
“அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை” (அல்-குர்ஆன் 24:40)
மேற்குறிப்பிட்ட அல்-குர்ஆனிய வசனத்தை ஆய்விற்கு உட்படுத்திய மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழக, கடல் மற்றும் மண்ணியல் துறைசார் பேராசிரியரான “துர்கா ராவ்” என்பவர் அல்-குர்ஆனின் 24:40 ஆவது வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது மேற்படி வசனமானது ஆழ்கடலில் உண்டாகும் உள்ளக அலைகளுக்கே கூறப்பட்டது என்கின்றார். மேலும் அவர் இது குறித்து ஆய்வையும் செய்கின்றார்.

இவ்வாறு உறுதியாக கூறியமைக்கு காரணம் ஆழ்கடலில் அல்லது சமுத்திரங்களில் மாத்திரமே உள்ளக அலைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு என்று நவீன விஞ்ஞானம் தற்போது கூறுகின்றது.
“ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்” என்ற குர்ஆனிய தொடரின் விளக்கத்தை தற்போதைய அறிவியல் விளக்குகின்றது. அதாவது சூரியனின் வெள்ளொளி நீரினுள் உட்புகும் போது நிறப்பிரிகை (Dispersion) அடையும். இதனால் இவை வானவில்லின் உண்டாகும் ஏழு நிறங்களான சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என்றவாறு வெள்ளொளி சிதைவடையும் (Refractions). பிரிகையுற்ற கதிர்கள் அவற்றின் மீடிறன் (Frequency), வேகம் (Velocity), ஊடுருவும் தன்மை (Opacity) போன்ற பண்புகளுக்கு ஏற்ப இவற்றின் நீரினுள் ஊடுபுகும் இயல்பு வேறுபடும்.
இவ்வாறு ஊடுபுகும் ஆழத்திற்கேற்ப ஒவ்வொரு கதிரும் தனக்கென ஒரு அடுக்கை (Layer) உருவாக்கும். இதனால் மேலுள்ள ஒரு படையிலும் பார்க்க கீழுள்ள படை இருளாக இருக்கும். அவ்வாறே தொடர்ந்தும் இருள் படைகள் அதிகரித்தவண்ணமாக அமையும். சுமார் 1000 mக்கு அப்பால் எதுவித ஒளியும் இராது.
மேகங்கள் சூரிய ஒளியினை முதல் முதலில் உள்வாங்கி பின்னர் சிதறச் செய்கின்றது. மேகங்களே முதல் திரையாக தொழிற்படுகின்றதென்று அறிவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனையே புனித அல்-குர்ஆன் மேற்கூறப்பட்ட வசனத்தில் “அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள்” என்று விபரிக்கின்றது.

குறித்த கடலின் ஆழம் அதிகரிக்க வெப்பநிலை வீழ்ச்சி அடைவதுடன் அடர்த்தி, அமுக்கம் என்பன அதிகரிக்கும். இதனால் உள்ளக அலைகளின் வீச்சம் மற்றும் அலைகளின் செல்வாக்குகள் என்பனவும் குறைவடையும் வண்ணமாகக் காணப்படும்.
“அண்ணளவாக 1400 ஆண்டுகளுக்கு முன்னர் கடலலைகளின் இயற்கை நிகழ்வுகள் குறித்தான விளக்கத்தை ஒரு சாதாரண மனிதனினால் இவ்வளவு விபரமாக கூறியிருக்க சாத்தியமே இல்லை. இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு தெய்வீக மூல ஊற்றிலிருந்தே நிச்சயமாக இச்செய்திகளானவை வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு” என்று ஆழ்கடல் உள்ளக அலைகளை பற்றிய நவீன கால கருவிகளைக் கொண்டு ஆய்வினை மேற்கொண்ட பேராசிரியரான துர்கா ராவ் மேற்குறிப்பிட்டவாறு தனது விளக்கத்தை அளிக்கின்றார்.
இவ்வாறான உண்மைகளை உங்கள் மனம் எவ்வாறு காண்கின்றது?
No comments:
Post a Comment