Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 24, 2018

நவீன இஸ்லாமிய சிந்தனையும்: வலுவடையும் முரண்பாடுகளும்,

Image result for islamic lawஇலங்கையில் பாரம்பரிய சட்ட சிந்தனையும்,
நவீன இஸ்லாமிய சிந்தனையும்:
வலுவடையும் முரண்பாடுகளும், எதிர்கால தளமாற்றங்களும்.
கடந்த சில காலங்களாக இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் பேசுபொருள்களாக மாறிய நிகாப், பிறை, முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் உழ்ஹிய்யா விவகாரங்களைச் சூழ இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களை, எழுதப்பட்ட கட்டுரைகளை , வெளிவந்த பத்திரிகை ஆக்கங்களை நுணுக்கமாக அவதானிக்கும் போது, பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனை முகாம்களுக்கும், நவீன இஸ்லாமிய சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியினருக்கும் இடையிலான கருத்து மோதல் வலுவடைந்து வருவதனைப் புரிந்து கொள்ள முடியும்.

இரண்டு தரப்பினரும் சமூகத் தளத்தில் தம்பக்க நியாயங்களை முன்வைத்து பேசி வருகிறார்கள். இங்கு பாரம்பரிய சிந்தனை என்பதற்கூடாக ‘இலங்கையில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும், ஷாஃபிஈ மத்ஹபை அதன் அடிப்படைகளை முன்வைத்து மார்க்க ரீதியான நிலைப்பாடுகள் பெறப்பட வேண்டும்’ என்ற கருத்தினை ஆதரிக்கும் சிந்தனைப் பள்ளியையே கட்டுரை நாடுகிறது. மறுபுறம், ‘இஸ்லாத்தினுடைய மாறும், மாறாத் தன்மைகளை புரிந்து கொண்ட நிலையிலும், இஸ்லாமிய சிந்தனையினுடைய நவீன கால மாற்றங்களை உள்வாங்கிய நிலையிலும், சமகால சர்வதேச மற்றும் தேசிய சூழமைகளை கவனத்திற் கொண்ட நிலையிலும் மார்க்க நிலைப்பாடுகள், பொது வழிகாட்டல்கள் பெறப்பட வேண்டும்’ என்ற கோணத்தில் சிந்திக்கும் போக்குகளை நவீன இஸ்லாமிய சிந்தனைப் பள்ளி என்ற பதம் நாடுகின்றது.

இவைபோக, சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் இரண்டு சிந்தனைப் பள்ளிகளுமே வித்தியாசமான சமூகப் பங்களிப்புகளை ஆற்றி வருகின்றன என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனாலும் கூட, சமீப காலமாக மக்கள் மன்றத்தில் நேரடியாகவும், வெளிப்படையாகவும் நேரெதிர் வழிகாட்டல்களை முன்வைப்பதிலும், வித்தியாசமான கண்ணோட்டங்களில் மார்க்க ரீதியான உரையாடல்களை கொண்டு செல்வதிலும் மேற்சொன்ன இரு சிந்தனைப் பள்ளிகளும் கருத்து ரீதியாக ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் நிலை வலுவடைந்து வருகின்றது.

இந்தப் பின்புலத்தில், ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு சுவாரஷ்யமான முகநூல் பதிவொன்றில் 'மகாஸிதை பாதுகாக்க வேண்டியவர்கள் மத்ஹபை பாதுகாக்கிறார்கள்' என ஒரு சகோதரர் பதிவிட்டிருந்தார். குறித்த பதிவில் அவர் யாரை நோக்கி அதனைச் சொல்கிறார் என்று தெளிவாக எழுதியிருக்கவில்லை என்றாலும் கூட, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமிய சிந்தனை சார்ந்த கருத்தாடல்களில் தொடரும் உள்ளார்ந்த சிக்கலொன்றை அல்லது சிக்கலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதொரு விடயத்தை அப்பதிவு அடையாளப்படுத்திக் காட்டுவதற்கு முயல்கின்றது. அதாவது, ‘பாரம்பரிய மத்ஹப் சார்ந்த சட்ட சிந்தனையை, அதன் எல்லைகளை கவனமாகப் பேணி வரும் நிறுவனங்களில் நவீன இஸ்லாமிய சிந்தனையை, அதன் பன்முகத் தன்மையை, அதன் ஆழ அகலங்களை கற்றவர்கள் இணைந்து பயணிக்க முடியுமா?’ என்றதொரு கேள்வியை அப்பதிவின் உட்பொருள் எழுப்புகிறது.

இங்கு அவர் 'மகாஸித்' என்ற பதத்தை நவீன இஸ்லாமிய சிந்தனையை சுட்டுவதற்கான அடைமொழியாகவும், 'மத்ஹப்' என்ற பதப் பிரயோகத்தை பாரம்பரிய சிந்தனைப் பள்ளியைக் குறிப்பதற்காகவும் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவானது. மட்டுமன்றி, இலங்கையினுடைய மையநீரோட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் பாரம்பரிய சிந்தனைச் சட்டகத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்று பேசும் நவீன இஸ்லாமிய சிந்தனை முகாமைச் சேர்ந்த பலர், எவ்வாறு ‘பாரம்பரிய சிந்தனைப் பள்ளியின் செல்வாக்குக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள் என்பதையும் மரபு ரீதியான இஸ்லாமிய சிந்தனையை பலப்படுத்தும் இடத்திலேயே அவர்களது முயற்சிகளும்  சென்று நிறைவடைகின்றன’ என்றதொரு அவதானத்தையும் குறித்த பதிவு வெளிப்படுத்துகின்றது.

அந்த அவதானம் எந்தளவுக்கு சரியானது என்று குறிப்பாகச் சொல்ல முடியாவிட்டாலும் கூட, அப்படியொரு அவதானத்தை தோற்றுவிக்கும் அளவுக்கு இரு சிந்தனைப் பள்ளிகளுக்கும் இடையிலான கருத்தியல் முரண்பாடுகள் வலிமையடைந்துள்ளன என்று புரிந்து கொள்வதே பொருத்தமாகும். அதாவது, இரண்டு போக்குகளும் சிந்தனை ரீதியாக இணைந்து பயணிக்க முடியாது, அதிகபட்சம் சிந்தனை சாரா சமூக செயற்பாடுகள் சிலவற்றில் அல்லது இது போன்ற வேறு சில இராஜதந்திர இலக்குகளை முன்னிறுத்தி திரவநிலை இணைவுகளுடன் செல்ல முடியுமே தவிர, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மார்க்க, சமூக, கலாசார ரீதியான பிரச்சினைகளுக்கு உடன்பட்ட தளத்தில் நின்று இரு தரப்பினருக்கும் வழிகாட்டல்களை முன்வைக்க முடியாது என்பதே யதார்த்தமாகும். ஏனெனில் இரண்டு தரப்பும் வெவ்வேறு விதமான உலகக் கண்ணோட்டம் மற்றும் சிந்தனைத் தளத்தின் மீது தொழிற்படும் இரு வேறு தரப்புக்களாகும் என்றதொரு கருத்தையும் குறித்த பதிவில் பதிவாளர் உணர்த்த வருவதாக புரிந்து கொள்ள முடியும்.

உண்மையில், இதனை ஸீரியஸாகவும் உடனடியாகவும் கலந்துரையாடப்பட வேண்டியதொரு தலைப்பாக சுட்டிக் காட்டலாம். எனெனில், தற்போதுள்ள சர்வதேச, தேசிய மற்றும் சமூக அரசியல் சூழல் பின்புலத்தில் நின்று நோக்கும் போது, இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையிலான விரிசல் நிலையும், பொது மக்கள் தளத்தில் தெளிவாக முரண்பட்டுக் கொள்ளும் போக்கும் அதிகரித்துச் செல்வதற்கான சாத்தியப்பாடுகளே மிகவும் அதிகமாக காணப்படுகின்றன. இன்னொரு பக்கத்தில், சமூக விவகாரங்கள் தொடர்பாக நிலைப்பாடுகளை எடுப்பதில் நவீன இஸ்லாமிய சிந்தனையும் அதன் பின்னணியில் இயங்கும் இலங்கை இஸ்லாமிய இயக்கங்களும் நியாயமான  சவால்களை எதிர்கொள்கின்றன. காரணம், பிரதான மையநீரோட்ட பாரம்பரிய சிந்தனைப் பள்ளியுடன் எந்தளவு தூரம் இணங்கிச் செல்வது மற்றும் எந்ததெந்த விடயங்களில் முரண்பட்டுச் செல்வது என்ற கேள்விகளுக்குள் அவர்களும் சிக்கித் தவிக்கிறார்கள்.

அதேநேரம், பாரம்பரிய இஸ்லாமிய சட்ட சிந்தனை செல்வாக்குச் செலுத்தும் மையநீரோட்ட புரிதல்களுடன் இணைந்து பயணிக்கும் நவீன இஸ்லாமிய சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்களது அணுகுமுறைகளும், பார்வையும் இஸ்லாமிய இயக்கத்தினுடைய சமூக பார்வையுடனும், அவர்களது நிலைப்பாடுகளுடனும் முரண்பட்டுக் கொள்ளும் நிலையையும் அவதானிக்க முடியும். அதனுடைய எதிர்வினைகளும் பல்வேறு மட்டங்களில் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. ஆக மொத்தத்தில், இலங்கையில் இஸ்லாம் பற்றிய உரையாடல்கள் சிக்கலானதொரு தோற்றப்பாட்டினுள் நுழைந்திருக்கிறன என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

அடுத்து, இலங்கையினுடைய பாரம்பரிய சட்ட சிந்தனையுடன் இணைந்து பயணிப்பதில் அல்லது அதனுடன் உறவாடுவதில் நவீன இஸ்லாமிய சிந்தனை முகாம் எதிர்கொள்ளும் சவால்களின் மூல வேர்களைப் புரிந்து கொள்வதும் முக்கியமானதாகும். அவற்றை கீழ்வருமாறு தொகுத்து நோக்க முடியும்:

▪️பாரம்பரிய சட்ட சிந்தனைப் பள்ளியின் கோட்பாட்டுச் சட்டகத்தினால் நவீன கால சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாது என்பதே நவீனகால இஸ்லாமிய சட்ட சிந்தனையின் உறுதியான கோட்பாட்டுப் புரிதலாகும். அதிலும் குறிப்பாக, ஒரு தனித்த மத்ஹபால் அல்லது அதன் அடிப்படைகளுக்குள் மாத்திரம் நின்று சமகால சவால்களை எதிர்கொள்ள முடியாது என்பதனை நவீன இஸ்லாமிய சட்ட சிந்தனைப் பள்ளி ஆழமாக நம்பியிருக்கிறது. எனவேதான், கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நான்கு பிரதான மத்ஹபுகளையும் தொகுத்துக் கொண்ட நிலையில் நகரும் 'அல்பிக்ஹூல் முகாரின்' என்ற சட்டக் கண்ணோட்டம் முக்கிய இடத்தைப் பெற்று வந்தது. அதன் மற்றொரு கட்டமாக 'நான்கு பிரதான மத்ஹபுகளுடன், அதற்கு வெளியிலும் சென்று இஸ்லாமிய சட்ட சிந்தனையை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற அழைப்பானது நவீன இஸ்லாமிய சிந்தனைப் பள்ளியின் சட்டக் கண்ணோட்டத்தை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் சென்றது.

இன்று, மகாஸிதுஷ் ஷரீஆ மற்றும் இஸ்லாமிய விழுமிய நோக்கு என்ற அடிப்படையில் முன்வைக்கப்படுகின்ற சிந்தனைகளையும், அதனோடிணைந்த வகையில் முஸ்லிம் சிறுபான்மைகளுக்கான சட்ட ஒழுங்கு என்ற சிந்தனையையும், நவீன இஸ்லாமிய சட்ட சிந்தனையின் மற்றொரு பாய்ச்சலாக கருத முடியும். இவையனைத்தும் ‘நவீன கால சவால்களுக்கு முகம் கொடுப்பதற்கு பாரம்பரிய சட்ட சிந்தனை முகாமினால் மட்டும் முடியாது’ என்ற புரிதலிருந்து எழுச்சி பெற்றதாகும். இந்த அடிப்படை வேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும்.

▪️எனவே, தொடர்ந்தும் நிலைமாறும் சர்வதேச மற்றும் தேசிய சூழல், உலகமயமாக்கல், சர்வதேச கருத்தியல்கள் மற்றும் கண்ணோட்டங்களுடன் ஸீரியஸாக உறவாடுவதும், உரையாடுவதும் நவீன இஸ்லாமிய சிந்தனையின் ஒரு பண்பாகும். அத்தகையதொரு உரையாடலுக்கூடாகவே நவீன இஸ்லாமிய சிந்தனையும், அதன் சட்டப்பகுதியும் மெதுவாக வளர்ந்து வந்திருக்கின்றன. எனவே, குறித்த நிலைமாறும் சமூக சூழலை எதிர்கொள்ளும் வகையில்  இஸ்லாமிய சட்ட சிந்தனை தொடர்ச்சியாக வளர்ந்து செல்ல வேண்டும் என்ற ஆழமான நம்பிக்கை நவீன இஸ்லாமிய சிந்தனை முகாம்களிடம் இயல்பாகவே காணப்படுகின்றது. மறுபுறம், இத்தகைய சமூகப் பொருளாதார மற்றும் சர்வதேச சூழலினால் தாக்கமடைதல் மற்றும் அதனை முன்னிறுத்தி சட்டப் பாரம்பரியத்தை மீள்வாசிப்புச் செய்தல் போன்ற சிந்தனைகளுடன் ஒப்பிடும் போது, பாரம்பரிய சட்ட சிந்தனை வெகு தூரத்திலேயே பயணிக்கின்றது. அவை, சமூக சூழலை எதிர்கொள்வதனை விட, தமது பாரம்பரியத்தை பாதுகாத்தல் என்ற கோணத்திலேயே சிந்திக்கின்றன.

அதாவது, நவீன இஸ்லாமிய சிந்தனையானது சமகால உலகின் பிரச்சினைகளை எதிர்கொண்டு தாண்ட வேண்டும் என்பதில் சட்டப் பாரம்பரியத்தை மீள்வாசிப்புச் செய்வதையும், அதில் தஜ்தீதை மேற்கொள்வதையும் முக்கிய பங்களிப்புச் செய்யும் காரணிகளாகக் கருதுகின்ற அதே வேளை, மரபு சிந்தனையானது சமகால சவால்களை எதிர்கொள்வதையும், பாரம்பரிய ஃபிக்ஹை மீள்வாசிப்புச் செய்வதையும் எதிர்மறைப் பாதிப்பை (Negative Impact) ஏற்படுத்தக் கூடிய விடயமாகக் கருதுகின்றது. இதற்கான அடிப்படைக் காரணத்தைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. அதாவது பாரம்பரிய சிந்தனைப் பள்ளியின் உலக நோக்கானது அதன் பாரம்பரிய ஃபிக்ஹு புரிதல்களிலிருந்து தோற்றம் பெறுவதும், நவீன இஸ்லாமிய சிந்தனையின் ஃபிக்ஹு புரிதல்களானது அதன் சமகால உலக நோக்கை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறுவதுமே இதற்கான அடிப்படைக் காரணியாகும். இந்த வேறுபாட்டையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

▪️மேற்சொன்ன அனைத்தினதும் விளைவாக, நவீன இஸ்லாமிய சட்ட சிந்தனை என்பது ஒருநிலைப்பட்டதாகவோ அல்லது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இறுக்கமான முறையியலை – மன்ஜஹ் - (Methodology)  கொண்டதாகவோ இல்லை. எனவே, ஒவ்வோர் இஸ்லாமிய அறிஞரும் தத்தமக்கான பிரத்தியேகமான மன்ஹஜ்களை கொண்ட நிலையில் பங்களிப்புச் செய்கிறார்கள். அதே நேரம் தனிப்பட்ட அறிஞர்கள் கூட காலவோட்டத்தில் தமது  சொந்த முறையியல்களையே தொடர்ந்தும் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தி வந்திருப்பதையும்/வருவதையும் அவதானிக்க முடியும்.

எனவே, ஒருமுகப்பட்ட சிந்தனை முகாமாக நவீன இஸ்லாமிய சட்ட சிந்தனை முகாமை நெறிப்படுத்துவதில் அல்லது திசைப்படுத்துவதில் பாரிய சிக்கல்கள் நிலவுகின்றன. மட்டுமன்றி, அத்தகையதொரு முயற்சி அதன் இயல்புக்கும், இலக்குகளுக்கும் கூட எதிரானதாகும். மறுபுறம், பாரம்பரிய இஸ்லாமிய சட்ட சிந்தனைப் பள்ளி என்பது கறாரான முறையியல்களுடனும், உஸூல்களுடனும் மற்றும் இறுக்கமான தெரிவுகளுடனும் (Cohesive & Coherence) கட்டியெழுப்பப்பட்டதொரு தோற்றப்பாடாகும்.

மேலும், சட்டத் தீர்ப்புகள் காலத்துக்குப் பொருத்தமானதா? இல்லையா? என்ற ரீதியில் சிந்திப்பதை விட சட்டத்தீர்ப்பைப் பெற்றுக் கொள்ளும் முறையியல் சட்டகத்தை (Textbook Approach) முன்னுரிமைப்படுத்தும் தன்மையை பாரம்பரிய சட்ட சிந்தனைப் பள்ளியை பிரதிநிதித்துவம் செய்யும் நிறுவனங்களில் காணலாம். இதில் எது சரியானது அல்லது எது பிழையானது என்று இக்கட்டுரை வாதிக்கவில்லை. ஏனெனில், இரண்டிலும் சாதகங்களும், பாதகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, ‘பாரம்பரிய சட்ட சிந்தனையானது ஒருமுகப்பட்ட கட்டுக்கோப்பான முறையியலுடன் இயங்கும் அதேவேளை, நவீன இஸ்லாமிய சிந்தனைப் பள்ளியின் சட்ட சிந்தனைப் போக்குகள் வேகமான தளமாற்றங்களையும், சிக்கலான ஏற்ற இறக்கங்களையும் கொண்டவை’ என கலாநிதி முஃதஸ் அல்கதீப் கூறுகிறார். ஆனால், பாரம்பரிய சட்ட சிந்தனையை மட்டுமே வைத்து நவீன கால பிரச்சினைகளை அணுகும் அனுபவங்கள் வேறு பல கோட்பாட்டுச் சிக்கல்களை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் அடையாளப்படுத்துகிறார்.

▪️மேலே சுட்டிக்காட்டப்பட்ட வேறுபாடுகளை மையமாக வைத்து நோக்குகின்ற போது, மரபு ரீதியான இஸ்லாமிய சட்ட சிந்தனை முகாமானது,  ‘இஜ்திஹாத் இன்திகாஈ’ எனப்படும் ஏற்கனவே உள்ள தீர்வுகளில் மிகப் பொருத்தமான ஒன்றை நவீன பிரச்சினையொன்றுக்கான தீர்வாக முன்வைப்பதில் கூட இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டிருப்பதையும், நவீன இஸ்லாமிய சட்ட சிந்தனை முகாமானது, நவீன பிரச்சினைகளுக்கான தீர்வுகளை புதிய இஜ்திஹாத்களின் ஒளியில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நெகிழ்வான போக்கைக் கொண்டிருப்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்த இறுக்கமான தன்மையும், நெகிழ்வான போக்கும் தனிமனிதர்களின் இயல்புகளின் விளைவாக தோற்றம் பெற்றதாக மாத்திரம் கருதுவது பொருத்தமற்றது. மாற்றமாக அவர்கள் சார்ந்திருக்கும் சிந்தனைப் பள்ளியின் மரபணு ரீதியான இயல்புகளுக்கு அதில் பாரியளவிலான செல்வாக்கு இருக்கின்றது என்ற புரிதல் கட்டாயமானது.

மேலே கலந்துரையாடப்பட்ட நவீன இஸ்லாமிய சிந்தனையின் அல்லது அதன் சட்ட சிந்தனைப் பகுதியின் தன்மைகளும், உள்ளார்ந்த இயல்புகளும் இணைந்து, பாரம்பரிய சட்ட சிந்தனைக் கட்டமைப்புடனான கருத்து மோதல் நிலைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதனால், இந்த இரண்டு சட்ட சிந்தனைக் கண்ணோட்டங்களும் சமூகப் பொதுத் தளத்தில் தமது விவாதங்களை முன்வைத்து முரண்பட்டுக் கொள்ளும் போக்கொன்றை அவதானிக்க முடியும். இந்த முரண்பாடுகள் வலுக்கவே; ‘பாரம்பரிய சட்ட சிந்தனைக் கட்டமைப்பினுள் நவீன இஸ்லாமிய சட்ட சிந்தனையை பேசும், அதனை ஏற்றிருக்கும் தனிமனிதர்கள் தொழிற்படுவது எந்தளவு தூரம் தாக்ககரமானதாக அமைய முடியும்?’ என்ற கேள்வியை நவீன இஸ்லாமிய சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் எழுப்புகிறார்கள்.

இன்னும், வேகமாக வளர்ந்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச மற்றும் தேசிய சூழலின் பின்புலத்தில் நோக்கும் போதும், சர்வதேச ரீதியில் இஸ்லாமிய சிந்தனையின் மீது தொடுக்கப்படும் கேள்விகளை எதிர்கொள்வதிலும் 'காலப் பொருத்தமான நிலைப்பாடுகளை விட முறையியலை முன்னுரிமைப்படுத்தும்’ பாரம்பரிய சட்ட சிந்தனை முகாம்களுடன் 'இணைந்து பயணித்தல்' வியூகத்தை மட்டுமே எந்தளவு தூரம் சார்ந்திருக்க முடியும்? என்ற கேள்வியும் நவீன இஸ்லாமிய சிந்தனைப் பள்ளியை சார்ந்த தனிமனிதர்கள் மற்றும் நிறுவனங்களால் எழுப்பப்படுகின்றது.

இந்தப் பின்னணியில் நின்று நோக்குகின்ற போது, கிட்டிய எதிர்காலத்தில் நவீன இஸ்லாமிய சிந்தனை முகாம்கள் தமது வரையறைகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்து கொண்டு பொது வெளியில் தமது பிரசன்னத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் விளைவாக தற்போது ஆரம்பித்திருக்கும் இந்த மரபு சிந்தனை vs நவீன சிந்தனை மோதல் நிலை இன்னும் வீரியமடைவதோடு, அதற்கடுத்த கட்டத்தில் ஆதிக்கம் செலுத்தப் போவது எது என்ற போட்டி வலுப்பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. தற்போதைய நிலையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட மரபு சிந்தனைக்கும், சிதறிய நிலையில் இருக்கும் நவீன சிந்தனைக்கும் இடையில் தோற்றம் பெற்றிருக்கும் இந்த மோதல் நிலையானது, கிட்டிய எதிர்காலத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்ட இரு சிந்தனை முகாம்களுக்கிடையிலான மோதல் நிலையாக தளம் மாறுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.

அப்படியான ஒரு நிலை தோற்றம் பெறும் பட்சத்தில், இலங்கை முஸ்லிம்கள் மரபு ரீதியான சிந்தனை முகாமையோ அல்லது நவீன இஸ்லாமிய சிந்தனை முகாமையோ - குறைந்த பட்சம் மானசீக ரீதியாகவேனும் - பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய கட்டாய நிலை தோற்றம் பெறலாம். இவ்விரண்டு சிந்தனை மரபுகளுக்குமிடையில் - சிந்தனா ரீதியான - வெற்றிகரமான இணக்கப்பாடுகளுக்கான சாத்தியப்பாடுகள் மிகக் குறைவாகவே இருக்கின்ற அதே வேளை, இணக்கப்பாட்டுக்கான முயற்சிகள் சந்தேகக் கண்கொண்டு நோக்கப்படும் நிலையொன்றும் தோற்றம் பெற வாய்ப்பிருக்கின்றது.

இந்நிலை ஏற்பட முடியுமாக இருப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்வதற்கு மோதல் முகாமைத்துவ (Conflict Management) மொழி பெரிதும் துணை புரியலாம். பிரச்சினையின் மூலவேரைத் தொடாமல் அதனைச் சூழ செயற்கையான மாற்றங்களை ஏற்படுத்துவதனூடாக உருவாகும் சமாதானம் ‘எதிர்மறை சமாதானம்’ (Negative Peace) என்று அழைக்கப்படும். இந்த வகை சமாதானம் அமுலில் இருக்கும் காலமெல்லாம் வெளிப்படையாக சுமுக நிலை அமுலில் இருப்பதான தோற்றப்பாடு இருந்தாலும் கூட உள்ளார்ந்த ரீதியில் இரு தரப்புக்கிடையிலான உறங்கு நிலை பதற்றத் தன்மையொன்று தொடர்ந்தும் இருக்கும். அப்படியான சூழலில் எந்தவொரு சிறிய ஊக்கியும் கூட (Triggering factor) திரும்பவும் பிரச்சினையை ஏற்படுத்த வல்லதாக இருக்கும்.

அந்த அடிப்படையில், இங்கும் பிரச்சினையின் மூலவேரை அடையாளம் கண்டு அதற்கு நிவாரணம் வழங்காமல், வெறும் உபதேசங்களாலும் நடைமுறைச் சாத்தியம் குறைந்த தற்காலிக முன்மொழிவுகளாலும் பிரச்சினையைக் கட்டுப்படுத்த முனைவதானது எதிர்மறை சமாதான சூழலொன்றைத் தோற்றுவிப்பதோடு, இரு தரப்பினாலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகளையே அதிகம் தோற்றுவிக்கலாம். தெளிவான நிலைப்பாடுகளால் அணுகப்பட வேண்டிய பிரச்சினைகளை அழகான உபதேசங்களால் அணுகுவதற்கூடாக ஏற்படும் பிரச்சினை என்றும் இதனை அடையாளப்படுத்தலாம். அதற்கு மாற்றமாக பிரச்சினையின் மூலவேரை உரிய முறையில் அணுகுவதனூடாகவே நிலையான உடன்பாடொன்றை அல்லது நிலைத்த சமாதனத்தை (Positive Peace) எட்ட முடியுமாக இருக்கும்.

மேற்கூறிய யதார்த்தத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நகர்வுகளை மையப்படுத்தி சில நிலைப்பாடுகளுக்கு வருவது இரண்டு சிந்தனைப் பள்ளிகளினதும் கடமையாகும்.

அந்த வகையில், நவீன இஸ்லாமிய சிந்தனை முகாமானது தன் பக்க நிலைப்பாடுகளுக்கு வருவதில் இரண்டு விடயங்களைக் கருத்தில் கொள்வது பொருத்தம் என கருதுகிறோம்.

1. மரபு ரீதியான இஸ்லாமிய சிந்தனையின் தொழிற்படு தளத்தையும், சிந்தனைப் பாங்கையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
2. ஷாஃபிஈ மத்ஹபை அதன் அடிப்படைகளில் நின்று தரமுயர்த்துவதா? அல்ஃபிக்ஹுல் முகாரின் என்ற தளத்தை நோக்கி முழுமையாக நகர்வதா? அல்லது நவீன இஸ்லாமிய சிந்தனையின் கருவிகளைப் பிரயோகிப்பதனூடாக சிறுபான்மைக்கான புதிய இஜ்திஹாதை நோக்கிச் செல்வதா? என்ற சீரியஸான தொடர் உள்ளக உரையாடலொன்றுக்குள் உடனடியாகப் பிரவேசிக்க வேண்டும்.

அவ்வாறே மரபு ரீதியான சிந்தனை முகாம் தமது பக்கத்தில் சில நிலைப்பாடுகளுக்கு வருவதில் இரண்டு விடயங்களைக் கருத்தில் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்றும் கருதுகிறோம்.

1. நவீன இஸ்லாமிய சிந்தனையானது இறுக்கமான முறையியல் விதிமுறைகளுக்குள் சுருங்க முடியாத தன்மையை மரபணு ரீதியாகப் பெற்றிருப்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அந்த வகையில் அந்த சிந்தனை முகாமின் கருத்துக்கள் சமூகத்தைப் பிளவு படுத்துவதை நோக்காகக் கொண்டவையாகவோ அல்லது தமது இருப்புக்கான அச்சுறுத்தலாகவோ நோக்கப்படாமலிருப்பது பொருத்தமாகும்.
2. நவீன சிந்தனை முகாமின் கருத்துக்களும் நிலைப்பாடுகளும் மரபு சிந்தனையின் மீதான வெறுப்பினதும், கோபத்தினதும் வெளிப்பாடல்ல என்பதையும் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். நவீன கருத்துக்களைக் கூட பாரம்பரிய ஃபிக்ஹின் வெளிச்சத்தில் நின்று ஆதாரப்படுத்துவதானது நவீன சிந்தனை முகாமினரது பாரம்பரியத்தின் மீதான மரியாதையையும் அதற்கான அங்கீகாரத்தையும் பறைசாற்றுவதாகவே பார்க்கப்பட வேண்டும்.

மேலே தொட்டுக் காட்டப்பட்ட  நிலைத்த சமாதானத்தை (Positive Peace) முன்னிறுத்திய விடயங்கள், இருதரப்பினராலும் மூலோபாய ரீதியான அல்லது இராஜதந்திர ரீதியான முன்னெடுப்புகளாக முன்னெடுக்கப்படாமல், பரஸ்பர புரிந்துணர்வின் விளைவான முன்னெடுப்புகளாக அமையுமிடத்து  எதிர்பார்க்கப்படும் விளைவை அதன் மூலம் எட்ட முடியுமாக இருக்கும்.

ஏற்கனவே கூறியதைப் போன்று நவீன இஸ்லாமிய சிந்தனையும் கிட்டிய எதிர்காலத்தில் நிறுவனமயப்பட்டதாக மாறுவதற்கான சாத்தியப்பாடுகளே களத்தை அவதானிக்கும் போது அதிகம் தென்படுகின்றன. அந்த நிறுவனமயமாதல் என்பது ஒரு ஃபிக்ஹ் மத்திய நிலையமாகக் கூட அமையலாம்.

கடந்த சில காலங்களில் அவ்வாறான விடயங்கள் பேசுபொருளானதைக் கூட அவதானிக்க முடியுமாக இருந்தது. அந்த வகையில் அவ்வாறான நிலை தோற்றம் பெறும் சந்தர்ப்பத்தில் இரு சிந்தனை முகாம்களும் ஒன்றையொன்று இருப்புக்கான அச்சுறுத்தலாகவோ அல்லது எதிரிகளாகவோ கருதிக் கொள்ளாமல், இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியத்தின் தவிர்க்க முடியாத இரு கிளைகளாகக் கருதுவதற்கான மானசீக ரீதியான முன்னேற்பாடுகளையும் அது சார்ந்த உரையாடல்களையும் இப்போதிருந்தே ஆரம்பிப்பது சாலச் சிறந்ததாக அமையும். 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages