விலிருந்து அகற்றுகிறதென எழுதியிருக்கிறார். அவர் போலவே ஜீன் சென் போன்றவர்களும் இப்போது கலாசாரத்தை விகாரமாக்கும் ஆபாசக் கலையை அச்சமில்லாமல் கடுமையாக சாடி விமர்சிக்கிறார்கள். ஆபாசத் துறையானது இயல்பான பாலியல் பண்பாடுகளை அழித்து விட்டு இளம் ஆண், பெண் தலைமுறைகளுக்கு முன்னே கழிவுகளைப் பரப்பி வருவதாக குற்றம் சுமத்துகிறார்கள். நீங்கள் ஆபாசத்திற்கு எதிராகப் போராடுகிறீர்கள் என்றால் உலகளாவிய முதலாளித்துவத்துக்கு எதிராகவே போராடுகிறீர்கள் என அவர் கூறுகிறார்.
அபாயகரமான முதலாளிகளும் வங்கிகளும் கடனட்டை நிறுவனங்களும் இந்தக் கழிவூட்டிகளின் சங்கிலித் தொடராக இருக்கின்றன. அதனால் ஆபாச சினிமா துறைக்கு எதிரான பிரசாரங்களை எந்த இடத்திலும் காணவே முடியாது. தற்காலத்தில் ஊடகங்கள் அனைத்தும் இதன் பொறியில் சிக்கவைக்கப்பட்டுள்ளன. இந்த ஊடகங்கள் எல்லாமே குறிப்பிட்ட கழிவூட்டும் சங்கிலித் தொடர் நிறுவனங்களால் போசிக்கப்பட்டு வருகின்றன. ஆபாசக் கலையானது இப்போது ஊடகங்களின் ஒரு பகுதியாகவும் மாறிவிட்டது.
இக்காலத்தில் எம்மிடத்தில் நாணயமும் வரையறையான வேட்கைகளும் நிஜமான படைப்பாற்றலும் மனிதத்துவத்திற்கு அவசியமற்றதென ஆபாசத்துறை விதந்துரைக்கிறது. பெண் என்பவள் மூன்று துவாரங்களையும் இரண்டு கைகளையும் கொண்ட பொருள் என்ற மதிப்பீட்டுக்குள் சுருக்கப்பட்டிருக்கிறாள். இந்த அழிவு மதிப்பீட்டைப் பின்னி வரும் முதலாளித்துவம் பூமியில் மனிதருக்கிருக்கின்ற தொடர்புகளைச் சிதைத்து வருகிறது.
ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் பொறிமுறையான சமத்துவமின்மைகள் ஏதுமில்லை என்பது பொருளாதார பெறுபேறுகளின் அடிப்படையில் நிரூபணமாகிறதென ஆபாசக்கலை நிறுவுகிறது. ஆனால் சமமின்மைகள் உயிரியல் ரீதியானவை. பெண்கள் பரத்தையராகவும் பேடிகளாகவும் இருப்பது பாலுறவுக்கு மட்டும் சிறந்தது. பிரத்தியேக சமத்துவ அந்தஸ்துக்கு அவர்கள் யோக்கியதை அற்றவர்கள் என்பது ஆபாசத் துறையின் தர்க்கமாகும். பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வுகளை நெறிப்படுத்தும் கருத்தியல் நியாயங்களை வடிவமைப்பதில் ஆபாசக்கலைத்துறை பெரும் பங்கு வகிக்கிறது.
ஆண் பார்வையாளர் பட்டாளத்தினை சலிப்பில்லாமல் தொடர் தூண்டுதலில் வைத்திருக்க வன்முறையும் பண்பு வீழ்ச்சியும் மிகையான காட்சிகளை உருவாக்கும் எண்ணத்தில் ஆபாச படைப்பாளிகள் செயல்படுகிறார்கள். படப்பிடிப்புத் தளத்திலேயே பெண்களுக்கு நிஜமான வலிகளை உண்டாக்கும் காரியங்கள் திட்டமிடப்படுகிறது. தொண்டை வரை மூர்க்கமாக குறிகளைச் செலுத்தும் வாய் மூலமான புணர்வு அல்லது முகப்புணர்வு என்பது கொடூரமானது. இதில் பெண்கள் பாவகரமாக விகாரமாக்கப்பட்டு வாந்தி எடுக்கும் நிலை வரை கொண்டு செல்லப்படுகிறார்கள். இது போன்ற காட்சிகளில் ஆண் என்பவன் பெண்ணின் முகத்தை கழிப்பறையின் மலப்பாத்திரம் போலவே கையாள்கிறான். இது போன்ற காட்சிகள் பலவந்தமாகவே உருவாக்கப்படுகிறது. இந்தக் காட்சிகள் மூலம் இப்பட நிறுவனங்கள் கட்டமைக்கும் உளவியல் தாத்பரியமானது பெண்ணைப் புணர்ந்த பின் அகற்றி விடு என்பதுதான்.
குத வழிப் புணர்வு மற்றும் வன்மமான புணர்வு என்பவை மீண்டும் மீண்டும் நிகழும் போது மலக்குடல் கிழிந்து குதமானது வெளியே துருத்திக் கொள்ளும் நிலை உண்டாகிறது. இதனை "ரோசா அரும்புதல் " என்கிறார்கள். தொடர்ச்சியாகப் பல ஆண்களினால் குதப்புணர்வுக்கு உள்ளாகும் பெண்கள் படப்பிடிப்பு முடிந்ததும் கை நிறைய வலி தீர்க்கும் வில்லைகளை உட்கொள்ள வேண்டியிருக்கிறது. அது மட்டுமன்றி யோனி மீள் நிர்மாண சத்திரசிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியேற்படுகிறது. நடிகைகள் பாலியல் நோய்களுக்கும் மன அழுத்த வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.
சில நீலப்படப் பங்கேற்பாளர்கள் திரை நட்சத்திரங்கள் போல மைய நீரோட்ட ஊடகங்களால் கொண்டாடப்படுகிறார்கள். அவர்கள் பல கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் உள்ளீர்க்கப்படுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் ஆடை அவிழ்ப்பும் ஒழுக்கமீறலும் ஏனைய கலவி நடத்தைகளும் நவ நாகரிகப் பாணியாகி விடுகிறது. இது பெண்கள் மத்தியில் அபாய விளைவுகளை ஏற்படுத்தும் முன்னுதாரணமாகி விடுகிறது.
ஆபாசக் கலையின் பரிந்துரைப்படி பெண்களிடம் இரண்டு விதமான தெரிவுகளே இன்றுள்ளன. ஒன்று புணர்வதற்குத் தயாராய் இருப்பது. மற்றையது மறைவாய் இருப்பது. புணர்வதற்குத் தயாராய் இருப்பதென்பது ஆபாசக் கலாசார உளவியலை உறுதி செய்வதுதான். பார்வைக்கு ஆபாசமாய் இருப்பது. ஆண் தேவைக்கு ஏற்றபடி கீழ்ப்படிவாக இருப்பது. அப்போதுதான் பெண் என்பவள் பார்க்கக் கூடிய நிலையில் இருக்கிறாள் என்பது அதன் அர்த்தம்.
பண்டக் கலாசார வளர்ச்சி துரிதமடைந்திருக்கும் வேளையில் அதன் கர்த்தாக்களான முதலாளித்துவ சக்திகள் ஆபாசத்துறையினையும் முதலீட்டும் நோக்கில் பயன்படுத்துகிறது. இன்றைய அமெரிக்க நடுத்தர வர்க்கமானது எவ்வாறு தமது வருமானங்களைச் செலவிட வேண்டும் என்பதற்கான சுரண்டல் நோக்கில் தேவையற்ற பொருட்களின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி பணத்தை விரயமாக்கும் பழக்கத்தை முதலாளித்துவம் புகுத்தியிருக்கிறது.
பெண்களின் பொழுது போக்கிற்கென வீடுகளுக்குள் தொலைக்காட்சிகள் கொண்டு வரப்பட்டன. தொழுவத்தின் மத்தியிலுள்ள புல்லை பல கால்நடைகள் ஏக காலத்தில் உண்பது போல ஒரு தொலைக்காட்சியை முழுக் குடும்பமும் நடுக் கூடத்தில் நுகர முடிந்த வேளையில் பெண்கள் சமையற்கட்டில் நேரங்களை செலவழித்தனர். பிறகு சமையற்கட்டில் இருந்தபடி அவர்கள் தொலைக்காட்சியை நுகர்வதற்கான ஏற்பாடுகளும் வீடுகளில் திட்டமிடப்பட்டன. பெண்கள் அதற்கும் பயிற்றுவிக்கப்பட்டு விட்டனர்.
ஆனால் ஆண்களின் ரசிப்புலகம் வேறாக சுழல்கிறது. பணத்தை எவ்வாறு விரயமாக்குவதென்பதற்கான உபாயங்களை எது கற்றுக் கொடுக்றது? அவர்களுக்கு பலவிதமான மஞ்சள் சஞ்சிகைகளும் பலான படங்களும் உள்ளன. இன்று பாலுறவு பண்டமாக்கப் படுவதை விட பண்டங்களை பாலுறவாக்கம் செய்து விற்பது ஒரு பாணியாகியிருக்கிறது. பலான சஞ்சிகைகள் ஏற்படுத்தியிருக்கும் கருத்தோட்டம் விசித்திரமானது. ஒரு சஞ்சிகையினை வாங்கிப் பார்ப்பதென்பது பெண்ணுடலுடன் இன்புறுவதற்குச் சமனான பேறாகும் எனும் மனப்பாங்கை அது உருவாக்கியிருக்கிறது. இந்த உளவியல் கட்டமைப்புத்தான் குறிப்பிட்ட பண்டத்தை நுகர்விப்பதற்கான உந்துதலாக அமைந்திருக்கிறது.
ஆண் மனது ஆபாசப் படிமங்களால் போர்த்தப்பட்டிருக்கிறது. பெண்ணுடலுக்கு ஆண் கூட்டு மனத்திடமிருந்து மேல்பூச்சான மரியாதையே கிடைக்கிறது. மேல்தட்டு சமூகங்களின் மறைவான நடைமுறைகளுக்குள் பெண்ணுடல் புணர்ச்சிப் பண்டமாகவே மூடி வைக்கப்பட்டிருக்கிறது.
இலத்திரன் மின் சாதனங்களும் ஆபாச உற்பத்திகளை ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் உந்தித் தள்ள வழியமைக்கின்றன. இதனால் ஆபாசமான பாலுறவுத் தூண்டலை சாவகாசமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை உருவாகிறது.
அமெரிக்காவும் உலகின் பெரும்பாலான நாடுகளும் ஆபாச உற்பத்திகளின் நுகர்வு மையங்களாக மாறி வெகு காலமாயிற்று. ஆபாச சினிமாவின் சராசரி ஆண்டு வருமானம் 96 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப் பட்டது. இதில் அமெரிக்காவில் மட்டும் 13 பில்லியன் டொலர்கள் ஈட்டப் படுகிறது. 420 மில்லியன் இணைய ஆபாசப் படங்களும் 4.2 மில்லியன் ஆபாச வலைத்தளங்களும் 68 மில்லியன் தேடல்பொறிகளும் நாளாந்த ஆபாச வேட்கை நுகர்விற்காய் பணியாற்றுவதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆபாச நுகர்வின் உப விளைபொருளாக பாலியல் வன்முறைகளான வீட்டு துஷ்பிரயோகம், வன்புணர்வு, கூட்டுப் பாலியல் வன்புணர்வு என்பவை அதிகரித்துள்ளன.
ஆபாச ஊடகக் கலையை இன்னும் விரிவாக அணுகும் போது அதன் வீரியம் புரியும். சுற்றுப்புற மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட இந்திய உப கண்ட நாடுகளில் ஆபாச சினிமாக்கள் கைப்பேசி மூலம் இலகுவான புழக்கத்திற்கு வந்து விட்டது. வீட்டில் மடிக்கணினி இருந்தால் அதன் பாவனையாளர் அதனை வீட்டின் நடுக் கூடத்தில் வைத்து இயக்குவதைத் தவிர்த்து விடுகிறார். ஆனாலும் இந்த சங்கடங்கள் ஏதுமில்லாமல் கைப்பேசியை இலகுவாகக் கொண்டு செல்லவும் ரகசியமாக ஆபாசத்தை நுகரவும் முடிகிறது. சராசரியாக குழந்தைகள் கூட ஆபாசங்களை இலகுவில் நுகரக் கூடிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.
திரைப்படங்களில் மட்டுமே இலாபங்களைக் கண்ட பழைய ஆபாசத்துறை இப்போது இல்லை. இன்று தயாரிப்பாளர்களே தொடர்ந்தும் இலாபமீட்டும் நிலையிலும் இல்லை. இப்போது ஆபாசங்களை புதிது புதிதாக விநியோகிப்பவர்களே பணம் ஈட்டுபவர்களாக மாறியுள்ளனர். மைன்ட் கீக் போன்ற உலகளாவிய ஐ ரீ நிறுவனங்கள் ஆபாச சினிமா விநியோகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவை சில இலவச ஆபாச காட்சிகளை இணைய தளங்களில் உலவ விட்டு பருவ வயது இளைஞர்களைத் தூண்டி வசப்படுத்தி பாரிய சுரண்டலுக்கான முன்னோட்டத்தை விரிவு படுத்துகின்றன.12 - 15 வயதுடைய வளரும் பிள்ளைகளின் பாலியல் வார்ப்பு இதனால் மிகைப்பெருக்கம் அடைகிறது. குரூர புணர்வு, வன்புணர்வு போன்ற ஆபாசக் காட்சிகளின் பக்கம் இவர்கள் ஈர்க்கப்படும் போது விகாரமான கற்பிதங்களுக்குள் ஒன்றித்து விடுகையில் நிஜமான பெண்களுடன் பாலுணர்வு நாட்டம் மந்தமடையவும் வாய்ப்புள்ளது. அல்லது நிஜத்தில் பெண்களுடன் விறைப்புடன் நீடித்திருக்க முடியாமல் போகவும் கூடும்.
ஆபாச சினிமாவில் காதல் உணர்வுகள் இருப்பதில்லை. அதில் வெறுப்புகளை உருவாக்கும் உளவியல்தான் செயல்படுகிறது. அங்கு ஆண் பெண்ணை இழிவாகவே நடத்துகிறான். பெண்ணால் ஆண் வெறுப்பும் கலகமும் அடைபவனாக சித்தரிக்கப்படுகிறான். பெண் கீழ்ப்படிவானவளாக உருவகிக்கப்படுகிறாள். அதில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள்ஆண், பெண் சமூகங்களின் மத்தியில் எதுவித கேள்விகளுக்கும் உட்படாமலே போய் விட்டது.
ஆபாச சினிமாக்கள் பாலியல் சித்திரவதைகளை சமூக உளவியலாக ஆண் மனதிற்குள் நிலைநிறுத்தி வருகிறது. பொதுவாக எவரும் அது போன்ற மனநிலையுடன் பிறப்பதில்லை. ஆனால் இந்த சினிமாவினால் அப்படி உருவாக்கப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment