
வாழ்க்கை என்ற பள்ளிக்கூடத்தில் நடத்துகிற ஒரே பாடத்தில் பலரும் பலதரப்பட்ட பாடங்களைப் பெறுகிறார்கள் என்பதற்கு நம் தினசரி வாழ்க்கையிலேயே நாம் ஏராளமான உதாரணங்களைப் பார்க்கலாம்.
ஒரு குடிகாரத் தந்தையின் இரண்டு மகன்கள் பற்றிய செய்தி ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தகத்தில் படித்தேன்.
அந்தக் குடிகாரத் தகப்பன் பொறுப்பில்லாதவன். எப்போதும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியையும், இரண்டு மகன்களையும் அடித்து உதைத்து துன்புறுத்துவான். வீட்டு செலவுக்குச் சரியாகப் பணமும் தர மாட்டான்.
ஒரு காலகட்டத்தில் ஒரு மதுக்கடை கேஷியரைக் கொன்று விட்டு ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறான்.
இந்த சூழ்நிலையில் வளர்ந்த இரண்டு மகன்களும் பெரியவர்களானார்கள். இருவருக்கும் ஒரு வயது வித்தியாசம் தான். ஒருவன் தந்தையைப் போலவே குடிகாரனாகி, பொறுப்பில்லாமல் இருந்தான். திருடியும், மற்றவர்களை மிரட்டியும் வாழ்ந்தான். ஒருவரைக் கொலை செய்ய முயன்றதற்காக தற்போது சிறையில் இருக்கிறான்.
இன்னொருவனோ அவனுக்கு நேர் எதிர்மாறாக இருந்தான். நன்றாகப் படித்து அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியில் இருந்த அவனுக்கு எந்த தீய பழக்கங்களும் இருக்கவில்லை. திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறான்.
இருவரையும் அவர்களுடைய இன்றைய நிலைக்குக் காரணம் கேட்ட போது இருவரும் ஒரே பதில் சொன்னார்கள்-
அவர்களுடைய தந்தை தான் காரணம் என்றார்கள்.
குடிகார மகன் சொன்னான். “அவரைப் பார்த்து வளர்ந்த சூழல் என்னை இப்படி ஆக்கி விட்டது”.
நல்ல நிலையில் இருந்த மகன் சொன்னான். “சிறு வயதில் இருந்தே அவர் நடவடிக்கைகளால் எத்தனை வேதனை, பிரச்சனை என்று பார்த்து வளர்ந்திருக்கிறேன். அப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்று அன்றே நான் கற்றுக் கொண்டேன்”. என்றான்
ஒரே குடும்பம், ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இருவர் கற்று கொண்ட பாடங்களைப் பாருங்கள்.
ஒரு அழகான ஆங்கிலக் கவிதையில் வரும் இந்த வரிகள் எனக்குப் பிடித்தமானவை-
Two men looked out from prison bars,
One saw mud, the other saw stars.
"சிறைக்கம்பிகள் வழியே இருவர் வெளியே பார்த்தார்கள். ஒருவன் சகதியைப் பார்த்தான். இன்னொருவன் நட்சத்திரங்களைப் பார்த்தான்"
இருக்கின்ற இடம் ஒன்றே ஆனாலும் பார்க்கின்ற பார்வைகள் வேறாகின்றன. பார்வைகள் மாறும் போது வாழ்க்கையே மாறுகின்றன. இது மிகப்பெரிய உண்மை.
நாம் சந்திக்கின்ற சூழ்நிலைகளும், மனிதர்களும் நமக்கு பாடங்களே. நாம் சரியான பாடம் கற்கத் தயாராக இருப்போமானால் நமக்கு நிறைய நல்லதைக் கற்க முடியும். மனிதர்களில் சிலர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பிக்கிறார்கள். சிலர் எப்படி இருக்கக் கூடாது என்பதைக் கற்பிக்கிறார்கள்..
No comments:
Post a Comment