
வரலாறு வரையும் கொட்டியாரத்து மண்ணில் இலக்கியம் போற்றும் இலக்கியவாதிகளே இவர்கள். செம்மொழியாம் எம் தமிழ் தந்த மூதூரின் இலக்கியத்துறை மலர்களும் சில மலரா மொட்டுக்களும் இன்றைய தலைப்பின் கருப்பொருளாகக் கொண்டுள்ளேன்.
“மூதூரின் தனித்துவம் , மேம்படுத்தலுக்கான முயற்சிகள்” இரு தலைப்புக்களில் இப்பதிவானது உள்வாங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் எம் சமூகம் ஈன்றெடுத்த வையகம் போற்றும் இலக்கியவாதிகள் இம்மண்ணே ஈன்றேடுத்துள்ளது. மேலும் இவர்களின் வாசனை உலகில் மனமூட்டினாலும் சில மொட்டுக்கள் இன்னும் மலர்வதற்காய் விடியலைக் காத்துநிற்கின்றது.
பொருளாதாரம் சமூக அங்கிகாரம் போன்ற காரணிகள் இவற்றின் மலர்தலுக்கு தடங்கலாக அமைகின்றது. இந்நிலைமை சமூகத்தினால் மாற்றப்படவேண்டிய கடப்பாடு அமைந்துள்ளது. மேலும் எழுத்தாளனின் வெளியீடுகளின் தோல்வி அவனது அடுத்த வெளியீட்டை முடமாக்கும் பெருமொரு காரணியாகும். இத்தோல்விகள் உண்மையில் அவனுக்கு சொந்தமானதல்ல இது எமக்கு சொந்தமானது.
நாம் வாழ்ந்ததற்கு சான்றுகளே எமது சுவடுகள். அவ்வாறான ஒரு வகை சுவடே நூல்களும் படைப்புக்களும். இவ்வாறான படைப்புக்கள் இம்மூதூர் மண்ணில் அதிகளவில் படைக்கப்பட்டுள்ளது என்ற பெருமை என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது. பல எழுத்தாளர்கள் இலைமறைகாயாக சமூகத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முறையான வழிகாட்டல் மற்றும் அங்கிகாரம் சமூகம் வழங்கும் பட்சத்தில் தலைசிறந்த எழுத்தாளர்களை இம்மண்ணில் எதிர்காலத்தில் வெளிப்படுத்த முடியும்.
மேலும் ஏற்கனவே இனங்காணப்பட்ட படைப்பாளிகளின் படைப்புக்களை பாதுக்கக்கவேண்டிய கடப்பாடு எம்மை சாரும். எனவே மூதூர் மண்ணின் மயிந்தர்களின் படைப்புக்களை ஊக்குவித்து நல்லதொரு இலக்கியம், வரலாறு மற்றும் கலை கலாச்சாரம் என்ற பல காரணிகளில் எம்மை மேம்படுத்த அனைவரும் முன்வரவேண்டும். எவராவது தவற விடப்பட்டிருப்பின் பதிவிடவும்.
மலர்ந்த மலர்களின் மணங்களை நுகரும் இன்றையநாம்
மலரவேங்கும் மொட்டுக்களுக்கு வழிகாட்டிட வழிவகைத்து
நாளைய புதயதோர் ஞாலம் நறுமணத்தில் மூழ்கிட
தமயனின் தாள் எது.....

1705 காலங்களிலும் சந்திகளில் அரங்குகள் அமைத்து மக்களின் பொழுது போக்கிற்காக பாடல்கள் பாடி சந்தோசிப்பித்தனர். ‘மூதூரில் வாழ்ந்த புலவர்கள் பெரும்பாலும் வர்த்தக நோக்கில் காயல்பட்டினத்தில் இருந்து வந்தவர்கள். மூதூர்ப் பெண்களைத் திருமணம் செய்து இங்கேயும் கயலிலுமாக வாழ்ந்திருக்கிறார்கள். சீனித்தம்பிப் புலவர் மூதூரை, முத்து விளைத்த பதி, முச்சுடர் ஒளிர்ந்த பதி, சித்தர் வசித்தபதி என எமக்கு அறிமுகம் செய்கிறார். மூதூரின் முதல் புராணம் என மூதூர் முகைதீன் பிச்சைப் புலவர் இயற்றிய நவரெத்தின புராணத்தைக் குறிப்பிடலாம்.
திருகோணமலை மாவட்ட மூதூர் முஸ்லிம்களின் இலக்கிய முயற்சியானது சமய அடிப்படையில் அமைந்ததாகும். அக்கால இலக்கிய நூல்களில் சமயத்தை மையமாகக் கொண்டு விளங்கிய சீறாப்புராணம், சைத்தூன்கிஸ்ஸா, நிகண்டு, காசீம் படைப் போர், இராஜமணி மாலை போன்ற சமய ரீதியான நூல்களை அக்கால மூதூர் முஸ்லிம் புலவர்கள் (1705 களில்) மூதூர் பகுதி வீதிச் சந்திகளில் அரங்குகள் அமைத்து அக்கால முஸ்லிம் மக்களின் பொழுது போக்கிற்காக பாடல்கள் பாடி விளக்க உரைகள் கூறி இலக்கிய சேவை புரிந்துள்ளனர்.
அங்கு வாழ்ந்த புலவர்கள் 1800 களில் இந்திய காயல்பட்டினத்திலிருந்து வியாபார நோக்கமாக பாய்க்கப்பல் மூலமாக திருகோணமலை, மூதூர் போன்ற கிராமங்களில் குடியேறி மூதூர் பகுதியிலுள்ள வறிய நடுத்தர முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து இங்கு சில காலமும், அவர்களின் சொந்த நாட்டிற் சில காலமுமாக வாழ்க்கையை கழித்திருக்கிறார்கள்.
இம் மக்களில் ஒரு சிலர் புலவர்களாகும். இவர்கள் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தமிழ் நாட்டிலும் வாழத் தலைப்பட்டதால் அங்கு தமிழ் மொழியையும் நன்கு கற்று கைதேர்ந்தவர்களாக விளங்கினர். இதன் மூலமே இப்புலவர்கள் தமிழ் பேசும் தன்மையால் இப்பகுதி அதாவது மூதூர் பிரதேசத்தில் தமிழ் மொழி இலக்கியங்களை விருத்தி செய்தனர்.
இதற்கு உதாரணமாக 1811ம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வதுறுதீன் என்ற புலவர் எழுதிய முகைதீன் புராணத்தை 1900 ஆம் ஆண்டில் மூதூரைச் சேர்ந்த சாளையர் என அழைக்கப்படும் சாலைப் புலவர் என்பவர் பல இஸ்லாமிய கீர்த்தனைகளாகவும், காவியமாகவும் விளக்கி எழுதி மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தினார். அந்த வகையில் மூதூரைச் சேர்ந்த சாலைப் புலவர் இப் பகுதியில் இலக்கியவானாகவும் மிளிர்ந்தாரெனலாம். இவருடன் சமநிலையிற் திகழ்ந்த இன்னும் சில இஸ்லாமிய புலவர்களும் இம்மூதூர் பகுதியில் வாழ்ந்துள்ளார்கள்.
மூதூரைச் சேர்ந்த மற்றுமொரு புலவரான சீனித்தம்பி புலவர் பாடிய ஒரு செய்யுள் முத்து விளைந்த பதி, முச்சுடர் ஒளிர்ந்த பதி, சித்தர் வசித்த பதி மூதூர் இலக்கியச் செல்வம் மிகைத்ததுவே என பாடிய கூற்றிலிருந்து பல சித்தர்களான அறிஞர்கள் வித்திட்ட கிராமம்தான் மூதூர்.
1900ம் ஆண்டுகாலப் பகுதியில் வாழ்ந்த புலவர்கள் மொழி வழக்கிலும் கூட இலக்கிய ரசம் கலந்தே பேசியும், பாடியும் மகிழ்வார்கள்.
‘வாரும், இரியும், பாடும், உண்டதோ, உறங்கியதோ, எப்படி நலம், நன்றோ’ இப்படியாக செந்தமிழ் கலந்த வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தியதாக இருபதாம் நூற்றாண்டுப் புலவர்களில் ஒருவரான மூதூர் உமறு நெயினாப் புலவர் கூறிய ஒரு கருத்துமுண்டு.
இங்கு யாமறிந்த புலவர்களுள் மிகவும் மக்களால் பேசப்பட்டவர்கள் மிகச் சிலரேயாகும். ஹலிபா சாகிப் புலவர், சாலைப்புலவர், சீனித் தம்பிப் புலவர், நெய்னாஹான் புலவர், முகைதீன் பிச்சைத் தம்பிப் புலவர், உமறு நெயினாப் புலவர் போன்ற இலக்கிய கர்த்தாக்கள் இம்மூதூர் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
மூதூர் நெய்தல் நகரைச் சேர்ந்த ஆசிரியர் மர்ஹும் உமறு நெயினாப் புலவர் எழுதிய ஆக்கங்கள் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவையாகும். அவற்றுள் கங்கைக் காவியம், மழைக் காவியம், புஹாரி காவியம் ஆகியன இம் மாவட்டத்தின் முதற் காவியங்களென கொள்ளப்பட்டன.
இன்னும் இப்புலவரால் வெண்பாவில் அமைந்த நபி மொழிகள், பெண் கல்வி, இஸ்லாமியக் குறள் என்னும் கவிதைகள் இவரது புலமைத் திறனை எடுத்துக் காட்டுகின்றன.
அத்தோடு உமறுநெயினாப் புலவர் 1940 களில் இஸ்லாமிய இலக்கிய நூலான சீறாப் புராணத்திலுள்ள பதறுப் படலத்திற்கு பதவுரை, பொழிப்புரை இலக்கண விளக்கம் என்பவற்றையும் எழுதியதோடு இஸ்லாம் போதினி பாலர் பாடல் நூலையும் எழுதியுள்ளார்.
அத்துடன் உமறுப்புலவர் காலத்தவரான மூதூர் முகைதீன் பிச்சைப் புலவர் கங்கைக் காவியத்தைப் பாடியவரென முஸ்லிம் பாரம்பரியம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டதாக ஒரு வழக்கு உண்டு.
எனினும் அதில் இருபத்தியேழு பாடல்கள் வரை மூதூர் உமறு நெயினாப் புலவரும் பாடியதாக அவரின் கூற்றிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது.
மூதூர் முகைதீன் பிச்சைப் புலவர் பாடிய இன்னுமொரு பாடல் நபி (ஸல்) அவர்கள் பற்றி நவரத்தின புராணமாகும். இது இப்பிரதேசத்தின் முதற் புராணமென்பது யாவருமறிந்த உண்மையாகும்.
இதன் மூலம் 1948க்கு முற்பட்ட காலப் பகுதியை மூதூர் முஸ்லிம் புலவர்களின் இலக்கிய மறுமலர்ச்சிக் காலமென கருதப்படுகிறது.
இக்கால எல்லையில் பெரும்பாலும் அச்சு யந்திரம் இல்லாத காரணத்தால் புலமைமிக்க சான்றோர்கள் கருவூலங்களைத் தானே இயற்றி, பாடி மகிழ்ந்தார்களே தவிர எழுத்தாவணம் செய்து வைக்க தலைப்படவில்லை.
ஒரு சிலவற்றை மட்டும் சிலர் எழுதிய ஆக்கங்கள் பல பேர்களின் கைகளுக்கு மாறி, மாறிச் சென்றதால் பெரும்பாலான சுவடிகள் மறைந்திருந்தன.
இதில் மூதூர் உமறு நெயினாப் புலவரின் சில காப்பியங்கள் பாதுகாக்கப்பட்ட தெனலாம். கடந்த 2002ல் இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இவக்கிய மாநாட்டில் உமறு நெயினாப் புலவரின் இலக்கியப் பணிகள் பாராட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்னும் 1955ம் ஆண்டிலிருந்து 1975ம் ஆண்டுகள் வரை உள்ள காலப் பகுதியில் கலை இலக்கியம் ஈழத்தில் மிக முன்னேற்றகரமான துறையாக வளர்ச்சியடைந்தது. மூதூர் அக்கரைச்சேனையை வதிவிடமாகக் கொண்ட காலஞ் சென்ற மர்ஹும் மஸ்ஹுர் ஆலிம் என்ற ஆசிரியர் இங்கிருந்து ஏராளம் எழுதி கலை இலக்கியச் சேவை செய்துள்ளார்.

இவர் அதிகமான குறுங்கதைகள், உருவகக் கதைகள், சிறுகதை, கவிதை போன்றவற்றையும் கணிசமான அளவு வாசகர் சமுதாயத்திற்குப் படைத்தளித்தார். இவரின் பெரும்பாலான ஆக்கங்கள் நூலுருப் பெறாவிட்டாலும் ஈழத்தில் வெளியான அதிக சஞ்சிகைகளிலும் இந்திய இதழ்களிலும் வெளியாகின.
பிரபல நாவல் எழுத்தாளர் கலாபூஷ ணம் அமரர் வ. அ. இராசரெத்தினத் தின் மிக நெருங்கிய நண்பர் இவர் என் பதும் குறிப்பிடத்தக்கது. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கத் தேவை இல்லை என்பர். அந்த வகையில் மர்ஹும் மஸ் ஹுர் ஆலிம் ஆசிரியர் என்றும் மற க்க முடியாத இலக்கியவான் என்பதில் ஐயமில்லை.
மூதூர் முஸ்லிம் இலக்கிய கர்த்தாக்கள் வரிசையில் 1967க்குப் பிந்திய சமகால இலக்கிய வாதிகளில் இன்னும் ஒரு சிலரை ஆராய்வோமானால் அதில் முக்கியமாக அன்றைய புலவர் கலீபா சாகிப்பின் பரம்பரை வாரிசான கட்டுரையாளர் காலம்சென்ற அதிபர் எம். எம். கே. முகம்மது, ஓய்வு பெற்ற அதிபரும், கொட்டியாபுரப்பற்று வரலாற்று நூலாசிரியருமான அப்துல் சமது, மூதூரைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர்களான ஏ. எஸ். உபைதுல்லா, எம். எஸ். அமானுல்லா, ஏ. நஜிமுத்தீன், கலாபூஷணம் ஏ. எம். முகையதீன், எம் ஜவாத் (நளிமி), ஏ. எஸ். அப்துல்லா, முகம்மதலி ஜின்னா ஜே. பி, கவிஞரும் எழுத்தாளருமான கலாநிதி கே. எம். இக்பால், கவிஞர், கே. சிராஜ், பெண் படைப்பாளிகள் சுஹைதா கரீம், சுஸானா முனாஸ், எம். எம். அனஸ், ஏ. ஜாபீர், கலீல் கண்டு, மூதூர் நயிம், அ. கா. மு. றிஸ்வின், இலக்கிய விமர்சகர் அன்சார், மர்ஹூம் முது கவிஞர் வி. எம். நஜிமுதீன் தோப்பூர் மரைக்காயர் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

மேலும் மூதூரின் தொன்மை மிக்க பாரம்பரிய கலை, கலாசார விழுமியங்களை எடுத்துக்காட்டும், கோலாட்டப் பாடல்கள், நாட்டார் பாடல்களை பாடியும், இயற்றியும் பிம்மண்ணின் வளம் காத்த அண்ணாவி மார்களையும் நினைவுகூர்தல் அவசியமாகும்.
மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட அண்ணாவியர் காசிமுகம்மது, கச்சி முகம்மது, முகம்மது முகையதீன் வெள்ளப்பொத்தர், ஓடாவி எம். நெயினா முகம்மது, ஷாபிநகர் சுபையிர், வெள்ளைக்குட்டி ஆகியோர்களது பங்களிப்பு அளப்பெரிது. அடுத்ததாக இலக்கிய இதழ்களை எடுத்துக் கொள்வோம்.
அகதியா பசீர் தட்டச்சுப் பதிப்பாக இரு வருடங்கள் திங்களிதழாக வெளியிட்ட முத்தாரம் சஞ்சிகை, 1980 களில் வெளிவந்தது. 1982 களில் எம். குத்தூஸ் மெளலவியவர்கள் அச்சுப்பதிப்பாக ஒரு சஞ்சிகையை வெளியிட்டார்.
சம காலத்தில் 2002ல் கவிஞர் ஏ. எம். முகைதீனின் ‘ஓசை’ எனும் காலாண்டு இதழ் கவிதைச் சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இப்படித் தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள், சமகால இலக்கியவாதிகள், நவ இலக்கியவாதிகள் நிறைந்து காணும் இப்பிரதேசமே மூதூராகும். எனினும் பரவலாகப் பேசப்படும் ஓரிரு சில இலக்கியவாதிகளுடன் ஏனையோரும் முத்திரை குத்தப்பட்ட இலககியவான்களாக கெளரவிக்கப்பட வேண்டும் என்பதே இம்மூதூர் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
No comments:
Post a Comment