திருக்குர்ஆனைப் பொறுத்தவரையில் அதன் நோக்கம் உண்மையில் ஏனைய நூற்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித நாகரிகத்தில் ஒரு குறித்த காரணி அக்கால மக்களிடத்தில் மிகப்பிரபல்யமான அளவுகோலாக கருதப்படும்.
தொடர்ந்த மனித நாகரிகத்தில் அவ்வாறான அளவுகோலாக ஆட்சி, அதிகாரம், பொருளாதாரம், கலை, இலக்கியம், அறிவியல், அரசியல் மற்றும் இன்னோரென்ன என்றவாறு தொடர்ந்துகொண்டே செல்லமுடியும். இவ்வாறான காலத்தில் ஒரு குறித்த கோட்பாடு அல்லது காரணி தன்னை தனித்துவமாக நிரூபித்துக்காட்ட அக்காலகட்ட சமூக மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அக்குறித்த அளவுகோலுடன் போட்டியிடவேண்டிய கடப்பாடு அவசியமாகும்.
அவ்வாறே புனித அல்-குர்ஆன் ஆனது சுமார் பதின்னான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறக்கப்பட்ட இறைவேதம் என்று முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புகின்றோம். இருப்பினும் முஸ்லிம் அல்லாதோர் நிலைப்பாடு குறித்து நாம் ஆராய்ச்சி செய்கையில் திருக்குர்ஆன் பற்றிய தவறான எண்ணக்கருவே அநேகரிடத்தில் விதைக்கப்பட்டுள்ளது. எனினும் புனித அல்-குர்ஆன் தன்னை ஒரு அற்புதமாகவும் மனித குலத்திற்கு நேர்வழிகாட்டியாகவும் அமைவேனென்று தன்னைத் தானே பறைசாட்டி நிற்கின்றது. இக்கருத்து மெய்யாகவே சாத்தியமாக அமையவேண்டுமாயின் இது ஏகவல்ல இறைவனின் வார்த்தைகளாக இருப்பின் மாத்திரமே சாத்தியமாக வாய்ப்புண்டு.

வரலாறு, மெய்யறிவு, அறிவியல், இயற்கை விஞ்ஞானம், சமூகவியல், இலக்கியம், அரசியல், பொருளியல், மருத்துவம், வாழ்வியல் இன்னும் பல எதிர்வுகூறல்கள்களையும் தன்னகத்தே அல்-குர்ஆன் கொண்டுள்ளது. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அரேபிய பாலைவனத்தில் வெளிப்பட்ட ஒரு நூல் தான்தான் இறைவனின் வார்த்தைகள் என்றும், தான் உலகம் அழியும் வரைக்கும் நிலைத்திருப்பேன் என்றும், தன்னை மிகைத்து ஜெயிக்கும் சக்தி யாரிடமும் இல்லை என்றும் இம்மனித குலத்திற்கு மிகப்பெரும் ஓர் சவாலை விடுகின்றது.
புனித குர்ஆன் வெளிப்பட்ட காலகட்டத்தில் அக்காலகட்ட மக்களின் அளவுகோலாக இலக்கியம் கருதப்பட்டது. அரேபிய மக்கள் உலகமனைத்திலும் உள்ள ஏனைய மக்களை விட அன்று சற்று ஒருபடி உயர்வாகவே அனைத்துத்துறைகளிலும் திகழ்ந்தனர்.
அல்-குர்ஆனின் வெளிப்பாடு அன்றைய (1400 ஆண்டுகள் முன்னர்) இலக்கியங்களை தவிடு பொடியாக்கி தன்னை ஒரு மிகப்பெரும் இலக்கிய தொகுப்பாகவும் சான்றாகவும் நிரூபித்தது. பண்டிதன் தொடக்கம் பாமரன் வரை அனைத்து விதமான மனிதர்களின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தது மட்டுமன்றி தன்னுள்ளே பொதிந்துள்ள இறைவனின் வார்த்தைகளைக் கொண்டு தன்னை பின்பற்றும் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் திகழ்கின்றது. எவ்வாறாயினும் இது தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டுமாயின் தான் காலத்திற்கும், களத்திற்கும் ஏற்றால்போல் தான் உள்ளடக்கிய இறை வெளிப் பாடுகளை வெளிக்கொணர வேண்டும்.
கடந்துவந்த பாதையில் தன்னை அதிசயமிக்க வேதமாக நிலைநாட்டிக் கொண்டிருக்கும் புனிதமிகு திருமறை குர்ஆன் தற்கால நவீன உலகின் பெரும் அளவுகோலான நவீன அறிவியல் விஞ்ஞானத்துடன் போட்டியிடவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளது. இருந்தும் அல்-குர்ஆன் அறிவியல் விஞ்ஞானத்தை ஒரு சாதாரண தடையாக கூட பொருட்படுத்தாமல் தன்னை முதன்மைப்படுத்தி நகர்கின்றது.
இது எவ்வாறு சாத்தியமாக இருக்க முடியும் என்று அவதானிக்கும் போது தற்போதைய நவீன அறிவியல் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை சுமார் 14கு நூற்றாண்டுக்கு முன்னரே எதிர்வுகூறியுள்ளது. அதுமட்டுமன்றி இன்னும் மனிதன் அறியாத பல எதிர்வுகூறல்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றால்போல அக்காலகட்டத்தில் மதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அளவுகோலுடன் தன்னை முதன்மைப்படுத்தி நிற்கும் அல்-குர்ஆன் ஒரு இறைவேதமென தன்னகத்தே உண்மைப்படுத்தி நிலைத்திருக்கின்றது.
பல தரப்பட்ட மனிதர்களின் நோக்கங்கள், சந்தேகங்கள், கருத்துக்களை அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு தனது வழிகாட்டல், போதனைகள் மற்றும் சவால்களையும் வெளிப்படுத்துகின்றது. புனிதமிக்க அல்-குர்ஆன் முன்வைக்கும் முக்கிய சவால்களில் ஒன்றுதான் முழு மனிதகுலமமேனும் “தன்னைப் போன்ற ஒரு வேதம் அல்லது அத்தியாயம் அல்லது ஒரு வசனம் ஒன்றையாவது உருவாக்கி காட்டுமாறு” சவால் விடுகின்றமையாகும். மேலும் அது உங்களால் முடியாது என்றும் ஆணித்தரமாக நிச்சயித்துக் கூறுகின்றது. உண்மையில் இச்சவால் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இது பற்றி அல்-குர்ஆன் இல் கீழ்வரும் வசனங்களில் 2:23,24, 10:38, 17:88, 28:49, 52:34, 11:13 தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

அல்-குர்ஆன் ஆனது அரபு (Arabic) மொழியில் இறக்கப்பட்ட ஓர் இறைவேதமாகும். இந்நூல் காலம், சூழ்நிலை, இடங்கள் என்பவற்றுக்கு ஏற்றவாறு கட்டங்கட்டங்களாக இறக்கப்பட்டுள்ளது. திருமறை குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் அல்லது அத்தியாயம் அல்லது பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் என்ன உண்மைக் கருப்பொருளில் கூறப்பட்டுள்ளது என்பதனை கருத்தில்கொண்டு எமது அல்-குர்ஆன் பற்றிய சிந்தனை, ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மிக அவசியமானதாகும். இற்றைவரைக்கும் இவ்வேதத்தை பொய்ப்பிக்க இவ்வுலகில் பல மாமனிதர்கள் முயற்சிகள் செய்தும் தோற்றுப்போனதுதான் மீதம். அவர்களின் அறிவு இறைவனின் வார்த்தைகளை ஒரு அணுவளவு கூட பொய்பிக்க தகுதியற்றதாக இருந்தது.
தற்காலத்தில் இவ்வேதம் தன்னை நிரூபிக்க எவ்வாறு நவீன அறிவியல் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது என்பது பற்றியும், இம்வேதம் எவ்வாறான நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கள், உண்மைகளை வெளிக்காட்டியுள்ளது என்பதையும் ஒரு சுருக்கமான கண்ணோட்டத்தில் காண்போம். அல்-குர்ஆனின் விஞ்ஞான சான்றுகள் அதன் தெய்வீக தோற்றத்தை நிரூபிக்கின்றன. பதின்னான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்ற இப் புத்தகம் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் உள்ள மனிதகுலத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட ஆழமான விஞ்ஞானவியல் உண்மைகளை முன்னறிவிக்கின்றது என்பதனை ஆராயும்போது உண்மையில் எம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.
எனினும் புனிதமிக்க அல்-குர்ஆன் ஆனது அறிவியல் உண்மைகளை மாத்திரம் உள்ளடக்கிய விஞ்ஞானப் புத்தகமன்று. இது “அறிகுறிகள் - Sign” உள்ளடக்கிய மெய்ஞான நூல் என்று கூறுவதே சிறப்பானது. இந்த அறிகுறிகள் பூமியில் உள்ள மனித குலத்தின் வாழ்வு, நோக்கம் மற்றும் இறைவனை நெருங்கும் ஓர் வழி முறைகளை மானிடர்களுக்கு விபரிக்கக்கூடியதாகவும்; மனிதனை மனிதனாக வாழ வழிகாட்டும் அழைப்பாளனாகவும் திகழ்கின்றது.
புனித அல்-குர்ஆன் ஆனது உண்மையில் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரான இறைவனிடமிருந்து வந்த ஒரு இறைச்செய்தியாகும். இறைவன் மூலமாக அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளான ஆதம் (ADAM), மோசே (MOSE), இயேசு (JESUS) மற்றும் முஹம்மத் (MOHAMED) (அவர்களுக்கு சமாதானம் உண்டாகுக) ஆகியவர்களினால் பிரசுரிக்கப்பட்ட இறைவனின் ஒரே இறைச்செய்தி இதுவேயாகும். மேற்குறித்த செய்திக்கு பின்வருமாறு புனித அல்-குர்ஆனில் இறைவன் கூறுவதுடன் மனித சமூகத்திற்கு எச்சரிக்கையாகவும் கீழ்வரும் வசனம் அமையப்பெற்றுள்ளது.
“மனிதர்கள் ஒரே கூட்டத்தினராக இருந்தனர்; பின்னர் அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்களை புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்” (அல்-குர்ஆன் 2:213)

















Very useful...
ReplyDelete