மேற்கூறப்பட்ட (22:5, 23:13~14) புனித அல்-குர்ஆனிய வசனங்களானது மனித ஆரம்பத்தோற்றம் குறித்தான விளக்கத்தை சுருக்கமான படிமுறைகள் மூலமாக எமக்கு விபரிக்கின்றது. அதனை கவனத்தில் கொண்டு முன்னேற்றமடைந்த கருவியல் ரீதியான விஞ்ஞான ஆதாரங்களை ஒப்பிடுவோம்.
கருவியல் நிபுணர் டாக்டர் கீத் மூரி அவர்கள் குறிப்பிடுகையில் “விஞ்ஞானம் கூறும் படிமுறைகளை விட அல்-குர்ஆன் கூறும் மிக எளிய படிமுறைகள் கருவியல் பற்றிய தெளிவான விளக்கத்தினை தருகின்றது. ஒவ்வொரு நிலைகளையும், கரு வளர்ச்சியுறும் கட்டங்களைக் குறித்தும் அல்-குர்ஆன் பயன்படுத்தும் எளிமையான மொழிநடை உதாரணங்கள் சிறப்பாக எமக்கும் விளக்கமளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது” என்றும் கூறினார்.
நிலை I - இந்திரியத்திலிருந்து தோற்றம் பெறல்
“பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான். (அவன்தான் அல்லாஹ்)” (அல்-குர்ஆன் 32:7)
மேற்கூறப்பட்ட வசனம் மனிதன் இந்திரியத் துளியின் (புணரி) மூலமாக உருவாக்கப்பட்டான் என்று குறிப்பிடுகின்றது. இங்கு பயன்படுத்தப்பட்ட அரபிய வார்த்தை “ஸுலாலா” என்பதாகும். இவ் வார்த்தை “மொத்தத் தொகுதியின் ஒரு மிகச்சிறந்த சிறிய பகுதி” என்பதற்கு அரபியில் பயன்படும் வார்த்தையாகும். அல்-குர்ஆன் மேற்கூறிய வசனத்தில் அச்சொல்லை பயன்படுத்துவதற்கான காரணத்தை தற்போதைய அறிவியல் விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது.
புணர்ச்சியின் போது ஒரு தடவையில் 15~20 மில்லியன் விந்தணுக்கள் (Sperm) விடுவிக்கப்படுகின்றது. ஒரு மில்லிலீட்டர் சுக்கிலத்தில் (Seman) 3~5 மில்லியன் விந்தணுக்கள் காணப்படும். ஆனாலும் பெண்ணின் முட்டையினை (Egg) கருக்கட்டி குழந்தை உருவாக்க மனிதனின் தனியொரு விந்தணுவே போதுமானது என்று விஞ்ஞானம் தற்போது கூறுகின்றது.
இக்குறித்த விந்தணுவையே புனித அல்-குர்ஆன் ஸுலாலா (மொத்தத் தொகுதியின் ஒரு மிகச்சிறிய சிறந்த பகுதி) என்று எளிய வடிவில் விபரிக்கின்றது. மனித படைப்பு குறித்தும், விந்து உற்பத்தி குறித்தும் கீழ்வரும் வசனத்தை புனித அல்-குர்ஆன் குறிப்பிடுகின்றது. கீழ்க்காணும் வசனத்தில் மனிதனின் விந்து உற்பத்தியானது முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து வெளியாகின்றது என்று புனித திருமறைக் குர்ஆன் கூறுகின்றது.
“மனிதன் எதிலிருந்து (அவன்) படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். அது முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து வெளியாகிறது” (அல்-குர்ஆன் 86:5~7)
விந்துக் கலங்கள் விதையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டாலும் உண்மையில் இதன் முன்னோடி பதார்த்தம் 11ஆம் முள்ளந்தண்டு என்பு, 12ஆம் விலா என்புகளிற்கிடையே உற்பத்தியாகின்றது என்று நவீன அறிவியல் நிரூபிக்கின்றது.
இருந்தபோதும் குழந்தை பிறப்பிற்கு முன்னர் விதையானது மேற்கூறிய என்பு எல்லைகளிடையே காணப்பட்டது. ஆண் குழந்தைகளில் ஒன்பதாம் மாதம் அளவில் விதைகள் விதைப்பைக்குள் இறங்குகின்றன. பெண்களில் தொடர்ந்தும் சூலகம், கருப்பை என்பன அடிவயிற்றிலேயே நிலைத்திருக்கின்றது. இதனையே மேற்கூறப்பட்ட வசனம் எடுத்துரைக்கின்றது.
"மனிதனை ஒரு துளி இந்திரியத்தால்தான் நாம் படைத்தோம் என்பதை அவன் கவனிக்கவில்லையா? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்கமான எதிரியாகி (நமக்கு மாறுசெய்ய முற்பட்டு) விடுகின்றான்" (அல்-குர்ஆன் 16:4, 18:37, 22:5, 23:13, 35:11, 36:77, 40:67, 53:46, 75:37, 76:2, 80:19)
மேற்கூறப்பட்ட வசனத்தில் விந்துக்கு அல்-குர்ஆன் பயன்படுத்தும் வார்த்தையானது “நுத்ஃபா” என்பதாகும். இதன் பொருள் “சிறிய திரவத் துளி” என்பதாகும். உதாரணமாகக் கூறுவதாயின் ஒரு மழைத் துளியின் கனவளவிற்கு ஒப்பானதாகும்.
ஏன் ஒரு இடத்தில் விந்திலிருந்து மனிதனை படைத்தோம் என்றும் மற்றுமொரு இடத்தில் விந்துத் துளியில் இருந்து மனிதனை படைத்தோம் என்றும் கூறப்படுகின்றது? இதற்கான காரணம் விந்தானது இருவகையான விந்துக் கலங்களை கொண்டுள்ளது. அத்துடன் இங்கு குறிப்பிட்ட விந்துத்துளி என்பது விஞ்ஞானம் கூறும் சுக்கிலம் (Semen) ஆகும்.
சுக்கிலத்தின் கூறுகளான சுக்கிலச் சுரப்பு, விந்துக் கலம், சிலவகை விட்டமின்கள், பிறக்றோசு, நுண்ணுயிர் கொல்லி என்பன காணப்படுகின்றன. இவை ஒன்றிணைந்த கூறு விந்துத்துளி எனப்படும். விந்தானது நீந்துவதற்கும், உயிர் வாழ்வதற்கும் போசணை ஊடகம் அவசியமாகும். இப்போசணை ஊடகத்தை விந்துதுளி கொண்டுள்ள உள்ளடக்கம் விந்திற்கு வழங்குகின்றது.
No comments:
Post a Comment