
அந்தவகையில் கரையோர பகுதியை அண்டிய கொட்டியபுரப்பற்றில் மூதூர் மண்ணே தலைநகரமாக திகழ்ந்துள்ளது. இவற்றுக்கு பல்வேறு பின்னணி காரணங்கள் இருந்துள்ள போதும் குடியேற்ற கிராமங்கள் என்ற அடிப்படை முக்கிய காரணியாக திகழ்கின்றது. குடியேற்றங்களை பொருத்தமட்டில் அன்றைய காலங்களில் ஜீவனோபாயமாக விவசாயமும் மந்தை வளர்ப்பும் திகழ்ந்துள்ளது. இதற்கு மேலாக கடல் சார்ந்த தொழில் முறைமை மற்றும் வணிக வியாபரா முறைகளும் பரந்துபட்ட அளவிலே இருந்துள்ளது.

ஆனாலும் வேறு காரணங்களும் கேணிகளின் உருவாக்கத்திற்கு சாதகமான காரணமாகவே அமைகிறது.
1. மூதூர் மண்ணில் ஆரம்ப காலத்தில் கோயில்கள் இருந்ததாக வரலாற்று ஆய்வுகள் கூறுகிறது. இவ்வாறான கோயில்கள் தங்களின் கோயில் எல்லைக்குள் கோயில் குளம் என்ற ஒன்றை உருவாக்கி இருந்ததாகவும் அவை பிற்பட்ட காலங்களில் பயன்பாடு அற்று கேணிகளாக உருமாற்றம் பெற்றதாகும் கூறப்படுகின்றது.
2. மதஸ்தளங்கள் மற்றும் பொது கட்டிடங்கள் அமைக்க காணியை உயர்த்தவும் இன்னும் ஏனைய மணல் தேவைகளை பூர்த்தி செய்யவும் தேவைப்பட்ட மண்ணை ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து நுகர்ந்தனர். இது பிற்பட்ட காலங்களில் பள்ளங்களாக மாற்றி கேணிகள் உருவாதாக சான்றுகள் உண்டு.
இதற்கு உதாரணமாக மூதூர் பெரிய பள்ளிவாசலுக்கு எடுக்கப்பட்ட மண் காரணமாக உருவான கேணி கொசவன் குளம் என்றும் ஆனைச்சேனை பள்ளிவாசலுக்கு எடுக்கப்பட்ட மண் காரணமாக உருவான கேணி மூத்தனார் குளம் என்றும் அழைக்கப்படுகின்றது.
3. விண்கற்கள் பொழிவு காரணமாக உருவான பள்ளங்கள்.
4. வலுகுறைந்த காரணமாக – முதலாம், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது போடப்பட்ட குண்டுகள் மூலமாக தோற்றம்பெற்ற பள்ளங்கள் என்றும் கூறப்படுகின்றது.
எது எவ்வாறோ கேணிக்காடு என்று அழைக்கப்படும் மூதூரின் பகுதியில் சுமார் 7 பெரிய கேணிகள் இருந்துள்ளது. இவற்றின் ஒன்றில் இருந்து ஒன்றின் எல்லைகள் அண்ணளவாக சமனாக காணப்பட்டது மட்டுமன்றி அவற்றின் அமைப்பு ஒரு தாய் கேணியை அடிப்படையாக்கொண்டு வட்ட வடிவில் அமையப்பெற்றும் காணப்படுகிறது. உதாரணமாக தற்போது ரெளளத்துள் ஜென்னா என்ற அரபுக் கல்லூரி (மதரசா) இருக்கும் காணியில் காணப்பட்ட கேணி பெரிய கேணி என்று அழைக்கப்பட்டது.


இவற்றுக்கு மேலாக ஆலிம் சேனையில் வண்ணான் குளம், மற்றும் RM சில்வா கேணி, ஆலிம்சேனை நுழைவு வாசலில் உள்ள கேணி, சீனியப்பா கேணி (பஹ்ரியா), சதகு லெவ்வை அப்பா கேணி/ அலியார் அப்பா கேணி (பஹ்ரியா பள்ளிவாயல் எல்லை) போன்ற கேணிகளும் இருந்துள்ளது. இவற்றில் இன்றளவும் உயிர்ப்பு நிலையில் உள்ள கேணி என்றால் மூதூர் அக்கரைச்சேனை மையவாடி உள்ளகத்தில் காணப்படும் கேணி மாத்திரமே.
இருந்தபோதும் மிக அண்மைய காலப்பகுதியில் (2000 ஆண்டின் பின்னர்) அரச கட்டிட நிர்மானதிற்கென காணிகள் மற்றும் பொதுமக்களின் இடத்தேவை நுகர்வின் ஆதிக்கம் காரணமாக பல கேணிகள் மூடப்பட்டு கட்டிடத்தொகுதிகள் அமையப்பெற்று அலங்கரிக்கப்பட்டது. இவை காலவோட்டத்தின் சுழற்சியில் ஈடுசெய்யமுடியா அழிவாகும். இருந்தபோதும் இதனை எம்மால் மறுக்க முடியாத சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம்.
இவற்றுக்கு மேலாக குறைநிலையில் உள்ள கேணிகள் பல குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்படும் பிரதான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் சுற்றுப்புறச்சூழல் அசிங்கமாக கட்சி தருவதுடன் நோய் தொற்று மற்றும் நுளம்பு பெருகும் முக்கிய இடங்களாக தொழிற்படும் நிலையும் அண்மைகாலமாக உருவாக்கி வருகின்றது. மேற்படி நிகழ்வுகளை பொறுப்புவாய்ந்த அரச நிறுவனங்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் அசமந்தபோக்கை காட்டும் நிலையை காணமுடிகிறது. இவைகள் யாவும் எமது சமூகத்தின் உளவியல் ஊனத்தை வெளிகாட்டிவிடுகின்றது.

கேணிகளை பொருத்தமட்டில் அவை ஈரநிலம் சார்ந்த ஒன்று. இவற்றின் இருப்பு காரணமாக அவை சார்ந்த சூழல் நிலக்கீழ் நீர் தேக்க குடாக்கள் மற்றும் நன்நீர் ஊற்றுக் கண்களை கொண்டு காணப்படும். இதனால் அந்த சூழலில் குடிநீர் தட்டுப்பாடு நிலவாது இருக்கும். ஆனால் இவ்வாறான கேணிகளின் சூறையாட்டம் வறண்ட மேல் நிலப்பகுதி மற்றும் சவர் நீர் ஊற்று வெளியாக்கம் போன்றவற்றிற்கு காரணமாக அமையும்.
எமது ஊரின் முதுசங்களில் கேணிகளும் ஒன்றாகும். எனவே அவற்றை முறையாக பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு கையளிக்கும் பாரிய பொறுப்பு இன்றுள்ள சமூகத்தின் மீது சாட்டப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு தனிநபரும் உளப்பூர்வமாக உணரவேண்டும்.
No comments:
Post a Comment