“மேலும், நீங்கள் நாடுவதனால்
எதுவும் நடந்துவிடப்போவதில்லை, பிரபஞ்சம் முழுவதற்கும் அதிபதியான அல்லாஹ் நாடாத வரையில்!”
(அல்-குர்ஆன் 81:29)
பிரபஞ்சத்தை
குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எமக்கு பல
நம்பத்தகாத ஆய்வு முடிவுகளை சமர்ப்பிக்கின்றது நவீன அறிவியல் விஞ்ஞானம்.
அந்தவகையில் நாம்
அண்ணாந்து பார்க்கும் இவ்வாகாயம் ஆனது எம்முடைய கண்பார்வைக்கு அப்பாற்பட்ட பலவகை
வினோத தொகுதிகளையும் மற்றும் நிகழ்வுகளையும் கொண்டமைந்துள்ளது. பிரபஞ்சம் என்பது
இன்னும் எட்டாக்கனியாகவே இன்றைய நவீன அறிவியல் விஞ்ஞானத்திற்கு உள்ளதனை அவர்களின்
ஆய்வறிக்கைகள் எமக்கு தெளிவுபடுத்துகின்றன.
அந்தவகையில்
பிரபஞ்சம் குறித்து 1930 ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ் ஜீன்ஸ் என்பவரின் புதிர் நிறைந்த பிரபஞ்சம் (Mysterious
Universe) என்ற நூல் விளக்கம் தருகின்றது. ஜேம்ஸ் அவர்கள் பிரபஞ்சம் குறித்து “பிரபஞ்சத்தில் உள்ள
பொருட்களின் அளவு எமது உலகில் உள்ள கடற்கரையோர மணல்களின் அளவையொத்தது” என்று கூறுகின்றார்.
இவரின் கருத்தை தற்போதைய விஞ்ஞானம் ஆதரிக்கின்றது.
நாம் வாழும் ஞாயிற்று
தொகுதியானது (Solar system) சூரியன் எனும் பெரிய
நட்சத்திரத்தையும் அதனுடன் ஒன்பது பெரும் கோள்கள் மற்றும் பல துணைக்கோள்களையும்
கொண்டதாக அமைந்துள்ளது. சூரிய
குடும்பமானது பால்வீதி (Milky way) என்று அழைக்கப்படும் ஒரு நட்சத்திர மண்டலத்தில் ஒரு சிறு
அங்கமாகும். எமது சூரிய குடும்பத்தைப் போன்று இப்பால் வீதியில் சுமார் பத்தாயிரம்
கோடி சூரியக் குடும்பங்கள் உள்ளன.
எமக்கு மிக
அருகில் இருக்கும் மற்றுமொரு நட்சத்திரக் கூட்டமே அண்ட்ரோமிடா கெலக்ஸி (Andromeda galaxy) என்பதாகும். இது சுமார் சூரியக் குடும்பத்தைப் ஒத்த நாற்பதாயிரம் கோடி நட்சத்திரக்
குடும்பத்தைக் கொண்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு நட்சத்திரக்கூட்டமும் (galaxy) தனக்கென ஒருதொகை யான நட்சத்திர
குடும்பத்தைக் கொண்டுள்ளது.
மேலும் பிரபஞ்சம்
சுமார் பத்தாயிரம் கோடி விண்மீன் கூட்டத்தை (Galaxy) கொண்டுள்ளதாகவும் இவைகள் ஒன்றிலிருந்து ஒன்று விலகி மிகவேகமாக அசைவதாகவும் இன்றைய
விண்ணியல் விஞ்ஞானம் தெரிவிக்கின்றது.
மேற்படிக் கருத்தை
1925இல் எட்வின் ஹப்பள் என்பவரும் 1933இல் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஆர்தர் எடிங்டன் என்பவரும் பிரபஞ்ச விரிவு பற்றிய
எண்ணக்கருவை வெளியிட்டனர்.
அண்ணளவாக பிரபஞ்ச அளவை ஒப்பிட .....
எமது பால்வீதிக்கும் சமீபத்தைய பால்வீதியான அண்ட்ரோமிடா
கெலக்ஸிக்கும் இடைப்பட்ட தூரம் ஆனது அண்ணளவாக இருபத்தைந்து இலட்சம் ஒளியாண்டு (Light
year) ஆகும். ஒரு ஒளியாண்டின் பெறுமதி அண்ணளவாக 9,460,730,472,580,800 m தூரம் ஆகும். எனவே இருபத்தைந்து
இலட்சம் ஒளியாண்டின்
பெருக்கமானது எம்மால் கற்பனை செய்து பார்க்கவே முடியாத தூரமுடையது என்று எமக்கு
தெளிவாக விளங்குகின்றது. இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்த சிறு புள்ளியைத்தான் நாம் விண்ணியலின்
பெரும் கண்டுபிடிப்பு என்று மாமதை கொண்டுள்ளோம்.
விண்ணியல் பற்றி ஜப்பான் நாட்டைச்சேர்ந்த டோக்கியோ பல்கலைக்கழகப் பேராசிரியராகவும்
இன்னும் டோக்கியோ மாநிலத்திலுள்ள மிகாடா தேசிய விண்வெளி ஆய்வு மையத்தின் செயற்பாட்டு தலைவராகவும் கடமையாற்றியவருமான
விஞ்ஞானி “கொசாய்” என்பவர் பின்வருமாறு கூறுகின்றார்.
“நவீன கால விண்ணியல் அறிஞர்களான நாம் பிரபஞ்சத்தின்
ஒரு சிறிய துண்டைப் பற்றித்தான் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். மிகவும் சிறிய பகுதியை பற்றிப் புரிந்து கொள்வதில் நம்முடைய முயற்சிகளை
ஒன்று கூட்டியுள்ளோம். நாம் யாவரும் தொலைநோக்கிகளைக் கொண்டு பிரபஞ்சத்தில் உள்ள சிறுபகுதியை அவதானித்து எதனைச்
சாதித்தோம். ஆனால் திருக்குர்ஆனை படிப்பதன் மூலமும் மேலும் அவை தொடுக்கும் கேள்விகளுக்கு
விடையளிப்பதன் மூலமாகவும் பிரபஞ்சத்தை ஆய்வு செய்யக்கூடிய எதிர்கால வழியை நாம் கண்டுகொள்ள முடியும் என்று நான் நம்புகின்றேன்” என்று கூறினார்.
நான் இதுவரை
விபரித்த விண்ணியல் சம்மந்தமான பலதரப்பட்ட அறிவியல் விஞ்ஞான உண்மைகள் 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில்
கண்டறியப்பட்ட மிகப்பெரும் சாதனைகளாக மனித இனத்தினால் கருதப்படுகின்றது.
இருந்தபோதும்
பதினான்கு நூற்றாண்டிற்கு முன் அராபிய பாலைவனத்து மண்ணில் வாழ்ந்த ஒரு மனிதருக்கு கொடுக்கப்பட்ட
வேதப்புத்தகத்தில் யாரினால் மிக அண்மைக்காலத்து விண்ணியல்
உண்மைகளை கூறியிருக்க சாத்தியம் என்று சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும்; உண்மை இறைவன்
பற்றிய சரியான எண்ணக்கருவை தன்னுள் விதைத்துக்கொள்வான்.
இருந்தும் திருமறை வேதமானது விண்ணியலை மாத்திரம் கூறியதுடன் தனது விஞ்ஞானம் பற்றிய எதிர்வுகூறல்களை நிறுத்திவிடவில்லை. புனித அல்-குர்ஆன்
ஆனது தொடர்ந்து இன்னும் பல விஞ்ஞான உண்மைகளை இம்மனித சமூகத்திற்கு சமர்ப்பிக்கின்றது.
“நிச்சயமாக (இவ்வேதம்)
உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (பிரபஞ்சத்தின்)
பல கோணங்களிலும்,
அவர்களுக்குள்ளேயும்
சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்
என்பது உமக்கு போதுமானதாக இல்லையா?” (அல்-குர்ஆன் 41:53)
No comments:
Post a Comment